சகிப்புத்தன்மையும் மாதவிடாயும்

அப்போது எனக்கும் ஒன்று தெரியவில்லை ஓ வென்று அழுது கொண்டு அம்மாவிடம் சொன்னேன். ஒரு ஒன்பது நாள் வித விதமான உணவுகள் பலகாரங்கள். வித விதமான துணிகள் என வியப்பாக இருந்தது. ஓ இப்படி நடந்தால் இப்படி எல்லாம் கிடைக்கும் என்று ஆச்சரியப்பட்டேன் அடுத்த அடுத்த மாதங்களில் அப்படியெல்லாம் நடக்கவில்லை வீட்டைவிட்டு ஒதுக்கி வைத்தார்கள் கோயிலுக்கு செல்லக்கூடாது அதை செய்யக்கூடாது இதைசெய்யக்கூடாது என்று என்னை ஒதுக்கி வைத்தார்கள் உடல் ரீதியாக ஏற்பட்ட மாற்றங்கள் ஒருபக்கம் இருக்க என்னை சுற்றி நடந்தவைகள் எல்லாம் என்னை மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தியது.

அந்த ஒன்பது நாட்களில் உணவு ரீதியாக நிறைய மாற்றங்களை அம்மா கொண்டுவந்தாள். காலையில் வெறும் வயிற்றில் உளுந்தங்களி, நல்லெண்ணை, பச்ச முட்டை, வெல்லம் என புதிய உணவு பட்டியல்கள் என் தினசரிகளில் சேர்ந்தது. வெளியே விளையாடச் செல்வது குறைந்து போனது எல்லாவற்றில் இருந்தும் விலகி என் குழந்தமையை இழந்து கொண்டிருந்தேன்.

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் உடலியல் மாற்றங்கள் உபாதைகளும் வலிகளும் இந்த சமூகத்தில் வாழ்வதற்கான சகிப்புத்தனமையை வழங்கும் பயிற்சியாகவே நான் பார்க்கிறேன்.

நாம் நினைப்பது போலவே எதுவும் இருப்பதில்லை. பிறந்த இடத்தில் இருந்து புகுந்த இடம் பணி செய்யும் இடம் என எல்லா இடங்களிலும் அந்த எதிர்பார்ப்பை உடைக்கும் சூழலை உருவாக்கும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் அவர்களை அந்த சூழலை கடப்பதற்கான சகிப்புத்தன்மையை அந்த மாதவிடாய் காலங்கள் தான் பயிற்றுகிறது.

திரும்ப திரும்ப மாதவிடாய் காலத்தின் வலியையும் அவதிகளையும் குறிப்பிட்டு சொல்லுவதைவிட. அந்த காலத்தில் மனரீதியாகவும் அப்போது எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் உடற்பயிற்சி முறைகள் என நம்மை எப்படி தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றே யோசித்து இயங்க வேண்டும்.

மாதவிடாய் இல்லை என்றால் மனித இனம் இல்லை. அவற்றை எண்ணி நொந்து கொள்வதைவிட அவற்றின் மூலமாக தான் இந்த உலகம் என்று எண்ணும் போது அவை மிக உயர்வாகத் தெரியும்.

சமீபத்தில் “Happy to Bleed” என்ற முழக்கத்தை பரவலாக பிரபல்யமான பெண்கள் சமூக செல்பாட்டாளர்கள் முன்னெடுத்தனர். இவை புதுமையானது, ஏனென்றால் மாதவிடாய் பற்றி நாங்கள் எங்கள் காலத்தில் ஒருபோதும் வெளிப்படையாக விவாதிக்கவில்லை. இது பெரும்பாலும் தனிப்பட்ட முறையில் பேசப்படுகிறது அதாவது பெண்களுக்கு இடையே, தாய் மற்றும் மகள்களுக்கு இடையே, சகோதரிகளுக்கு இடையே – ஆனால் பொதுவில் ஒருபோதும் பேசப்பட்டதில்லை.

நான் சொல்லப் போவது தெரிந்த கதையாக இருக்கலாம். எனக்கு மாதவிடாய் தொடங்கியபோது, ​நான் திகிலடைந்தேன். என் உடலுக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. இது ஒரு முறை மட்டும் அல்ல, குணப்படுத்தப்படும் மருத்துவ நிலையும் என்றில்லை என்று சொன்னதில் எனக்கு எரிச்சல், கோபம் மற்றும் மனச்சோர்வு ஏற்பட்டது. இது ஒரு நிரந்தர நிலை, இது ஒவ்வொரு மாதமும், அல்லது ஒவ்வொரு 28 நாட்களுக்கும் என்னை பாதிக்கும் என்ற போது இனம்புரியாத ஒரு அவதி ஏற்பட்டது.

எல்லா மதங்களும் மாதவிடாய்ப் பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கின்றன என்பதை அறிவதில் வருத்தம்தான். ஏன்? இந்த நீடித்த பாரம்பரியத்தை எந்த தர்க்கம் நியாயப்படுத்துகிறது? இன்றும் அந்த கேள்வியுடன் தான் இருக்கிறேன்.

2 thoughts on “சகிப்புத்தன்மையும் மாதவிடாயும்

  1. ‘கோயிலுக்கு செல்லக்கூடாது என்று என்னை ஒதுக்கி வைத்தார்கள்’ என்று ஆசிரியர் திருமதி சுஜாதா அவர்கள் கூறி இருக்கிறார்கள்.

    சிலமணி நேரங்களுக்கு ஒரு முறை சிறுநீர் கழிக்கும் ஆண்கள் கோயிலுக்குள்ளும், அர்ச்சகர்கள் கருவறையில் கடவுள் சிலைக்கு அருகிலும் போகலாம் என்றால், மாதத்திற்கு 3 நாள்கள் மாதவிடாயில் உள்ள பெண்களும் கோயிலுக்குள் தாராளமாகப் போகலாம்.

    நான் சொல்வது அறிவியல் அடிப்படையிலானது என்று நன்கு தெரிந்திருந்தாலும் கூடத் தங்கள் ‘வளர்ப்பு, பழக்கம், அச்சம்’ காரணமாக இன்னமும் பெண்கள் கோயிலுக்குள் செல்வதில்லை என்பதே உண்மை.

    அந்த 3 நாள்களில் ஒரு நாள் கோயிலுக்குள் சென்று கடவுளைப் பார்த்து வணங்கி விட்டு வாருங்கள்.

    உலகிற்கோ, உங்களுக்கோ எந்தத் தீங்கும் நிகழவில்லை என்றால் அந்த 3 நாள்களிலும் எப்போதும் போல் கோயிலுக்குச் செல்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

    It is your thoughts, followed by actions, that create the results.

    Your thinking alone wouldn’t help. Waiting for others to act also wouldn’t help.

    நமக்கு அடுத்த தலைமுறையிலாவது பெண் குழந்தைகள் இயல்பாக, மகிழ்ச்சியாக வாழட்டும்.

    தம் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்ட ஆசிரியர் திருமதி சுஜாதா அவர்களுக்கு என் வாழ்த்துகளும், நன்றியும்.

    1. திருமதி சுஜாதா அவர்கள் கருத்தும், ஆதங்கமும் மிகவும் சிறப்பு.
      ஒரு புதிய கதவைத் திறந்து விட்டிருக்கிறார்கள்.
      திரு முத்தையா ராமனாதன் அவர்களின் பின்னூட்டம் மிக மிகச் சிறப்பு.
      புதிய சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளார்.
      தினமும் பல முறைஉடல் கழிவுகளை வெளியேற்றும் ஆண்கள் கருவறை வரை செல்ல அனுமதிக்கும் சமூகம், மாதத்திற்கு மூன்று நாள்கள் மட்டுமே வெளியேற்றும் பெண்களுக்குக் கோவிலுக்குள்ளேயே செல்ல அனுமதி இல்லை என்பது ஒட்டுமொத்த சமூகத்திற்கான தண்டனை யாகவே கருதுகிறேன்.
      இந்தப்பதிவை எடுத்தியம்பிய திரு முத்தையா ராமனாதன் அவர்களுக்கு பாராட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *