
ஒவ்வொரு தனிமனிதனுக்கேற்றவாறு கல்வியின் அர்த்தம் மாறுபடுகிறது. சிலருக்கு முடிவில்லா வாய்ப்புகளை ஏற்படுத்தும், சிலருக்கு சமூகக்கருவியாக, சிலருக்கு சமூகத்தில் ஒன்றிப்போவதற்கும் தன்னை மேம்படுத்திக்கொள்வதற்குமான கருவியாகவும் உள்ளது. ஆனால் இன்றைய வேகமான உலகத்தில் கல்வி என்னவிதமான வேலைகளை செய்துவருகிறது? இந்த கட்டமைப்புகள் எதனை கற்றுத்தருவதற்கான நோக்கத்தோடு இருக்கிறது? அது நம்மை என்னவாக மாற்றுவதற்கான வேலைகளைச் செய்கிறது என்பதைப் பற்றி நாம் பேச வேண்டும்.
மேலோட்டமாகப் பார்த்தால் இன்றைய சமகால கல்விக்கட்டமைப்பானது அறிவியல், கணிதம், இலக்கியம், சமூகம் போன்ற தலைப்புகளில் மாணவர்களுக்கு ஒரு முன்னோட்டமான அறிவை அளிக்கிறது. ஆழ்ந்து பார்த்தமேயானால் இந்த அமைப்பு நம்மை எதற்காக தயாராக்கிக்கொண்டிக்கிறது என்பது புலப்படும். தனிமனித வளர்ச்சிக்கோ அல்லது அறிவுத்தேடலுக்கோ அல்லாமல் மனித ஆற்றலை ஏதோ ஒரு கார்பெரட் நிறுவனங்களுக்கு தயார்படுத்தப்படும் சாவி பொம்மைகளைப் போல தயாராக்கிக் கொண்டுள்ளனர்.
அடிமைத்தனத்தின் வளர்ச்சி
புதிய முன்னெடுப்புகளை உண்டாக்கும் மனிதர்களை உருவாக்காமல், முன்னரே உருவாக்கப்பட்டிக்ருகும் குடுவை ஒன்றில் அனைவரையும் இட்டு நிரப்பும் விதமாகவே இன்றைய கல்விச்சூழல் உள்ளது. நவீன பள்ளிக்கல்வி முறையானது போல செய்தல் போன்றுள்ளதே தவிர அது மாணவர்களிடத்தில் புதுமையை ஏற்படுத்துவதில்லை. இதுபடித்தால் இதுவாகலாம், பணம் சம்பாதிக்கலாம் என்கிற தொணியிலே இருக்கிறது. அங்கே சுதந்திரமாக மாணவர்கள் செயல்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை.பொது நீரோட்டத்தில் கலந்து தான் செல்லவேண்டும் என்றில்லை,ஒரு மாணவர் தனக்கேயுரிய அறிவை பயன்படுத்தி எந்த வழியில் வேண்டுமானால் செல்லலாம் அல்லது ஒரு புதிய தொழிலை உண்டாக்கலாம். மாறாக ஒரு பாதுகாப்பான வளையத்திற்குள்ளாகவே சிக்குண்டு பெருமுதலாளிகளுக்கு வேலை பார்க்கும் ஒரு தலைமுறையை உருவாக்கி வைத்திருக்கிறோம்.
வெகுசிலரே இந்த வலைப்பின்னலில் இருந்து வெளியெறி சுயமாக தங்களுடைய கல்வியின் பலம் அறிந்து மிகச்சிறப்பான முன்னேற்றத்தை அடைகின்றனர்.கல்வியின் மிகமுக்கியக் கூறு சுய அறிதல். அதற்கான வெளியை இந்த கல்வி ஏற்படுத்தித் தருகிறதா? அல்லது அடிமைகளாக ஆக்குகிறதா என்பதே நம் முன்னிருக்கும் சவால்.
கனவுகளை காவுகொடுப்பது.
மற்றொரு முக்கியமான பிரச்சனையாக பார்ப்பது, வருமானத்திற்கு ஏற்றவாறு தங்களுடைய கல்விப்புலத்தை தேடுவது. இந்த சுழலில் எதையேனும் சாதிக்க நினைக்கும் மாணவர்களின் கனவுகள் நிறைவேற நேரமெடுக்கையில், நாமும் கூட்டத்தோடு கூட்டமாக மந்தைகளில் சேர்ந்திருக்கலாமே எனத் தோன்ற ஆரம்பித்துவிடுகிறது. இந்த சமூகம் பொருளாதாரத்தில் மேம்பட்டிருக்கும் ஒருவனை மேல்வைத்தும், தன்குறிக்கோளை அடைய விரும்ப எத்தனிக்கும் ஒருவனை கீழ்நோக்கியும் பார்க்கும் நிலை உள்ளது. இதனாலேயே மந்தைகளில் கலக்கும் ஆடுகளாக மாற்றப்படுகின்றனர் மாணவர்கள்.
இப்படியான சூழல் நல்லதல்ல. கனவுகளில் முழுமை பெறாதவர்களாகட்டும், பொருளாதாரத்தில் வளரவேண்டும் என்ற எண்ணத்தில் தன் கல்விக்கு ஒவ்வாத பணி செய்ய நினைப்பவர்களும் தான் செய்யும் பணியை தேமேவென்று செய்கின்ற நிலையிலே உள்ளனர். அதில் ஈடுபாடு என்பது இவர்களுக்கு உண்டாவதில்லை. இது உள்ளார மன உளைச்சலில், இதர உடல்நல பிரச்சனைகளில் கொண்டு விட்டுவிடுகிறது. இதனால் ஒரு தலைமுறையின் உடல்,மனநலப் பிரச்சனையில் பெரிய மாற்றம் ஏற்படுகிறது. இதுமட்டுமில்லாமல் எதன் மீதும் ஒரு பிடிப்பற்ற நிலையில் சமூகத்தின் மீது பிடிப்பற்றவர்களாக மாறிவிடுகின்றனர்.
ஆன்மீகம் மற்றும் அறிவியலின் விடுபடல்:
ஆன்மிகம் மற்றும் அதனோடு ஒட்டிய அறிவியலை கல்வியிலிருந்து விடுபட்ட்தன் காரணமாக்க் கூட கல்வி இன்று வணிக நோக்கமாக உள்ளதாக தோன்றுகிறது. பல நாடுகளில் கல்வியானது இயற்கையோடு இணைந்த ஒன்றாக இருப்பதால் இலகுவாக இருப்பதோடு கல்வியில் முன்னேற்றமும் கண்டுள்ளனர். இதில் நான் ஆன்மீகம் எனக்கூற வருவது ஒரு மத்த்தை சார்ந்த ஆன்மீகம் அல்ல. கல்வியின் வழியாக தன்னை உணரும் ஆன்மீகம். இப்பிரஞ்சத்தின் துகள்களில் ஒன்றென தன்னை நினைக்கும் அறிவியல். இவையிரண்டு விசயங்களைத் தான் நான் ஆன்மீகம் மற்றும் அறிவியலின் விடுபடல் என்கிறேன். தன்னை உணராத ஒருவன் தான் அடிமைத்தனத்தின் சக்கரத்தில் சிக்கிக்கொள்கிறான்.
கல்வியில் இந்த இரு தன்மைகளை தற்போதைய கல்விநிலை கற்றுக்கொடுக்க தவறுகிறது. அதனாலேயே தெளிவின்றி, ஒற்றுமையின்றி, கல்வியின் முக்கியத்துவத்தை உணராமல் போவதாக தோன்றுகிறது. கணிதமும்,வரலாறும்,அறிவியலும் கற்றுத்தர நினைக்கும் கல்வியின் இந்த பிரபஞ்சத்தில் தான் யார் என்பதை ஏன் இந்த கல்வி உணரவைக்கவில்லை என்பதே என் கேள்வி.
இந்த இருநிலைகளும் கல்வியில் அறவே இல்லாமல் போகும் போது மனிதனுக்கு பொறாமை, சுயகழிவிறக்கம் போன்ற மனிதப்போதாமைகள் இயற்கையாவே வந்துவிடுகிறது.
கல்வியை மீளநினைத்தல் : ஒரு முழுமையான அணுகுமுறை
மேற்சொன்ன பிரச்சனைகளிலிருந்து நாம் கல்வியை மீளநினைக்க வேண்டியதாகிறது. படிப்பு, வேலை இவைகளில் மட்டும் நம்முடைய சிந்தனையை குறுக்காமல், ஒரு மனிதனாக உடல்,மனம்,ஆன்மா என ஒரு மனிதனை அணுகவேண்டியதாகிறது. பள்ளிக்கல்வி இயந்திரத்தனமாக மட்டுமில்லாமல் அமைதியும், வாழ்க்கைக்கான தேடல், பிணைப்பு என இருக்கவேண்டும்.
முதலும் கடைசியுமாக மாணவர்களுக்கு தங்களுடைய உடலும் மனமும் எப்படியாக வேலைசெய்கிறது என்கிற புரிதலை உண்டாக்க வேண்டும். உடலின், மனதின் ஓட்டத்தை புரிந்துகொள்வதின் மூலம் நம்முடைய முழுபலத்தையும் சக்தியையும் அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக கல்வி அமையவேண்டும். உடன் “கடவுள் துகள்” என்கிற ஒரு அடிப்படை சக்தி நம்மை இணைத்து வைத்திருக்கிறது என்றும், அந்த சக்தியை சிறிய வயதிலேயே அறிந்துகொள்வதற்கான வாய்ப்பைத் தருவதோடு அதில் அவர்களின் பங்கு என்ன என்பதை நாம் அறியச் செய்திட வேண்டும்.
அறிவியலைத் தவிர, இலக்கியத்தை வெறும் மனனம் செய்யும் நிலையைத் தாண்டி, அது தங்களின் வாழ்வியலில் ஒன்றான விசயம் என அறியச்செய்ய வேண்டும். அது மாணவர்களை வெகு சிறப்பாக ஊக்குவிக்கச் செய்யும் என்பதை மாணவர்கள் உணரும் வகையில் இலக்கியத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். கூடவே பண்டிகைகளை ஒரு கலாச்சார நிகழ்வோடு அறிந்துகொள்ளாமல், அதனை ஒட்டிய வரலாற்றிய, கலாச்சார, ஆன்மீக ரீதியான தொடர்பை அறிந்துகொள்ளச்செய்ய வழிவகை செய்ய வேண்டும்.
ஒரு முன்னோக்கிய புதிய பார்வை:
இறுதியாக கல்வியின் நோக்கமென்பது மாணவர்களை வேலை நிமித்தமாக மட்டுமே கல்விகற்கச் செய்யாமல் அவர்களை மனவலிமை கொண்ட, நல்ல குணநலன்களோடு, தங்களை உணர்ந்த ஒரு மனிதராக மாற்றும் ஒரு கல்வி வேண்டும். சுய அறிதல், உள்ளொளி, சுயவிழிப்புணர்வோடு மாணவர்கள் இருக்க ஏதுவான கல்வி அளிக்கப்பட வேண்டும். இப்படியான கல்விநிலையில் நவீன உலக அடிமைகளை உருவாக்காமல், மாணவர்கள் ஒரு சுதந்திரமான முழுமையான ஒரு வாழ்வை எதிர்நோக்குவார்கள். ஆன்மீகத்தையும் உள்விஞ்ஞானத்தையும் கல்வியில் புகுத்துவதின் மூலம் மாணவர்கள் தங்களின் முழு சக்தியை அறிந்துகொள்ளவும் அவர்கள் பணம் சம்பாதிக்கும் கருவி மட்டுமேயல்ல என்பதை அவர்கள் அறிய ஏதுவாக இருக்கும் என்பது என்னுடைய எண்ணம்.
இந்த முழுமையான வழியை மறுபரிசீலனை செய்யும் போது இச்சமூகத்தை, அவர்களின் வாழ்வை மாற்றியமைக்கக் கூடிய சக்தி கிடைக்கும் என நம்புகிறேன்.