தமிழர் கல்வி பாரம்பரியம்.

கிமு 6ஆம் நூற்றாண்டிலேயே தமிழ் சமூகம்  எழுத்தறிவு கொண்டது என்று கீழடியில் கிடைக்கப்பெற்ற பானை ஓடுகளில் செய்யப்பட்ட ஆய்வுகள் உறுதிசெய்த நிலையில், நம்மிலிருந்து 3 தலைமுறைக்கு முன்பான நமது முன்னோர்கள் கல்வியறிவற்றவர்களாக மாற்றப்பட்டுள்ளனர், என்பதை எவ்வாறு அணுகுவது என்ற கேள்வியில் ஒட்டு மொத்த தமிழர் வரலாறும்  சுருங்கி விடுகிறது, அந்த வரலாறு மிக உயரிய இலக்கிய இலக்கணகங்கள் கொண்ட ஆழ்ந்த தத்துவார்த்த பின்னணியில் வளர்ந்த தமிழ் சமூகத்தில் ஜாதிய அடுக்கு முறை செய்த சிதைவினால் உண்டான இருண்ட வரலாறு என்பது தான் நிதர்சனம். 

தொல்காப்பியத்திலேயே குருகுல கல்வி & வசதிக்கேற்ப செலவு செய்து கற்றுக் கொள்ளும் கல்வி, என்று எத்தகையதாக கல்வி முறை இருந்தாலும், கல்வி என்பது தனிமனித சுதந்திரம் & தனிமனித விருப்பம் சார்ந்ததாக இருந்துள்ளதே தவிர தற்போது உள்ள நிறுவனமயமாக்கப்பட்ட கல்வி வழங்கும் பொது பள்ளிகளை போன்ற அமைப்புகளாக இருந்திருக்கவில்லை, மேலும்  அக்கல்வி வழங்கும் அமைப்புகள் பெரும்பாலும்  தொழில்முறை கல்வியாகவும், சமயம் & மொழியியல் சார்ந்த கல்வி பயிற்றுவிற்பதாகவே இருந்துள்ளது. 

தற்போதுள்ள நிறுவனமயமாக்கப்பட்ட பொது கல்வி அமைப்புகள் சமண பள்ளிகளிருந்து துவங்கி கிறிஸ்துவ மிஷினரிகளால் கொண்டுவரப்பட்ட  மெக்காலே  கல்வி முறையாக மட்டுமே விவாதிக்கப்படுகிறது, இதை தவிர்த்து தமிழ்நாட்டில் கல்வி முறையே இல்லையா என்ற கேள்வி எழுப்பப்படுமேயானால் அதற்கான பதில் ஒரு சுவாரஸ்யமான ஒரு வரலாற்றுச் சாளரத்தை திறந்து வைக்கும். 

சமணத் துறவிகள் ஓய்வெடுப்பதற்காக குன்றுகளில் உள்ள பாறைகளை குடைந்து படுக்கை செதுக்கி கொடுக்கப்பட்டிருக்கிறது அவைகளுக்கு பள்ளிகள் என்று பெயர் சமண துறவிகள் ஓய்வு நேரம் போக அங்கு சுற்றுப் பகுதிகளில் உள்ள குழந்தைகளை அவர்களது பள்ளிகளுக்கு அழைத்து வந்து ஆரம்பக் கல்வி வழங்கி வந்துள்ளனர் அதன் அடிப்படையிலேயே கல்வி பயிற்றுவிக்கும் இடங்களுக்கு பள்ளிகள் என்று பெயர் வரக்காரணம், பள்ளிகளைப் போலவே கல்லூரி என்ற சொல் சீவக சிந்தாமணியில் இடம்பெறுவதாக தொ.பரமசிவன் குறிப்பிடுகிறார், மேலும் சிரா என்ற சமணத் துறவி தற்போதுள்ள திருச்சிராப்பள்ளி பகுதியில் பள்ளி நடத்தி கல்வி வழங்கி வந்துள்ளார் அதனாலேயே சிரா பள்ளி என்ற பெயரை மரியாதை நிமித்தமாக திரு என்ற குறிப்பு சொல்லைச் சேர்த்து திருச்சிராப்பள்ளி என்றானது, அதே போல மாணக்கன் & மாணக்கி என்ற சொரற்களும் சமண கல்வெட்டுகளிலிருந்து காணக்கிடைப்பது சமணத்திற்கும் தமிழர்கள் கல்விக்குமான பந்தம் எத்தகையது என்பதை புரிந்து கொள்ளலாம். 

ஆண் சமணத்துறவிகளைப் போலவே பெண் துறவிகளும் கல்விபோதித்துள்ளனர் என்பதும் இங்கே முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது,  பக்தி இயக்க வளர்ச்சிக்கு பின்பான சமண வீழ்ச்சியுடன் சமண பொதுப் பள்ளிகள் முறைமைகளும் சிதைந்துள்ளது, அதைத் தொடர்ந்து குருகுலக் கல்வி முறை பிரதான கல்வி பயிற்றுவிக்கும் நிறுவனமானது, ஆனால் அது அனைவருக்குமானதல்ல. ஜாதியபடி நிலைகள் சார்ந்தது. இந்த குருகுலக் கல்வி முறையில் சமஸ்கிருதம் & உருது சார்ந்த கல்விகள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளது. அதில் அறிவியல் சார்ந்த கற்பிதம் இல்லாமல் இருந்துள்ளது.

குருகுல கல்வி முறைக்கு பின்பான தமிழர் கல்வி ஆங்கிலேயர்கள் கொண்டு மெக்காலே கல்வி முறை, இந்திய கல்வியில் புதிய புரட்சியாக இருந்தது, ஆங்கிலேயர்கள் நிர்வாக தேவைக்காக ஆங்கில வழிக் கல்வியை ஊக்குவித்த மெக்காலே இந்தியா கல்வி சார்ந்து பல ஆய்வுகள் மேற்கொண்டு, பல அறிக்கைகள் வழங்கினார், சமஸ்க்ரிதம் & உருது கல்விகளைத் தாண்டி ஆங்கில வழி கல்வி நிறுவனங்கங்களை நாடு முழுமைக்கும் கொண்டு வர பரிந்துரை செய்திருந்தார், கல்வி உயர் சாதியினருக்கு மட்டுமே என்ற பாரம்பரியமான முறையை முழுமையாக எதிர்த்த மெக்காலே பிராந்தியங்கள் சார்ந்து பயிற்றுவிக்கும் மொழியில் பிரச்சனைகள் இருந்தாலும் கல்வி அனைவருக்குமானதாக இருக்க வேண்டும் என்று கல்வியைப் பொதுமைபடுத்தினார், இன்றைய வலது சாரி வரலாற்றுப் பார்வை கொண்டவர்கள் மெக்கிலாவிற்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றனர் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் என்று நாம் விரல் விட்டுச் சொல்லும் அண்ணல் அம்பேத்கர் மகாத்மா காந்தி பண்டிதர் நேரு உட்பட அனைவரும் மெக்காலே கல்வி முறையின் வழித் தோன்றல்கள் தான் என்பது மெக்காலே கல்வி முறைக்கான ஆகச் சிறந்த எடுத்துக்காட்டு. 

மெக்காலே கல்விமுறை தொடர்ந்து கல்வி சார்ந்த விழிப்புணர்வு பல இயக்கங்கள் மூலம், தமிழ்நாடு முழுமைக்கும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது, மெக்காலே கல்வி முறை வேலைவாய்ப்பில் புதிய பாய்ச்சலை உருவாக்கியது இது சமூக முன்னேற்றத்தில் குறிப்பிடதக்க தாக்கத்தை ஏறுபடுத்தியது, ஆனால் 18ஆம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் மெக்காலே கல்வி முறை மட்டுமே இருந்ததா என்றால் நிச்சயமாக இல்லை, மெக்காலே கல்வி முறை பொது கல்வி வாய்ப்பை சாத்தியப்படுத்தினாலும் அது அனைவருக்குமான வாய்ப்பாக இல்லை என்பதே நிதர்சனம், அந்தத் காலகட்டத்தில், திண்ணைப் பள்ளிகள் என்பதே பட்டியல் சாதி மக்களின் கல்விக்கான பிரதான வாய்ப்பாக இருந்தது, திராவிட சித்தாந்தத்தின் பிதாமகரான அயோத்திதாஸ பண்டிதர் உள்ளிட்ட அப்போதைய முக்கிய பட்டியலின தலைவர்கள் திண்ணைப் பள்ளி மாணவர்களாகளே. 

பெரியாருக்கு பிந்தாய சமூக சீத்திருத்த அமைப்புகள், இடை சாதியினர்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு உரிமை போன்றவற்றின் பிரதிநித்துவத்திற்காக தீவிரமாக செயல்பட்டு அதை சாத்தியப்படுத்தியது என்பதும் வரலாறே, ஆனால் தமிழ் இனத்திற்கே கல்வி தந்தது திராவிடம் என்ற கருத்தும் திராவிடம் என்ற கருத்தியலே பெரியாருக்குப் பிந்தயது போன்ற வரலாற்றை மறுவாசிப்பிற்கு உட்படுத்தவைக்கப் பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது. 

தமிழ் சமூகத்தின் முன்னேற்றத்தில் முக்கியப்பங்கு வகிக்கும் திராவிட சித்தாந்தத்தை பார்ப்பனிய முதலாளித்துவத்திற்கு எதிரான கருத்தியலாக உயரத்திப் பிடித்ததில் அயோத்திதாசர் பங்கு ஆகப் பெரிது, மேலும் அண்ணல் அம்பேத்கருக்கு முன்னதாக ஜாதிய அடுக்கு முறைக்கு எதிராக பௌத்தத்தை கொண்டுவந்தவரும் பண்டிதரே, இதை நாம் இப்போது சொல்ல வேண்டிய காரணம் என்னவென்றால் தமிழ்நாட்டின் நவீன வரலாற்றை முன்னோடியாக திகழ்ந்த பண்டிதர் ஒரு திண்ணை பள்ளியின் மாணவன் என்பது தான். 

குருகுல கல்வியின் நீட்சியான திண்ணைப் பள்ளி 18ஆம் நூற்றாண்டில் மெக்காலே பள்ளிகள் வாய்ப்பு கிடைக்காத சமூகத்திற்கானதாக அமைந்திருந்தது, இப்பள்ளிகள் பட்டியலின மக்களின் கல்வியில் மிக முக்கியப் பங்காற்றியது, பூலோகவியாசன்’ பத்திரிகையின் ஆசிரியரும் ஏராளமான நூல்களை இயற்றிய பூஞ்சோலை முத்துவீர நாவலர் முக்கியமானவர் தனக்கென்று தனி மாணவப் பரம்பரை கொண்டிருந்தவர்,  தமிழ்நாட்டின் பட்டியலின ஆளுமைகளில் முக்கியமானவரான M.C.ராஜா இவரது மாணவர் பரம்பரையைச் சார்ந்தவர். 

அயோத்திதாசப் பண்டிதர், சுவாமி சகஜாநந்தா, ஏ.பி.பெரியசாமி புலவர் என்று ஏராளமானோர் தங்களுக்கென்று பெரும் மாணவப் பரம்பரையினரைக் கொண்டிருந்தனர். இரவு பாடசாலை மற்றும் மிஷினரிகள் பள்ளிகள் என்று அந்த காலகட்டத்தில் கல்விக்காக நிறுவனமயமாக்கப்பட்ட பள்ளிகள் இயங்கி வந்தாலும், திண்ணைப் பள்ளியில் கல்வி பயின்ற மாணவர்களும் தங்களுக்கான பிரதிநிதித்துவம் கல்வி உரிமை பண்பாடு மருத்துவம் என்று அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கி வந்தனர். குருகுல கல்வியில் ஜாதிய காரணங்களால் கல்வி மறுக்கப்பட்ட அதே மக்களினம் அதே கல்வி முறையை பயன்படுத்தி நவீன தமிழ்நாட்டின் அடித்தளத்தை அமைத்தது, ஜாதிக்கு எதிரான மிகப் பெரிய புரட்சியாக இருந்ததோடு மட்டுமல்லாது, புதிய வாய்ப்புகளையும் கருத்தியலையும் உருவாக்கியது புதிய வரலாறு. 

திண்ணைப் பள்ளியில் படித்துவந்த பல பட்டியலினத் தலைவர்கள் பின்னாட்களில் மிஷினரிகள் & ஆங்கிலேய அரசு உதவியுடன் பல கல்வி நிறுவனங்கங்களை நடத்தி வந்துள்ளார், அதில் பண்டிதர் அயோத்திதாசர் மற்றும் பாதர் ஆல்காட் இருவரும் இணைந்து பட்டியலின மக்களுக்காக அமைத்த பள்ளிகளில் முதன் முதலில் மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து சுய நிதி பள்ளிகள் தமிழ்நாடு முழுமைக்கும் அமைக்கப்பெற்று இரண்டு நூற்றாண்டுகள் தாண்டியும் சில பள்ளிகள் இன்றும் இயங்கி வருகிறது. 

கிட்டத்தட்ட 2000 வருடத்திற்கும் மேலான கல்வி பாரம்பரியம் கொண்ட தமிழ்நாட்டில் கல்வி என்பது எப்போதுமே அரசியலாக்கப்பட்டு வந்தது தான் நிதர்சனம், சமணம் பள்ளிகள் அமைத்து கல்வி பயிற்றுவித்த அதே காலகட்டத்தில் பௌத்தமும் தனக்கான கல்வி பங்களிப்பை வழங்கியுள்ளது, பக்தி இயக்க காலத்திலும் சாரி பின்பான அரசர்கள் காலத்திலும் சரி சாதிய அரசியலால் தமிழர் கல்வி பாதிக்கப்பட்டது நிதர்சனம் தான், தமிழர்கள் கல்வி சார்ந்த மேலும் ஆழமான ஆராய்ச்சிகள் தேவை என்பது கல்வி சார்ந்த மட்டுமல்ல ஜாதியம் கல்வியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது, அதில் வேதம் மனுஷமிருதி போன்ற மத நூல்களின் தாக்கம் என்ன என்பதை நிச்சயம் ஆராய வேண்டும், மேலும் பெண்கள் கல்வி என்ற பெரியாரின் நூற்றாண்டு முழக்கம் எத்தகையாக நிலையில் உள்ளது என்பது நிச்சயம் நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதே எல்லாவற்றையும் விட இன்றைய தேதியின் முக்கியமான தேவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *