காலமெனும் அபூர்வ ஆசான்

கோழி கூவியதும் எழுந்து படிக்கத் தொடங்கிய காலத்தை அனுபவித்து வளர்ந்தவன். களத்தில் காய வைத்திருக்கும் தானியங்களை கொஞ்ச நேரம் கொத்தவிட்டு வேடிக்கைப் பார்த்து பின் புறாக்களை விரட்டுவதுண்டு. கம்பு, சோளம் விளைச்சலின் போது ஒரு தட்டைக்கு ஒன்றென அமர்ந்திருக்கும் குருவிகளின் அழகை ரசித்துக் கொண்டிருக்கையில் தாத்தாவின் குரல்கேட்டு கவண் கல் வீசி விரட்டுவதுண்டு. பறவைகள் தனித்த ஒன்றல்ல.

வாழ்வில் உடன் வளரும் உயிரிகளாக வாழ்ந்த காலம். சட்டென தொலைந்து போய் இருப்பதை உணர்ந்தேன் வேலைக்காக வேற்று நகரில் வாழும்போது. வாழ்வில் ஒன்றுடன் ஒன்றாக கலந்து இயல்பில் இருந்த நிறைய விசயங்களை தொலைத்திருப்பதை பிரத்யோகமாக யோசிக்கும் போதுதான் அதன் வலியை உணருகிறோம். கீழே விழுந்தவனை அப்படியே விட்டுவிட்டால் எழுந்து தட்டிவிட்டு ஓடிவிடுவான். யாராவது தூக்கிவிட்டு எதையாவது கேட்க வலி உணர்ந்து அழும் சிறுவனின் நிலையில் இருப்பதை கண்டுகொள்ள முடிகிறது. ஜெயபிரகாஷ் புழுதி இதழுக்காக பறவைகளுடனான கட்டுரை கேட்டதும் அது குறித்த யோசிப்புகள் விழுந்தெழும் சிறுவனாக்கியது.

இன்று அப்பாவிற்கு திதி. விரதமிருந்து காக்காவிற்கு சோறு வைத்தபின் சாப்பிடு என அம்மாவின் போன் பேச்சு கண்கள் காக்காவை தேடத் தொடங்கின. எப்போ பார்த்தோம் என்று யோசிப்பு தோன்றியதற்காக வெட்கப்பட்டேன். நம்முடன் வாழும் உயிரிதானே, எங்கே போய்விடப்போகிறது வரும் எனும் நம்பிக்கையோடு சிறிய இலையொன்றை கிழித்து உணவு பதார்த்தங்களை வைத்து மாடிக்குச் சென்று கா கா கா வென நீண்டநேரம் அழைத்து குரல் வற்ற திரும்பிவிட்டேன். நமக்குத் தெரியாமல் வந்து சாப்பிட்டிருக்கலாம் எனும் நப்பாசையில் மாலை சென்று பார்க்க இரண்டு அணில்கள் கொறித்துக்கொண்டிருக்க, காக்கா அணிலாக உருமாற்றம் அடைந்துள்ளதென நினைவில் தோன்றிய சிரிப்பின் நிழல் காக்கையைப் போன்றிருந்தது.

அன்று ஏனோ தூக்கமற்று தவிப்பில் கிடந்தேன். வீட்டில் ஒரு சிட்டுக்குருவியையாவது வரவழைத்திட வேண்டும் எனும் நினைவு மின்விசிறியானது. அதிகாலை நல் உறக்கத்தில் இருந்தவனை அடித்து எழுப்பிய இணையர் வெளியே வந்து பாரு என்றும் அவசர அவசரமாக வெளியே செல்ல ஆச்சரியத்தில் மனம் ஊஞ்சலாடிக்கொண்டிருந்தது. படிக்கு பத்து குருவிகளாக நூற்றுக்கும் மேற்பட்ட குருவிகளின் கீச்சொலியின் இசையில் லயித்துக் கொண்டிருக்கையில் மொபைலில் அலாரம் அதிர திடுக்கிட்டு எழுந்தேன். 

செய்தி வாசிக்கும் பெண் மார்ச் 20 இன்று உலக சிட்டுக் குருவிகள் தினம் என்றாள். வாசலில் கிடந்த விளம்பர பேப்பரை கையில் கொடுத்து ஒன்று வாங்கி வா என்றாள். நிறுவனம் ஒன்று குருவிகள் வளர்க்கும் அட்டை பெட்டியை இலவசமாக தருவதாக விளம்பரம் செய்திருந்தது. ஷிப்ட் முடிந்து வரும்போது மறவாமல் அட்டைப்பெட்டியை வாங்கி வந்தேன். கூடிய சீக்கிரம் குருவி வந்திடும் எனும் நம்பிக்கையில் வீட்டில் கட்டி வைத்தேன்.

சிட்டுக் குருவியை போன்று வேறுவகையான குருவியின் வகைமையில் ஆண் குருவிகள் கூடு கட்டி அழகுப்படுத்தி வைக்குமாம். பெண் குருவிகள் தங்களுக்கு பிடித்த கூட்டில் வந்து அமர்ந்து இணையாகுமாம். ஒரே கூட்டிற்கு இரண்டு பெண் குருவிகள் வருவதுமுண்டாம். சில கூடுகளில் எக்குருவியும் கடைசி வரை அமராது இருப்பதும் உண்டாம். சலீம் அலியின் நூலொன்றில் படித்தது நினைவுக்கு வர ஒருவேளை இந்த அட்டை பெட்டியை ஒரு குருவிக்கும் பிடிக்கவில்லை போலும், இனிமேலும் இதில் எக்குருவியும் வராது என முடிவு செய்து வீசி எறிந்துவிட்டேன். 

ஊருக்குச் சென்ற போது மாமா தோட்டத்து கிணற்றின் ஓரத்தில் தொங்கிக் கிடந்தன நிறைய குருவிக் கூடுகள். அதிலொன்றை  எடுத்துவந்து வீட்டில் கட்டிவைத்தேன். தினசரி கூட்டை எட்டிப் பார்ப்பது இயல்பானதுபோல் கூடு எனை ஏமாற்றுவதும் இயல்பாகிப் போனது. வேறு என்னதான் செய்வதென புரியாதிருக்க வாழ்வு அதன் சுழலுள் சிந்தனையை மடைமாற்றி விட காலப்போக்கில் குருவியை மறந்திருந்தேன்.

ஒரு நாள் மாலை வீட்டின் முன்பிருந்த மல்லிகைச் செடியில் பூப்பறித்து வருவதாகச் சொல்லிப்போன இணையர் கொஞ்சம் வாவென கத்தப் போனேன். மல்லிகைச் செடியின் அடர்ந்த பகுதியொன்றில் சிட்டுக் குருவியின் அழகிய கூடொன்று. என்னுள் இருந்த சிறுவனின் ஆட்டம் அடங்க வெகு நேரமானது.

ஓரிரு நாள் கழித்து பார்க்க கூட்டினுள் முட்டையிட்டிருந்தது. அடுத்த நாள் மேலும் ஒரு முட்டை இட்டிருந்தது. மிகச்சரியாக பத்தாவது நாளில் ஒரு முட்டை துளிர்த்திருந்தது. அடுத்த நாளில் அடுத்த முட்டையும்.

இங்கு எதுவும் தீர்மானிக்கப்பட்டதல்ல, அதனதன் போக்கில் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது செயல்பாடுகள். காத்திருப்பு அவசியமான ஒன்றென்பதை உணர்த்தியிருந்தது காலம். கூடவே தீராத உண்மையையும் அறியச் செய்திடுகிறது. 
இக்குருவிகள் மேலும் இரண்டு கூடுகள் கட்டி மேலும் குஞ்சுகள் பொறித்து மேலும் கூடுகள் கட்டலாம். அல்லது மூன்றும் வேறு கிளைக்கு சென்றுவிடலாம். ஏதோவொரு செயல் நிகழத்தான் போகிறது. அதனை அதன் போக்கில் ஏற்றுக்கொள்ள பழக்கப்படுத்தியிருக்கிறது காலமெனும் அபூர்வ ஆசான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *