தமுஎகச என்னும் பண்பாட்டுப் பேரியக்கம்

தோற்றமும் வளர்ச்சியும்

மதுரை பேருந்து நிலையத்திற்குப் பின்னால் உள்ள அந்தப் பகுதிக்குப் பெயர் திடீர்நகர். பெயர்ப்பொருத்தம் கச்சிதமாக இருந்தது. வெறும் கரடாகக் கிடந்த அந்த இடத்தைத் தங்கள் தேவைக்காக சட்டென்று ஒரு குட்டி நகரமாக உருவாக்கியிருந்தனர் உழைப்பாளி மக்கள். அங்கே சீமை ஓடு போட்டிருந்த ஒரு தொழிற்சங்க கட்டிடத்தில்தான் அந்தக் கூட்டம் நடந்தது.

சிஐடியு எனும் அகில இந்திய தொழிற்சங்க மையத்தோடு இணைக்கப்பட்டிருந்த அந்த மின் ஊழியர் மற்றும் போக்கு வரத்து ஊழியர் சங்க அலுவலகத்தில் 35 எழுத்தாளர்கள் கூடியிருந்தனர்.அவர்கள் அனைவரும் “செம்மலர்” ஏட்டில்எழுதிக் கொண்டிருந்தவர்கள். அதில் வெளிவரும் படைப்புகள் குறித்தும், அதன் வளர்ச்சி குறித்தும் விவாதிக்க அவர்கள் வந்திருந்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கிய ஏடு “செம்மலர்”. எனவே, இயல்பாகவே அதன் தலைவர்களாகிய ஏ.பாலசுப்பிர மணியம், எம்.ஆர்.வெங்கட்ராமன், ஏ.நல்லசிவன், என்.சங்கரய்யா ஆகியோர் வருகைபுரிந்திருந்தனர்.ஏட்டின் ஆசிரியர் கே.முத்தையா கூட்ட ஏற்பாடுகளைக் கவனித்திருந்தார்.

1974ம் ஆண்டு நவம்பர் திங்கள் 23, 24 தேதிகளில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில்தான் தொழிலாளி வர்க்கத் தலைவரும், சிறந்த இலக்கிய விமர்சகருமான என்.சங்கரய்யா முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஒன்றினை அமைக்கிற ஆலோசனையை முன்வைத்தார். அப்போதே இலக்கியம் குறித்து எவ்வளவு சரியான, எவ்வளவு பரந்த கண்ணோட்டத்தை முற்போக்காளர்கள் கொண்டிருந்தனர் என்பதை அவரின் இந்தப் பேச்சு உணர்த்தும்,   அவரது உரையின் சில பகுதிகள் –

1. “கடந்த கால இலக்கியம் பற்றிய நமது கண்ணோட்டம் என்ன? இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பு சிருஷ்டிக்கப்பட்ட இலக்கியத்திற்கும் நாம்தான் வாரிசு. அதை நாம் தன்வயப்படுத்திக்கொள்ள வேண்டும்”.

2. “உண்மையின் ஆதாரத்தில் இலக்கியம் படைக்க வேண்டும். தஞ்சை, கோவை போன்ற இடங்களில் நடக்கும் போராட்டங் களைப் புரிந்துகொள்ளாமல் எப்படி ஒரு நல்ல இலக்கியம் படைக்க முடியும்?”

3. ‘வாழ்க்கையை வர்ணிக்கும்போது சோகத்தை, கொடுமையை அம்பலப்படுத்த வேண்டும். எதிரி வர்க்கங்களை அடையாளங் காட்ட வேண்டும். அதன் மூலம் அவர்கள் மீது கோபத்தை ஏற்படுத்தவேண்டும்.”

4. “தற்கால வாழ்வைப் படம் பிடித்துக் காட்டினால் மட்டும் போதாது. அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்ல  வழி காட்டவும் வேண்டும்”.

5. “மதப் பிரச்சாரம், சுரண்டல் என்பவை எவ்வளவு நாசூக்காகப் போகிறது. அதைப் புரிந்து இலக்கியம் படைக்க வேண்டும். யதார்த்தம் என்னும்போது துல்லியமாயிருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் மார்க்சிம் கார்க்கி.’

6.“வார்த்தைகளை அளவுக்குமீறிப் பயன்படுத்துவது நயத்தைக் கெடுக்கிறது. வாசகன் புரிந்துகொள்ள விட்டுவிட வேண்டும். நாம் போய் விளக்கிக்கொண்டிருக்கக் கூடாது.” 

7.“புதுக்கவிதையில் நமது  உள்ளடக்கம் இருக்க வேண்டும். புதுக்கவிதையை மக்கள் ரசிக்கிறார்களா, இல்லையா என்பதே உரைகல்.”

8.”தமிழ்நாட்டில் முற்போக்கு இலக்கிய ஸ்தாபனத்தை உருவாக்குவது நமது கடமையாக வந்துள்ளது. முற்போக்கு இடதுசாரி ஜனநாயகத்தன்மை கொண்ட அத்தனை எழுத்தாளர் களையும் கொண்டு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஏற்படுத்த வேண்டிய கட்டம் வந்துவிட்டது.”

சத்தியத்தை ஆதாரமாகக் கொண்ட இலக்கியம், அந்த இலக்கியத்தை வளர்த்தெடுக்க ஓர் அமைப்பு, சத்தியத்தின் துல்லியம் மற்றும் இலக்கியத்தின் பன்முகத்தன்மை என இரண்டையும் ஒருங்கே கொண்ட கண்ணோட்டம். கர்ணன் பிறக்கும்போதே கவசகுண்டலத்தோடு பிறந்ததுபோல தமுஎச இவற்றை ஏந்திப் பிறந்தது. இந்திரனின் வஞ்சனையால் பாதியிலேயே கவச குண்டலத்தைப் பறிகொடுத்தான் கர்ணன். தமுஎசவோ நாளது தேதிவரை எச்சரிக்கையாக இருந்து வருகிறது. 

அனைத்தையும் ஆனா, ஆவன்னாவிலிருந்து புதிதாகத் துவங்குவதே முற்போக்கு என்று அதிரடியாகச் சிலர் பேசிவந்த காலத்தில் பழந்தமிழ் இலக்கியத்திற்கும் முற்போக்காளரே வாரிசு  என்று தைரியமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மடிசஞ்சித்தனத்திற்கும், நல்ல மரபுக்குமிடையே உள்ள வேறுபாட்டைப் புரிந்து நல்லதைத் தன் வயப்படுத்தும் சிந்தனையும் வெளிப்பட்டிருக்கிறது.

புதுக்கவிதை ஜனனம் எடுத்த காலமது. அது நல்லதா, கெட்டதா என்று தீவிரமான பட்டிமன்றம் நடந்த அந்த வேளையில் ஒரு புது வடிவம் என்ற முறையில் அதனை ஏற்றதும், அதே நேரத்தில் அதன் எதிர்காலத்தை வாசகர்களின் கையில் ஒப்படைத்ததும் தமிழ் இலக்கிய வரலாற்றுக் கல்வெட்டில் பதிக்க வேண்டிய உண்மை. துவக்க காலத்தில் புதுக்கவிதையை அனைத்து முற்போக்காளர்களும் எதிர்த்தார்கள் என்கிற கற்பிதத்தையும் இது உடைத்து நொறுக்குகிறது.

இந்த உரைமீதும், கே.முத்தையா முன்வைத்த “செம்மலர்” படைப்புகளைப் பற்றிய திறனாய்வுமீதும் வந்திருந்தவர்கள் கருத்துக்கள் கூறியதும், முடிவில் தொகுப்புரை வழங்கினார் என்.சங்கரய்யா. அதுவும் வரலாற்று முக்கியத்துவமுடையதே.  

தொகுப்புரையிலிருந்து…

1. “இன்றைய இலக்கியத்தில் மனிதாபிமானத்தை ஒதுக்கிவிடும் நிலைக்கு நாம் போய்விடவில்லை. மனிதாபிமான இலக்கியம் பிற்போக்கானதுமல்ல, காலம் கடந்ததுமல்ல”.

2, “யதார்த்தவாத இலக்கியமும் வேண்டும். சோசலிச யதார்த்த இலக்கியமும் வேண்டும். பிந்தியதைப் படைப்பதில் சிரமம் என்றால் யதார்த்தக் கதைகள் வரட்டும்.”

3. “நம்மால் ஒன்றும் செய்ய முடியாது போலிருக்கிறதே என்கிற நிராசைக் கதைகள் வேண்டாம்”

4. “வாழ்க்கையில் மகிழ்ச்சியும் இருக்கிறது. அதையும் சித்தரிக்க வேண்டும். மகிழ்ச்சியோடு முடிகிற கதையும் சரியானதுதான். இல்லையெனில் விரிவான இலக்கியமாக இருக்காது.”

5. “விரசம் கூடாது. ஆனால், காதல் வாழ்வோடு சம்பந்தப் பட்டது. அதுவும் இலக்கியத்தில் வரவேண்டும்.’

6. “பழைய பாணியில் எழுதப்பட்டாலும் புதிய பாணியில் எழுதப் பட்டாலும் கவிதை வடிவம் வேண்டும். பொருளும் முக்கியம், வடிவமும் முக்கியம். வடிவம் இல்லையெனில் அது கவிதை இல்லை.’

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே முற்போக்கு வட்டத்தை மிகப்பெரிதாகப் போட்டுக் கொண்டிருக்கிறது தமுஎச. மனிதாபிமான இலக்கியத்திலிருந்து சோசலிச யதார்த்தம் வரை அதன் எல்லை விரிந்து பரந்து கிடக்கிறது. முற்போக்கு என்றால் சோகமும், கோபமும் மட்டுமே என்பதைப் புறந்தள்ளிக் காதலும் மகிழ்ச்சியும் கூட அதன் அங்கங்களே என்பதைத் திட்டவட்டமாகத்தெரிவிக்கிறது.

முற்போக்காளர்கள் கருத்துக்கே முக்கியத்துவம் கொடுப்பார் கள், வடிவம்பற்றிக் கவலைப்பட மாட்டார்கள் என்கிற அநியாயக் குற்றச்சாட்டையும் இந்தத் தொகுப்புரை முறியடிக்கிறது. உயிர் கருத்து என்றால் உடல் வடிவம். அரூபமும் இலக்கியமாகாது, பிணமும் இலக்கியமாகாது. இரண்டும் பின்னிப் பிணைந் திருக்கின்றன என்பதைத் தமுஎச பிறக்கும் போதே உணர்ந் திருந்தது. இன்னும் சரியாகச் சொன்னால் கருவிலேயே அறிந்திருந்தது.

இன்று வேர்விட்டு விழுதுவிட்டு அடர்ந்து படர்ந்த பெரும் ஆலமரமாய் தமுஎச திகழ்கிறது. தமிழ்ப் பண்பாட்டுத் தளத்தில், தமிழ்க் கலை இலக்கிய வரலாற்றில் நியாயவான்கள் எவரும் அதன் பங்களிப்பை மறுதலிக்கமாட்டார்கள். அந்த மகத்தான அமைப்பைத் துவக்குவது என்றும், அதன் அமைப்பு மாநாட்டை மதுரையில் கூட்டுவது என்றும் முடிவில் தீர்மானிக்கப்பட்டது.

இப்படியொரு சரித்திரச்சாதனை புரிந்த கூட்டத்தில் பங்கு கொண்ட அந்த எழுத்தாளர்கள் யார் யார்  ?

எத்தனையோ மனிதர்கள் பிறக்கிறார்கள். பிறந்ததும் பூமியில் தங்களுக்கென்று ஓரிடத்தை அடைத்துக் கொள்கிறார்கள். காலம் ஓடுகிறது. தன்னைப் பிறப்பித்த பிரபஞ்சத்திற்கு என்ன செய்தோமென்று நினைத்துப் பார்த்தால் பலருக்கும் வெறுமையே மிஞ்சும். சிலருக்குத்தான் வாழ்ந்ததன்… வாழ்வதன்… அர்த்தம் புரிபடும். தாங்கள் மட்டுமல்ல, பிறரும் நினைத்துப் பார்க்கத்தக்க அடையாளத்தைப் பொறித்துத் தந்த பெருமிதத்தைவிடவும் வாழ்வில் பெரிய மகிழ்ச்சி ஏதும் இருக்குமா?

அந்த மகிழ்ச்சியின் சொந்தக்காரர்கள் இவர்களே!

1.கு.சின்னப்பபாரதி,2.புலவர் த.ச.ராசாமணி,3.டி.செல்வராஜ், 4.ஐ.மாயாண்டி பாரதி, 5. எஸ்.ஏ.பெருமாள், 6. இரா.கதிரேசன், 7.மேலாண்மைபொன்னுச்சாமி, 8.தி.வரதராசன்,9.பெ.மணியரசன், 10. அஸ்வகோஷ், 11. காஸ்யபன், 12. ப.ரத்தினம், 13. நெல்லைச் செல்வன், 14. கம்பராயன், 15. தணிகைச் செல்வன், 16. நாமக்கல் சுப்ரமணியம்,17. வேலுச்சாமி, 18. வேல.ராமமூர்த்தி,19.ராஜபாளையம் ச.மாதவன், 20. ஐ.பெரியசாமி, 21. கோமகன், 22. ச.மு.சுந்தரம், 23. பால தண்டாயுதபாணி, 24. வீரமாசக்தி, 25. புலவர் நாகை பாலு, 26. முல்லை இளமுருகன், 27.மோகனச்சந்திரன், 28. நெடுமாறன், 29. அடியிற்கை சீனிவாசன், 30. இளங்கோவன், 31. நடராசன், 32. விளதை சுதாமுகிலன், 33. செல்வம், 34.பெயர் தெரியவில்லை, 35. செங்கீரன்.

இவர்களிலிருந்து முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கு வதற்கான, அதற்கான கொள்கை அறிக்கை தயாரிப்பதற்கான அமைப்புக்குழு ஒன்றும் தேர்வு செய்யப்பட்டது. அதில் அங்கம் வகித்தவர்கள் 1.கே.முத்தையா (தலைவர்) 2.கு.சின்னப்பாரதி 3.த.ச.ராசாமணி 4.இரா.கதிரேசன்.5.டி.செல்வராஜ் 6. தி.வரதராசன் 7. மேலாண்மை பொன்னுச்சாமி .8.நெல்லைச்செல்வன் 9. பெ.மணியரசன் 10. அஸ்வகோஷ் 11. நாமக்கல் சுப்பிரமணியம் 12. தணிகைச் செல்வன் 13. கம்பராயன் 14. மோகனச் சந்திரன்.

முதல் மாநாடு

இந்தியாவுக்கு சுதந்திரம் நள்ளிரவில் வந்தது. அதனால் தானோ என்னவோ 1975 ஜூன் 25 நள்ளிரவில் அது பறிக்கப்பட்டது ஆம்! தனது பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக அன்றைய பிரதமர் மனித உரிமைகளைக் காற்றில் பறக்க விட்டார்.

ஜூன் 29 அன்று “மிசா” சட்டம் கடுமையாக்கப்பட்டது. எவரின் கைதுக்கும் காரணமே கூற வேண்டியதில்லை என்று திருத்தப்பட்டது. ஜூலை 16 அன்று அந்தச் சட்டம் மேலும் கடுமையாக்கப்பட்டது. “இயற்கை அல்லது பொது அடிப்படையில்கூட எவரும் விடுதலை கோர முடியாது என்று நீதி” ஆக்கப்பட்டது. இம் என்றால் சிறைவாசம். ஏனென்றால் வனவாசம் என்பது நடைமுறையானது.

எங்கும் இருள், மையிருட்டு இருள். அடர்ந்த தோப்புக்குள் சூரியன் கஷ்டப்பட்டு எட்டிப் பார்க்குமே அப்படி – தமிழகத்தில் திமுக ஆட்சி நடந்த காரணத்தால் இங்கு மட்டும் ஜனநாயக உரிமைகள் சற்று மூச்சுவிட்டுக் கொண்டிருந்தன.

அதைப் பயன்படுத்திக் கொண்டு ஏற்கெனவே திட்டமிட்டிருந்த படி தமுஎசவின் அமைப்பு மாநாடு முதல் மாநில மாநாடு, மதுரையின் தமுக்கம் கரையரங்கில் அந்த 1975 ஆம் ஆண்டு ஜூலை 12, 13 தேதிகளில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இடையில் ஒரு செய்தி. தமுஎசவைத் துவக்குவது எனத் திட்ட மிடப்பட்ட மதுரை திடீர்நகர் கூட்டத்திலேயே சென்னையில் ச.செந்தில்நாதன் பொறுப்பில் இயங்கிவந்த “மக்கள் எழுத்தாளர் சங்கத்தை” தமுஎசவோடு இணைப்பது என்கிற கருத்தும் எழுந்தது. அந்த அமைப்பில் கந்தர்வன் போன்ற எழுத்தாளர்கள் இயங்கி வந்தனர். ச.செந்தில்நாதனை ஆசிரியராகக் கொண்டு “சிகரம்” என்ற இலக்கிய ஏடு நடந்து வந்தது. அதில் எழுதி வந்த பல இலக்கியவாதிகளும் தமுஎசவில் இணைந்தனர். “மக்கள் எழுத்தாளர் சங்கமும்” தமுஎசவில் அதன் முதல் மாநாட்டின்போதே இணைந்துவிட்டது 

மாநாட்டிற்குத் தமிழகம் முழுவதிலுமிருந்து 110 பிரதிநிதிகள் வந்திருந்தனர். மதுரை, இராமநாதபுரம், தென்னாற்காடு, கோவை, சென்னை, சேலம், நெல்லை, செங்கை, பாண்டி, வட ஆற்காடு, தஞ்சை, புதுகை, குமரி எனும் மாவட்டங்களிலிருந்து இந்த வரிசைப்படியான எண்ணிக்கை வலுவில் அவர்கள் இருந்தனர். மேற்குவங்கம், கர்நாடகம் போன்ற மாநிலங்களிலிருந்து தலா ஒரு பிரதிநிதி வந்திருந்தார்.

அந்த இருநாள் மாநாட்டிற்கும் கு.சின்னப்பபாரதி, டி.செல்வராஜ், தணிகைச் செல்வன் ஆகியோர் தலைமைக் குழுவாக இருந்து நடத்தித் தந்தனர்.  

அமைப்புக்குழுவின் சார்பில் தயாரிக்கப்பட்ட “எழுத்தாளர் களுக்கு ஒருவேண்டுகோள்” எனப்பட்ட அறிக்கையையும்,அமைப்பு விதிகளையும் முன்மொழிந்து பேசினார் கே.முத்தையா.

“நம்முன் இருபெரும் பணிகள் காத்திருக்கின்றன. ஒன்று; தமிழகத்திலே பரவிவரும் நச்சிலக்கியத்தின் உண்மைச் சொரூபத்தை உலகத்தின்முன் தோலுரித்துக்காட்ட வேண்டும்… இரண்டு; அதே நேரத்தில், ‘இதோ இருக்கிறது பார் முற்போக்கு இலக்கியம், இதற்கு ஈடு உண்டா’ எனக் கேட்டு பிற்போக்காளர்களின் கடையை மூட வைக்க வேண்டும்.”

அழித்தலுக்கு ஒரு கடவுள், ஆக்கலுக்கு ஒரு கடவுள் என்று இந்துப் புராணங்களில் இருக்கலாம். வாழ்விலோ இரண்டையும் ஒரே அமைப்பு செய்ய வேண்டியுள்ளது. பிற்போக்கு இலக்கியங் களைச் சாடுவதில் அன்று காட்டப்பட்ட தீவிரத்தின் அளவிற்கு படைப்புத் தொழிலில் முற்போக்காளர்கள் இறங்கியதாகச் சொல்ல முடியாது. இதனைச் சுயவிமர்சனத்தோடு ஏற்றுக் கொண்டிருந்தனர்.

அதேநேரத்தில்,வெறும் புலம்பலாகப் போய்விடாமல் அந்த அமைப்பு மாநாட்டிலேயே கு.சி.பா.வின் “தாகம்” நாவல் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. நூலை வெளியிட்டவர் பிரபல மராத்தி எழுத்தாளர்  பழங்குடி மக்களின் ஒப்பற்ற தலைவர் கோதாவரி பருலேகர். அதனை அறிமுகப்படுத்தியவர் கே.முத்தையா.

அமைப்புக்குழுவின் சார்பில் முன்வைக்கப்பட்ட”அறிக்கை”யை தமுஎசவின் பிறப்புச் சான்றிதழ் எனலாம். நான்கு பக்கங்களையே கொண்டுஅளவில் வாமன வடிவமாக இருந்தாலும் உள்ளடக்கத்தில் அது விஸ்வரூபமாக விளங்கியது. விஷய ஆழத்தில் ஒரு மகா சமுத்திரமாகஇருந்ததால்தான் 50 ஆண்டுகளாகியும் தமுஎச கப்பல் தரைதட்டவில்லை. மாறாக, அமைப்பு வேகமாகவும், கட்டுப் பாடாகவும் வளர்ந்தோங்க அதுவே காரணமாக அமைந்துபோனது. அதிலிருந்து சில துளிகள்.

1. “இலக்கியம் என்பது வாழ்க்கையிலிருந்து தோன்றியது; வாழ்க்கையைக் கண்டு சொல்வது; அதை ‘ மேன்மேலும் முன்னுக்குக் கொண்டுசெல்ல உதவுவது. 

2.“யதார்த்தமான சூழ்நிலையில் கற்பனையான பாத்திரங்கள் சாத்தியமான செயல்களில் ஈடுபடுவதாகக் காட்டுவதே யதார்த்தச் சித்தரிப்பு. ஒரு குறிப்பிட்ட காலத்தைச் சித்தரிக்கும் இலக்கியங்கள் அந்தக் காலத்தின் வாழ்க்கையையே பின்னணியாகக் கொண்டிருக்க வேண்டும்.”

3. “இந்த வழியில் சிருஷ்டித்தன்மை வாய்ந்த இலக்கியத்தைப் படைப்பதில்எழுத்தாளனின் தனிமனித உணர்ச்சி, கற்பனை ஆற்றல் ஆகியவற்றுக்கு முழுப்பங்கு உண்டு. எழுதும் பாணியில் எத்தனை எத்தனையோ வகையுண்டு. அவை அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம். மாறிவரும் காலத்திற்கேற்றபடி, தான் வாழும் சமுதாயத்தின் கலாச்சார உணர்வுகளுக்கு ஏற்றபடி புதுப்புதுப் பாணிகளை உருவாக்கிக் கொள்ளலாம்.”

4. “வாழ்க்கை இன்று எப்படி இருக்கிறது என்பதைச் சித்தரிப்ப தோடல்லாமல் அது எப்படி இருக்க வேண்டுமென்பதையும் தங்களது படைப்புகளில் கோடிட்டுக் காட்டுவதன் மூலமே ஓர் எழுத்தாளன் தனது சமுதாயக் கடமையை முழுமையாகச் செய்யமுடியும். இதையே இலக்கியததில் சோசலிச யதார்த்த அணுகுமுறை என்று கூறுகிறோம்.”

5.”எனினும்,இன்றுள்ள நிலைமையில் முற்போக்கு எழுத்தாளர் களாகிய நம்மிடையே யதார்த்தச் சித்தரிப்பு என்ற அணுகு முறையினைப் பொதுவாக நிலவ வேண்டிய வழிமுறையாகக் கொள்கிறோம்.’

6. “கீழ்வரும் நோக்கங்களை நமது இலக்கியக் குறிக்கோள்களாய்க் கொள்வோம்:

(1) சாதி, மத, இனப் பிரிவினைகளால் பிளவுபட்டுக் கிடக்கின்ற மக்களிடையே ஒருமைப்பாட்டை வளர்த்தல் (2) சாதிய ஒடுக்கு முறைகளை எதிர்த்து விடாப்பிடியாகப் போராடுதல் (3) மொழி, இனம், பிராந்தியம் இவற்றின் பேரால் எழுகின்ற இனவெறிப் போக்குகளை எதிர்த்தல் (4) ஜனநாயக உரிமைகளுக்கு இன்று நம் நாட்டில் ஏற்பட்டுள்ள ஆபத்தை எதிர்த்துப் போராடுதல். (5) உழைக்கும் மக்களின் ஜனநாயக இயக்கங்களுக்கும், வேலையின்றி வாடும் இளைஞர்களின் போராட்டங்களுக்கும் துணைநிற்றல். (6) பெண்ணினத்தை இழிவுபடுத்தும் எல்லாவிதமான பிற்போக்குத் தனங்களையும் சாடுதல், பெண்ணினத்தின் விடுதலைக்காகப் போராடுதல் (7) இன்றைய வாழ்க்கையில் ஏற்படும் சீரழிவுக்கான அடிப்படைக் காரணங்களை மூடிமறைத்துத் திசைதிருப்பும் நோக்கத்துடன் உருவாக்கப்படுகின்ற காமவெறியூட்டும் ஆபாச இலக்கியங்களை முறியடித்தல் (8) லஞ்சம், ஊழல், கலப்படம், கள்ளச்சந்தை, கறுப்புப்பணம், கடத்தல் போன்ற சமுதாய விரோதச் செயல்களை எதிர்த்தல் (9) மூட நம்பிக்கைகளிலிருந்து மக்கள் விடுபடும் வகையில் விஞ்ஞானக் கண்ணோட்டத்தை வளர்த்தல் (10) ஏகாதிபத்தியம் புரியும் சதிகளை எதிர்த்துச் சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும், தம் நாட்டு விடுதலைக்காகவும் போராடும் மக்களுக்குத் துணை நிற்றல்.”

2008 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற அமைப்பின் 11 ஆவது மநில மாநாட்டில் இக்கொள்கை அறிக்கையும் அமைப்பு விதிகளும் திருத்தி எழுதப்பட்டன.அத்திருத்தத்தில் “மூன்றாம் பாலினம் எனப்படுகிற திருநங்கையரின் வாழ்வுரிமைக்காகப் போராடுவது, திரைப்பட தொலைக்காட்சித்துறையில் மாற்றங்களுக்காகப் போராடுவது,தெரு சினிமா இயக்கத்தைக் கட்டி எழுப்புவது,குழந்தைகள் உரிமைக்காகவும் அனைவருக்குமான பொதுக்கல்வி முறைக்காகவும் போராடுவது போன்ற அம்சங்கள் குறிக்கோள்களில் இணைக்கப்பட்டன. 

எழுத்திலே முற்போக்கு பிற்போக்கு என்று இனம் பிரிக்க முடியுமா? முற்போக்கு என்பதற்கு வரையறை வழங்க முடியுமா? “தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்” என்று ஏன் பெயர் சூட்ட வேண்டும்? எழுத்தாளர் சங்கம் என்றால் போதாதா? இப்படிப் பல கேள்விகளை அடுக்கியவர்கள் உண்டு.

இந்த அமைப்பு தனித்துவ அடையாளமின்றிப் பத்தோடு பதினொன்றாகக் கரைந்து போகட்டும் எனும் பொல்லாங்கு மனதோடு கேட்டவர்கள் உண்டு. “முற்போக்கு” எனும் சொல் இந்த அமைப்பின் பரந்துபட்ட தன்மைக்கு இடையூறாக ஆகிவிடக்கூடாதே எனும் நல்லெண்ணத்தில் கேட்டவர்கள் உண்டு. இலக்கியம் என்றால் இலக்கியம்தான், அதன் உள்ளுறை கண்டு இனம் பிரிக்கக்கூடாது என உண்மையிலேயே நம்பிக் கேட்டவர்கள் உண்டு.

முதலாவது பிரிவினர்பற்றி முற்போக்காளர்கள் கவலைப்பட வில்லை. அன்றும் கவலைப்படவில்லை; இன்றும் கவலைப்பட வில்லை. மற்ற பிரிவினரின் ஐயப்பாடுகளைப் போக்க வேண்டியது அவர்களின் கடமையாக இருந்தது.

கடைசிப் பிரிவினரை முதலில் எடுத்துக் கொள்வோம். இலக்கியம் என்றால்இலக்கியம்தான், அதில் முற்போக்கு பிற்போக்கு இல்லை என்பவர்கள் படைப்பின் வடிவநேர்த்தி பற்றி மட்டும் கவலை கொள்கிறவர்கள். வடிவத்தில் சிறந்திருந்தால் அது சிறந்த இலக்கியம், இல்லையெனில் மட்டமான இலக்கியம் எனத் தரம் பிரித்தால் போதும் என்கிறார்கள். இது தேவை என்பதில் நமக்கும் அட்டியில்லை. ஆனால், கழுத்தை அறுக்கும் கத்தி கூர்மையாக இருக்கிறதே, அதன் கைப்பிடி நல்ல வேலைப்பாடோடு இருக்கிறதே என்று அறுபடுகிறவர் பாராட்டுவரா? சிறந்த வடிவ நேர்த்தியோடு படைப்பு இருப்பதாலேயே அது சிறந்த இலக்கியமாகி விடாது. அது வாசகனுக்குள் நாசூக்காகவோ, திணிப்பாகவோ தள்ளுகிற சிந்தனையைக் கணக்கில் கொள்ள வேண்டும். எந்த இலக்கியமும் எந்தச் சிந்தனையையும் புகட்டி விடுவதில்லை என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக்கூடாது. சன்னமாகவாயினும் ஏதேனும் சேதி இல்லாத இலக்கியம் இல்லை. அந்தச் சேதியின் தரம் பற்றிக் கவலைப்படக்கூடாது என்றால் நடைமுறையில் சமுதாயத்திற்குச் செய்கிற துரோகமாகிவிடும்.

ஒரு சில படைப்புகளில் உருவமும் உள்ளடக்கமும் ஒன்றை யொன்று கவ்வி தனித்துப் பிரிக்கமுடியாதபடிஇருக்கும். சொல்லும் விதத்தாலேயே சொல்லப்பட்டது முற்போக்கா, பிற்போக்கா என்று இனம் பிரிக்க முடியாதபடி இருக்கும். உண்மையே. இப்படி இருக்கலாம். ஆனால், அவை மிக அபூர்வமானவை என்பது நமது மனசாட்சிக்கு நன்றாகத் தெரியும். ஆகப் பெரும்பாலானவற்றை அவற்றின் வடிவநேர்த்தியால் மட்டுமல்லாது உள்ளுறைச் சிந்தனையாலும் முற்போக்கு பிற்போக்கு என்று பாகுபடுத்திப் பார்க்க முடியும். அந்த பாகுபாட்டில் நாம் முற்போக்கின் பக்கம் நிற்போம் என பிரகடனப்படுத்துவது அவ்வகை இலக்கியத்தை வளர்ப்பதற்கான முன் நிபந்தனையாகும். இல்லையெனில் நூலறுந்த பட்டங்களாய், சிறகொடிந்த பறவைகளாய், திக்குதிசை தெரியாத மரக்கட்டைகளாய் நாம் தத்தளிக்க நேரிடும்.

இரண்டாவது பிரிவினர் அமைப்பின் விரிவாக்கம் குறித்து உண்மையிலேயே அக்கறை கொண்டு இந்த வினாக்களைத் தொடுத்தனர். “முற்போக்கு” எனும் சொல் நம்மிடம் வரவேண்டிய படைப்பாளிகளை வாசலிலேயே நிறுத்திவிடாதா? வெளியிலிருந்தே எட்டிப்பார்த்துவிட்டுப் போய்விட மாட்டார்களா? இதுதான் அவர்கள் கவலை.

தமுஎச அமைப்பு ஒரு திறந்த புத்தகம். எதையும் அவர்கள் மறைக்கவில்லை. மார்க்சிஸ்ட் கட்சியின் ஏடாகிய “செம்மலரில்” எழுதி வந்தவர்களால் ஆக்கப்பட்டதுதான் தமுஎச. ஆனால் ஒரு எழுத்தாளர் அமைப்பு என்ற முறையில் அது சுயேட்சையாக இயங்குகிறது. அதில் எந்த அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களும் இருக்கலாம். ஒரேயொரு நிபந்தனைதான். அவர்கள் தமுஎசவின் இலக்கியக் கோட்பாட்டை ஒப்புக் கொண்டிருக்க வேண்டும்.

அந்தக் கோட்பாடு இலக்கியத்தில் முற்போக்குச் சிந்தனையை முன்னெடுத்துச் செல்வது. அந்த “முற்போக்கு” என்பது ஆரம்பகட்ட மனிதாபிமானத்திலிருந்து சோசலிச யதார்த்தவாதம் வரை விரிந்து பரந்தது. இன்னும் திட்டவட்டமாக இருக்கட்டும் என்பதற்காகத் தான் “முற்போக்கு” என்பதற்கு அந்த பத்துக்கு மேற்பட்ட அம்சக் குறிக்கோள்கள் விளக்கவுரையாகத் தரப்பட்டுள்ளன.

தன்னையொரு “முற்போக்காளன்” என அழைத்துக் கொள்கிற வர் இவற்றை நிராகரிக்க முடியுமா? முடியாது. அதே நேரத்தில், இவற்றையும் தாண்டி முற்போக்கு கால் பதிக்க முடியும் என்பதை தமுஎச உணர்ந்தே இருக்கிறது. இங்கேயிருப்பது திசைகாட்டி. இந்த வழியில் பயணிக்கும் அனைத்துமே முற்போக்கு இலக்கியங் களே. ஒரே வரியில் சொன்னால் மனித சமூகத்தை இப்போ திருப்பதைவிட அணுவளவேனும் உயர்த்த வேண்டும் எனும் நோக்கத்தை வெளிப்படுத்தும் இலக்கியமெல்லாம் முற்போக்கு இலக்கியமே.

இன்னும் ஒரு விஷயம். “முற்போக்கு எழுத்தாளர் சங்கம்” எனும் பெயர் இருந்தாலும் எழுத்தாளரின் ஒரு படைப்பு முற்போக்கானதாகவும், இன்னொரு படைப்பு பிற்போக்கான தாகவும், இன்னொன்று சட்டென்று இனம் பிரிக்க முடியாத தாகவும் இருக்கக் கூடும். “முற்போக்கு எழுத்துக்களின் சங்கம்” என்று வைக்க முடியாத காரணத்தாலேயே இப்படிப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இதன் உண்மையான நோக்கம் முற்போக்கு இலக்கியங்களைப் பிறப்பெடுக்க வைப்பதே. அதனால்தான், ஒரு படைப்பை அதன் சொந்த அளவிலேயே, அதன் சுயபலத்திலேயே மதிப்பிட முனைகிறது தமுஎச. ஆக்கியோன் பற்றிய விபரங்கள் இரண்டாம்பட்சமே.

அனைத்திற்கும் மகுடமென பாணி மற்றும் வடிவத்தைப் பொறுத்தவரை முழுச்சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. “அறிக்கை” இதனை மிகச் செறிவான பதங்கள் மூலம் எடுத்துரைக்கிறது.

இந்த நிலைபாட்டை எழுத்தாளர்களால் நிச்சயம் புரிந்து கொள்ள முடியும். இந்தக் காந்தசக்தி வந்து சேரவேண்டியவர் களையும், தயங்கித் தயங்கி நிற்பவர்களையும்கூட நிச்சயம் ஈர்த்துக் கொள்ளும் எனும் நம்பிக்கை இதை உருவாக்கிய காலத்திலேயே இருந்தது. அது இன்று மெய்ப்பிக்கப்பட்டும் உள்ளது. இந்த அமைப்பின் வளர்ச்சியும், அதன் மேடைக்கு பலரும் பூரிப்போடு வந்து சேருவதும், நம்மவர் வெளிவட்டாரம் எனும் எல்லை யெல்லாம் மிகவும் சுருங்கி சிறந்தபடைப்பு, நல்ல சிந்தனை என்பதே கோலோச்சுவதும் இதற்குத் தக்க ஆதாரங்கள். “முற்போக்கு” தடைக் கல்லாக இல்லவே இல்லை; மாறாக, கச்சிதமான இடுகுறியாகி உறுதியான படிக்கல்லாகிப்போனது.

இதற்கு ஏதுவாகவே சங்கத்தின் “அமைப்பு விதிகள்” உருவாக்கப் பட்டிருந்தன. “இதன் கொள்கை அறிக்கையையும், அமைப்பு விதிகளையையும் ஏற்றுக்கொண்டு உறுப்பினர் சந்தா செலுத்துகிற ஒரு எழுத்தாளர் இதன் உறுப்பினராகத் தகுதி பெற்றவர்” என்று விதி 2 கூறியது. விதி 3 அந்த “எழுத்தாளர்” யார் என்று விளக்கம் தந்தது. அது: “சிறுகதை, நெடுங்கதை, குழந்தைக்கதை, கவிதை, இசைப்பாடல், கட்டுரை, விஞ்ஞானக் கட்டுரை, இலக்கிய விமர்சனம்,நாடகம், பிறமொழி இலக்கியங்களின் மொழிபெயர்ப்பு, நகைச்சுவைத் துணுக்கு, குட்டிக்கதை, சித்திரம், கேலிச்சித்திரம் ஆகியவற்றைப் படைத்து வருபவர்களும், இவற்றைப் படைக்க அக்கறை கொண்டிருப்பவர்களும்.”

கொள்கை “அறிக்கை”யை ஏற்பதே உறுப்பினராவதற்கான அடிப்படைத் தேவையாக இருந்தது. அந்த அளவுக்கு அது நெகிழ்ச்சியுடையதாக இருந்தது. “எழுத்தாளர்” என்பதற்குத் தரப்பட்டுள்ள வியாக்கியானம் அனைத்துக் கலை இலக்கியம் படைப்பவர்களையும் தழுவி நின்றது. ஆக, எழுத்தாளர் சங்கம் என்று பெயர் இருந்தாலும், அது உண்மையில் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கமாகவே தோற்றமெடுத்தது. இது இன்னும்கூட பின்னாளில் நெகிழ்வாக்கப்பட்டது என்பதைக் காணவிருக்கிறோம்.

மாநாட்டில் அறிக்கைமீதும், அமைப்பு விதிகள் மீதும் பயனுள்ள கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது. அறிக்கையை மேலும் செழுமைப்படுத்த சில திட்டவட்டமான ஆலோசனைகள் வந்தன. இவற்றைக் கணக்கில்கொண்டு அதனைத் திருத்தியமைக்க கே.முத்தையா, டி.செல்வராஜ், இரா.கதிரேசன், நெல்லைச் செல்வன், அஸ்வகோஷ் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப் பட்டது. அது பின்னர் கூடி அறிக்கையை இறுதிப்படுத்தியது. அது மாநாட்டால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலக்குழுவாலும் அங்கீகரிக்கப்பட்டது.இந்தப்படியாக முழு ஜனநாயகப் பண்போடு தமுஎசவின் கொள்கை அறிக்கை தயாரிக்கப்பட்டது.

முதல் மாநில மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலக் குழுவும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்தியே. அந்த மாநிலக்குழு கூடி நிர்வாகிகள் உள்ளிட்ட மாநிலச் செயற்குழுவைத் தேர்வு செய்தது.  

இதுவரை நாம் கண்டது சுருக்கமான ஒரு தோற்ற க்கதைதான்.2008இல் 11 அவது மாநில மாநாட்டில் ஏற்கப்பட்ட கொள்கை அறிக்கை மேலும் சுருக்கமாகக் கூறியது அதன் முதற் பகுதி மட்டும் இங்கே:

கொள்கை அறிக்கை

 1. மனித வரலாறு நெடுகிலும் உருவான ஆயிரமாயிரம் கலைஞர்களும் எழுத்தாளர்களும் தங்கள் படைப்பு -களினூடாகத் தம் அனுபவங்களைச் சகமனிதர்களோடுபகிர்ந்துகொள்ளவே முயன்றார்கள். வாழ்வனுபவத்திலிருந்து தாம் பெற்ற செய்தியை உலகுக்குச் சொல்லும் முகத்தானும் ஒரு கருத்தைப் பரப்ப வேண்டும் என்பதற்காகவும் ஒரு லட்சியத்தை முன் நிறுத்தியும் என எல்லாக் காலத்திலுமே பெரும்பாலான படைப்பாளிகள் கலை இலக்கியம் என்பது சமுதாயத்துக்காகத்தான் என்ற பார்வையுடனே இயங்கியுள்ளனர்.அதே சமயம் கலை சமுதாயத்துக்காக அல்ல. கலை கலைக்காகவேதான் என்கிற குரலும் வரலாற்றில் இருந்து கொண்டிருக்கிறது. நம்மைப் பொறுத்தவரை கலை கலைக்காகவே என்கிற வாதத்தை முற்றாக நிராகரித்து கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே என்கிற கம்பீரமான முழக்கத்தோடு நடைபோடுகிறவர்கள். 2. கலைஞர்கள், எழுத்தாளர்களுக்கு சமூக நோக்கும் சமூகப்பொறுப்பும் சமூகக் கடமையும் தேவையில்லை, அமைப்புகள் தேவையில்லை, அவர்கள் முற்றிலும் சுதந்திரமானவர்கள் – என்கிற ஆபத்தான வாதங்களை நிராகரித்துப் பிறந்த இயக்கம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம். சங்க இலக்கியம், தொல்காப்பியம் துவங்கித் தமிழின் சங்கம் மருவிய கால இலக்கியங்கள், காப்பியங்கள்- சித்தர் பாடல்கள் எனத் தமிழ் இலக்கியங்கள் அத்தனையுமே சமூகத்தை நோக்கி-அவ்வக்காலச் சமூகத்தைப் பிரதிபலித்தும் கேள்விக்குள்ளாக்கியும் பிறந்தன என்பதுதான் நம்இலக்கிய வரலாற்றின் சாரம்.

 ஆகவே சங்க இலக்கியம் தொடங்கித்தொல்காப்பியம், காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், சித்தர் பாடல்கள் ஈறாகச் செம்மொழித்தமிழின் செவ்வியல் மரபின் முற்போக்கான கூறுகளின் வழித்தோன்றல்கள் நாம்.இழிசனர் வழக்கென்று பண்டை எழுத்து மரபு புறக்கணித்த நாட்டுப்புற இலக்கியங்களும், அரண்மனைகளும் ஆடல் அரங்குகளும் நிராகரித்த நாட்டுப்புறக் கலைகளும், நம் சொந்த மக்களின் படைப்புக்கள் என்கிற பெருமிதத்தோடு -அதே சமயம் அவற்றில் பொதிந்து கிடக்கும் பிற்போக்கான கருத்தோட்டங்கள் மீதான கூர்மையான விமர்சனங்களோடும் – நம் நெஞ்சில் ஏந்துவோம். நாட்டார் வழக்காறுகள் துவங்கி எங்கும் பதிவு பெறாது போய்விட்ட நீண்ட நெடிய பாணர் மரபு ஈறாக உள்ள அனைத்து மக்கள் கலை இலக்கிய மரபுகளையும் உள்வாங்குவோம்.

சமூகத்தைப் பேசாத இலக்கியம் எதுவுமில்லை. பொறுப்பு வேண்டாம், கடமை கிடையாது, அமைப்பு வேண்டாம் என்கிற வாதங்களை ஒரு படைப்பாளி முற்போக்கான திசையில் வளர்ச்சி அடைவதைத் தடுக்கும் தடைச் சுவர்களாகவே நாம் பார்க்கிறோம். சமூகக் கடமை என்று நாம் குறிப்பிடுவது சம கால வாழ்வியல் மீதான அக்கறையும், முற்போக்கான விமர்சனக் கண்ணோட்டமும் தான்.

3.1936ஆம் ஆண்டு.வெள்ளை ஆட்சிக்கு எதிராகப் படைப்பாளிகள் அணி திரண்டு துவக்கிய இயக்கம் அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம். நாடகக் கலைஞர்கள், திரைக்கலைஞர்கள் என ஒரு ஒரு பெரும் கலைப்படையாக 1943இல் அணி திரண்டது அகில இந்திய மக்கள் நாடக மன்றம் (இப்டா). தமிழகத்தில் அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கிளையாக 1948 இல் சிறிது காலம் இயங்கியது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்.அதன் செயலாளராக கவிஞர் தமிழ் ஒளி இருந்தார். 1960களில் தமிழ்நாட்டில்  கலை இலக்கியப் பெருமன்றம். பிறந்தது. 1970களில் இயங்கியது மக்கள் எழுத்தாளர் சங்கம். இக்கலை இலக்கிய அமைப்புகளின் வரலாற்றுத் தொடர்ச்சியாக அப்பாரம்பரிய வேர்களிலிருந்து உரம்பெற்று இன்னும் புதிய வீச்சோடும் வேகத்தோடும் விசையோடும் இயங்கிடப் பிறந்த இயக்கம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம். இந்தியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு கருத்து சுதந்திரமும் அரசியல் இயக்கங்களும் முடக்கப்பட்டிருந்த அந்த 1975 இல், அந்த இருட்டை எதிர்த்துப் பிறந்த சக்தியே தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம். இடதுசாரி இலக்கிய மாத இதழான செம்மலரில்’ எழுதிக் கொண்டிருந்த எழுத்தாளர்கள் 32 பேர் மதுரையில் கூடி இந்த இயக்கத்தைத் துவக்கினார்கள். பின்னர் இது கலைஞர்களும், கலை இலக்கிய ஆர்வலர்களும், பண்பாட்டு ஊழியர்களும் அங்கம் பெற்ற கலை இலக்கியப் பண்பாட்டு இயக்கமாக விரிவு கொண்டு வளர்ந்தது. 2008 டிசம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற 11 ஆவது மாநில மாநாட்டில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் என்று பெயர் மாற்றம் பெற்றது.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 300க்கு மேற்பட்ட  கிளைகளோடு இயங்கக்கூடிய ஒரே கலை இலக்கிய அமைப்பு தமுஎகச மட்டும்தான் என்று இன்று நம்மால் கூற முடியும். எழுத்தாளர்கள்,கலைஞர்கள்,வாசகர்கள் என அனைவரையும் ஒரே குடையின்கீழ் கொண்டு வந்து 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட உறுப்பினர்களோடு தமுஎகச இயங்கி வருகிறது.கலை இரவு என்கிற புதிய வடிவத்தை தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்தது தமுஎகசதான்.தமிழ் மொழியைச் செம்மொழியாக அறிவிக்கக்கோரி தொடர் போராட்டங்களை நடத்தியது தமுஎகசதான்.1994 ஏப்ரல் 24 இல் தமிழ் வளர்ச்சி-பண்பாட்டுப் பாதுகாப்பு மாநாடு நடத்தியது.அதனைத்தொடர்ந்து  ஆகஸ்ட் 19 2000த்தில் டெல்லியில் செம்மொழியாக அறிவிக்கக்கோரி ஆர்ப்பட்டம் நடத்தி அன்றைய பிரதமர் வாஜ்பாயிடம் மனு அளித்தோம். தமிழைச் செம்மொழியாக அங்கீகரிக்கச்செய்ய தமுஎகசவின் பங்களிப்பும் வலுவாக இருந்தது.

சாதிக்கலவரங்களால் 1996இல் தென் மாவட்டங்கள் சிதைந்தபோது மக்கள் ஒற்றுமைக்கலை இரவுகளை மாவட்டம் தோறும் நடத்தி ஒற்றுமைக்குரலை துணிவுடன் எழுப்பியது தமுஎகச.கோவையில் குண்டு வெடிப்பும் கலவரமும் மூண்ட 1997இல் கோவை சிங்காநல்லூரில் மக்கள் ஒற்றுமைக்கலை இரவை நடத்தி இந்து முஸ்லீம் சமூகப்பிரமுகர்களை மேடையேற்றிக் கட்டித் தழுவிக்கொள்ள வைத்தோம்.

ஆண்டுதோறும் கவிதை,சிறுகதை,நாவல்,விமர்சனம்,நாடகம்,சினிமா என துறைசார்ந்த 12 விருதுகளை வழங்கி வருகிறோம்.

ஆண்டுதவறாமல் கடந்த எட்டாண்டுகளாக புதுச்சேரியில் பிலிம் டிவிசனுடன் இணைந்து சர்வதேச குறும்பட ஆவணப்பட விழாவை நடத்தி வருகிறோம்.ஆண்டுக்கு ஒரு ஊரில் சர்வதேச முழுநீளத்திரைப்பட விழாவை நடத்தி வருகிறோம்.திரைப்படக்கல்லூரிகள் லட்சக்கணக்கில் பணம் கேட்பவையாக இருப்பதால் எளிய குடும்பப்பின்னணியிலிருந்து வரும் இளைஞர்கள் வாய்ப்பை இழக்கிறார்கள்.அவர்களைக்கணக்கில் கொண்டு தமுஎகச திரைப்பள்ளி ஒன்றைத்துவக்கி கடந்த மூன்றண்டுகளாக நடத்தி வருகிறது.மிகக்குறைந்த கட்டணத்தில் அப்பள்ளி ஆண்டுக்கு 35 மாணவர்களை திரைத்துறைக்கு அனுப்பி வருகிறது.இப்பள்ளி இன்னும் விரிவாக்கம் பெறும்.இதுபோல ஒரு நாடகப்பள்ளி துவக்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது.

தமிழர் உரிமை மாநாடு,கருத்துரிமை மாநாடு,சனாதன ஒழிப்பு மாநாடு எனப் பிரம்மாண்டமான மாநாடுகளைச் சென்னையிலும் கல்வி உரிமைப் பாதுகாப்பு மாநாடு,வள்ளலார் 10 வைக்கம் 100 விழாக்களை திருச்சியிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்புடன் நடத்தியுள்ளோம்.மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராகத் தமிழக மக்களின் மனச்சாட்சியைத் தட்டி எழுப்புவதில் தமுஎகச அழுத்தமான பங்களிப்பைச் செய்துள்ளது.இளம் படைப்பாளிகளூக்கான எண்ணற்ற பயிலரங்குகளை இடையறாது நடத்தி வருகிறது.பண்பாட்டுத்தளத்தில் சாதி,மதவெறி சக்திகளுக்கு எதிராகச் சமரசம் இன்றிப் போராடி வருகிறது.எழுத்தாளர் பெருமாள் முருகன் மதவாத சக்திகளால் மிரட்டப்பட்டபோது அவருடைய கருத்துரிமைக்காக 100 இடங்களில் ஆர்ப்ப்பாட்டம்.கண்டனக்கூட்டங்கள் நடத்தியதோடு சென்னை உயர்நீதி மன்றத்தில் அவருக்கு ஆதரவாக வழக்கும் தொடுத்து வெற்றியும் பெற்றோம்.வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தத்ஹ்டீர்ப்பை தமிழாக்கம் செய்து வழக்கு எண் 1215/2015 என்கிற நூலாகவும் வெளியிட்டோம்.படைப்பாளிகளின் கருத்துரிமைக்கான வலுவான பாதுகாப்புக் கேடயமாக தமுஎகச திகழ்கிறது என்பதற்கு இத்தீர்ப்பு ஒரு சான்றாகத்திகழ்கிறது.தொடர்ந்து புலியூர் முருகேசன் சாதிய சக்திகளால் தாக்கப்பட்டபோதும் கவிஞர் வைரமுத்து மத வாத சக்திகளால் குறிவைக்கபட்டபோதும் களத்தில் நின்றது தமுஎகச.

தோழர்கள் டி.செல்வராஜ்,மேலாண்மை பொன்னுச்சாமி,சு.வெங்கடேசன் ஆகிய தமுஎகச தலைவர்கள் சாகித்ய அகாடமி விருதுகள் பெற்றுள்ளனர்.தோழர்கள் ஆயிஷா நடராஜன்,யெஸ்.பாலபாரதி,க.உதயசங்கர் போன்ற தமுஎகச தோழர்கள்  சாகித்ய அகாடமியின் பால புரஷ்கார் விருது வென்றுள்ளனர்.கு.சின்னப்பபாரதி,கொ.மா.கோதண்டம் போன்ற தோழர்கள் இலக்கியமாமணி விருது பெற்றுள்ளனர்.தேனி சீருடையான்,க.உதயசங்கர் போன்றோர் தமிழ்ச்செம்மல் விருது பெற்றுள்ளனர்.மதுக்கூர் ராமலிங்கம் தமிழக அரசின் விருது பெற்றார்.இவையெல்லாம் ஒருசோறுப்பதம்தான்.எந்த விருதுப்பட்டியலை யார் வெளியிட்டாலும் அதில் தமுஎகச படைப்பாளி ஒருவரின் பெயர் கட்டாயமாக இடம்பெறும் என்ற நிலை உருவாகியுள்ளது.

படைப்பாளிகளும் அமைப்பாளர்களும் ஒன்று கலந்து முன்னேறும் பண்பாட்டுப்பேரியக்கமாக தமுஎகச தமிழ் மண்ணில் வீறுநடை போட்டு வளர்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *