சூழியல் – கோட் ரெட் எனும் விழிப்புக் கடிகை

சூழியல் பற்றிய கட்டுரை என்றவுடன்  சுற்றுச்சூழல் காப்போம்  மரம் வளர்ப்போம்  என்று கடைசியாக  பள்ளி காலத்தில் ஆர்வத்துடன் கூச்சலிட்ட நாட்கள் நினைவிற்கு வந்தது. பின் அவ்வப்போது செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சியிலும் ஓசோன் மண்டலத்தில்   ஏற்பட்டுள்ள  துளையினைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால்  இதை ஏன் நாம் அடிக்கடி கேட்கிறோம் என்று வெகு சிலரே சிந்திப்பார்கள். ஏனென்றால் நம்மில் பலருக்கு சிந்திப்பதற்கான   நேரமின்மையும் தெளிவின்மையும் காரணமாக இருக்கலாம். சூழியல் மாற்றங்களால் உலகம் அழியக் கூடுமா என்ற கேள்வி நம்முள் பலருக்குள் இருக்கலாம். ஆனால் அதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் கடைசி இருபது ஆண்டுகளில் நாம் கேள்விப்பட்டிருக்கும்  காட்டுத்தீ, புயல் சுழல் காற்று இவை அனைத்துமே சூழியல் மாற்றங்களால் மட்டுமே நிகழ்ந்துள்ளது. சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய நாடுகள் அவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவாக இது கூறப்பட்டிருக்கின்றது  60க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் சமர்ப்பித்த அறிக்கை தான் அது. ஆர்டிக் மற்றும் அண்டார்டிக் பகுதிகளில் பல ஆயிரம் ஆண்டுகளாக படர்ந்து இருக்கும் பனிப்பாறைகள் மெல்ல மெல்ல  கரைந்து   உலகில் உள்ள அனைத்து பெருங்கடல்களிலும் கலக்கின்றது.

நாம் வாழும் இந்த பூமி 71 சதவீதம் நீரினாலும் 29 சதவீதம் நிலப்பரப்பினாலும் ஆனது. இது  நாம் அனைவருக்கும் நன்கு அறிந்ததே. ஆனால், மீதம் உள்ள 29 சதவீதத்தில் 10 சதவீதங்கள் பனிப்பாறைகளினால் ஆனதே, அதனால் வெறும் 19 சதவீத  நிலப்பரப்பு மட்டுமே மனிதனால் பயன்பாட்டிற்கு இருக்கக்கூடியவை. அதேபோல் பூமியில் உள்ள 97 சதவீதம் கடல் நீரே. வெறும் 3 சதவீத நீரே பயன்பாட்டிற்கு உட்பட்டவை ஆகும் இதைத்தான் இவ்வுலகில் வாழும் 800 கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர்.

பூமியின் வெப்பம் வெறும் 2 டிகிரி செல்சியஸ் உயர்ந்தால், இப்பனி  கட்டிப்பாறைகளால் கரைந்து கடல் நீர்  மட்டம் அதிகரித்து தற்போது இருக்கும் 19 சதவீதமாக உள்ள நிலப்பரப்பு பெரும் 16 சதவீதத்திற்கு குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் சென்னை, மும்பை, கொல்கத்தா ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்பன், பிரிஸ்பேன், கோல்ட் கோஸ்ட், பெர்த் போன்ற நகரங்களும் அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் மியாமி, சார்லஸ்டன், ஐரோப்பாவின் ஆம்ஸ்டர்டாம், வெனிஸ், லண்டன், ஹேம்பர்க், ஆசியாவின் ஒசாகா, நகோயா, ஹோ சீ மீ சிட்டி, பேங்காக்  போன்ற நகரங்களில் கடல் நீர் போகும் அபாயம் உள்ளது இந்நிலைத் தொடர்ந்தால் 2080 க்குள் இந்நகரங்கள் நீருக்கு அடியில் சென்று விடும்…குமரிக்கண்டம் போல்… சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் ஆர்டிக் மற்றும் அண்டார்டிக் பகுதிகளை செயற்கைக்கோளின் மூலம் எடுக்கும் படங்களை வைத்து  பனிப்பாறைகள்  உடைந்து விழுவதை கண்காணித்து வருகின்றனர். உதாரணமாக, “டூம்ஸ் டே  கிளேசியர்” எனப்படும் பனிப்பாறை சில ஆண்டுகளாக உருகத் தொடங்கியுள்ளது இது முழுவதுமாக உருகிவிடும் பட்சத்தில் கடல் மட்டம் 25% அதிகரிக்கக்கூடும் என ஓர் ஆய்வு அறிக்கை கூறுகின்றது. எனவே இவ்வுலகில் வாழும் சுமார் 90 கோடி கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் ஏற்படவும் வாய்ப்பு இருக்கின்றது.

2020 ஆம் ஆண்டு கோவிட் வைரஸ் உச்சகட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் தருவாயில் பிரேசில் நாட்டு ஆய்வாளர்கள் ஓர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டனர் அதில் வடக்கு அண்டார்டிகாவின் செய்மோர் தீவு சுமார் 21 டிகிரியை தொட்டது என்று.  இதுதான் பூமி தோன்றிய நாள் முதல் இன்று வரை அங்கு பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச வெப்ப நிலை ஆகும். இந்நிகழ்வினால் கடல்நீரின் உப்புத்தன்மை குறைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கிறது, கடல் நீரின் சமநிலை பாதிக்கப்பட்டு கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழக்க நேரிடும். நாம் அன்றாட செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சியிலும் பார்க்கும் திமிங்கிலம், டால்பின் போன்ற உயிரினங்கள் கரை ஒதுங்கும் நிகழ்வுகள் இதனால் தான் ஏற்படுகின்றன.

வெப்பப் பரிமாற்றம் அதிக வெப்ப நிலையிலிருந்து குறைந்த வெப்ப நிலைக்கு  ஏற்படும் என்று  நாம் அறிவோம். அதுதான் தினம் தினம் நம் கண் முன்னே நடக்கின்றது. தொழிற்சாலைகளில் இருந்து ஏற்படும் வெப்ப காற்று  வெப்பம் குறைவாக இருக்கும் பகுதியான  ஆர்டிக் மற்றும் அண்டார்டிக் பகுதிகளை நோக்கி செல்கின்றது இதனால் தான் கடந்த 150 ஆண்டுகளில் பூமியின் சராசரி வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸ் ஆக உயர்ந்துள்ளது மேலும் இது 1.5 டிகிரி செல்சியஸ் ஆக  வெறும் இருபது  வருடங்களே தேவைப்படும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவை அனைத்தும் 19 ஆம் நூற்றாண்டின்  இறுதியில் தொடங்கிய தொழிற்புரட்சிக்கு பின் நடந்தேறியுள்ளது. அது மட்டுமில்லாமல், சூரியனிலிருந்து வரும் வெப்பம் தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் நச்சுத்தன்மை உடைய வாயுக்கள்ளான கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு,  மீத்தேன் குளோரோ  ஃப்ளோரோ கார்பன் போன்றவை கிரீன்ஹவுஸ் எஃபெக்ட்ஐ ஏற்படுத்துகின்றது. இதற்கு முக்கிய காரணம் மக்கள் தொகையும் தான். மக்கள் தொகை அதிகரித்த காரணத்தினால் அதனை ஈடுகட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டி உள்ளது. அதனால் தான் கார்பன் உமிழ்வு அதிகரித்துள்ளது.   இதைத்தான்  கோர்ட் ரெட் என ஐக்கிய நாடுகள் அவை வெளியிட்டுள்ளது.இதை நம்மால் முழுவதும் கட்டுப்படுத்த முடியாமல் போனாலும் சில நடவடிக்கைகளின் மூலம்  கட்டுப்படுத்தலாம். அதையும் நாம் நம் வீட்டிலேயே தொடங்கலாம். பழைய ஃப்ளோரசண்ட் பல்ப் பதிலாக புதிய எல்ஈடி பல்ப் உபயோகிக்கலாம். தண்ணீரை அளவாக உபயோகிக்கலாம் சோலார் பேனல் பயன்பாட்டை ஊக்கப்படுத்தலாம். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகள் எனர்ஜி ஸ்டார்  சான்றிதழ் கொண்ட மின்னணு உபகரணங்கள் பயன்பாட்டையும் சோலார் பேனல்கள் பயன்பாட்டையும்  ஊக்கப்படுத்துகின்றது. இதன் மூலம் இந்த இயற்கை சீற்றத்தை நாம் தாமதப்படுத்த முடியும். மேலும் அரசாங்கங்களும்  தொழில்  முனைவோர்களும் இந்தச் சூழ்நிலையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப கட்டமைப்புகளை கொண்டு வருகின்றனர். நாமும் நம்மால் இயன்றவரை கார்பன் பயன்பாட்டை குறைக்க வழி செய்வோம். நாம் வாழும் இந்த அழகான பூமியை அடுத்த தலைமுறைக்கு கார்பன் குறைவான பூமியாக பரிசளிப்போம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *