கல்வி – இன்று

கல்விப்புலம் என்று பார்த்தால் ஒரு சமூகம் முன்னேற்றம் அடைவதற்கு கல்வி மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.  பண்டைய குருகுலக் கல்வி தொடங்கி இன்றைய இணைய வழிக் கல்வி வரையிலான கல்வி முறைகள் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு இன்று வரை வளர்ந்து வந்திருக்கிறது. 

எந்த வகையிலான வளர்ச்சி என்பது  ஆய்வுக்கு உட்பட்டது. இன்றைக்கு கல்வி எல்லோருக்கும் ஆனதாக இருந்தாலும் கூட பல்வேறு தளத்திலான வேறுபாடுகளும் வேற்றுமைகளும் உள்ளது.

தனியாருக்கு தாரைவாக்கப்பட்ட பிறகு கல்வி ஒரு வியாபாரம் ஆகிவிட்டது. ஆகையால்  கல்வி ஆடம்பரமாகிவிட்டது. தனியார் பள்ளிகள் அதிக அளவிலான கட்டணங்களை வசூலிப்பதும் அதே வேளையில் அங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மிக மிகக் குறைந்த ஊதியத்தை வழங்குவதும்  மிகுந்த முரண்.

இதில் உண்டு உறைவிடப் பள்ளிகள் வேறு இன்றைய காலகட்டத்தில் நிறைய உருவாகிவிட்டன. சின்னச் சின்னப் பிள்ளைகளை அதிலும் ஐந்தே வயதான பிள்ளைகள் பெற்றோர் அரவணைப்பில் இல்லாமல் உண்டு உறைவிடப்பள்ளியில் சேர்ந்து பயிலும் அவலம் கொடுமையானது. 

குடும்ப உறவையும் தாய் தகப்பனின் அரவணைப்பையும் உணராத குழந்தைகளாய் வளர்வது சமூகத்துக்கு நல்லதில்லை என்றே சொல்லலாம். அவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவதை மறுப்பதற்கில்லை. 

பிறகு படித்து முடித்து ஏதோ அந்தப் பிள்ளைகள் தங்களைக் கவனிக்கவில்லை. முதியோர் இல்லங்களில் சேர்த்துவிடுகிறார்கள் என்று குற்றம் சுமத்துவதில் நியாயமேயில்லை. 

பிறந்து இரண்டரை வயதான குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் முன் அனுபவமாக  ப்ரீ ஸ்கூல் என்ற பெயரில் பல பணம் பிடுங்கும் பள்ளிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இப்படியான பள்ளிகளை யார் வேண்டுமானாலும் துவக்கலாம் என்ற விதிமுறைகள் கடுமை இல்லாத நிலைமை. 

அதுமட்டுமல்ல ஆங்கில வழிக் கல்வி முறைக்குத் திறந்து விடப்பட்ட சாளரம் தனியார் பள்ளிகளுக்கு மிகுந்த கொண்டாட்டத்தை ஏற்படுத்தி விட்டது.  தனியார் பள்ளியில் ஆங்கிலவழியில் கல்வி பயிலும் பிள்ளைகளுக்கும் அரசுப் பள்ளியில் பயிலும் பிள்ளைகளுக்கும் இடையே சகஜ நிலையோ நெருங்கிய நட்போ ஏற்படுவதில்லை.  மாறாக சிலவேளைகளில் சிலருக்கு ஒரு ஒவ்வாமையுடன் கூடிய பொறாமைகுணம் தலைதூக்கிவிடும்.  

ஒன்பதாம் வகுப்புப் பாடங்களையும் பதினோராம் வகுப்புப் பாடங்களையும் நடத்தாமலோ அல்லது படிக்காமலோ பத்தாம் வகுப்பிற்கும் பனிரெண்டாம் வகுப்பிற்கும் முக்கியத்துவம் அளிப்பது கல்லூரிப் பாடத்திட்டத்தின் அடிப்படையையே பாதிக்கும். அதனாலேயே கல்லூரியில் நுழைந்த முதலாம் ஆண்டில் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள். 

கல்வி என்று பார்த்தால் நாடு முழுமைக்கும் ஒரே தரத்திலான கல்வி முறையைக் கொண்டுவந்த பிறகு Neet JEE போன்ற தேர்வுகள் நடத்துவது நியாயம். அப்படியின்றி மாநிலம் தோறும் மாறுபட்ட கல்வி முறையை வைத்துக்கொண்டு ஒரே வகையிமையிலான தேர்வை எழுதச் சொல்வது மாணவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும். 

இதன் காரணமாகவே புற்றீசல் போல நீட் மற்றும் JEE தேர்வுக்கான பயிற்சிப் பள்ளிகள் காசுபார்க்கக் கல்லா கட்டத் தோன்றிவிட்டன. 

ஆனால் அதே வேளையில் தனியார் பள்ளிகள் இந்தத் தேர்வுகளுக்காக குறைந்த ஊதியம் பெற்றும்கூட அந்த ஆசிரியர்கள்  எடுக்கும் முயற்சிகளை  அரசுப் பள்ளிகள் ஏன் முன்னெடுப்பதில்லை? என்ற கேள்வியும் ஆதங்கமும் கோபமும் நடுத்தர, மற்றும் எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோருக்கு உண்டு. தனியார் பள்ளி ஆசிரியர்களை ஒப்பிடுகையில்  நிறைந்த ஊதியம் பெறும் ஆசிரியர்கள் ஏன் நீட் மற்றும் JEE தேர்வுக்குத் தயார் செய்ய இயலாதா?

கல்விப் புலத்தில் உள்ள  அதிகாரிகள் இன்னும் இன்னும் தங்கள் நிலைப்பாட்டை மாணவர்களுக்காக அவர்தம் எதிர்கால வேலை சார்ந்தும் கல்விமுறையை மாற்றியமைக்க வேண்டும். அதேநேரத்தில் வரலாற்றை மாற்றி எழுதவோ அல்லது திரித்து எழுதவோ முயலாமல் கவனம் கொள்ள வேண்டும்.

கொரோனோ புண்ணியத்தில் எல்லாப் பிள்ளைகளும் கைபேசியை பயன்படுத்தத் தெரிந்துகொண்டார்கள். ஆனால் அதே வேளையில் அது மிகுந்த தொல்லையாகவும் கவலைக்கிடமாகவும் ஆகிவிட்டது. ஏனெனில் பதின்பருவத்துப்  பிள்ளைகள் தொடர்ந்து காலநேரமில்லாமல் கைபேசியில் விளையாடுகிறார்கள். பெற்றோர் என்ன சொல்லியும் கேட்பதில்லை.  அதனாலேயே தொடர் விளையாட்டின் காரணமாக விரல்களின் இயக்கத்தில் கோளாறும் கண்பார்வைக் குறைபாடும் ஏற்பட்டு விடுகிறது. 

இவையெல்லாவற்றையும் மனதிலிருத்தி அதற்கேற்றாற்போல கல்விப்புலத்தில் உள்ள அதிகாரிகள் எதிர்கால நலன்கருதி பள்ளிக்கல்வியை தரநிர்ணயம் செய்ய வேண்டும். தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணம் மற்றும் கல்வி முறையை ஒழுங்குபடுத்த வேண்டும். தனியார் பள்ளிகளைவிட அரசுப் பள்ளிகளும் அரசு கல்லூரிகளும் தரத்திலும் கல்வி வழங்குதலிலும் சிறந்து விளங்குமானால் சமமான சமச்சீர் கல்வியோடு சமச்சீர் சமுதாயமும் சாத்தியப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *