கற்றலில் படைப்பாற்றல்

எனக்குப் பாடம் பிடிக்கவில்லை! நடனம் வருகிறது. அதை நான் விரும்புகிறேன்.  நான் நடனம் படிக்கிறேன். ஒரு குழந்தை பள்ளிப் பருவத்தில் (உண்மையில் எந்தப் பருவமும் இதற்கு விதிவிலக்கல்ல) கூறும்போது என்ன செய்வோம்?  பெரும்பாலும், நடனம் உனக்குச் சோறு போடாது படிப்பு தான் சோறு போடும் நீ படி!  என்போம். பள்ளிகளிலும் கூட கணிதம் அறிவியல் போன்று தினமும் நடனத்திற்கும் உடற்பயிற்சி வகுப்புகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. ஏன்? நடத்தினால் என்ன? நடனமும் கணிதம் அறிவியல் போன்று அதுவும் முக்கியம் தானே!  

பெரும்பாலான கல்விசார் எழுத்தாளர்களுக்கும்  அல்லது அதைச் சார்ந்து செயல்படுபவர்களுக்கும்  பரிச்சயமான பெயர் கென் ராபின்சன். கல்வியுலகில் புகழ்பெற்ற ஒரு மூத்தக் கல்வியாளரும் பேச்சாளரும் எழுத்தாளரும், படைப்பாற்றல் மற்றும் புதிய கல்வி  எண்ணங்களின் வளர்ச்சியில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியவர். இவர், மாணவர்களின் தனித்திறன்களை ஆழமாக உணர்ந்து, அவர்களின் படைப்பாற்றலை முன்வைத்து, தன்னம்பிக்கையை வளர்க்கும் கல்வி முறைகளை வலியுறுத்தினார். பல ஆண்டுகளாக அதே  துறையில் செயல்பட்டு வந்தபோதிலும், “பள்ளிகள் படைப்பாற்றலைக் கொல்கின்றனவா?” என்ற தலைப்பின் டெட் டாக்கிற்குப் (TED Talk) பிறகே இவரின் சிந்தனைகளும் நடைமுறைக் கல்வி முறைகளுக்கு எதிரான கேள்விகளும்  பலதரப்பட்ட மக்களுக்கிடையே  பிரபலமானது. அதன்பிறகான இவரின் அடுத்தடுத்த டெட் நிகழ்ச்சிகளும் கல்விசார் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் புத்தகங்களும் பெருத்த வரவேற்பைப் பெற்றது. 

அனைத்து மனிதர்களும் வித்தியாசமானவர்கள் அவர்களின் விருப்பு வெறுப்புகளும் வேறுபட்டது இது கல்விக்கும் பொருந்தும். ஏன் பெரும்பாலான கல்வி முறைகள் உலக அளவில் வேறுபடாமல் கண்டிப்பான  மற்றும் எதிர்காலத்தைக் கணக்கில் கொண்டு செயல்படுத்தப்படாத ஆபத்தான வழிமுறைகளைப் பின்பற்றுகிறது? ஏன் குழந்தைகளையும் கற்பவர்களையும் அவர்கள் பின்பற்றும் கல்வி முறை அவர்களின் சுய படைப்பாற்றலை  முடக்கியமாக செய்வதாக உள்ளது? இவை சர் கென் ராபின்சனின்  சில கல்வி சார் கேள்விகளும் அவர் வலியுறுத்தும் வழிமுறைகளுக்கு வித்துக்களும் ஆகும். படைப்பாற்றல் என்பது எழுத்தறிவைப் போலவே முக்கியமானது, அதை நாம் அதே அந்தஸ்துடன் நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். கென்  குழந்தைகள் எதை, எவ்வாறு, எதற்காகக் கற்கிறார்கள் மற்றும் அதை விரும்பிக் கற்கிறார்களா எனும்  வெளி அவர்களுக்கு மறுக்கப்படுவதாகக் கென் வாதாடினார்.  

கென் ராபின்சனின் கல்வி தத்துவங்கள்;

  • படைப்பாற்றல் (Creativity)
  • கல்வியில் புதுமை (Innovation in Education)
  • தனிநபர் திறன்கள் (Individual Talents) 

பாரம்பரிய கல்விமுறைகள் மாற்றப்பட வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சியுடன் கல்வி தொடர்பு கொள்ள வேண்டும். குழந்தைகள் தங்களது கற்பனை மற்றும் படைப்பாற்றலை வளர்த்துக்கொள்ள ஏற்ற சூழல் அமைக்க வேண்டும். இவரின் கருத்துக்கள் மட்டும் அல்லாது எளிதில் தொடர்புபடுத்தி கொள்ளக்கூடிய சுவாரசியமான எடுத்துக்காட்டுகளுக்கு ரசிகர்கள் ஏராளம். அதில் ஒன்று இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. 

[ஒரு பள்ளிக்கூட வகுப்பறையில் ஒரு மாணவி இருந்தாள், அவள் எந்த வகுப்பிலும் சரியாகக் கவனம் செலுத்துவதில்லை. ஆனால் அவள் வரைவியல் வகுப்பில் கவனம் செலுத்தினாள். மும்முரமாக செயல்பட்டதில் ஆச்சரியமடைந்து ஆசிரியை, மாணவியிடம் சென்று நீங்கள் என்ன வரைகிறீர்கள் என்று கேட்டார். அவள் கடவுள் என பதிலளித்தாள். ஆனால் கடவுள் எப்படி இருப்பார் என்று யாருக்கும் தெரியாது என் ஆசிரியை கூற, “இன்னும் ஒரு நிமிடத்தில் அவர்கள் தெரிந்துகொள்வார்கள் என்று பதிலளித்தாள் சிறுமி!.] 

குழந்தைகள் தவறு என்று, ஒன்றை செய்ய பயப்படுவதில்லை. அதற்காக தவறு இழைத்தல்  என்பது படைப்பாற்றல் என்று அவர் அர்த்தப்படுத்த வில்லை, ஆனால் “நீங்கள் தவறாக ஒன்றை செய்யத் தயாராக இல்லை என்றால், தனித்துவமான எதையும் கொண்டு வரமாட்டீர்கள்” என ஆழமாகப் பதிவிடுகிறார் கென். வழக்கமான கல்விமுறை தவறுகளை ஏற்பதில்லை முரணாகப் பயத்தை உண்டாக்கி களங்கப்படுத்துகிறது. இதன் விளைவாக, அவர்களின் தனித்தன்மையை கேள்விக்குறியாக்கப்படுகிறது.  படைப்புத் திறனிலிருந்து அவர்கள்  விலகிக் கற்க வேண்டிய சூழ்நிலை உருவாக்கப்படுகிறது. 

வயதாக ஆக நாம் படைப்பாற்றலை இழக்கிறோம் அல்லது அதிலிருந்து விலக நாம் கற்கிறோம். அனைத்துப் பாடங்களும் கலைகளும் கல்வி முறைகளில் சம அந்தஸ்து பெற வேண்டும் என்பது அவர் கருத்து. சிறுவயதிலிருந்தே ஒருவருக்குப் பிடித்த வேலை மறுக்கப்படுகிறது. பெரும்பான்மையான குழந்தைகள் தவறான கட்டமைக்கப்பட்ட வளைக்க முடியாத கல்வி சூழலால் தவறாக வழி நடத்தப்படுகிறார்கள். கல்விப்புலம் தாண்டி கலை, நடனம், வரைதல் உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான  துறைகளில் மிகவும் திறமையானவர்கள் கூட அவர்களுக்குத் திறமை இல்லையென வெறும் கல்விப்புலம் சார்ந்த மதிப்பீட்டில் நம்ப வைக்கும் சூழல் உருவாக்கப்பட்டிருக்கிறது. 

எதிர்காலத்திற்கான ஒரே நம்பிக்கை மனித சூழலியல் பற்றிய ஒரு புதிய மாறுபட்ட கருத்தை வடிவமைத்து ஏற்றுக்கொள்வது மட்டுமே என்று கென் நம்பினார். ஒரு குறிப்பிட்ட பொருளுக்குப் பூமியை சுரண்டி சுரங்கம் செய்யும் விதத்தில் நமது கல்வி முறை நம் மனதை சுரண்டியுள்ளது. எதிர்காலத்தில் இந்த முறை செயல்படாது. இது பன்முக தன்மையையும் கொண்டு வராது. நாம் நமது குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்கும் அடிப்படைக் கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

எல்லா குழந்தைகளுக்கும் தனிப்பட்ட திறமை இருக்கிறது.  நாம் மிகவும் இரக்கமின்றி அதை வீணடிக்கிறோம். நம் குழந்தைகளும் ஆசிரியர்களும் கற்பனை மற்றும் ஆர்வத்தின் சக்தியைத் தூண்டுவதற்குப் பதிலாக வழக்கமான சுழற்ச்சியான வழிமுறைகளைப் பின்பற்ற ஊக்குவிக்கப்படுகிறார்கள். படைப்பாற்றலை ஊக்குவித்து  வளர்த்தெடுப்பது கல்வியின் பாத்திரங்களில் ஒன்றாகும் மாறாக நடைமுறையில் இருப்பது  தாராளமைய கலாச்சாரம். பாரம்பரியக் கல்வியானது தவறுகளைத் தண்டிப்பதன் மூலம் படைப்பாற்றலை  காலப்போக்கில் மழுங்கச் செய்வதாக உள்ளது.

கல்வி நம்மால் புரிந்து கொள்ள முடியாத எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்வதாகும். இவ்வாறு புதுமையான சிந்தனை தேவைப்படும் உலகில் இன்றைய குழந்தைகள் நுழைவதால், எதிர்பாராத எதிர்காலத்திற்கு ஏற்றவாறு கல்வி அமைய வேண்டும்.  கல்வி என்பது பணம் மற்றும் மத நம்பிக்கையுடன் இணைக்கப்பட்ட மக்களுடன் ஆழமாகச் செல்லும் ஒன்று என்று அவர் நம்பினார்.

இவருடைய  கல்வி முறைகள் சார்ந்த பெரும்பாலான சிந்தனைகளும் வழிமுறைகளும் வளர்ச்சி அடைந்த நாடான அமெரிக்காவைச் சார்ந்து  உள்ளது குறிப்பிடத்தகுந்தது. அமெரிக்கா போன்ற நாடுகளில் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைவு அந்நாடு கல்விக்காகச் செலவிடும்  முதலீடும் அதிகம். இந்தியா மாதிரியான வளர்ந்து வரும் மற்றும் முழுமையாகத் திட்டமிடப்படாத ஒருமையான கல்வி முறைகளற்ற நாட்டில் இவற்றைச் செயல்படுத்துவது என்பது மிகவும் சவாலானது. குறிப்பாக இந்தியா அதன் மொத்த முதலீட்டில் USA-வை  ஒப்பிடுகையில் கணிசமான அளவே  கல்விக்காகச் செலவிடுவது, அதன் மூலமாகப் பயன் பெறும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு எதிர்மறையாக இருப்பது மற்றும் ஒரு சவாலை ஏற்படுத்துகிறது. இருப்பினும் இவருடைய சித்தாந்தங்கள் உலக அளவில்மறுக்கப்பட முடியாத உண்மையாகும்.  இந்தியாவில் இதை அடிப்படை முறையாகக் கொள்ளாமல் இதனை ஒரு ஆடம்பர முறையாகச் செயல்படுத்துவது மற்றும் அனைவருக்கும் கிடைக்காத வகையில் பல கட்டுப்பாடுகளை விதித்து  சில சமூகங்கள் (மத ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும்) மட்டும் கிடைக்கப் பெறுவதும், அல்லது அப்படியே செயல்படுத்தப்படினும் குறிப்பிட்ட இனம், மதம், பொருள் ரீதியான பலம் படைத்த தனிநபரின் நிர்வாகங்கள் மட்டும் அங்கீகரிக்கப்பட்டு மற்றவர்கள் ஒதுக்கப்படுவதும் எதிர்பார்க்கப்படும் சவால்கள். அதனால் மேற்கத்திய  கல்வி முறைகளை முழுமையாக அப்படியே பின்பற்றாது அந்நன்நாட்டிற்கு ஏற்றவாறு உட்கருவை மட்டும் எடுத்துக் கொண்டு செயல்படும் முறைகளையும் விதிகளையும் கலந்தாய்ந்து கட்டமைப்பது அவசியமானது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *