சொர்க்கமே என்றாலும்.

பட்டுக்கோட்டை என்றால்  அனைவரின் நினைவு எண்ணங்களில் ஒரு நொடியாவது சிறகடித்து பறப்பது பட்டுக்கோட்டையை பாட்டுக்கோட்டையாக மாற்றிய அய்யா கவிஞர் கல்யாணசுந்தரம் அவர்களின் நினைவுகள்தான், பட்டுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் பிறந்த அனைவரும் இந்த பெருமைக்கு சொந்தக்காரர்கள் அந்த பெருமையுடனே இந்த கட்டுரையை எழுவதில் பெரு மகிழ்ச்சியும் உவகையும் கொள்கிறேன்.

பட்டுக்கோட்டை ஒரு விவசாய பூமி, பயிர்களின் மீது விவசாயிகளின் பாசம் எப்படியோ அதே மாதிரி பட்டுக்கோட்டையை சுற்றிலும் அன்பும் பாசமும் மழை மேகம் போல பரவியுள்ள இடம் சாதி மத வேறுபாடுகளை களைந்து பாசமுடன் உறவுகளாக பழகக் கூடிய சமத்துவம் நிறைந்த பகுதி, பட்டுக்கோட்டை நகரம் விவசாயத்தை சார்ந்துள்ள நகரம், அந்த வருட விவசாயம் எப்படி இருக்கிறதோ அதைப் பொறுத்துதான் பட்டுக்கோட்டை நகரின் செழிப்பும் வனப்பும் இருக்கும், ஒரு தாய் தன் கடைமகனை எப்படி பார்ப்பாளோ அதைப்போல காவிரித்தாயின் கடைக்கண் தடைகள் ஏதுமில்லாமல் இந்த பகுதியை பார்த்தல் செழிப்பும்  தடைகள் ஏற்பட்டால் வறண்டும் காணப்படுகின்ற தஞ்சை தரணியின் கடைப்பகுதி.

பிறந்ததிலிருந்து எத்தனையோ பெருநகரங்களை  கண்டிருந்தாலும் பெரு நகரங்களில் பணிபுரிந்து இருந்தாலும் பட்டுக்கோட்டை மண்ணை மிதிக்கும்போது தாய்மடி தேடிய குழந்தையின் குணம் ஓடி வந்து ஒட்டிக்கொள்ளும், இப்படி குணமுடையவனின் வெளிநாட்டு வாழ்க்கையைப் பற்றி எழுத சொன்னால் சொந்த ஊரின் பெருமைதான் நிறைய இருக்கும் இருந்தாலும் வாழ வந்த பூமியை பற்றி எழுதுவதும் ஒரு சுகமான அனுபவமாகவும் கடமையாகவும் கருதி இந்த கட்டுரையை எழுதுகிறேன்.

விவசாயக் குடும்பத்தில் பிறந்து பின்னர் விவசாயத்தை விட முடியாமல் விவசாயம் சார்ந்தே தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் கூடவே  பெரியாரின் கொள்கைகளுக்கு தோழனாக இருந்தவருக்கு 4 வது மகனாக பிறந்து 6 வயதில் தந்தையை இழந்து பாசனத்துக்கு ஏங்கும் பயிர் போல பாசத்துக்கு ஏங்கிய ஒருவனின் பார்வையில் வெளிநாட்டு வாழ்க்கை கட்டுரை நான் பிறந்த ஊருக்கு சமர்ப்பணம் செய்வதில் பெருமை கொள்கிறேன்.

ஒரு கடவுள் மறுப்பாளருக்கு மகனாக பிறந்து இருந்தாலும் எந்த காரணத்தினால் கடவுள் மறுப்பு கொள்கையை பெரியார் வலியுறுத்தினார் என்பதை உணர்ந்தேன் என்ற உணர்வில் கடவுள் நம்பிக்கை எனக்கு வாய்க்கப் பெற்றது, சிறு வயதிலிருந்தே தெளிவு இல்லாத இறை ஈடுபாடு மனதில் இருந்தது, தெளிவின் வழியை  சிறு வயதில் இருந்து ஈர்ப்பை கொடுத்த சாதி, மதம், ஏற்றத்தாழ்வுகள் அற்ற சமத்துவம் போற்றும் அய்யப்ப சுவாமியின் வழிபாடு கொடுக்க ஆரம்பித்த காலத்தில்  6 வயதில் தந்தையை இழந்தவனுக்கு 22 வயதில் குருசாமி என்ற அடையாளத்துடன் ஒரு தந்தையை இயற்கையால் நல்கப்பெற்றேன். நான் அவருக்கு குழந்தையா அவர் எனக்கு குழந்தையா என்றும் உங்கள் இருவருக்கும் பூர்வ ஜென்ம தொடர்ப்பு இருக்கிறது என்றும் பார்ப்பவர்களால் சொல்லக் கூடிய அளவுக்கு எங்களுக்குள் ஆழமான பாசப் பிணைப்பு இருந்தது, இந்த வழிபாடும் இந்த பாசப் பிணைப்பும் கடவுச்சீட்டு எடுத்தால் இவையிரண்டையும் விட்டு விட்டு போக வேண்டிய நிர்பந்தம் வரும் என்ற காரணத்தை மனதில் கொண்டு வந்ததது. சகோதரனும் நண்பர்களும் ஒவ்வொருவராக வெளிநாடு சென்று அவர்கள் வற்புறுத்தியும் கடவுச்சீட்டு என்பது கடவுளின் சிலை மீது படாத தலித்தின் கை போலவே இருந்தது.

பணி புரிந்த இடங்களில் இருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலைகள் தொடர்ந்த போது ஒரு நிலையில் சொந்த தொழில் எண்ணம் வந்து பின் அதில் ஏற்பட்ட நட்டங்களைத் சரி செய்ய உயிரில் கலந்த ஊரை விட்டு வருகிற அனைவரையும் தாங்கும் சென்னைப் பட்டிணம் வெளிநாட்டு வாழ்க்கைக்கு விதை போட்டது. கடவுச்சீட்டு என்ற சொல்லைக் கேட்டாலே கசப்பை சுவைத்தவனையும் திருச்சிராப்பள்ளி கடவுச்சீட்டு அலுவலக கதவருகே காத்திருக்கும் காலத்தையும் இயற்கை கொண்டு வந்தது. கடவுச்சீட்டு கையில் கிடைத்து அதை யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்து கண்டுபிடிக்கப்பட்ட சுவராசியம் எல்லாம் நடந்தது.

சகோதரியின் இணையால் பாலை என்று சொல்லப்பட்டாலும் விமான நிலையத்திலிருந்து இரண்டு புறமும் சோலையாக காட்சியளிக்கும் ஓமான் நாட்டில் பணிபுரியும் ஆணை கிடைக்கப்பட்டு தந்தை போல இருக்கும் குருசாமியிடம் எப்படி சொல்வது என்று தயங்கி தயங்கி வருத்திக்கொண்ட மனதுடன்  மருத்துவப் பரிசோதனையில் எதாவது சிக்கல் ஏற்பட்டு வெளிநாட்டு பயணம் தடைபட்டு விடாதா என்ற நப்பாசையெல்லாம் பொய்த்து விசா கிடைத்து விட்டது என்ற செய்தி இடி போல தாக்கியபோது எடுத்த முடிவு, ஒன்று “ஊரை விட்டு கண் காணாத இடத்துக்கு போய் விடுவது” எங்கயோ போவதற்கு பதிலாக வீட்டில் சொல்லும் வெளிநாட்டிற்கு போகலாம் என்றும் அடுத்த விருப்பத்தேர்வுகளை நோக்கி நகர்வதற்கு பதிலாக வெளிநாட்டு வாழ்க்கையை தேர்ந்தெடுக்கலாம் என்றும் அறிவறிந்த போது என் முன்பு இருந்த சவால் என் குருசாமியை விட்டுவிட்டு எப்படி வருவது அவரிடம் எப்படி சொல்வது என்று குழப்பத்தில் அவரிடம் சொல்லி அவர் மனதை தேற்றி அவரே என் கையை பிடித்துக்கொண்டு போயிட்டு வாங்க நான் பார்த்துக்கொள்கிறேன் என்ற நெகிழ்ந்த தருணங்களையும், சிங்கப்பூரில் இருந்து வரும்போதெல்லாம் என் தாய்க்கு இணையாக என்னை பார்த்துக்கொள்ளும் என் கோபி, உயிர் நண்பன் செங்கல்பட்டு ருத்ரகுமார் இவர்களையெல்லாம் இனி எப்போது பார்க்கப் போகிறேன் என்ற கவலையுடனும்  வெளிநாடு எப்படி இருக்கும் என்ற பயத்துடனும் முதல் விமானப் பயணம் பறந்தேறியது.

உறவாக இருந்தாலும் உயிரில் கலந்த மண்ணாக இருந்தாலும் பிரிதல் என்பதில் சிரமப்படும் சிரமப்படுத்திக் கொள்ளும்  மிகுந்த குழப்பங்களுடனும் தாய்நாட்டில் பிழைக்க முயன்று தோற்று போன ஒருவனாக வெளிநாடு என்னை வரவேற்றது.

ஓமான் அரபு நாட்டை சேர்ந்ததா,  ஓமானும் மஸ்கட்-ம் வேறு வேறல்ல என்பதெல்லாம் தெரியாத நிலையில் விருப்பமில்லாத திருமணத்தை செய்துக்கொண்ட பெண்ணின் வாழக்கையைப் போல வெளிநாட்டு வாழ்க்கையும் என் வாழ்வில் நுழைந்தது. பேச்சுப் புழக்கத்தில் இல்லாத காரணத்தால் ஆங்கிலமும் ஓவ்வொரு மாநிலமாக தாய்மொழியை கபளீகரம் செய்து தமிழ்நாட்டில் கால்பதிக்காத முடியாத இந்தியும் தெரியாத காரணத்தால் (கற்றுக்கொள்ள விருப்பம் இல்லாத) பேசுவதற்கு கூட துணை தேடவேண்டிய கட்டாயம் ஒவ்வொரு முறையும் வெளியில் போகும்போது யாராவது இருவர் உரையாடும் சத்தம் கேட்டால் தமிழில் பேசுகிறார்களா என்று ஒட்டுக்கேட்கும் அளவுக்கு போனது. அப்போதைய ஆறுதலாக மலையாள கூட்டுக்கார்கள் மட்டுமே உடன் இருந்தார்கள்.  வெள்ளிக்கிழமைகளில் வெளியில் போகும்போது சாலையோர புற்கள் மீது கூட்டம் கூட்டமா அமர்ந்து தங்கள் வாழ்க்கை கதைகளை கதைத்துக்கொண்டு இருக்கும் சகோதர சகோதரிகளை கண்டு யார் இவர்கள் என்று குழம்பி இருக்கிறேன். குடும்ப நலனுக்காக தன்னுடைய குடும்பத்தை விட்டுவிட்டு சொந்த பந்தங்களை மறந்து நண்பர்களை இழந்து மொழி இழந்து ஊரில் தனக்கான அடையாளத்தை இழந்து எங்கோ ஒரு ஊரில் கிடைத்ததை உண்டு கொடுத்த இடத்தில்  உறங்கி தன்னுடன் வேலை பார்ப்பவர்களையே தன்னுடைய குடும்பமாக சொந்தமாக நண்பர்களாக எண்ணி திரும்ப ஊருக்கு போகும் நாட்களை எண்ணி வாழ்க்கை நடந்தும் சகோதர சகோதரிகளை பற்றி அறிந்த போது நாமெல்லாம் எவ்வளவு சொகுசான வாழக்கை வாழுகிறோம் என்ற எண்ணமும் அவர்கள் மீது பரிதாபமும் எண்ணுவதை தவிர வேறொன்றும் செய்ய இயலவில்லை.

பெரிய நகரமாக இல்லாவிட்டாலும் நல்ல பகுதியில் பணியமர்த்தப்பட்டேன், உயிர் வாழ அடிப்படை தேவையான உணவு உறைவிடம் இரண்டுக்கும் குறை வைக்காத நிறுவனத்தின் அங்கமாக சேர்ந்து இருக்கிறோம் இது தான் நமது வாழ்க்கை இங்குதான் நாம் முன்னேற வேண்டும் ஊரில் இழந்தது மனமும் பணமும் மட்டுமல்ல மானமும் மரியாதையும் அதை மீட்க நமக்கு கிடைத்த ஒரு வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற வைராக்கியம் மனதில் பிறந்தது. 

பெரிய பதவி பெறும் அளவுக்கு படிக்காத காரணத்தால் கிடைத்த பதவியே பெரும் கவுரத்தை கொடுத்தது. ஆயிரம் பேருக்கும் மேலான ஊழியர்களை கொண்ட முகாமில் தமிழ் சொந்தங்கள் தானே தேடி வந்து பழகினார்கள் அன்பினால் அன்பு கிடைக்கும் வாய்ப்பு பெற்றேன்.  நாட்கள் ஆக ஆக தமிழர்கள் மட்டுமல்லாது அரபியர்களின் அன்பினாலும் ஈர்க்கப்படும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. ஊரில் சொந்த பந்தங்கள் சூழ வாழ்ந்த எனக்கு இங்கும் அதே சொந்த பந்தங்களாக வாழும் வாழ்க்கை கிடைத்தது.

குடும்பங்களை விட்டுவிட்டு வந்து இங்கு இருந்தாலும் குடும்ப பிரச்சனைகளும் சிக்கல்களும் யாரையும் விட்டுவைக்காது, அவர்கள் அந்த பிரச்சனைகள் சுழல் போல சுற்றி வாட்டும்போது அவர்கள் கையறு நிலையில் அவர்களிடம் ஆறுதலாக யாரும் பேசினாலே கண்ணீர் விட்டு அழுது மனதை தேற்றிக்கொள்ளும் மனநிலையில் இருப்பார்கள் அவர்களுக்கு அப்படி ஒரு ஆறுதலை கொடுக்க முடிந்ததையே என்னை நான் தேற்றிக்கொள்ளும் வாய்ப்பாக நான் உணர்ந்தேன். அவர்களால் நான் தேறினேனா என்னால் அவர்கள் தேறினார்களா என்று எனக்கும் அவர்களுக்கும் இன்னும் புரிபடாத ஒரு சுகம்.

தொழில் நுட்பம் வளர வளர நம்முடன் நெருங்கி உணர்வில் கலந்த ஒரு தொடர்பு நாம் இழப்போம் என்பது நிதர்சனம், நான் தாயகத்தில் இருந்தபோதே கைபேசியில் கட்டுட்டுண்டேன்  என்றாலும் அயலகத்திற்கு வந்த பிறகு கடித தொடர்பில் காதல் கொண்டு என் தாயார் என் குருநாதர் என் அன்பு நண்பன் இவர்களுக்கெல்லாம் கடிதம் எழுத தொடங்கினேன் கடிதம் எழுதுவதில் ஒரு சிறப்பு நாம் பேசும்போது வராத வார்த்தைகள்  சொல்ல முடியாத உணர்வுகள் கேட்க முடியாத மன்னிப்புகள் காட்ட முடியாத கோபங்கள் அனைத்தையும் வார்த்தைகளில் கோர்க்கும் வல்லமை படைத்த எழுத்து அதை கடிதமாக எழுத தொடங்கினேன், தாயிடம் கேட்ட மன்னிப்பிற்கு அவரின் ஆனந்த கண்ணீரும் குருநாதருக்கு காட்டிய அன்பு என்னுடைய கடித்ததை தலையணையின் கீழ் வைத்து அடிக்கடி எடுத்து படிக்கும் ஆனந்தத்தையும் நண்பனுக்கு எழுதிய கடிதத்திற்கு சென்னை தமிழில் அவனுடைய வாழக்கையில் எழுதிய முதல் கடிதமும் கிடைக்கப் பெற்றது இன்றும் கூட மனதிற்கு மிக நெருக்கமானவர்களுக்கு கடிதம் எழுதும் வழக்கம் என்னுடைய வெளிநாட்டு வாழ்க்கையால் கிடைக்கப் பெற்ற ஒரு வாய்ப்பு.

வாழ்க்கையின் அடுத்த கட்டமாக திருமண முதல் குழந்தை என்று பரிணாமங்கள் அடைந்து குடும்பம் அங்கும் நான் இங்குமாக என்று சூழல் பெரும்பாலோரைப் போல எனக்கும் அமைந்தது. அந்த நேரத்தில்தான் நான் ஏற்கனவே இருந்த இடத்தில் இருந்த பணி முடிந்து அடுத்த இடத்திற்கான பணிக்குப் போக வேண்டிய சூழல் அமைந்தது, இயல்பிலேயே விரும்பாத விலகல் என்னும் துன்பமும் கிடைத்தது என்றாலும் புதிதாக அமைந்த இடத்திலும் அருமணியாகவே உறவுகள் கிடைத்தன. அங்கு என் வாழ்க்கையில் என்றும் நான் மதிக்கக் கூடிய என்றுமே மறக்க கூடாத உறவாக என்னுடைய திட்ட மேலாளர் திரு. கண்ணன் அவர்கள், அவர் இந்தியாவில் நிரந்தரமாக குடியேற முடிவெடுத்து விலகல் கடிதம் கொடுத்து அவரை தலைமையகத்தில் அழைக்க எதுவும் வசதி வேண்டுமானால் செய்து தருகிறோம் என்று கேட்டபோது தனக்கு ஒன்றும் தேவையில்லை என்றும் மாற்றமில்லாத முடிவு எடுத்து இருப்பதாகவும் தனக்கு எதாவது செய்யவேண்டும் என்றால் முருகானந்தத்தை  (என்னை) தலைமையகத்துக்கு நிரந்தரமாக மாற்ற வேண்டும் என்று எனக்கு பரிந்துரை செய்து என்னை நிரந்தரமாக தலைமையகத்திற்கு மாறுதல் வாங்கி கொடுத்தார் அவரின் அந்த பரிந்துரை காரணமாகவே தலைமையகத்திற்கு மாற்றப்பட்டு நான் இப்போது குடும்பமாக இங்கு இருக்க காரணமாக இருந்தது மட்டுமல்லாமல்           இன்றுவரை உடன்பிறந்த சகோதரனை போல எனக்கு உதவிகள் செய்து வருகிறார் தெய்வ நம்பிக்கையில் கடவுள் இருக்கிறார் என்று நம்பிக்கையில் நம்பும் நமக்கு கண் முன்பு காணும் தெய்வமாக எனக்கு காட்சி கொடுப்பவர் என்னுடைய கண்ணன் அண்ணன்.

இரத்த சம்பந்த உறவுகள் கூட விலகி இருந்த நிலையிலும் எத்தனையோ தலைமுறைகள் கடந்த உறவுபோல எனக்கு எல்லாமுமாக இருந்த என் குருநாதருக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது, பேச முடியாத நிலையிலும் அங்கு கூட இருந்த யாரையும் அடையாளம் தெரியாத நிலையிலும்  என் குரலை கேட்டவுடன் அவர்  கதறி அழுததை என் உயிர் இருக்கும் வரை மறக்க முடியாது. அப்படிபட்ட என் குருநாதர் 2013 டிசம்பர் 21 ம் தேதி மறைந்ததும் என் நிறுவனத்தில் மாற்று ஆள் இல்லையென்று அனுப்ப மறுத்த  காரணத்தால் ஊருக்கு போக முடியாத கைதியாகி இருந்தேன் இதை எழுதும்போது என்னுடைய முழு உணர்வுகளையும் கடத்தாமல்தான் கடந்த நிலையில்  எழுதுகிறேன் முழு உணர்வுகளையும் கொண்டு எழுதினால் என்னால் இங்கு வேலை பார்க்க முடியாத ஒரு சூழ்நிலை கூட உருவாகலாம், எனக்கு நன்றாகவே தெரியும் என் தெய்வம் (குருநாதர்) கடைசி உயிர்மூச்சு இருக்கும் வரை என்னை எதிர்பார்த்து இருந்து  இருப்பார்  நான் அவர் உடல் மீது விழுந்து “அப்பா” என்று கதறி அழுகாத குற்ற உணர்ச்சி என் கடைசி உயிர் மூச்சு இருக்கும் வரை இருந்து கொண்டே இருக்கும்.

இந்த இழப்பு என்னை மிகவும் பாதித்தது மாற்று ஆள் கிடைத்த பிறகு நான் ஊருக்கு போய் அவரை அடக்கம் செய்த இடத்தில் அவருக்கு பிடித்தெல்லாம் வாங்கி கொண்டு வைத்து படைத்தது அழுது விட்டு வந்தாலும் அது என்னுடைய மன ஆறுதல் மட்டுமே என்பதுதான் உண்மை இந்த உண்மை என்னை மிக கொடுமையாக  வதைத்தது. 

1) வேலையை முடித்துக்கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் யாரையும் விடுப்புக்கு அனுப்பாத முடிவை நிர்வாகம் எடுத்து இருந்த நிலையில் ஒரு தச்சு வேலை செய்பவர் அவருடைய வீட்டில் நடந்த சண்டையில் இவருடைய மனைவியை தன் சொந்த தம்பி கத்தியால் குத்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருந்த போது அவருடைய மேலாளரின் காலில் விழுந்து கதறி அழுதும் மனமிரங்கவில்லை வேறொரு மேலாளரின் உதவியுடன் அந்த தச்சு வேலை செய்பவரை ஊருக்கு அனுப்பி வைத்தேன்.

2) மதிய உணவு இடைவேளைக்கு செல்லும் நேரத்தில் யாரென்றே தெரியாத என் நிறுவனத்தில் வேலை பார்க்கும்  ஒருவர் கண்ணீருடன் நின்று கொண்டு இருந்தார் என்னவென்று விசாரித்த போது அவருடைய மகன் சாலை விபத்தில் இறந்து விட்டதை சொல்லி என் கையை பிடித்துகொண்டு கதறி அழுதார் அவருடைய கடவுச்சீட்டை வாங்குவதற்கு உடன் இருந்து அவரை விமான நிலையத்தில் கொண்டு போய் விட்டுவிட்டு வந்தேன்.

மேலே சொன்ன இரண்டு நிகழ்வுகளும் என்னை என் குருநாதர் இழப்பில் இருந்து சற்றே ஆசுவாசப் படுத்தியது. மறக்க முடியாத நிகழ்வுகள் எத்தனையோ இருந்தாலும் மனதை உறுத்தும் விடயங்களை மட்டும் எழுதி என்னை மனதின் பாரங்களை இறக்கி வைக்க முயற்சி எடுக்கிறேன்.

2019ன் இறுதியில் உலகை உலுக்கிய கொரோனா என்னும் கொடுங்கோலன் அனைவரையும் சிறை வைத்தான்.  தாயகத்தில் இருந்து அலைபேசியில் அழைப்பு வந்தாலே இரண்டு முறை கொரோனவை தைரியமாக எதிர்கொண்ட  என்னையே கை நடுங்கும் அளவுக்கு பயமுறுத்தியது, இழப்புகள் நிறைய அதை நேரில் எதிர்கொள்ள முடியாமல் ஒரு வீட்டுக்குள் இருவராக அழுது மனப்பாரத்துடன் இருந்து கொண்டு இருந்த வேளையில் மிகப் பெரிய துயர அரக்கன் என்னை தாக்கினான்.

சிறு வயதில் விளையாட்டு கூட்டுக்காரர்களால் என்னிடம் அதிகம் கேட்கப்பட்ட கேள்வி  உனக்கு மட்டும் எப்படி இரண்டு அம்மா என்பதுதான், வீட்டில் கேட்டபோது சரியான பதில் கிடைக்கவில்லை தானாகவே தெரிந்து கொள்ளட்டும் என்ற எண்ணமாக இருந்துருக்கக் கூடும்,  வயது அதிகமாக அதிகமாக விடை கிடைத்தது என் வீட்டு தேவதைகளை எனக்கு அடையாளம் காட்டியது.  குழந்தைகள் பிறந்து சிறிது காலத்திலேயே பறி கொடுத்து அடுத்து குழந்தைகள் பிறந்தாலும் இதே நிலையே என்று மருத்துவத்தால் தெரிவிக்கப்பட்டு மனதை குழந்தைகளிடம் வைத்து இருந்த என் தாய் (அப்பாவின் முதல் இணை) ஒரே மகனுக்கு வாரிசு இல்லாமல் போய் விடுமோ என்று மருகி தவித்த என் அப்பத்தா இருவரின் மனப்போராட்டத்தில் என் தந்தை.

என் அப்பத்தாவின் கண்ணீரே வெற்றி பெற்று முதல் மனைவியின் மூலம் பிறந்து எப்போது தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் என்று தெரியாத குழந்தையை மடியில் வைத்துக்கொண்டே என்னை பெற்றெடுத்த தாய்க்கு தாலி காட்டினாராம் என் தந்தை. பெற்ற அனைத்து  குழந்தைகளையும் பறிகொடுத்து விட்டு கணவன் கூட வாழ இன்னொரு உறவையும் ஏற்படுத்தி அதையும் ஏற்றுக்கொண்டு அந்த புதிய உறவுக்கு பிறந்த குழந்தைகளை தன்னுடைய குழந்தைகளாக ஏற்றுக்கொண்ட ஒரு தேவதை.

தன்னுடைய 35 வது வயதில் கணவனை இழந்தும் எங்கள் நான்கு பேரையும் தன்னுடைய பிள்ளைகளாகவே நினைத்து எங்களுக்காகவே எங்களுடன் வாழ்ந்து கொண்டிருந்த எங்கள் அம்மாவுக்கு வயது காரணமாக உடல்நிலை சரியில்லாமல் போனது மருத்துவர்களால் கை விடப்பட்ட சூழ்நிலை  இங்கிலாந்தில் உருவான புதிய வகை கொரோனா காரணமாக முற்றிலுமாக இங்கு விமான நிலையம் மூடப்பட்ட சூழ்நிலை எங்களுக்காவே வாழந்தவரின் வாழ்க்கை முடிந்தது எனக்கு வாழ்க்கை வெறுத்தது. 

தான் பெறாவிட்டாலும் தன் குழந்தைகள் போல எங்களை வளர்த்து எங்கள் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்ந்த என் தாயின் மறைவுக்கு என்னால் போக முடியவில்லை, நெய்ப்பந்தம் பிடித்தது வழியனுப்ப வேண்டிய பேரக்குழந்தைகள் என்னை கட்டிக்கொண்டு அழுத காட்சி ஒன்றே  வெளிநாட்டு வாழ்க்கையின் துயரத்தை சொல்ல சாட்சி. குருநாதர் இறந்த போதாவது ஒரு மாததிற்குள் போய் பார்த்து அழுது விட்டு வந்த ஆறுதல் கிடைத்தது இந்த முறை 18 மாதங்கள் கடந்தது ஊருக்கு போக முடியாத அளவுக்கு கொரோனா முடக்கம் முடக்கிப் போட்டது. ஒவ்வொரு வருடமும் 23 டிசம்பர் வரும்போதே மழை வெள்ளம் போல தடுக்க முடியாத அளவுக்கு கண்ணீர். எங்கள் தாயின் ஆன்மா எங்களுடன் இருந்து எங்களை காக்கும் என்ற நம்பிக்கை.

இது போன்ற பிரச்னைகள் எனக்கு மட்டும் ஏற்படவில்லை நிறைய நிறைய நிறைய சொல்லிக்கொண்டே போகலாம் குடும்பங்களை விட்டுவிட்டு பிழைப்புக்காக வந்திருந்த இடத்தில் கொரோனா பீடிக்கப்பட்டு இங்கேயே மாண்டவர்கள் உடலை இங்கேயே அடக்கம் செய்து விட்டு அவர் இறந்து விட்டார் உடல் கூட அங்கே வராது என்று தெரிவித்தது எல்லாம் கொடுமையிலும் கொடுமை. அங்கு குடும்பத்தில் உள்ளவர்களை கொரோனா விற்கு வார்த்துவிட்டு இங்கு ஒற்றையாளாக கதறியது எல்லா கொடுமைகளையும் பார்த்து மனம் மரத்து போனது அதே நேரத்தில் காலம் எல்லா பிரச்சனைகளுக்கும் மருந்து தடவி கொண்டேவும் வந்தது.

வெளிநாட்டு வாழக்கை என்றால் பிரச்னை மட்டும்தானா என்றால் சத்தியமாக இல்லை, பொருளாதாரத்தில் பின்தங்கி எத்தனையோ அவமானங்களை சந்தித்தவர்களை தூக்கி நிறுத்தி ஆளாகியுள்ளது.  எந்த பெற்றோருக்கும் தான்பட்ட கஷ்டம் பிள்ளைகள் படக்கூடாது என்றே நினைப்பார்கள் அந்த பெற்றோரே மகிழும்படி அவர்கள் வாழக்கையிலும் ஏற்றங்களை கொடுத்து உள்ளது.

ஊரில் சொந்த பந்தங்களை விட்டுவிட்டு வந்தாலும் இங்கு சொந்தபந்தங்களை கொடுத்துள்ளது. அண்ணன், தம்பி, அண்ணி, அக்கா, தங்கை, மாமன் மச்சான் எத்தனையோ சொந்தங்களை கொடுத்துள்ளது. நிரந்தரமாக ஊருக்கு போனாலும் பசுமையான நிகழ்வுகளை கொடுத்துள்ளது.  ஊரில் இருந்தால் எப்படி இன்பம் துன்பம் இரண்டும் கலந்த வாழ்க்கை இருக்குமோ அதே போல வெளிநாட்டு வாழ்க்கையிலும் இன்பம் துன்பம் இரண்டும் உண்டு. தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பது போல இன்பம் துன்பம் எதுவாக இருந்தாலும்  அறம் சார்ந்து அணுகுதலே நன்மையை தரும் என்பதே சரி.

வேலை பார்க்கும் இடத்தில் பாதுகாப்பு உணர்வு இருந்தால்தான் வேலை சுலபமாக பார்க்க முடியும் அந்த பாதுகாப்பு உணர்வை எனக்கு தந்து இது வரை எனக்கு உறுதுணையாக இருக்கும் என்னுடைய உயர் அதிகாரிகள் திரு. சந்திரன்.C அவர்களுக்கும் திரு. பலராமன்.R அவர்களுக்கும் என்னுடைய காலம் முழுமைக்கும் கடமைப்பட்டுள்ளேன்.

இதுவரை எனக்கு உதவியாக இருந்தவர்களுக்கும் இருப்பவர்களுக்கும் நன்றி மறந்தேன் என்றால் நான் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போய் விடும் அந்த வகையில் என்னுடைய தந்தை திரு. பழனிவேல் அவர்களுக்கும் என்னுடைய தாய்கள் சரோஜா பழனிவேல் ராஜகுமாரி பழனிவேல் என்னுடைய குருநாதர் சுவாமிநாதன்.V அவர்களுக்கும் என் தந்தையின் மறைவுக்கு பிறகு எங்கள் குடும்பத்திற்கு உற்ற துணையாக இருந்த எனது அத்தை மாமா திரு. PR.ஆறுமுகம் – திருமதி கண்ணம்மா ஆறுமுகம் அவர்களுக்கும்  என் நண்பர்கள் திரு. A.கோபிநாதன் திரு. M.ருத்ரக்குமார் அவர்களுக்கும் எனக்கு இந்த சிறந்த ஓமான் நாட்டில் வேலை வாங்கி கொடுத்த எனது மாமா திரு. அசோகன் சுவாமிநாதன் அவர்களுக்கும் எனக்கு பணியில் உற்றதுணையாக இருந்து தற்போது சொந்த சகோதரனாக என்னை நடத்திவரும் திரு. கண்ணன்.P  அவர்களுக்கும் தற்போது வரை என்னை வழிநடத்தி வரும் திரு. சந்திரன்.C அவர்களுக்கும் திரு. பலராமன்.R அவர்களுக்கும், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எதிர்கொள்ளும் அனைவரிடத்திலும் அன்பு செலுத்த முடியும் என்று நிரூபித்து கொண்டு இருக்கும் என் சகோதரி எழுத்தாளர் திரைப்பட இயக்குனர் தமயந்தி ஆனந்த் அவர்களுக்கும் சொந்த தம்பியாக இருந்து வரும் திரு. கவிஞர் க.சுதர்சன் திரு. அலையாத்தி ரா. செந்தில் திரு. கவிஞர் ஜெ. ஜெய் அவர்களுக்கும், திருமணம் நடந்த நாள் முதல் நான் செய்யும் பிழைகளைப் பொறுத்து என்னுடன் வாழ்க்கை நடத்தி வரும் எனது இணை சுபாஷினி மாணிக்கம் அவர்களுக்கும் என் நன்றியை என் வாழ்க்கை முழுமைக்கும் செலுத்த கடமைப்பட்டுள்ளேன்.

திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு – இங்கு குடும்பமாக உள்ளவர்களும் சரி தனியாக இருப்பவர்களும் சரி பொருளீட்டல் என்ற ஒற்றை காரணத்திற்காகவே வெளி நாடுகளில் இருக்கிறோம், இங்குள்ளவர்களை இணைக்க கூடிய வலிமையுள்ள காரணியாக இருக்க கூடியது “தமிழ்” தமிழால் இணைவோம் தலைநிமிர்ந்து வாழ்வோம்.

இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம்

தமிழர் என்பதில் தன்மானம் கொள்வோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *