சங்க இலக்கியத்தில் பறவைகள்

நீல வானம் சுற்றி ஞாலத்தினை பற்றி பகுத்துண்டு வாழும் பண்பை வாழ்வியல் பாடமாகவும் தேடல் கொண்டவர்க்கு தேர்ச்சியே என்பதனை தம் வாழ்வு பாடமாகவும் கொண்டவை பறவைகள் இவை தம் வண்ணங்களால் நம் எண்ணங்களுக்கு எழுச்சி தருபவை தம் செயல்களால் நம் வாழ்வில் சுவையேற்றும்.அஃறிணை உயிர்களை தம்முடைய வாழ்வின் அங்கமாக கருதி வாழ்ந்து வந்திருக்கிறார்கள். சான்றாக, சங்க இலக்கியத்தில் தலைவி தலைவனிடம் “நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று  புன்னை மரத்தினை தன்னுடைய தங்கையாக கூறுவாள். பறவைகள் தமிழர்களின் வாழ்வில் இரண்டற கலந்த ஒன்று…

வடை திருடும் காகம்

 நீங்கள் எண்பதுகளில் பிறந்திருந்தால் காக்கை என்றாலே பாட்டியிடம் வடையை சுட்ட கதை ஞாபகம் வரும். அலைபேசிகளோடு அலையும் இக்காலத்தில் கூட காலையில் காகம் கரைந்தால் இன்னைக்கு யாரோ சொந்தக்காரங்க  வராங்க போல இருக்கு என்பார் அம்மா…

நமக்கு தெரியாமல் நம்மை வழிநடத்தும் செயற்கை நுண்ணறிவு ( ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் ) மிகுந்த இக்காலத்திலும் கடற்கரையிலும் பூங்காக்களிலும் கிளி , ஜோசியர்கள் மூலமாக பலரின் எதிர்காலத்தை கணித்துக் கொண்டுதான் இருக்கிறது.

பறவை வந்து ஒவ்வொரு அமாவாசைக்கும் காகங்களை நம் வீட்டில் சிறப்பு விருந்தினர் அவைகள் மாடிச் சோற்றில் வாய் வைக்கவிட்டால் கீழே இலைச் சோற்றில் நம்மால் கை வைக்க முடியாது. இன்று கூட இரண்டற கலந்த பறவைகள் சங்ககாலத்தில் நம் முன்னோர்களோடு எத்தகைய உறவில் இருந்தன என்பதை பார்க்கலாமா?

 பறவைகளை இலக்கிய த்தில் குரீஇ என்றும் ,புள் என்றும் குறிப்பிட்டுள்ளனர் . மா என்னும் சொல்லுக்கு பறவை என்றும் விலங்கு என்றும் பொருள் உள்ளதாக அகராதிகள் தெரிவிக்கின்றன

இன்றைய நிலவரப்படி உலகில் 9672 பறவையினங்கள் உள்ளதாக  ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டுள்ளனர்….  (அம்மாடியோ வ்)

விசா இல்லாமலே பல நாடுகளுக்கும் பறந்து சென்று வாழ்வினை அனுபவித்து வரும் பறவைகளைக் கண்டு சற்று பொறாமை கூட ஏற்படுகிறது எனக்கு….

 இன்றைய உலகில் பறவைகளுக்கு என தனி இடத்தை மேனாட்டர் வழங்கி பேர்ட் வாட்சிங் (Bird watching) என்றும் பல விதங்களில் பறவைகள் குறித்த ஆராய்ச்சிகளையும் மேற்கொள்கின்றனர்

ஆனால் தமிழர்கள் பறவைகளோடு  இணைந்த வாழ்வினை மேற்கொண்டு உள்ளனர் இதனை இலக்கியங்கள் எடுத்துக்காட்டி உள்ளன

பறவைகளை கண்டு நிமித்தம் கண்டுள்ளான் தமிழன் லத்தீன் மொழியிலும் நல்ல நிமித்தத்தை குறிக்கும் சொல் பறவைகளைக்  காணல் (Auspicious)என்ற பொருளில் வந்துள்ளதாம்…

    தமிழில் புள் என்னும் சொல்லுக்கு நன் நிமித்தம் என்பது பொருளாகும்.

             “புள்ளும் ஓராம் விரிச்சியும் நில்லாம்”

                 (   குறுந் -218)

என்ற வரி தான் போகக்கூடிய காரியம் வெற்றி அடையும் (அ) அடையாது என்பதை முடிவு செய்யும் காரணியாக பறவைகளை கொண்டிருந்தான் என்பதற்கு சான்றாக அமைகிறது

சங்க நூல்களில் பறவைகள்:

           சங்க நூல்களில் 58 வகையான பறவைகளின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன என்று

எவையெல்லாம் பறக்கின்றனவோ குறிப்பாக முட்டையிட்டு குஞ்சு பொரிப்பது அனைத்தும் பறவைகள் என்று பெயர் பெறும் இவற்றில் விதிவிலக்காக வவ்வால் மட்டுமே குட்டி போட்டு பாலூட்டும் தன்மை பெற்றது இனி சங்க இலக்கியங்களில் திணை வாரியாக குறிப்பிடப்பட்டுள்ள பறவைகளின் பெயர்களை நோக்குவோம்.

கிளி , மயில், மலையுறை க் குருவி, மங்கா, காகம் ஆகிய பறவைகள் குறிஞ்சி நிலப் பறவைகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

கானக்கோழி ,குயில் ,தூக்கணாங்குருவி புறா ,மணிப்புறா சிறிய தவிட்டுப்  புறா ,சாம்பல் புறா , போகில் ஆகியன   முல்லை நில பறவைகளாக சுட்டப்பட்டுள்ளன.

காக்கைகள் , கம்புள் கோழி, மனைக் கோழி ,நீர்க்கோழி, நீலக் கோழி, மனையுறைக் குருவி ஆகியன மருத நில பறவைகளாக கூறப்பட்டுள்ளன அன்றில்,அன்னம் ,குருகு ,சிரல் ,கொக்கு ,நாரை ஆகியன நெய்தல் நிலப்பறவைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆந்தை, ஊமன், வானம்பாடி, குடிஞை , குரால், கூகை,எழால் குடுமி எழால், கழுகு, எருவை , பாறு, பொகுவல், கிணந்துள், பருந்து பூழ் போன்றவை பாலை நிலப் பறவைகளாக எடுத்தாளப்பட்டுள்ளன.

பதுங்கி நுழையும் கள்ளர்கள்:

                தலைவன் தலைவியையும் சந்திக்க செல்கிறான் அப்பொழுது அவனுடைய செயல் கொக்கிக்கு இரை தேடும் கொக்கி இருக்கு உவமையாக கூறப்படுகிறது இரவில் திருடுவதற்காக வீட்டினுள் செல்லக்கூடிய திருடனைப் போல சாம்பல் நிற கொக்குகள் இரை தேடுவதற்கு நுழைகிறது இதனை

 நீளிரும் பொய்கை  இரை வேட்டெழுந்த எழுந்த

 வாளை வெண் போத்து அனைய நாரை தன் 

அடிய நிவருதலஞ்சி ப் பயப்பய 

கடியிலன் புகூம் கள்வன் போல…..

                       என்ற பாடல் வரிகளில் குறிப்பிடுகிறார்

சகுனம் சொல்லும் ஆந்தைகள்:

               பொதுவாக தீநிமித்தத்தின் அறிகுறியாக ஆந்தைகளை நாம் பார்ப்போம் . சங்ககாலத்தில் நன் நிமித்தத்தின் அறிகுறியாகவும் ஆந்தைகள் பார்க்கப்பட்டு வந்துள்ளன ஆந்தைகளின் குரல் ஓசை யாழின் இனிய ஓசைக்கும் கொல்லனின் நகை செய்யும் ஓசைக்கும் ஒப்பிடப்பட்டுள்ளது    

                       மரந்தலை மணந்த நனந்தலை கானத்து

                   அலந்தலை ஞெமையத்து இருந்த குடிஞை

                    பொன்செய் கொல்லனின் இனிய தெளிர்ப்ப….

                                                               (  நற்-394)

இதே ஆந்தைகள் தீ நிமித்தத்தின் குறியீடாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.

              “அத்த குடிஞைத் துடிமருள் தீங்குரல் “

                                                             புறம்-370

கூகைகள் எழுப்பும் துடி போன்ற ஓசை குறித்து கூறப்பட்டுள்ளது

                    “திங்கள் கல் சேர்பு கனையிருள் மடியின் 

                        இல்லெலி வல்சி வல்வாய் கூகை 

                       கழுது வழங்கு யாமத்து அழிதக குழறும்”

                                                                 (    அகம்-122.  )

 எலிகளை இரையாக உண்ணும்  ஆந்தை பேய்கள் உறங்கும் நள்ளிரவில் அழிவு உண்டாக குழறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

     இவ்வாறு கூறப்பட்டு இருப்பினும் தமிழர்கள் ஆந்தையை அழகான உருண்டு திரண்ட கண்களை தென்கண் கழல் கண் என்று குறிப்பிட்டுப் பாடியுள்ளனர். ஆந்தைகளை பேரறிவு உள்ள பறவையாக கருதி உயர்வான இடத்தை வழங்கி உள்ளனர். எனவே தான் தங்களின் பெயருடன் இணைத்து சிறைகுடி ஆந்தையார் ,கொட்டியூர் நல்லாந்தையார், பிசிராந்தையார், ஓதலாந்தையார் என்றவாறு உயர்வு படுத்தியுள்ளனர்.

இவ்வாறு ஆந்தை தமிழக மக்களின் வாழ்வில் இரு வேறு இடங்களைப் பிடித்துள்ளது.

பிரிவாற்றா அன்றில்கள்:

                      அன்றில் பறவைகள்  தம்முள் அன்பு நிறை வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளன. நீரில் மிதந்து செல்லும் பொழுது அவைகளுக்கு இடையில் பூ இடைப்பட்டாலும் அதனை ஓராண்டு பிரிந்தது போல வருந்தி தாங்கிக் கொள்ளுமாம்.

                 பூவிடைப் படினும் யாண்டு கழிந்தன 

                  நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப்

                 பிரிவரிதாகிய தண்டாக் காமமோடு 

                                                       (குறுந்- சிறை குடியாந்தையார்)

இவ்வாறு தலைவன் தலைவி உடைய புகழை விளக்க வந்த புலவர் அன்றில்களின் அன்பினைச் சான்றுகாட்டி  பாடலுக்கு அணிசேர்த்துள்ளார்.

இசைக்கு  மயங்கும் பறவை:

                யாழின் இசையைக் கேட்டு மயங்கக்கூடிய பறவை   என அசுணப் பறவையைக் குறிப்பிடுவார்கள்  .அகநானூறு, புறநானூறு ,நற்றிணை ஆகிய சங்க நூல்களிலும் அசுணப் பறவை குறித்த செய்தி வந்துள்ளது .

                  “இரும்புலி தொலைத்த பெருங்கை யானை 

                   இருங்கல் விடர் அலை அசுணம் ஓர்க்கும் 

                    காம்பு அமல் இறும்பில் பாம்பு பட “

என்ற வரிகளில் அசுணப் பறவை இசையை கேட்டு மயங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது .புலியை கொல்லும் யானையின் கண்களில் வடியும் மத நீரை வண்டுகள் கூட்டம் மொய்க்கும். அந்த ரீ ங்காரத்தை யாழின் இசையோ என்று அசுணப் பறவைகள் கேட்கும் என்று தலைவி கூறுவதாக பூதஞ்சேந்தனார் கூறியிருப்பார் கம்பரும்,

                     “ நரை யடுத்த அசுண நல் மாச்செவி 

                        பறையெடுத்தது போலும் என்பார் “

                                                  (   கம்ப -பாயி 7)

என்ற வரிகளில் அசுணப் பறவை இசையினை கேட்டு மயங்கி நிற்பதை குறிப்பிட்டுள்ளார்.

தூது செல்லும் பறவைகள்:

         ‌    சங்ககாலத்தில் பறவைகள் தூது செல்ல பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஒருவரிடம் இருந்து மற்றொருவரிடம் செய்தியை அனுப்ப புறாக்கள்பயன்படுத்தப்பட்டுள்ளமையை வரலாற்றில் நாம் அறிவோம். சங்க இலக்கியத்தில் கிளி, நாரை அன்னம் மயில் போன்ற பல பறவைகள் தூதுவிற்கு பயன்பட்டு உள்ளன. இதனை ரத்தின சுருக்கம் என்னும் நூல் எடுத்து இயம்பியுள்ளது .

“இயம்புகின்ற காலத் தெகின மயில் 

கிள்ளை பயம் பெறுமே கம்பூ வை பாங்கி 

நயந்த குயில்”

                                       ( இரத்தினச் சுருக்கம் ).     

                 இவ் இலக்கணம் கூறுவது போல சங்க இலக்கியத்தில் தூது செல்வதற்கு அன்னம் ,கிளி, மயில் ,குயில், நாரை போன்ற பறவைகள் பயன்பட்டு உள்ளன. ,.சான்றாக ,சகத்தி முத்தப் புலவரின் புகழ் பெற்ற பாடலை காணலாம்.

“ நாராய் நாராய் செங்கால் நாராய்

 பழம் படு பனையின் கிழங்கு பிளந்தன்ன 

பவள கூறுவாய் செங்கால் நாராய்”

என்று அழைத்து தன்னுடைய வறுமை நிலையை தன் மனைவிக்கு உணர்த்துமாறு நாரையை தூது அனுப்பி இருப்பார் .இது போலவே  புலவர் பிசிராந்தையார்  தன்னுடைய அன்பின் தன்மையை சேவல் மூலமாக கோப் பெருஞ் சோழனுக்கு உணர்த்தி இருப்பார் .

“அன்னச் சேவல் அன்னச் சேவல் 

ஆடுகள் வென்றி அடுப்போர் அண்ணல்”

என்கின்ற புறநானூற்று வரிகளின் மூலம் இதனை தெரிந்து கொள்ளலாம். அன்னப்பறவையை தூது செல்லுமாறு கூறிய பிசிராந்தையாரின் அடிமை நான் என்று சோழனிடம் கூறினால் அச் சேவலின் பெடைக்கு அணிவதற்கு நல்ல அணிகலனையை சோழன் தருவான் என்று குறிப்பிட்டுள்ளார். இது தன்னுடைய நட்பிற்கு அனுப்பிய தூதினைக் குறிக்கும் .

இவ்வாறு சங்க இலக்கியத்தில் பறவைகள் தூதிற்காக பயன்பட்டு உள்ளன  ஏதேனும் செய்திகளை அனுப்புவதற்கு புறாக்கள் பயன்பட்டு உள்ளனசுருங்கக்கூறின் சங்க இலக்கியத்தில் பறவைகள் தலைவன் தலைவியின் அன்பினைச் சுட்ட,நட்பின் மேன்மையை உணர்த்த நிமித்தம் பார்க்க என பல வகைகளில் சுட்டப்பெற்றுள்ளன…

  • பறவைகளை  உற்று ஆராய்ந்து அவற்றின் உணவு இருப்பிடம் வலசை போகும் தன்மை ஆகியவற்றை தம் பாடலோடு இணைத்து  காட்டிய சங்கப் புலவர்கள் பணி பாராட்டுக்குரியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *