தீட்டுலகம்

கற்பனைக்குஎட்டாத இரகசியங்களை உள்ளடக்கிய பிரபஞ்சத்தில் எல்லா உயிரினங்களையும் போல ஒரு உயிரினமாய் பெண்ணும் படைக்கப்பட்டுள்ளாள். எனினும் பெண்ணுலகு  சந்தித்து வரும் இன்னல்கள் இன்றைய தொலைக்காட்சி நெடுந்தொடர்போல நீண்டு கொண்டே இருக்கிறது .இப்போதுதான் பெண்களுக்கு விடுதலை கொடுத்தாச்சே  எங்கே வேண்டுமானாலும் எப்போ வேண்டுமானாலும் போகலாம் வரலாம் அவ(ளு)களுக்கு  என்ன என்று நீங்கள் மனதில் நினைப்பது புரிகிறது. ஆனால் பெண்ணின் மனதை அவளிடத்தில் இருந்து யோசித்துப் பார்த்ததுண்டா? பெண்களின் மனஉலகம் தனித்தன்மையானது. பெண்கள் சிறு வயது முதலே உணவு உடை நடைசெயல்பாடு மற்றும் உணர்வு வரை ஊட்டப்பட்டு வளர்க்கப்படுகின்றனர்.பெண்ணுடல் எப்போதும் போர்த்தப்பட்டும் போற்றப்பட்டும் வளர்க்கப்படுகிறது. மறுபுறமோ ஊடகப் பெண்கள் வெறும் காட்சி பொருளாக காட்டப்படுவது நகை முரண் .

இதனை, சு.சங்கரி’தன் சொல்லாத சேதி’களில் 

எப்போதும் என் உடலையே நோக்குவார்கள் 

கணவன் தொடங்கி கடைக்காரன் வரைக்கும்“…..

என்ற கவிதையில்எடுத்துக்காட்டுகிறார். லட்சியத்துடன் வாழ வேண்டிய பெண்ணுலகை இலட்சணத்துடன் வாழ வேண்டிய இக்கட்டிற்கு தள்ளி உள்ளது இச்சமூகம்….

தொடரும் சாபம்

 பெண்களின் மாதவிடாய் வலியை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது .எறும்பு புத்துக்குள் காலை வைத்துவிட்டு கால்களை எடுத்த பின்னரும்  கடித்த வலியை எவ்வாறு சொல்ல முடியுமா ? எப்படி இருந்தது என்று வர்ணிக்க இயலுமாஉங்களால் ? அதனால் தான் கவிஞர் சல்மா 

உன்னைக் காட்டிலும் மோசமான துரோகத்தை 

 புரிந்து இருக்கிறது இயற்கை எனக்கு ….

என்று “ஒரு மாலையும் இன்னொரு மாலையும்” என்கின்ற கவிதை தொகுப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.

என்று தொடங்கியது?

ஆதிகாலத்தில் தாய் வழிச் சமூகம் இருந்ததாகவும் பெண்கள் தலைமையானவர்களாக இருந்ததாகவும் பெண் வரலாறு என்ற நூலில் முனைவர்அ. பிரேமா  குறிப்பிடுகிறார். காலப்போக்கில் பெண்களின் தலைமைத்துவம் மறைந்து அவள் மாதவிடாய் குழந்தைப்பேறு உள்ளிட்ட காரணங்களைக் காட்டி அவள் மென்மையானவளாக வலிமையற்றவளாக அழகியல் நோக்கு உடையவளாக மட்டும்காட்டப்பட்டாள்..

தொட்டு தொடரும் தீட்டு பாரம்பரியம்:

மூன்றாம் ஐந்தாம் நூற்றாண்டுகளில் மாதவிடாய் குறித்த தகவல்கள் ஏதுமில்லை பெண்ணின் மாதவிடாய் தாமதமானால் இரத்தம்  இதயத்தில் சேரும் என்று நம்பப்பட்டது.

பேராச்சர்யமாக பெண் தெய்வங்களின் மாதவிடாய் சடங்குகள் மழைக்காலத்தில் கொண்டாடப்படுகின்றனஅப்பு பாச்சி மேளா என்று அழைக்கப்படும் விழா ஒரிசாவில்கொண்டாடப்படுகிறது. நம் தமிழகத்தில் பூப்புனித நீராட்டு விழா என்ற வகையில் கொண்டாடப்படுவதை நாம் அறிவோம் அதில் பல்வேறு சடங்குகள் இன்றும் கிராமப் பகுதிகளில் தொடரப்பட்டு வருவது வேதனைக்குரியது..

சடங்கு அன்று தாய் மாமன் சீருடன் தொடங்கும் விழா (இந்த சீர் வரிசைக்காகவே பல தங்கைகள் அண்ணன் களை அனுசரித்து போவது தனிக் கதை )அலங்கரிக்கப்பட்ட பெண்(?) சிறுமி) சபையில் அமர அன்பளிப்புகள் அளித்து  அந்த நிகழ்வினைகொண்டாடுவது வரை சரிதான் ஆனால் அம்மியை  கையில் கொடுத்து அதனை அங்கும் இங்கும் ஆட்டச் சொல்லி ,வேப்பிலை மற்றும் விளக்குமாறுகொண்டு  தலையில் இருந்து கால் வரை அந்தப் பெண்ணினை அடித்து அவள் கையில் நெல் நிரம்பிய படியினைக் கொடுத்து அதன் மேல் காமாட்சி விளக்கை ஏற்றி ஆரத்தி எடுத்து உள்ளே அழைப்பார்கள்.இது ஒரு கிராமப் பகுதியில் உள்ள சடங்கு. இதுபோல ஆராய்ந்தால் தமிழகத்தில் பல்வேறு சடங்குகளை நம்மால் பார்க்க இயலும். இந்த தருணத்தில் தான்  ராஜ யோகத்தில் இருந்த பெண் சடங்குகள் முடிந்த பின் சாதாரண பெண் ஆகிறாள்.

மனதை அழுத்தும் சுமை

மாதவிடாய் வலியினை கவிஞர் சல்மா உவமையாக்கி உள்ள விதம் இப்போது நினைவு கூறப்பட வேண்டிய ஒன்று 

“சுமக்கவே இயலாதபடி எப்படி 

இவ்வளவு கனத்து விடுகிறது 

இந்த மாலை 

மாதவிடாய் ஈரம் நிரம்பி 

சுமக்கின்ற பஞ்சை போல”……

 நாள்தோறும் லட்சக்கணக்கான பெண்கள் அனுபவித்து வரும் உடலியல் கனத்தை மனதிற்கு ஏற்றி கூறியுள்ளார் சல்மா.

“உப்பில்லைகாரமில்லை 

பவுடர் அதிகம் பத்தாதுகவனமென

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை 

நம்மை சரி செய்யும் பொழுது

முதல் நாள் விலக்கின்

வலியேற்கிறேன் நான் ……

என்ற என்னுடைய வெளியிடப்படாத கவிதையில் நான் குறிப்பிட்டுள்ளேன்

 பூப்படையும் நிகழ்வை தமிழகம் போல மிகப் பெரிய விழாவாக இந்தியாமுழுவதும் கொண்டாடுவர் . கேரளம் கர்நாடகம் அசாம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் வெவ்வேறு பெயர்களில் இவ்விழா நடைபெறுகிறது

குட்டி பிச்சைக்காரி

முதல் நாள் மட்டும் ராணியாக இருந்த பெண்கள் அதற்கு அடுத்த வருடம் தோறும் குறிப்பாக மாதம் தோறும் ஏன் வாழ்நாள் முழுவதும் சேவைகளை செய்தே கழிக்க இயலும் என்பதை அன்றாட வாழ்வில் உங்கள் தாய் சகோதரி மூலமாக நீங்கள் உணர்ந்து இருப்பீர்கள் .பூப்படைந்த முதல் மாதம்தான் அவள் ராணி அதற்குப்பின் அந்த இல்லறத்தின் சேவைக்கு ஆகிப் போய்விடுவார்கள் .

இதனை 

மூன்று ஐந்து என இம்சைப்படும் தினங்களில் நடந்து விடாதே உன் 

தனி இடத்தைத் தவிர 

இன்னொரு மூலைக்குக் கூட…..

                            ………….        ……………

                            …………..        ……………

 குறைந்தபட்சம் நீ 

குட்டிப் பிச்சைக்காரி விடுகிறாய் ……….

என்று  தனக்கான பொருள்களைக் கேட்டு பெற்ற நிலையை  ஒரு கவிஞர் சுட்டுகிறார்.

 என் பாட்டி என் அம்மா என்ற தலைமுறைகள் தாண்டியும் வந்த தீட்டுப் பாரம்பரியம் இப்போது சற்று மாறியிருக்கிறது. தற்போது பெண்கள் இல்லத்தில் இயல்பாக நடமாடினாலும் கோயில்கள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல மனத்தடை பெண்களுக்கிடையே உள்ளது.

அதிரும்மனது:

உலகில்உள்ள  பல பெண்களுக்கு அன்றாடம் நிகழக்கூடிய நிகழ்வாக உள்ள மாதவிடாய் ஏற்படுத்தும் மன நெருக்கடியை ,

தேதி மாறாமல் திட்டமிட்டதைப் போல 

மாதாமாதம் நிகழ்கிறது 

எனக்கான சுழற்சி என்றாலும்

 நிகழும் முதல் கணம்

 விபத்து ஒன்றை சந்தித்ததுப் போல 

அதிர்கிறது மனது ……..

என்று பச்சை தேவதையில் வெண்ணிலா குறிப்பிடுவது அப்பட்டமான உண்மை .

எங்கு ,எப்படி ,எப்போது வரும் என்று தெரியாது அது பெண்களுக்கு என்றும் சுமை தான்.சமீபத்தில் நான் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருக்கின்ற வேளையில் கூட ஒரு பெண் சத்தமிட்டு அழுதாள். இயற்கையின் சாபமான மாதவிடாய் வயிற்று வலியில் துடித்த அந்த பெண்ணிற்கு தொடு சிகிச்சைஅளித்து  படுத்து ஓய்வு எடுக்குமாறு கூறினேன்.

விடுமுறைகள் அற்ற வலிகளும் வேலைகளும்:

பெண்களின் வலிகளை

சும்மா இருக்கிறாய் என்று

 என் மனதை குதறும் வார்த்தைகள் உட்பட

தேடித்தேடி துவைத்து 

பார்த்து சமைத்து முகம் பார்க்க 

தரை துடைத்து பிள்ளைகளை கவனித்து 

நிமிர்கையில்  இரவு உனக்கானது……

 ஞாயிறு விடுமுறை உனக்கு 

எனக்கு……..

 என்ற கவிஞரின் வார்த்தைகள் உண்மை…இதனை உணராமலேயே தங்கள் வாழ்க்கையை கழித்து விடுகிறது இந்திய பெண் உலகம். சமீபத்தில் “த கிரேட் இந்தியன் கிச்சன்” உள்ளிட்ட சில திரைப்படங்கள் பெண்ணின் வலிகளை அப்படியே எடுத்துக்காட்டினாலும் மாற்றங்கள் நடந்த பாடு இல்லை.

 விஷப்பாம்பு ஒன்று என் மீது ஏறி நிதானமாக கடந்து போகிறது புரிதலற்ற உன் பார்வைகளை சந்திக்கும் போதெல்லாம் என்ற கவிஞர் வெண்ணிலாவின் கவிதை பெண் உலகின் மனஉலகை அப்பட்டமாக தெரிவிக்கிறது

நம் ஓய்வு நேரங்களிலும் விடுமுறை நாட்களிலும் பண்டிகை காலங்களிலும் கூட அவதியாய் அம்மா ஓடிக் கொண்டுதான் இருக்கிறாள் எப்போது மாறப் போகிறோம் நாம்?
தீட்டு உலகத்திற்கு மாற்று உலகம் தான் எங்கே?

2 thoughts on “தீட்டுலகம்

  1. நல்ல மேற்கோள்கள் அம்மா.இதோ என் அனுபவம் என் முதல் உதிரம் எனக்கு ஏற்படுத்திய பயம் இன்று ஒவ்வொரு மாதமும் ஏற்படுகின்றது.எத்தனை முனகல்களை கடக்க வேண்டுமோ எத்தனை பச்சிலைகளும் வைத்தியங்களும் காத்திருகிறதோ என்று தேதி வந்த தினத்தன்று நாங்கள் அதை மறைக்க வேண்டி நாங்கள் படும் பாடு யாருக்கு தெரியும். இத்தனை வலிகளுக்கிடையில் மாதவிடாய் வலி சிறியதாகத்தான் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *