கா… கா….

எத்தித் திருடும் அந்தக் காக்காய் அதற்கு இரக்கப்பட வேணும் பாப்பா…

காக்கைப் போல வெட்கமற்றவனுக்கு வாழ்க்கை எளிது.

தம்மபதம் 244 

சின்ன வயசுல இருந்தே பாரதியார் காக்கைக்கு திருடும் குணம் இருப்பதாகவும் அதற்கு இரக்கப்பட வேண்டும் என சொல்வதையும் என் மனம் ஏற்பதேயில்லை, ஒரு உயிரை ஏற்றத்தாழ்வுகளுடன் பார்க்கும் பார்வை கவிஞர்களுக்கும், ஞானிகளுக்கும், பொதுமக்களுக்கும் நீண்ட நெடிய காலமாக இருந்துவருகிறது.

பாரதியார் காக்கை திருடுகிறது என்று சொல்வது ஒரு புரிதல் குறைபாடு என்று எனக்குத், தோணும், காரணம் காக்கையின் பார்வையில் அது திருட்டு கிடையாது மனிதனுடைய  எல்லாவற்றையும் பணமா பாக்குறதுனால பணப் பரிவர்த்தனையின்றி எடுக்கப்படும்  எல்லாமே திருட்டு அப்படிங்கிற மனநிலை இருக்கிறதுனால காக்கை திருடுவதாகவும், அதற்கு இரக்கப்பட வேண்டும் என்பதற்காக தன்னுடைய கருணையை வந்து வெளிப்படுத்துவதன் மூலமாக தன்னை ஒரு பெரிய மனுஷனா காட்டுறதா எனக்கு எப்பவுமே யோசனை இருக்கும், இதுபோன்று வள்ளலார்  எனக்கு மிகவும் பிடித்த சமூக நீதி பேசின ஞானியா இருந்தா கூட ஆறாம் திருமுறை எழுதும் காலத்தில் மிகவும் தெளிவாக இருந்ததாக உணரமுடியும், அப்படி மிகத் தெளிவாக எழுதிய ஆறாம் திருமுறையில் நாயினும் கடையேன் ஈயினும் இழுந்தேன்னு எழுதுறாரு.

ஒரு உயிரினத்தை கடை சாதி இழி சாதி  என்றெல்லாம் பேச அவருக்கும் எப்படி மனசு வந்தது தெரியல, அப்படி வள்ளலார் மட்டுமில்லாமல் புத்தரும் ஒரு இடத்துல காக்கைப் போன்று வெட்கமற்று வாழ்பவனுக்கு வாழ்க்கை எளிமை அப்படின்னு சொல்றாரு, இதனால தான் எனக்கு நிறைய கேள்விகள் வருது நாம் மிகவும் மதிக்கக்கூடிய கவிஞர்கள், ஞானிகள், எழுத்தாளர்கள் அல்லது அரசியல் பேசக்கூடியவங்க கூட மனிதனோட வாழ்ந்து வாழ்ந்து  இந்த ஏற்றத்தாழ்வுகளை மிருகங்கள் மீதும், பறவைகள் மீதும் காட்டுறது கவனிக்க முடியுது.

காக்கையின் சோசியல் பிஹேவியரை நாம் யோசிச்சி பாத்தா தெரியும், அதுபோல இந்த மண்ணுக்கு பயனுற வாழக்கூடிய ஜீவன்களை பாக்குறது ரொம்ப அரிது.ஆனா,காக்கை என்பது ஒரு அசிங்கமான, இழிவான ஒரு பறவையாகத்தான் பார்க்கப்படுது, என்னதான் வேளா வேளைக்கு சோறு வெச்சா கூட காக்கை என்பது ஒரு அபசககுனமா தான் பார்க்கப்படுது.இந்த நிலை, நிறத்தின் காரணமாக வந்ததா அல்லது அதனுடைய உணவு பழக்கத்தின் காரணமாக வந்ததா எதுவும் தெரியல, காக்கை அனைத்துண்ணி செத்தது, உயிரோட இருக்கிறது, மனுசங்க போடுறது எல்லாத்தையும் உண்டு வாழக்கூடியது.

காக்கா ஏதோ மனித இனத்தினுடைய கருணையா அவன் போடக்கூடிய எச்சத்தினால் வாழ்கிற மாதிரி நம்ம கற்பனை பண்ணிக்கிறோம். உலகத்தில் உணவுச் சங்கிலிய பார்க்கும் பொழுது காக்கையுடைய பங்கு இல்லனா இந்த மனிதன் வாழமுடியுமான்னு சந்தேகம் வருது, மனிதன் வாழுமிடமோ அல்லது காடோ என்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும்னு சிந்திச்சோம்னா ரொம்ப வியப்பா இருக்கும்.

பறவைகள் குறித்து எழுத அல்லது பேச நினைக்கும் போது எனக்கு ரெண்டு பறவைகள் தான் முதலில் தோணும். ஒன்னு  தூக்கணாங்குருவி, இப்ப சமீப காலமாக நான் போய் தொடர்ச்சியாக பார்த்து அதை பதிவு பண்ணிட்டு இருக்கேன். தூக்கணாங்குருவி ஜென்நிலையில வாழறதா என்னால கவனிக்க முடியுது,காரணம் என்னன்னா தன்னுடைய மிகப்பெரிய உழைப்பை போட்டு கட்டும் கூட்டுல வேறு பறவைகளோ வேறு உயிரினங்களோ வந்து குடியேறும் போதும்,கூட்டிற்கு சேதம் ஏற்படுத்தும் போதும் எந்தவித ஆரவாரமும் இல்லாமல் மீண்டும் முதலில் இருந்து தன்னோட இருப்பிடத்தைக் கட்டி முடிக்கும். இந்த நிமிஷம், இந்த நொடியில  நான் என்ன செய்யணும்,  இழக்கும் பொழுதும், பெற்ற பின்னரும் அதை பத்தி திரும்பி பார்க்க மாட்டேன் என்கிறது மிகப்பெரிய பாடத்தைத் தருகிறது. 

ஆனா தூக்கணாங்குருவியை விட காக்கை மீதே எனது கவனிப்பு அதிகம் இருந்து வருகிறது. காக்கை மனிதர்களோட நெருங்கி வாழக்கூடிய ஒரு பறவை இனமாக இருக்கிறதுனால, எண்ணிக்கையில் அதிகமா இருக்கிறதுனால அது ஏதோ இந்த சூழலில் மிகச் சிறிய பங்காற்றக்கூடிய ஒரு உயிரினமாக நாம பார்க்கிறது இல்ல, அதை பொருட்படுத்தாமல் கடந்து போய்டுறோம். இன்னொரு காரணம் நெருக்கமா இருக்குறது மேல நம்ம மனமும் அறிவும் அவ்ளோ லேசுல ஒன்றி போறதுமில்ல, நம்முடைய பார்வை இன்னும் விசாலமடையணும்.

  தமிழகத்தில் இருக்கக்கூடிய குப்பைமேடுகள் இருக்குல்ல அதை கவனிச்சா நமக்கு ஒரு விசயம் ரொம்ப தெளிவா புரியும், வீட்டை சுத்தம் பண்ணி ரோட்ல கொட்டி, ரோட்ட சுத்தம் பண்ணி சுடுகாட்டில் கொட்டி, சுடுகாட்டை சுத்தம் பண்ணி நீர்நிலைகள்ல கொட்டி வைக்கிறோம். இந்த குப்பை மேடுகளில் இருக்கக்கூடிய ஆர்கானிக் கழிவுகள் அதாவது மக்கக் கூடிய கழிவுகளில் நுண்ணுயிர்களுக்கு இணையா காக்கையும் கழுகும் வேலை செய்யும். திடக் கழிவுகளை மேலாண்மை பண்றதுல மிக முக்கியமான ஆளா இந்த காக்காவையும் கழுகுகளையும் நான் பார்க்கிறேன். காக்கா மட்டும் இல்லன்னா எத்தனை வகையான நோய் உருவாகும்னு சிந்திச்சா எனக்கு ரொம்ப வியப்பா இருக்கும். இறந்து போன எலி, நாய் மற்றும் எத்தனையோ இறந்து புதைபடாமல் கிடக்கக்கூடிய உயிரினங்களை தின்னு செரிச்சி சூழலையும் மற்ற எல்லா உயிர்களையும் நோயணுகாம பாதுகாக்கும் காக்கையின் செயற்பாடுகளை கண்டு வியக்காம இருக்க முடியல.

  நல்ல செயல்னு வரும்போது காக்காவ ஒதுக்கி வச்சிட்டு  பித்துருக்களோட பேசக்கூடியது  அமாவாசை நாள் ஒற்றன் போல மட்டும் நினைவுபடுத்துவது இயல்பாகிப் போச்சி. குழந்தைகளுக்கு காக்கை எவ்வளவு முக்கியமான பறவைன்னு சொல்ல வேண்டிய காலகட்டத்தில் இருக்கோம். பறவையை பத்தி பேசுறதும் சரி, நியூஸ் பேப்பர் எல்லாம் பார்க்கும்போது ஒரு ஆந்தைய பாத்தா கூட ஒரு விசித்திரமான, அதிசயமான வெளிநாட்டு ___ தொடங்குறாங்களே தவிர எளிய உயிரினங்களை கவனிக்கணும்னு சொல்லித்தராம இருக்கோம். விசித்திரமானது, அதிசயமானது, வலிமையானது, அழகானதுன்னு உயர்வு நவிற்சி கொடுப்பததைத்தான் நாம் முக்கியத்துவம் உள்ளவைன்னு நினைக்கிறோம், அப்படி இல்ல மண்புழுவுக்கும், கரையானுக்கும், எறும்புக்கும் என்ன வகையான முக்கியத்துவம் இந்த மண்ணுல இருக்கோ அதே மாதிரி தான் காக்கா, தவுட்டுக்குருவி, தூக்கணாங்குருவி, வாலாட்டின்னு சின்னதா, அதிகம் உள்ளதா இருக்குற உயிரினங்கள் முக்கியத்துவம் பெறுவதில்லை. இதெல்லாம் பெருசா பதிவு பண்ணறதும் இல்ல.

அப்படித்தான் காக்காவை  ஒரு முக்கியமான உயிரினமா பதிவு பண்ண மாட்டோம் காக்கையை குழந்தைக்கு அறிமுகப்படுத்தும் போது திருடக்கூடிய ஒரு உயிரினமாக அறிமுகப்படுத்தினோம் இல்லையா அதிலிருந்து நாம நம்முடைய வார்த்தைகளிலும் செயல்பாடுகளிலும் மாற வேண்டி இருக்கு,  இந்த இடத்துல குறிப்பாக பெரிய ஆய்வு சோசியல் பிஹேவியர், அதனுடைய வண்ணம், வடிவம், வாய்ஸ், பிரீடிங், மேட்டிங்னு ஒவ்வொரு விஷயத்தையும் விஞ்ஞான பார்வையில் அணுகுவதை விட கொஞ்சம் அன்போட, கருணையோடு அணுக வேண்டியது இந்த காலகட்டத்தின் தேவையா இருக்கு. பிரம்மாண்டங்களையும் ஆய்வுகளையும்  கவனிக்கிறது எவ்ளோ முக்கியமோ அதைவிட முக்கியம், எளிய, அருகாமை விஷயங்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்க, ஏன்னா கற்றல் என்பது தெரிந்ததிலிருந்து தெரியாததை  நோக்கி நகர்வது தானே தவிர கற்றல் என்பது பிரம்மாண்டங்களை மட்டும் கற்றுக் கொள்வதில்லை.

One thought on “கா… கா….

  1. அருமை பாஸ்கர்‌ பேசக் கேட்பது போலவே இருந்தது கனப்பட வேண்டிய விடயங்களை எளிமையாக உணரச் செய்கிறது கட்டுரை‌ அன்பும் வாழ்த்துகளும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *