கிழக்குத்தொடர்ச்சிமலைகள்

இயற்கை நமக்குத் தந்த கொடையாகிய மலைகளையும், அதனோடு ஒன்றிப்போன இயற்கையின் உறவுகளாகிய உயிரினங்களையும் பாதுகாத்து வளப்படுத்துவது மனிதர்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமையாகும். ஆகையினால், இப்போதே இயற்கையை காப்பதில் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் எதிர்காலத் தலைமுறையினர் சுவாசிப்பதற்கு நல்ல காற்றாவது கிடைக்கும்.

நதி, மலை மற்றும் சமவெளிப் பரப்புகள் என அபரிமிதமான சுற்றுச்சூழல் வளங்களை தன்னகத்தே கொண்டுள்ள நாடு நமது இந்தியா. இந்திய புவிப்பரப்பின் தென்பகுதியில் உள்ள தீபகற்பத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையும், கிழக்குத் தொடர்ச்சி மலையும் இயற்கை அரண்கள் போன்று அமைந்துள்ளன.

இதில் கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரானது மேற்கு தொடர்ச்சி மலையைவிடப் பழமை வாய்ந்தது என்பதற்கு பவுத்த இலக்கியங்கள் ஆதாரமாக உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலை அரபிக்கடலுக்கு இணையாக அதாவது இந்தியாவின் மேற்குக் கடற்கரைக்கு இணையாக அமைந்துள்ளது. பொதுவாக மலைகள் ஒன்றையொன்று அடுத்தடுத்து அமைந்து ஒரு நீண்ட சுவர்போல் எழும்பிக் காணப்படுவதால் மலைத்தொடர் என்று அழைக்கிறார்கள். கிழக்குத் தொடர்ச்சி மலைகளும், ’மலைத் தொடர்’ என்று அழைக்கப்பட்டாலும்கூட இத்தொடரிலுள்ள மலைகள் இடைவெளிகள் விட்டும், சிறுசிறு குன்றுகளாகவும் காணப்படுகின்றன.

இம்மலைத் தொடர் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையான வங்காள விரிகுடா கடற்கரைக்கு இணையாக மேற்கு வங்காள மாநிலத்தில் துவங்கி ஒரிசா, ஆந்திரா வழியாக தெற்காகச் சென்று மீண்டும் தென்மேற்காகத் திரும்பி தமிழ்நாட்டிலுள்ள நீலகிரியில் மேற்குத் தொடர்ச்சி மலையுடன் இணைகிறது.

மேற்கு வங்காளம், ஒரிசா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இம்மலைத்தொடர் பரவியிருந்தாலும் இதன் பெரும்பகுதி ஒரிசா, ஆந்திரா மாநிலங்களில்தான் அமைந்துள்ளது. மேற்கிலிருந்து கிழக்காக நிலப்பகுதி சரிந்திருப்பதால் இந்தியாவின் ஆறுகள் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகி கிழக்கு நோக்கி ஓடிவந்து வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது. அதனால் கிழக்குத் தொடர்ச்சி மலையில் ஆறுகள் உற்பத்தியாகவில்லை.

தென் இந்தியாவின் பெரிய ஆறுகளான மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி ஆகியவை கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் ஊடாகச் செல்கின்றன. இவ்வாறுகளால் இம்மலைத்தொடரானது அரிக்கப்பட்டு தொடர்ச்சியாக இல்லாமல் உள்ளது. உயரம் குறைவான கிழக்குத் தொடர்ச்சி மலைகள் தனித்தனிக் குன்றுகளாகவே இருந்தாலும் பசுமை நிறைந்த பகுதிகளாகவே காணப்படுகின்றன.

கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடர் 1750 கிலோ மீட்டர் நீளமுடையது. 75,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இம்மலைத் தொடரில் மிக உயர்ந்த சிகரம் 1501 மீட்டர் உயரமுள்ள ஒரிசா மாநிலத்தின் மகேந்திரகிரி ஆகும்.

தென்மேற்குப் பருவமழை மற்றும் வட கிழக்குப் பருவமழை காரணமாக கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் மழைப்பொழிவு நடக்கிறது. குளிர்காலங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக அதிகளவு மழை பெய்கிறது. இதன் சராசரி மழையளவு 1150 மில்லிமீட்டர் முதல் 1660 மி.மீ. வரையாகும். ஆனால், கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் தென்பகுதியில் சராசரி மழையளவு 600 மி.மீ. முதல் 1050 மி.மீ. வரைதான் உள்ளது. வெப்பநிலையைப் பொறுத்தவரை 20 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ்வரை காணப்படுகிறது. குளிர்காலங்களில் குறைந்த பட்சமாக 2 டிகிரி செல்சியஸ்வரைகூட வெப்பநிலை இருக்கிறது.

சிறுசிறு மலைகளாக அமைந்துள்ள கிழக்குத் தொடர்ச்சி மலை நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. மகாநதி மேல்பகுதி துவங்கி ஒரிசாவின் வடக்கு எல்லைவரையிலான மலைப்பகுதியை வடக்குப் பகுதி என்கின்றனர். இதில் சிமிலிபால், குல்திகா, ஹாட்க்ஹர், ஜெய்ப்பூர் ஆகிய மலைப்பகுதிகள் உள்ளன.

மகாநதியில் இருந்து கோதாவரி நதி வரையிலான பகுதி இரண்டாவது பிரிவாக உள்ளது. இப்பகுதியில் கபிலாஸ், சப்தசஜ்வா, பெர்பேரா, கோந்த்மலை, லக்காரி பள்ளத்தாக்கு, கார்லாபாத், பாய்சிபள்ளி, பாப்ளிமலி, மகேந்திரகிரி, டியோமலி, கொண்டாகம்பேறு, சைலேறு மேல்பகுதி, அராக்கு, அனந்தகிரி, சிந்தாபள்ளி, சப்பார்லா, குதேம், சாம்பாரிகொண்டா, லங்காபகாலா, கோதாவரி மேல்பகுதி, மோதுகுதேம் ஆகிய மலைப்பகுதிகள் அமைந்துள்ளன.

கிருஷ்ணா நதியில் இருந்து சென்னை வரையிலான பகுதியில் நல்லமலை, வெளிகொண்டா, சேசாச்சலம், நிகிதி, கொண்டபள்ளி ஆகிய மலைப்பகுதிகள் அமைந்துள்ளன.

கிழக்குத் தொடர்ச்சிமலையின் தெற்குப் பகுதியாக சென்னை முதல் நீலகிரிவரை மற்றும் வைகை ஆற்றுப் பகுதிகள் இருக்கின்றன. இதில் கொல்லிமலை, சேர்வராயன் மலை, சித்தேரி மலை, ஜவ்வாது மலை, பச்சமலை, மேலகிரி, கல்வராயன், சிறுமலை, பில்கிரிரங்கன் மற்றும் கோலார் ஆகிய மலைகள் அமைந்துள்ளன.

கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் 75 குடும்பங்களை சேர்ந்த 2500 தாவர இனங்கள் உள்ளதாகவும், 271 இனங்களைச் சேர்ந்த 528 வகையான மரங்கள் காணப்படுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தென்னிந்தியாவில் காட்டுயானைகள் அதிகமாக இம்மலைத்தொடரில் காணப்படுகின்றன. சிறுத்தை, புலி, காட்டு எருமை, கரடி, கடம்பை மான், புள்ளி மான், குரைக்கும் மான், சுண்டெலி மான், காட்டுப்பன்றிகள், நரி, ஓநாய், காட்டுப் பூனை, புனுகுப்பூனை, குரங்கு, பறக்கும் அணில் உள்ளிட்ட விலங்குகளும் நாரை, வண்ணக் கொக்கு, காடை, கவுதாரி போன்ற பறவை இனங்களும், நீர்நிலைப் பறவைகள், முதலை மற்றும் பாம்பு வகைகளும் காணப்படுகின்றன.

சாவரா, ஜடபு, கொண்டா டோரா, கடாபா, கோண்ட், மானே டோரா, முஃகா டோரா, போண்டா, மலையாளி உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட சமூகப் பிரிவைச் சேர்ந்த பழங்குடி இனத்தவர்கள் கிழக்குத் தொடர்ச்சி மலையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் கிழங்கு தோண்டுதல், தினை பயிரிடுதல் உள்ளிட்ட விவசாய வேலைகளுடன் தேனெடுத்தல், மீன் பிடித்தல் போன்ற தொழில்களைச் செய்கின்றனர்.

ஆண்டாண்டு காலமாக காடுகளில் வாழ்ந்து வரும் பழங்குடியினர் வனத்தோடு இணைந்த வாழ்க்கை முறையைக் கொண்டுள்ளனர்.

இம்மலையிலுள்ள ஒரிசா, தெற்கு ஆந்திரா மலைப்பகுதிகள் புத்த பண்பாட்டைப் பிரதிபலிப்பதாக இருக்கின்றன. கி.மு. 3ஆம் நூற்றாண்டில் இருந்து புத்த பண்பாடு வளர்ந்து வந்துள்ளது. அதற்குச் சான்றாக 140 புத்த தலங்கள் உள்ளன. கல்வெட்டுகள், செப்புத் தகடுகள் பானைகளில் பொறிக்கப்பட்ட எழுத்துகள் இதனைப் பிரதிபலிக்கின்றன.

மலைப்பகுதிகளில் அபூர்வ மூலிகைகள் மட்டுமல்ல அதனுடன் தாதுக்கள் பலவும் நிறைந்துள்ளன. பாக்சைட், மாங்கனீசு, கிராபைட், குரோமைட், இரும்பு , செம்பு, துத்தநாகம், அப்படைட், மைக்கா, கிரானைட், பெல்ட்ஸ்பார் , சிலிக்கா மணல், குவார்ட்சைட் உள்ளிட்ட தாதுக்களை எடுப்பதற்காக பல நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு மண் எடுத்து மலையை அழித்துக் கொண்டு இருக்கின்றனர்.

மனிதச் செயல்பாடுகளான சுரங்கம் வெட்டுதல், காடுகளை அழித்தல், சாலைகள் அமைத்தல், வேட்டையாடுதல், கடத்தல், சுற்றுலா, நகரமயமாக்கல், மேய்ச்சல், பணப்பயிர் விவசாயம், நீர்த்தேக்கங்கள் மற்றும் காட்டுத் தீ ஆகிய காரணங்களால் கிழக்குத் தொடர்ச்சி மலைக் காடுகள் அழிவை சந்தித்துக்கொண்டு இருக்கின்றன.

தமிழ்நாட்டில் தென்மாவட்டங்களில் உள்ள வல்லநாடு, சாயமலை, காரிசாத்தான், கரட்டுமலை, கழுகுமலை, திருப்பரங்குன்றம், நாகமலை, அழகர்கோவில்மலை, யானைமலை, சிறுமலை, கரந்தமலை, கடவூர்மலை, வடமாவட்டங்களில் உள்ள பச்சைமலை, சேர்வராயன்மலை, கல்வராயன்மலை உள்ளிட்ட பகுதிகளில் கிழக்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளன. சேலம் மாவட்டத்தில் உள்ள சேர்வராயன் மலை, திருவண்ணாமலை மாவட்டத்தில் தென்பெண்ணை – பாலாறு நதிகளுக்கு இடையே உள்ள சவ்வாதுமலை போன்றவை புவியியல் முக்கியத்துவம் கொண்டது. சேர்வராயன் மலையில் ஏற்காடும், சவ்வாது மலையில் ஏலகிரியும் அமைந்துள்ளன. செய்யாறு, ஆரணியாறு, கமண்டலாநதி, மிருகண்டநதி போன்ற நதிகள் சவ்வாது மலையில்தான் உற்பத்தி ஆகின்றன. சவ்வாது மலையில் உள்ள பீமன் நீர்வீழ்ச்சி, அமிர்திநீர்வீழ்ச்சி, ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி சூழலியல் முக்கியத்துவம் கொண்ட இடங்கள். சேலம் மாவட்டம் ஆத்தூர், விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்ட கல்வராயன் மலை சவ்வாது மலைத்தொடரில் இருந்து சுமார் 40 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கல்வராயன் மலையில்தான் கோமுகி ஆறு உற்பத்தியாகி வங்காளவிரிகுடாக்கடலில் கலக்கிறது. சாத்தனூர் அணைக்கட்டு, மணிமுத்தாறு அணை, ஆத்தூர் கணவாய் கல்வராயன் மலையில் உள்ள முக்கிய இடங்கள் ஆகும். கல்வராயன் மலையின் மேற்குப்பகுதியில் சித்தேரி மலை உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *