நம்மை நமக்கு அறிமுகப்படுத்துவது கல்வி!

கல்வி என்பது கற்றலுக்கான ஒரு வடிவமைக்கப்பட்ட முறைமையாகும். மேன்மையான அறிவு, திறன்கள், நமது மதிப்புகள், நம்பிக்கைகள் மற்றும் பழக்கங்களைப் பெறுவதற்கான செயல்முறையாகும். இது பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், மற்றும் பிற நிறுவனங்களில் வழங்கப்படும் அமைப்புகளை உள்ளடக்கியது. மேலும், தற்கல்வி அல்லது அனுபவக் கற்றல் போன்ற வழிகளிலும் பெறமுடியும். கல்வியின் நோக்கம் ஒருவரின் அறிவு மற்றும் நன்னடத்தைப் பண்புகளை மேம்படுத்தி, அவர்களை தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கைக்குத் தயார்படுத்துவதாகும். 

மனிதனுக்குள் ஏற்கெனவே பரிபூரணத் தன்மை என்பது இருக்கிறது. அதை வெளிப்படுத்துவதுதான் கல்வியாகும் என்று சுவாமி விவேகானந்தர் கூறுகிறார். எல்லாவிதமான அறிவும் மனிதனுக்குள்ளேயே இருக்கிறது. இந்த அறிவு ஒரு சிறுவனிடம்கூட இருக்கிறது. இந்த அறிவை விழித்தெழும்படி செய்வதுதான் ஆசிரியருடைய வேலையாகும் என்று சுவாமி விவேகானந்தர் எடுத்துரைக்கிறார். ஆமாம் நமக்குள் புதைந்திருக்கும் நமது திறன்களை வெளிப்படுத்தி நம்மை அடையாளப்படுத்துவது தான் கல்வி. நம்மை நமக்கே அறிமுகப்படுத்துவதும் கல்விதான்! 

காலமெல்லாம் உலகம் இதுவரையிலும் பெற்று வந்திருக்கும் அறிவு முழுவதும், மனதிலிருந்துதான் வந்திருக்கிறது. பிரபஞ்சத்திலுள்ள அறிவு முழுவதும் நிரம்பிய மிகப் பெரிய நூல் நிலையம் உன்னுடைய உள்ளத்திலேயே அடங்கியிருக்கிறது. வெளி உலகம் வெறும் ஒரு தூண்டுதலாக மட்டும் அமைகிறது. அது உன்னுடைய உள்ளத்தை நீ ஆராய்வதற்குத் தேவையான ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

“நல்ல ஒழுக்கத்தை உருவாக்குவதாகவும், மனவலிமையை வளர்ப்பதாகவும், விரிந்த அறிவைத் தருவதாகவும், ஒருவனைத் தன்னுடைய சுயவலிமையைக்கொண்டு நிற்கச் செய்வதாகவும் இருக்கக்கூடிய கல்விதான் நமக்குத் தேவை. மன உறுதியின் வேகமும் அதன் வெளிப்படும் தன்மையும், கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு (ஆக்கபூர்வமாகப்) பயன் தரும் வகையில் அமைவதற்கு உரிய பயிற்சிதான் கல்வியாகும். கல்வி என்பது உன்னுடைய மூளைக்குள் பல விடயங்களைப் போட்டுத் திணித்து வைப்பதல்ல. அப்படித் திணிக்கப்படும் அந்த விடயங்கள் வாழ்நாள் முழுவதும் செரிக்காமல்  உனக்குத் தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருக்கும்.

வாழ்க்கையை உருவாக்கக்கூடிய, மனிதனை மனிதனாக்கக்கூடிய, நல்ல ஒழுக்கத்தை வளர்க்கக்கூடிய கருத்துகளை கிரகித்து அவற்றை நாம் நம்முடையவையாக்கிக் கொள்ள வேண்டும். நீ ஐந்தே ஐந்து உயர்ந்த கருத்துகளை கிரகித்துக்கொண்டு, அவற்றை உன்னுடைய வாழ்க்கையிலும் நடத்தையிலும் ஊடுருவி நிற்கச் செய்தால் ஒரு பெரிய புத்தகசாலை முழுவதையும் மனப்பாடம் செய்திருப்பவனைவிட நீயே அதிகம் கல்வி கற்றவன் ஆவாய்” என்று சுவாமி விவேகானந்தர் விவரித்ததை  ஞானத்தீபங்கள் என்ற நூலின் மூலம் நம்மால் அறிய முடிய முடிகிறது.

கல்வியின் முக்கியத்துவம்:

  • தனிமனித  வளர்ச்சி: சிக்கல்களை தீர்க்கும் திறன் மற்றும் முடிவெடுக்கல் திறனை மேம்படுத்தி, தனிநபர்களை அவர்களின் முழுத் திறனை அடைய வைக்கிறது.
  • பொருளாதார வளர்ச்சி: கல்வி வேலைவாய்ப்பை மேம்படுத்துகிறது, இது பொருளாதார முன்னேற்றத்தின் முக்கிய காரணியாகும்.
  • சமூக ஒற்றுமை: பல்வேறு பின்னணிகளில் இருந்து வரும் மக்களிடையே பொறுமை, புரிதல் மற்றும் ஒத்துழைப்பை வளர்க்கிறது. இது சமூகத்தில் அனைவரும் சமம் என்ற நிலையை அடைய வழிவகுக்கிறது. 
  • வியூகம்: கல்வியறிந்த சமுதாயங்கள் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவளிக்கின்றன. அதன்மூலம் மனித வாழவு மேம்பட அறிவியல் சமூகம் வழிகுக்கிறது
  • ஆரோக்கியம் மற்றும் நலன்கள்: கல்வியறிந்தவர்கள் ஆரோக்கியமான முடிவுகளை எடுப்பதற்கான அதிக வாய்ப்புகளை உடையவர்களாக இருக்கிறார்கள். மேலும், சமுதாய நலனில் பங்களிக்கிறார்கள்.

தமிழ் இனத்தின் ஒப்பற்ற பேராசான் முதற்பாவலர் ஐயன் திருவள்ளுவரின் கல்வி என்ற ஒற்றை அதிகாரம் போதும் நம் உள்ளிருக்கும் அறியாமை இருளை அகற்றி அறிவொளி ஏற்றி கல்வியின் முக்கியத்துவத்தை நமக்கு அறிய வைக்க! இவ்வதிகாரத்தில் வரும் ஒவ்வொரு குறளும் கல்வி பற்றி நமக்கு ஒவ்வொரு விதமாக கல்வி புகட்டும்.

“கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு

மாடல்ல மற்றை யவை”.

என்ற திருக்குறள், ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்விதான். அதற்கு வேறு எதுவும் ஈடாகாது  என்பதை உணர்த்துகிறது. ஏனையச்  செல்வங்களை விட சிறப்புடையதாகக்  கல்வி உள்ளது. இதற்குக் காரணம் அது வெள்ளத்தால் அழியாது, வெந்தழலால் வேகாது, வேந்தராலும் கொள்ளையடிக்க முடியாது, கொடுத்தாலும் குறையாது, உயர்வான எண்ணங்களும், உன்னதமான குணங்களும் மேம்பட வேண்டுமென்றால், அதற்கு கல்வி அவசியமாகிறது, என்று வள்ளுவர் நமக்கு முற்பட்ட திருவள்ளுவர் கல்லாமையின் விளைவை “மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமிடையே என்ன வேற்றுமையோ, அதே அளவு வேற்றுமை அறிவு நூல்களைப் படித்தவர்களுக்கும், அந்த நூல்களைப் படிக்காதவர்களுக்கும் இடையே உண்டு” என்று   கீழ்க்கண்ட குறளின் மூலம் விவரித்து சென்றுள்ளார். 

“விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

கற்றாரோடு ஏனை யவர்”.

“கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கை நன்றே” என்று ஒவையார் கூறுகிறார்.

பிச்சை புகினும் கற்கை நன்றே என்றால் பிச்சை எடுத்து அந்தப் பணத்தில் படிக்க வேண்டும் என்பது இதன் பொருளல்ல. கல்வி கற்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தவே இப்படிச் சொல்லியுள்ளார். கல்வியை நல்லாசிரியரிடம் சென்று கெஞ்சிக் கூத்தாடியாவது படிக்க வேண்டும் என்பதே ஔவை மொழியின் உண்மையான பொருள். ஆனால், அப்படி பிச்சை எடுத்தாவது படித்துவிடு என்பது தான் எமது ஆழமான கருத்து.

“கல்வி, கல்வி, கல்வி- இது ஒன்றே இப்போது நமக்குத் தேவை. ஐரோப்பாவின் பல நகரங்களுக்கு நான் பயணம் செய்திருக்கிறேன். அங்கே சாதாரண ஏழை எளிய மக்களுக்குக்கூடக் கிடைத்திருக்கும் வாழ்க்கை வசதிகளையும் கல்வியையும் நான் கவனித்திருக்கிறேன். அப்போதெல்லாம் நமது நாட்டு ஏழை எளிய மக்களின் பரிதாப நிலையை நினைத்து நான் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன்; இந்த வேறுபாட்டிற்கு என்ன காரணம்? கல்வி என்பதுதான் எனக்குக் கிடைத்த விடை”, என்று உணர்ந்த சுவாமி விவேகானந்தர் அதோடு நில்லாமல் தமது குருநாதரின் பெயரிலும் ஆன்மீக அன்னை சாரதா தேவியின் பெயரிலும் கல்வி நிலையங்களை துவங்கி இன்று பல லட்ச மக்களின் கல்வி கற்றமைக்கு வழி வகுத்து சென்றுள்ளார். 

“ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது, அந்த நாட்டு மக்கள் பெற்றிருக்கும் கல்வி, அறிவாற்றல் ஆகியவற்றைப் பொறுத்தே அமைகிறது. நாம் மீண்டும் உயர்வடைய வேண்டுமானால், பொதுமக்கள் எல்லோருக்கும் கல்வியைப் பரப்பியாக வேண்டும்.பொதுமக்களுக்குக் கல்வியைத் தந்து அவர்களை உயர்த்தி விடுங்கள். இது ஒன்றே ஒன்றுதான் நமது சிறப்பைப் பெறுவதற்கு உரிய ஒரே ஒரு வழியாகும்” என்று ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு கல்வி எவ்வாறு அவசியம் என்பதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

“ஒரு மனிதனின் கல்வி பிறப்பிலேயே தொடங்கி வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும். உண்மையில், இந்தக் கல்வி அதன் அதிகபட்ச பலனைப் பெற வேண்டுமென்றால், அது பிறப்பதற்கு முன்பே தொடங்க வேண்டும்; இந்த விடயத்தில், தாயே இந்தக் கல்வியை இரண்டு மடங்கு செயல்களின் மூலம் மேற்கொள்கிறாள்: முதலில், தன் சொந்த முன்னேற்றத்திற்காக தன்னையே சார்ந்து, இரண்டாவதாக, தன் உடல் ரீதியாக உருவாக்கும் குழந்தையைப் பொறுத்து.

ஏனெனில், பிறக்கவிருக்கும் குழந்தையின் இயல்பு, அதை உருவாக்கும் தாயைப் பொறுத்தது, அவளுடைய விருப்பம் மற்றும் அவள் வாழும் பொருள் சூழலைப் பொறுத்தது என்பது உறுதி. அவளுடைய எண்ணங்கள் எப்போதும் அழகாகவும் தூய்மையாகவும் இருப்பதையும், அவளுடைய உணர்வுகள் எப்போதும் உன்னதமாகவும் நன்றாகவும் இருப்பதையும், அவளுடைய பொருள் சூழல் முடிந்தவரை இணக்கமாகவும் எளிமையாகவும் இருப்பதையும் காண – இது தாய்க்கு பொருந்த வேண்டிய கல்வியின் ஒரு பகுதியாகும். மேலும், அவள் கருத்தரிக்கக்கூடிய உயர்ந்த இலட்சியத்தின்படி குழந்தையை உருவாக்க அவளுக்கு ஒரு நனவான மற்றும் திட்டவட்டமான விருப்பம் இருந்தால், குழந்தை தனது அதிகபட்ச திறன்களுடன் உலகிற்கு வரக்கூடிய மிகச் சிறந்த நிலைமைகள் உணரப்படும். இந்த வழியில் எத்தனையோ  கடினமான முயற்சிகள் மற்றும் பயனற்ற சிக்கல்கள் தவிர்க்கப்படும்! கல்வி முழுமையடைய வேண்டுமென்றால், மனிதனின் ஐந்து முக்கிய செயல்பாடுகளுக்கு ஒத்த ஐந்து முக்கிய அம்சங்கள் இருக்க வேண்டும்: உடல், உயிர், மனம் பொதுவாக, கல்வியின் இந்த கட்டங்கள் காலவரிசைப்படி தனிநபரின் வளர்ச்சியைப் முறைப்படுத்துக்கின்றன; இருப்பினும், அவற்றில் ஒன்று மற்றொன்றை மாற்ற வேண்டும் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை, ஆனால் அனைத்தும் அவரது வாழ்க்கையின் இறுதி வரை ஒன்றையொன்று பூர்த்தி செய்து தொடர வேண்டும்”, 

“பெற்ற பிள்ளை கைவிட்டாலும் கற்ற கல்வி கைவிடாது” என்று காந்தியடிகளும், “கல்வி என்பது உலகை மாற்றுவதற்கான மிக சக்திவாய்ந்த ஆயுதம்” என்றும்; கல்விதான் முன்னேற்றத்தின் அடிப்படை, அனைவருக்கும் ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கான அடித்தளம், அனைவரின் உரிமைகளும் சமமாக மதிக்கப்படுவதற்கான வழி என்று ஐயா நெல்சன் மண்டேலா கூறியுள்ளார். சிறந்த சிந்தனையாளர்களும், மனிதகுல வரலாற்றில் சிறந்த மனங்களும் சுதந்திரத்தை அடைய கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசியுள்ளனர். 

 தாய்மொழிவழிக் கல்வியின் முக்கியத்துவம்:

தாய்மொழியில் கல்வி வழங்குவதே  முறைமையான கற்றல், அறிவாற்றல் வளர்ச்சி மற்றும் பண்பாட்டு பாதுகாப்பிற்கு உறுதுணையானது. இது குழந்தையின் இல்லச் சூழலுக்கும் படிப்பின் உலகிற்கும் இடையிலான பாலமாகச் செயல்படுகிறது, மேலும் உள்ளடங்கிய மற்றும் அர்த்தமுள்ள கற்றல் அனுபவத்தை உருவாக்குகிறது. மனிதனின் அடையாளம் அவனது தாய்மொழிதான். மனிதனின் சிந்தனையும் கற்பனையும் தாய்மொழியில்தான் உருவாகின்றன. எனவே, மனிதனின் சிந்தனை வளர்ச்சிக்குத் தாய்மொழிக் கல்வியே சிறந்தது மற்றும் செழுமையை கொடுக்கவல்லது. சிந்திக்கின்ற மொழியிலே பயிற்றுவிக்கப்படுகின்ற கல்வி சிந்தனையைக் கூட்டுகின்றது. நுணுக்கங்களையும் அறிவியல் படைப்புகளையும் உருவாக்க மனிதர்களைத் தயார்படுத்துகின்றது. 

தாய்மொழிதான் சிந்திக்கும் திறனின் திறவுகோலாக இருக்கின்றது. எத்தனை மொழிகள் கற்றாலும் ஒருவனின் சிந்தனை உருவெடுப்பது தாய்மொழியில்தான், தாய்மொழியால் சிந்தனை பெருகும். மனிதர்களின் மனவெழுச்சி வாழ்விற்கு அடிப்படை. அத்தகைய மனவளர்ச்சியைத் தாய்மொழியால் மட்டுமே கொடுக்க இயலும், தாய்மொழியில் சிந்திப்பதால் உயர்ந்த கருத்துக்களைச் சிறந்த சொற்களைக் கொண்டு உணர்த்த முடியும்.

தாய்மொழியில் கற்றுக்கொள்வது மாணவர்களுக்கு கருத்துக்களை எளிதில் புரிந்து கொள்ள உதவுகிறது. மொழி அறிந்திருத்தல் மொழியியல் தடைகளை குறைத்து, புதிய கருத்துக்கள் மற்றும் அறிவை புரிந்துகொள்ள கவனம் செலுத்த முடிகிறது. யுனெஸ்கோவின் ஆய்வுகள், தாய்மொழியில் கல்வி கற்ற மாணவர்கள் குறிப்பாக கணிதம் மற்றும் அறிவியல் போன்ற பாடங்களில் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பதைத் தருகின்றன. இது அதேபோன்ற உண்மையான அனுபவங்களை தங்கள் உலகளாவிய சுற்றுச்சூழலுடன் தொடர்புபடுத்துவதால் விளைகிறது.

தாய்மொழி அடிப்படையிலான கல்வி பண்பாட்டு அடையாளத்தையும் மதிப்பையும் வலுப்படுத்துகிறது. தங்கள் தாய்மொழியில் கற்றுக்கொள்வதன் மூலம், மாணவர்கள் தங்கள் பாரம்பரியத்துடன் வலுவான தொடர்பை பராமரிக்கிறார்கள், அதனுடன் கம்பீரமும் மரியாதையும் உருவாகிறது.

அமெரிக்காவில் 1996-2001 ஆகிய ஆறு ஆண்டு காலம் நடத்தப்பட்ட ஆய்வில், தாமஸ்-கால்லியர் (Thomas – Collier) என்ற ஆய்வாளர்கள்,  இரண்டு லட்சம் மாணவர்கள், அவர்களின் 15 ஆண்டு கால கல்விப் பதிவுகள்  இவற்றைக்கொண்டு ஆராயப்பட்டதில் தாய்மொழிக் கல்விதான் சிறந்தது என்பதை பல்வேறு புள்ளிவிவரங்களுடன் உறுதி செய்தனர்.  2002-ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவு உலக அளவில் முக்கியமான ஒன்று.

மற்றுமொரு நரம்பியல் ஒளிப்பட ஆய்வொன்று, மூளைக்கான தகவல்களை தாய் மொழியில் செலுத்துப்போழுது மூளை அதிக செயல்பாட்டை காட்டுவதாக கூறுகின்றது. இதன் மூலம், தாய்மொழியில் கற்றல் மூளை செயல்பாடுகளுடன் இயற்கையாக பொருந்துவதைக் காட்டுகிறது.

“நீங்கள் ஒரு மனிதனிடம் அவர் புரிந்துகொள்ளும் மொழியில் பேசினால், அது அவரது தலைக்குச் செல்கிறது. நீங்கள் அவரிடம் அவரது மொழியில் பேசினால், அது அவரது இதயத்திற்குச் செல்கிறது”என்று தாய்மொழியின் வலிமையை நெல்சன் மண்டேலா எடுத்துரைக்கிறார்.

எனினும் உலகில் உள்ள முன்னணி மொழிகளான ஆங்கிலம், ஸ்பானிஷ், ஜாப்பனீஸ், ஜெர்மன், மாண்டரின் மற்றும் இரஷ்ய மொழிகளை கற்க வேண்டியது அவசியம் அது உலகோடு நம்மை தொடர்பில் வைக்க மாபெரும் பாலமாகவும் நமக்காண பறந்து விரிந்த வாய்ப்பிற்கு திறவுகோலாகவும் இருக்கும்.

தொழிற்கல்வியின் முக்கியத்துவம்:

தொழில்நுட்ப கல்வி மனிதரின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றது, ஏனெனில் இது நவீன மற்றும் தொழில்நுட்ப பூர்வமான உலகில் வெற்றிகரமாக முன்னேறுவதற்கு தேவையான திறன்களையும் அறிவையும் ஒரு தனிமனிதர்க்கு வழங்குகிறது. 

பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு: தொழில்நுட்ப கல்வி பல வகையான திறமையான தொழில்களுக்கு தனிப்பட்டவர்களை தயாரிக்கின்றது, இதனால் பல வணிகத் துறைகளில் முன்னேற்றம் ஏற்படுகிறது. இதனால், அவர்கள் உற்பத்தி மற்றும் கண்டுபிடிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றனர், மேலும் வேலைவாய்ப்புகளை பெருக்குவதோடு உயர் சம்பள தொழில்களை பெற்று மேம்படும் வாய்ப்புக்களையும் பெற்று விடுகின்றனர்.

புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம்: செயல்பாடுகளுக்கு முன்னுரிமை அளிப்பது தொழில்நுட்ப கல்வியை மேம்படுத்துகிறது மற்றும் நவீன தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்ள உதவுகிறது. பொறியியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் புதுமையான ஆற்றல் வல்லுநர்களை தகுதி படுத்துவதைப்போல், தொழில்நுட்ப கல்வி உலகளாவிய சவால்களை, பசுமை மாற்றம் மற்றும் பொதுச் சுகாதாரம் போன்றவற்றைக் கையாள்வதில் வேகத்தை அதிகரிக்கின்றது.

வாழ்க்கை தரத்தில் மேம்பாடு: தொழில்நுட்ப கல்வி தனிநபர்களுக்கு வாழ்க்கை தரத்தை மேம்படுத்த தேவையான கருவிகளைக் கொடுக்கின்றது. இது சிறந்த அடித்தளம், செயல்திறன் வாய்ந்த தொடர்பு முறைகள் அல்லது வாழ்க்கை மேம்பாட்டுக்கு தேவையான தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான திறன்களை பெறுவது போன்றவற்றை உள்ளடக்கியது. தொழில்நுட்ப அறிவின் பலன்கள் தனிப்பட்ட வளர்ச்சியுடன் மட்டும் நின்று கொண்டிருக்காமல் சமூகங்களின் மொத்த நலனுக்கும் பங்களிக்கின்றது.

சமூக முன்னேற்றம்: தொழில்நுட்ப கல்வி தனிப்பட்டவர்களை தனித்துவமான திறன்களுடன் வழங்குவதன் மூலம் பல்வேறு சமூகநிலைகளிலிருந்து வரும் மக்களுக்கு வாய்ப்புகளை சமமாக்குகின்றது. இதனால் மேலே செல்லும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன மற்றும் சமத்துவத்தை குறைத்து, அனைவருக்கும் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் சமூகத்திற்கு பங்களிப்பதற்கும் திறன் அளிக்கின்றது.

நிலையான வளர்ச்சி: இன்று உலகில், நிலையான நடைமுறைகள் மிகவும் முக்கியமானவை. சுற்றுச்சூழல் அறிவியல், புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் மற்றும் பசுமை தொழில்நுட்பங்களை போன்ற துறைகளில் தொழில்நுட்ப கல்வி, தனிப்பட்டவர்களை ஒரு நிலையான எதிர்காலத்தை உருவாக்க தேவையான கருவிகளுடன் வழங்குகிறது. கல்வி பெற்றவர்கள் நிலையான சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் தகவல்களுடன் அறிவார்ந்த முடிவுகளை எடுக்க முடியும்.

தனிப்பட்ட ஆற்றல் மற்றும் ஆயுட்காலக் கல்வி: தொழில்நுட்ப கல்வி மூலம், தனிப்பட்டவர்கள் சிக்கல்களை தீர்க்க மற்றும் புதிய சவால்களுக்கு ஏற்படுவதில் தங்களது திறனில் நம்பிக்கையை பெறுகின்றனர். இந்த ஆற்றல் தனிப்பட்ட வளர்ச்சியையும் சுயமேம்பாட்டையும் ஊக்குவிக்கின்றது. மேலும், தொழில்நுட்ப கல்வி ஆயுட்காலக் கல்வியை ஊக்குவிக்கின்றது, இது வேகமாக மாறும் உலகில் முக்கியமானது, ஏனெனில் திறன்கள் எப்பொழுதும் புதுப்பிக்கப்பட வேண்டும்.

மொத்தத்தில், தொழில்நுட்ப கல்வி ஒரு குறிப்பிட்ட தொழிலுக்கான திறன்களை பெற்று கொள்வதை மட்டுமே அல்ல, அது மனிதரின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கின்றது, தனிப்பட்டவர்கள் தங்களது சமூகங்களுக்கு மற்றும் உலகிற்கு முக்கியமான பங்களிப்புகளை அளிக்க முடியும், மேலும் புதுமை, பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலையான நடைமுறைகள் மேம்படுகின்றன.

வேலையில்லாப் பிரச்சினை காணப்படும் இன்றைய காலகட்டத்தில் இலகுவாக வேலைவாய்ப்புக்கள் பெற கல்வியில் தொழிற் கல்வியின் பங்கு அளப்பெரியதாகும். தொழிற் கல்வியினுடாக பல தொழிற்துறைசார் அறிவுகளைப் பெற மாணவர்களுக்கு வாய்ப்புக்களேற்படுகின்றது. இதனூடாக பல நுட்பங்களை அறியும் மாணவர்கள் நவீன யுகமாகத் திகழும் இக்கால கட்டத்தில் இலகுவாக வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ள சந்தர்ப்பங்கள் ஏற்படும். அது மட்டுமல்லாமல் தாங்கள் சுயமாகவே சுய தொழில்களை ஆரம்பித்து உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடவும் தொழிற்கல்வி பாரிய பங்களிப்பு செய்கின்றது. எனவே மாணவர் விருத்தியில் தொழிற் கல்வியின் பங்கு இன்றியமையாத ஒன்றாகக் காணப்படுகின்றது.

இன்று சர்வதேச ரீதியில் ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியா  போன்ற பல நாடுகள் தொழில்நுட்ப ரீதியாக மற்றும் பொருளாதார ரீதியாக  முன்னேற்றம் கண்டு பல வளர்ச்சிகளைக் கண்டுள்ளன. இதற்கு அந்நாட்டினுடைய கல்வித் திட்டங்களும் செயற்பாடுகளும் காரணங்களாக அமைந்துள்ளமையைக் குறிப்பிடலாம். குறிப்பாக ஆஸ்திரேலியா, தொழிற்சார்ந்த ஒரு பாடத்தை மாணவர்கள் தங்களது 7 முதல் 10 ஆம் வகுப்பு வரை தேர்வு செய்யப்பட ஒரு பாடமாக தேர்ந்தெடுக்க கல்வி முறையை வைத்துள்ளது. இவ்வாண்டுகளில் அவர்களுக்கு, தோட்டக்கலை, சமையல், தையல், முடித்திருத்தம், மின்சாதன, மரவேலை, தொழிற்சாலை வடிவமைப்பு, கட்டிடத்துறை மற்றும் ஆய்வகம் சார்ந்த பாடங்களை அறிமுகப்படுத்துகிறது. இந்தப் பாடங்களை தேர்வு செய்யும் மாணவர்கள், 10 ஆம் வகுப்பு முடிக்கையில் தங்களது விருப்பமானத் துறை எதுவென்று தேர்வு செய்து உயர்க்கல்வியில் விருப்பம் இல்லாதவர்கள் தொழிற் கல்வியை நோக்கி சென்று விடுகிறார்கள். அதற்கு அரசாங்கமும் தொழிற்  நிறுவனங்களும் உதவித்தொகையை வழங்கி ஊக்குவின்றது.

கல்வி என்பது மனித வளர்ச்சியின் அடித்தளமாகும். கல்வியின் மாற்றங்கள் உலகளாவிய சவால்களை சமாளிக்க உதவும், மேலும் தனிநபர் மற்றும் சமூக மேம்பாட்டிற்குப் பாதை வகுக்கும். கல்வியை அந்தக் கால கட்டத்தில் கற்றல் மட்டும் நம்மை முன்னிலையில் வைத்திருக்காது, மாறாக நாம் இருக்கும் துறை சார்ந்து நம்மை மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும் அதுவே நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும். உதாரணமாக, நம் துறை சார்ந்த மென்பொருள் சார்ந்தும்  மற்றும் செயற்கை நுண்ணறிவு சாதனங்கள் சார்ந்தும் நமது திறமை மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். 

ஒரு மனிதன் எப்பொழுது கற்றலை விடுகின்றானோ அப்பொழுது அவன் மரணித்தவன் ஆகின்றான் என்று சுவாமி விவேகானந்தர் கூறியதை நினைவிற்கொண்டு, நம் உயிர் உள்ளவரை ஒவ்வொரு வினாடியும் கற்றலை விடாமல் கற்றுக்கொண்டே இருப்போம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *