திருவண்ணாமலைத் தமிழ்ச் சங்கம்

தமிழாறு பெருக்கெடுத்து ஓடும் இலக்கியத் தளம்  திருவண்ணாமலை.  இந்த மண்ணில் இருந்து வீசும் தமிழ் காற்று திசைவெளி எங்கும் தாவிப் பாய்ந்து அகிலம் முழுதும் பரவி உயர்ந்த கோட்பாட்டை கொண்ட ஒரே மொழி தமிழ் என்று நிரூபித்துக் கொண்டே இருக்கும். இன்றைய முற்போக்கு இலக்கியங்கள் முதல் பண்டைய கால தமிழ் இலக்கியங்கள் போன்ற அனைத்து வகையான இலக்கியங்களின் ஆய்வுக்களம் திருவண்ணாமலை. 

 தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, தமிழர் கலை, ஆகியவற்றை வளர்ப்பதின் மூலம் தமிழ், தமிழினம், தமிழ்நாடு என்ற உணர்வினை தமிழ் குமுகாயம்  பெற வேண்டி தொடங்கப்பட்டது தான் திருவண்ணாமலைத் தமிழ்ச் சங்கம்.

காலத்தின் கண்ணாடியாக விளங்கும் தமிழ் இலக்கிய, இலக்கணங்களை அதாவது சங்கத் தமிழ் தொடங்கி இன்றைய இணைய தமிழ் வரை ஆழ்ந்து அறிந்து தமிழின் தனிப் பெரும் சிறப்புகளை தமிழர்கள் உணர, உணர்த்த தலையாய கடமையாக கொண்டு செயல்படுவது தான் திருவண்ணாமலைத் தமிழ்ச் சங்கம்.

இலக்கியம் காட்டும் புதுமை நெறிகளையும் குமுகாய நலக் கூறுகளையும், சாதி, சமய அரசியலுக்கு அப்பாற்பட்ட நிலையில் தமிழ் மக்களின் பொதுவான வாழ்வின் சிக்கலை ஆய்ந்து கிடைக்கும் கருத்துக்களை தந்து மக்களிடம் கொண்டு செல்வது தான் திருவண்ணாமலைத் தமிழ்ச் சங்கம்.

இளைய சமுதாயத்தினர் இடையே பொதிந்து கிடக்கும் இயல், இசை, நாடகத்தின் தமிழின் கூறுபாடுகளை நுண்கலைத் திறன்களை ஊக்குவித்து வெளிக் கொண்டு வருவது தான் திருவண்ணாமலைத் தமிழ்ச் சங்கம்.

  சமய தமிழ் இலக்கியங்களையும், கடவுள் மறுப்பியக்கப் பகுத்தறிவு தமிழ் இலக்கியங்களையும் மீள் பார்வை செய்து மெய்ப்பொருள் காண்பதன் மூலம் சைவ, மாலிய,சமண, புத்த கிருத்துவ, இஸ்லாமிய, சமயங்களால் வேறுபட்டு நிற்கும்  மதத்தை சார்ந்த தமிழர்களுக்கு  தமிழுணர்வை ஊட்டி, தமிழால் ஒன்றுபட செய்வது தான் திருவண்ணாமலைத் தமிழ்ச் சங்கம்.

எல்லா சமயங்களுக்கும் பொதுவானதும் அனைத்து நிலை மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் தமிழர் தம் வாழ்வியல் நெறியுமான திருக்குறள் நெறியினை பின்பற்ற செய்ய முனைவது தான்  திருவண்ணாமலைத் தமிழ்ச் சங்கம்.

  ஆட்சித்துறை,நீதித்துறை, கல்வித்துறை, இசைத்துறை, இறைவழிபாடு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும், வீடுகளிலும்,வீதிகளிலும், வணிக நிறுவனங்களிலும் எல்லா நேரங்களிலும் தமிழ் பயன்படுத்த வேண்டும் என்ற தமிழக அரசின் கொள்கையினை கருத்தியலாகக் கொண்டு அதை பரப்புரை செய்கிறது திருவண்ணாமலைத் தமிழ்ச் சங்கம்.

தமிழால் இணைவோம் தமிழராய் வாழ்வோம் என்ற உயரிய கொள்கையோடு 1999 ஆம் ஆண்டு திரு.அருள்வேந்தன் பாவைச்செல்வி அவர்களது இல்லத்தில் புலவர் சா. தா. திருஞானம் அவர்கள் தலைமையில்  கூட்டப்பட்ட தமிழ் உணர்வாளர்கள் கூட்டத்தில் திருவருணைத் தமிழ்ச் சங்கம் என்ற பெயரில் நிறுவப்பட்டது. பின்னர் 2002ல் மொழி ஞாயிறு பாவாணர் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்ற முனைவர் அருளியார் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க திருவண்ணாமலை தமிழ்ச் சங்கம் என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டு 21/4/2013 அன்று முறையாக மாவட்ட சங்கப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது.

சா. தா. திருஞானம் அவர்களின் தலைமையில் இயங்கிய தமிழ்ச்சங்கம் அடுத்ததாக  அருள் வேந்தன் பாவைச்செல்வி அவர்களின் சீரிய தலைமையில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகாலம் சிறப்பாக தமிழ் வளர்ச்சிக்கான பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து சிறப்பாக கடந்திருக்கிறது திருவண்ணாமலைத் தமிழ்ச் சங்கம்.

சங்க இலக்கிய கருத்தரங்குகள், தொல்காப்பியர் இளங்கோவடிகள் விழாக்கள்,தமிழ் பண்பாட்டு விழாக்கள், திருவள்ளுவர் திருநாள், தமிழ் குடும்பங்கள் விழாக்கள்,தமிழும் அரசியல் இயக்கங்களும் தொடர்பான கருத்தரங்குகள், பல் சமய தமிழ் இலக்கிய மாநாடுகள், மறைந்த தமிழ் அறிஞர்களின் நினைவை கொண்டாடிட அவர்களின் வழித்தோன்றல்கள் பங்கேற்கும் ”வேர்கள்” நிகழ்ச்சிகள், மொழி ஞாயிறு பாவாணர், பேரறிஞர் அண்ணா, முனைவர் மு.வ. நூற்றாண்டு விழாக்கள், மலை நகர் பாவரங்கங்கள், தமிழ்பாவியல் பயிற்சி பட்டறை, நூல் வெளியிட்டு விழாக்கள், தூய தமிழ் காவலர் அண்ணல் தங்கோ, தந்தை பெரியார், முத்தமிழ் அறிஞர் கலைஞர்,புலவர் குழந்தை அறக்கட்டளை சொற்பொழிவுகள், தமிழ் தமிழரின் பெருமையை பறைசாற்றும் “தேடல்” நிகழ்ச்சிகள், தமிழகப் பெரு விழாக்கள், சமய நல்லிணக்க விழாக்கள், என 195 க்கும் மேற்பட்ட நிகழ்சிகளை நடத்தி தமிழ் வளர்ச்சிக்கு பல்வேறு தளங்களில் பயணப்படுகிறது திருவண்ணாமலைத் தமிழ் சங்கம்.

எங்கள் சங்கத்தின் முதுகெலும்பாக துணைத்தலைவர் அண்ணன் சி.எஸ்.துரை அவர்கள். தன்னுடைய ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் தமிழ்ச்சங்க நிகழ்விற்காக “தமிழ் அரங்கம்” என்ற அரங்கைகட்டி எல்லா நிகழ்வையும் அனைத்து ஏற்பாடுகளுடன் கட்டணமின்றி நடத்திட உதவும் உயர்ந்த உள்ளம் படைத்த தமிழ்பற்றாளர். துணைத்தலைவர்கள் வள்ளல் ம.சின்ராசு,சீனி.கார்த்திகேயன் அவர்களின் பொருளாதார உதவிகளால்

தொய்வின்றி  நடக்கிறது திருவண்ணாமலைத் தமிழ்ச் சங்கம். இணைச் செயலாளர் பேராசிரியர் சாந்தமூர்த்தி, அமைப்புச் செயலாளர் மா. கா. சிவக்குமார், செய்தி தொடர்பாளர் அலிமுகமது, தணிக்கை குழு உறுப்பினர் தளபதி சல்மான் போன்றோர்  சங்கத்தின் மிகப்பெரும் தூண்கள். துணைத்தலைவர் சொல்லினியன் அவர்கள் எழுதிய அண்ணாமலையார் வெண்பா, பெரியார் குறித்து தடி என்ற புத்தகம், வள்ளலார்,இனிப்பு சுற்றிய காகிதம் என்ற ஹைக்கூ கவிதை,தமிழ் தொண்டர் புகழ்மணிமாலை,

திருக்குறள்  விளக்க உரை அறத்துப்பால் பொருட்பால் இன்பத்துப்பால் ஆகிய 3 பாக்கள் வடிவ புத்கங்கள்    திருவண்ணாமலை தமிழ்ச் சங்கம் வெளியிட்டு விழா நடத்தி உள்ளது. எமது சங்கத்தில் முனைவர் வே. சுலோச்சனா இணைச்செயலாளர், பெ.ரவிசந்திரன் துணைச் செயலாளர், பேராசிரியர் ஏகாம்பரம் துணைச் செயலாளர், ரகு ரங்கநாதன் தணிக்கை குழு உறுப்பினர் போன்றோர் திறம்பட செயல்படுகின்றனர். கிட்டதட்ட 200 உறுப்பினர்களைக் கொண்டு 20 ஆண்டுகளை கடந்து தமிழ்ப்பணியாற்றுகிறது.

2020 ஆம் ஆண்டு தலைவர் அருள் வேந்தன் பாவைச்செல்வி அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்த அந்த கனமான சூழலில் அவரது இணையர் திருமதி்.பாவைசெல்வி அவர்கள் தலைவராகவும், காதர்ஷா ஆகிய நான் செயலாளராகவும், பூவேந்தரசு அவர்கள் பொருளாளராகவும், தேர்ந்தெடுக்கப்பட்டு சிறந்த முன்னெடுப்புகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம்…

க.காதர்ஷா,பொதுச்செயலாளர்,

2 thoughts on “திருவண்ணாமலைத் தமிழ்ச் சங்கம்

  1. பெருஞ்சிறப்பு ….. பாராட்டுகள்!

  2. மிகச் சிறப்பு அய்யா உங்களுடைய தமிழ் பணியை தொடரட்டும் அதில் என்னையும் இணைத்துக் கொள்ளுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *