
நம் குழந்தைகள் நம் வழியாக வந்தவர்கள்.
நமக்காக வந்தவர்கள் அல்ல.
– கலில் ஜிப்ரான்
குழந்தையை வளர்ப்பதா? ஒரு மனிதனை உருவாக்குவதா?
குழந்தை பிறந்தவுடன் பெற்றோருக்குள் தோன்றும் முதல் எண்ணம், என் குழந்தை நன்றாக வளர வேண்டும் என்பதுதான். அது நன்றாகச் சாப்பிட வேண்டும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும், நல்ல பள்ளியில் படிக்க வேண்டும், நல்ல மதிப்பெண் பெற வேண்டும், நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும். இவை எல்லாமே பெற்றோரின் இயல்பான ஆசைகள்.
ஆனால் ஒரு குழந்தை வளர்வது என்பது இவற்றோடு முடிந்துவிடுகிறதா?
ஒரு குழந்தையின் உயரம் கூடுகிறது. எடை கூடுகிறது. வயது கூடுகிறது. வகுப்புகள் மாறுகின்றன. ஆனால் அதோடு சேர்ந்து அதன் சிந்தனையும் வளர வேண்டும். உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் திறனும் வளர வேண்டும். மற்றவர்களுடன் பழகக் கற்றுக்கொள்ள வேண்டும். தவறு செய்தால் அதை ஏற்றுக்கொள்ளவும், மீண்டும் முயற்சி செய்யவும் கற்றுக்கொள்ள வேண்டும். தனக்குப் பிடிக்காத ஒரு சூழ்நிலையைச் சந்திக்கும்போது அதை எப்படிக் கையாள்வது என்பதையும் கற்றுக்கொள்ள வேண்டும். மொத்தத்தில் இந்த சமூகத்திற்கு மிகச்சிறந்த மனிதனாகக் கொடுக்க வேண்டும்.
இதுதான் குழந்தை வளர்ப்பை ஒரு பெரிய பொறுப்பாக மாற்றுகிறது.
குழந்தைக்கு நாம் உணவு கொடுக்கிறோம். ஆனால் அது பசியை மட்டும் அறிந்துகொள்ளாமல், தனது உடலைக் கவனித்துக்கொள்ளவும் கற்றுக்கொள்ள வேண்டும்.
படிக்க வைக்கிறோம். ஆனால் பாடத்தில் இருக்கும் பதிலை மட்டும் மனப்பாடம் செய்வதற்குப் பதிலாக, “ஏன்?” என்று கேட்கவும், தனக்கென்று ஒரு கருத்தை உருவாக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுக்கிறோம். ஆனால் பயந்து நடப்பது ஒழுக்கம் அல்ல. யாரும் பார்க்காத நேரத்திலும் சரியானதைச் செய்ய வேண்டும் என்ற உணர்வு உருவாகும்போதுதான் அது உண்மையான ஒழுக்கமாகிறது.
10 வயதுக்குள் ஒரு குழந்தை தான் இருக்கும் குடும்பம் சமூகம் பள்ளி இவை எல்லாம் தான் பிற்காலத்தில் அந்தக் குழந்தை தன் வாழ்க்கையில் தன்னை என்னவாக வார்த்துக் கொள்கிறது என்பதில் முக்கியத்துவம் பெறுகிறது.
உலக சுகாதார நிறுவனம் மற்றும் குழந்தை வளர்ச்சியைப் பற்றிய சர்வதேச வழிகாட்டுதல்கள், குழந்தையின் வளர்ச்சியில் உடல்நலம் மட்டுமல்லாமல், பாதுகாப்பான உறவு, குழந்தையின் தேவைகளுக்கு உணர்வுடன் பதிலளிக்கும் பராமரிப்பு, ஆரம்பக் கற்றலுக்கான வாய்ப்புகள் ஆகியவையும் முக்கியமானவை என்று வலியுறுத்துகின்றன.
அதனால் குழந்தை வளர்ப்பு என்பது “என் குழந்தை எப்படி இருக்க வேண்டும்?” என்று பெற்றோர் முடிவு செய்து, அதற்கேற்ப குழந்தையை மாற்றுவது அல்ல.
“என் குழந்தை யார்? அதற்குள் என்ன திறமை இருக்கிறது? என்ன பயம் இருக்கிறது? என்ன ஆர்வம் இருக்கிறது? எதில் உதவி தேவைப்படுகிறது?” என்று புரிந்துகொள்ள முயற்சி செய்வதும்தான் குழந்தை வளர்ப்பு.
ஒவ்வொரு குழந்தையும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
ஒரு குழந்தை அதிகமாகப் பேசலாம். இன்னொரு குழந்தை அமைதியாக இருக்கலாம். ஒருவருக்கு கணக்கு பிடிக்கலாம். இன்னொருவருக்கு கதை பிடிக்கலாம். ஒருவருக்கு மேடையில் நிற்பது பிடிக்கலாம். இன்னொருவர் தனியாக அமர்ந்து படம் வரைவதை விரும்பலாம்.
பெற்றோரின் வேலை எல்லா குழந்தைகளையும் ஒரே மாதிரியாக மாற்றுவது அல்ல. அவர்களுக்குள் இருக்கும் தனித்தன்மையைப் புரிந்துகொண்டு, அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் அளவுக்கு வளர உதவுவதுதான்.
குழந்தைக்கு வாழ்க்கையைத் தயார் செய்து கொடுப்பதல்ல பெற்றோரின் பணி. வாழ்க்கையை எதிர்கொள்ளத் தயாரான ஒரு மனிதனாக அது வளர்வதற்கான சூழலை உருவாக்குவதுதான்.
அன்பு மட்டும் போதாது. எல்லையும் தேவை
என் குழந்தை எதைக் கேட்டாலும் நான் வாங்கிக் கொடுப்பேன். அது சந்தோஷமாக இருந்தால் போதும்.
என் குழந்தை நான் சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும். அதுதான் ஒழுக்கம்.
இரண்டு வாக்கியங்களுமே நமக்குப் பரிச்சயமானவை. இரண்டிற்கும் பின்னால் அக்கறை இருக்கிறது. ஆனால் குழந்தையை வளர்க்கும் விதத்தில் இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.
பெற்றோர்களை எளிமையாக மூன்று வகையாகப் பார்க்கலாம்.
முதல் வகை:
எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் பெற்றோர்.
குழந்தை என்ன படிக்க வேண்டும், என்ன சாப்பிட வேண்டும், யாருடன் பழக வேண்டும், எப்போது தூங்க வேண்டும், எந்தப் போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என அனைத்தையும் பெற்றோரே முடிவு செய்வார்கள்.
நான் சொல்வதைக் கேள்.
உனக்கு இதெல்லாம் புரியாது.
நான் உன் வயதில் இருந்தபோது இப்படியா நடந்துகொண்டேன்?
என்ற வார்த்தைகள் இவர்களுடைய வீட்டில் அதிகமாக இருக்கலாம்.
குழந்தை தவறு செய்யாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, குழந்தைக்கு முடிவெடுக்கும் வாய்ப்பையே கொடுக்காமல் விடுவது இவர்களின் நோக்கமாக இருக்கலாம்.
இரண்டாவது வகை :
குழந்தை கேட்பதையெல்லாம் செய்து கொடுக்கும் பெற்றோர்.
குழந்தை அழக்கூடாது. கோபப்படக்கூடாது. ஏமாற்றமடையக்கூடாது என்று நினைப்பவர்கள்.
கடைக்குச் சென்றால் கேட்ட பொருள் கிடைக்கும்.
படிக்க வேண்டிய நேரத்தில் படிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை.
கைபேசி கொடுக்கக்கூடாது என்று முடிவு செய்திருந்தாலும், குழந்தை அழுதால் கொடுத்துவிடுவார்கள்.
சரி, இந்த ஒரு தடவை மட்டும்.
ஆனால் அந்த ஒரு தடவைபலமுறை நடக்கத் தொடங்கிவிடும்.
மூன்றாவது வகை :
அன்போடு வழிகாட்டும் பெற்றோர்.
இவர்கள் குழந்தையின் விருப்பத்தைக் கேட்பார்கள். ஆனால் ஒவ்வொரு விருப்பத்திற்கும் சம்மதிக்க மாட்டார்கள். குழந்தை என்ன நினைக்கிறது என்பதை அறிய முயற்சி செய்வார்கள். அதே நேரத்தில், எங்கே ஒரு எல்லை தேவை என்பதையும் புரிந்துகொள்வார்கள்.
நாம் எந்த வகையான பெற்றோர்?
எல்லாவற்றையும் நாமே முடிவு செய்கிறோமா?
குழந்தை அழக்கூடாது என்பதற்காக எல்லாவற்றையும் விட்டுக்கொடுக்கிறோமா?
அல்லது குழந்தையின் குரலைக் கேட்டு, தேவையான இடத்தில் தெளிவான எல்லையையும் வைக்கிறோமா?
இந்தக் கேள்விக்கு நாம் நேர்மையாகப் பதில் சொல்லத் தொடங்கும் இடத்தில்தான், நம்முடைய குழந்தை வளர்ப்பு எப்படி இருக்கிறது என்பதையும் புரிந்துகொள்ளத் தொடங்குகிறோம்.
நோ சொல்லப் பழக்குங்கள்
குழந்தை வளரும்போது நாம் அதற்கு எத்தனையோ விஷயங்களைக் கற்றுக்கொடுக்கிறோம். எப்படி சாப்பிட வேண்டும், எப்படி பேச வேண்டும், பெரியவர்களை எப்படி மதிக்க வேண்டும், பள்ளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறோம். ஆனால் வாழ்க்கையில் மிகவும் தேவையான ஒரு சொல்லைச் சொல்லக் கற்றுக்கொடுப்பதைப் பற்றி நாம் அதிகமாகச் சிந்திப்பதில்லை. அது இல்லை. ஒரு குழந்தை தன்னுடைய விருப்பம் இல்லாத ஒரு விஷயத்துக்கு எனக்கு வேண்டாம் என்று சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். தன்னைக் காயப்படுத்தக்கூடிய ஒன்றை மறுக்கத் தெரிந்திருக்க வேண்டும். நண்பர்கள் வற்புறுத்தும்போது அவர்களோடு சேர்ந்து செல்லாமல் விலகத் தெரிந்திருக்க வேண்டும். வளர வளர அதன் வாழ்க்கையில் சந்திக்கும் உறவுகள், நட்புகள், வேலை, சமூகச் சூழல் என்று பல இடங்களிலும் இந்தச் சிறிய வார்த்தை அதற்குப் பெரிய பாதுகாப்பாக இருக்கலாம்.
ஆனால் குழந்தை இல்லை என்று சொல்லக் கற்றுக்கொள்ள வேண்டுமென்றால், முதலில் அந்த இல்லை வீட்டில் மதிக்கப்பட வேண்டும். குழந்தை தனக்குப் பிடிக்காத ஒரு உணவை மறுக்கும்போது உடனே இதைச் சாப்பிடவில்லை என்றால் நீ நல்ல குழந்தை இல்லை என்று சொல்லிவிட்டால், அது உணவைப் பற்றி மட்டும் கற்றுக்கொள்வதில்லை; தன்னுடைய விருப்பத்தைச் சொன்னால் தான் அன்பை இழந்துவிடுவோமோ என்ற பயத்தையும் கற்றுக்கொள்ளலாம். யாராவது கட்டாயமாக அணைத்துக்கொள்ள முயன்றபோது குழந்தை விலகினால், அவர் பெரியவர், போய் வணக்கம் சொல்லு என்று அதன் தயக்கத்தைப் புறக்கணிப்பதும் இதே போன்றதுதான். மரியாதை என்பது முக்கியம். ஆனால் மரியாதைக்காக குழந்தையின் அசௌகரியத்தை முழுமையாக அழித்துவிட வேண்டியதில்லை. தன்னுடைய உடல், விருப்பம், வசதி ஆகியவற்றைப் பற்றி குழந்தைக்கு ஒரு குரல் இருக்கிறது என்பதை வீட்டிலேயே உணர்த்த வேண்டும்.
அதே நேரத்தில், குழந்தை சொல்வதையெல்லாம் பெற்றோர் ஏற்றுக்கொள்வது நல்ல பெற்றோராக இருப்பதற்கான அடையாளமல்ல. இங்கேதான் பெற்றோரின் இல்லை முக்கியமாகிறது. குழந்தை அழுகிறது என்பதற்காக ஒவ்வொரு முறையும் முடிவை மாற்றிவிடுவது, குழந்தை கோபப்படக்கூடாது என்பதற்காக எல்லாவற்றையும் வாங்கிக் கொடுப்பது, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? என்ற பயத்தில் குழந்தையின் ஒவ்வொரு விருப்பத்தையும் நிறைவேற்றுவது இவை அன்பாகத் தோன்றலாம். ஆனால் குழந்தை வாழும் உலகம் அதற்கு எப்போதும் ஆம் என்று சொல்லாது. வாழ்க்கையில் சில வாய்ப்புகள் கிடைக்காது. சில ஆசைகள் நிறைவேறாது. சில முடிவுகள் நமக்குப் பிடிக்காது. சில நேரங்களில் நாமே நமக்குப் பிடித்த ஒன்றை விட்டுவிட வேண்டியிருக்கும். அந்த ஏமாற்றத்தைத் தாங்கும் அனுபவமும் குழந்தைக்கு தேவை.
சில பெற்றோர்களுக்கு குழந்தையிடம் இல்லை என்று சொல்வது ஏன் இவ்வளவு கடினமாக இருக்கிறது என்றால், அந்தச் சொல்லுக்குப் பின்னால் ஒரு குற்ற உணர்வு இருக்கிறது. நான் ஏற்கனவே குழந்தைக்காக அதிக நேரம் செலவிட முடியவில்லை. இதையாவது செய்து கொடுக்கலாம்.அது என்னிடம் கேட்டிருக்கிறது. மறுத்தால் மனம் உடைந்து போய்விடுமோ? என் குழந்தைக்கு நான் கஷ்டம் கொடுக்கக்கூடாது. இப்படியாக ஒவ்வொரு மறுப்புக்கும் பெற்றோர் தங்களையே குற்றவாளியாக நினைத்துக்கொள்ளத் தொடங்குகிறார்கள். ஆனால் குழந்தைக்கு தேவையான அனைத்தையும் கொடுப்பது பெற்றோரின் கடமை. அது விரும்பிய அனைத்தையும் கொடுப்பது அல்ல. சில சமயங்களில் குழந்தையை ஏமாற்றமடையச் செய்வதும் வளர்ப்பின் ஒரு பகுதிதான்.
குழந்தைக்கு இல்லை சொல்லக் கற்றுக்கொடுப்பது, அது எல்லோரையும் மறுக்கும் குழந்தையாக மாறுவதற்காக அல்ல. தன்னுடைய விருப்பத்தை அறிந்துகொள்ளும் குழந்தையாக வளர்வதற்காக. பெற்றோர் குழந்தையிடம் இல்லை சொல்லக் கற்றுக்கொள்வது, அதன் சுதந்திரத்தைப் பறிப்பதற்காக அல்ல. அந்தச் சுதந்திரத்திற்கு ஒரு பாதுகாப்பான எல்லையை உருவாக்குவதற்காக. ஒரு பக்கம் தன்னுடைய குரலை இழக்காத குழந்தை. இன்னொரு பக்கம் குழந்தையின் ஒவ்வொரு அழுகைக்கும் தன்னுடைய முடிவை இழக்காத பெற்றோர் இந்த இரண்டிற்கும் நடுவில்தான் ஆரோக்கியமான உறவு உருவாகிறது.
மதிப்பெண்கள்தின் குழந்தையின் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறதா?
ஒரு குழந்தை எங்கே சென்றாலும் அவனைச் சுற்றி சில கேள்விகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. எந்த ஸ்கூல்ல படிக்கிற? எப்படி படிக்கிற? ஃபர்ஸ்ட் மார்க் வாங்கினியா? எவ்வளவு பர்சன்டேஜ்? ஏன் இந்த முறை குறைந்துவிட்டது? அடுத்து என்ன படிக்கப் போற? டாக்டரா? இன்ஜினியரா? என்று குழந்தையின் வாழ்க்கையைப் பற்றிய பெரும்பாலான உரையாடல்கள் எண் எண்களையும் அதனோடு தொடர்புடைய படிப்பையும் எதிர்காலத்தையும் சுற்றியே இருக்கின்றன.
வீட்டுக்கு வந்தாலும் அந்தக் கேள்விகள் வேறு வடிவத்தில் தொடர்கின்றன. உனக்காக இவ்வளவு பணம் செலவு செய்கிறேன். இவ்வளவு பெரிய பள்ளியில் சேர்த்து வைத்திருக்கிறேன். பக்கத்து வீட்டு பையனைப் பாரு. உன் சொந்தக்கார பையனைப் பாரு. அவன் எவ்வளவு மார்க் வாங்குகிறான்? என்று ஒப்பீடு தொடங்குகிறது. பள்ளியிலும் இதற்கு வேறு ஒரு முகம் இருக்கிறது. ஒரு ஆசிரியருக்கு பள்ளியின் தேர்வு முடிவுகள், பள்ளியின் பெயர், தேர்ச்சி விகிதம் என்று அழுத்தம் வரும்போது, அது அடுத்த நிலையில் மாணவர்களிடம் வந்து சேர்கிறது. இந்த முறை ரிசல்ட் குறையக் கூடாது. இவ்வளவு சதவீதம் வாங்க வேண்டும். உன்னால் பள்ளியின் ரிசல்ட் பாதிக்கக் கூடாது என்று சொல்லப்படும் வார்த்தைகள், ஒரு குழந்தையின் காதில் வெறும் படிப்பு அறிவுறுத்தலாக விழுவதில்லை. சில நேரங்களில் அது, தான் ன் நன்றாகப் படிக்கவில்லை தனக்குள் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று யோசிக்கத் தொடங்கிவிடும்.
மதிப்பெண் என்பது ஒரு குறிப்பிட்ட தேர்வில் குழந்தை எவ்வளவு கற்றிருக்கிறது என்பதை அளப்பதற்கான ஒரு கருவி. அது குழந்தையின் அறிவு முழுவதையும் அளக்கக்கூடிய அளவுகோல் அல்ல. அதைவிட முக்கியமாக, அது அந்தக் குழந்தையின் மதிப்பை நிர்ணயிக்கும் அளவுகோலும் அல்ல. ஆனால் தொடர்ந்து மதிப்பெண்ணோடு குழந்தையை ஒப்பிட்டுக் கொண்டே இருந்தால், நான் அறிவாளி இல்லை இல்லை, என்னால் முடியவில்லை, மற்றவர்களைப் போல நான் இல்லை என்ற தாழ்வு மனப்பான்மை எண்ணங்கள் குழந்தைக்குள் மெதுவாக உருவாகலாம்.
மதிப்பெண்கள் குழந்தையின் வாழ்க்கையில் தேவைதான். ஆனால் அவை மட்டுமே குழந்தையின் வாழ்க்கையை மாற்றி விடும் என்று சொல்லிவிட முடியாது.
கல்வி சார்ந்த அழுத்தத்துக்கும் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் மனநலப் பிரச்சினைகளுக்கும் தொடர்பு இருப்பதாக பல ஆய்வுகளும் சுட்டிக்காட்டுகின்றன. எல்லா குழந்தைகளும் ஒரே விதமாகப் பாதிக்கப்படுவார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் அழுத்தத்தை நாம் சாதாரணமான ஒன்றாக எடுத்துக்கொள்ளவும் முடியாது.
நமக்கு முந்தைய தலைமுறையின் குழந்தைப் பருவத்தை நினைத்துப் பார்த்தால், இன்றைய சூழலிலிருந்து அது பல வகையில் வேறுபட்டிருந்தது. எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரி வாழ்ந்தார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் பல குழந்தைகளுக்கு வெளியில் ஓடி விளையாடவும், புத்தகம் படிக்கவும், நண்பர்களுடன் நேரம் செலவிடவும், காரணமே இல்லாமல் நீண்ட நேரம் பொழுதைக் கழிக்கவும் ஒரு சுதந்திரமான இடம் இருந்தது. இன்று குழந்தையின் நேரத்தை நிரப்புவதற்கு பள்ளி, வகுப்பு, பயிற்சி, திரை, விளையாட்டு என்று பல விஷயங்கள் காத்திருக்கின்றன. குறிப்பாக கைபேசி மற்றும் இணைய உலகம் குழந்தையின் கவனத்தை எளிதாகப் பிடித்துக்கொள்கிறது. ஒரு குழந்தை படிப்பதற்கு அமர்ந்திருந்தாலும், அவனுடைய மனம் வேறு உலகத்தில் இழுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இப்போது அதிகம்.
குழந்தைகளுக்கான மூன்றாம் வெளி என்று இப்போது இருக்கிறதா என்ற கேள்வி வருகிறது 80 மற்றும் 90களில் எல்லாம் தெருவே மூன்றாம் வெளியாக இருந்தது.
அந்த காலகட்டத்திற்கு பிறகு தான் படிப்படியாக ஆங்கில வழிக் கல்வி உள்ளே வருகிறது. அப்போது குழந்தைகளின் மீது மதிப்பெண் சுமத்தப்படுகிறது. வாசிப்பிலிருந்து ஒரு விலகல் விளையாட்டில் இருந்து ஒரு விலகல் ஏற்படுகிறது. அந்த இடங்களை எல்லாம் படிப்பு பிடித்துக் கொள்கிறது. அதன் பிறகு டிவி ரேடியோ சினிமா மொபைல் இன்று தொடர்ந்து குழந்தைகளின் கவனத்தைத் திசை திருப்ப ஏராளமானவை அவர்களுக்கு கிடைக்கிறது.
அதனால் பெற்றோரின் கவலை நியாயமானதும்தான். ஆனால் சில பெற்றோர் ஒரே நாளில் எல்லாவற்றையும் நிறுத்திவிட நினைக்கிறார்கள். இனிமேல் மொபைல் கிடையாது. டிவி கிடையாது. கேம் கிடையாது என்று முழுமையாகத் தடை விதிப்பது அவர்களுக்கு சரியான தீர்வாகத் தோன்றலாம். ஆனால் குழந்தை ஏற்கனவே அந்தப் பழக்கத்தில் இருந்தால், அதை ஒரே நாளில் முழுமையாகப் பறித்துவிடுவது எதிர்ப்பையும் கோபத்தையும் அதிகரிக்கலாம். ஒரு பழக்கத்தை மாற்றுவதற்கு குழந்தைக்கு மாற்றத்திற்கான காலமும் புரிதலும் தேவை.
அதனால், தேவையில்லாத திரை நேரத்தை படிப்படியாகக் குறைப்பது ஒரு நல்ல வழியாக இருக்கலாம். இன்று இரண்டு மணி நேரம் பயன்படுத்துகிறான் என்றால் நாளை பூஜ்ஜியம் என்று செய்வதற்குப் பதிலாக, படிப்படியாக நேரத்தைக் குறைத்து, அந்த நேரத்தில் வேறு ஒரு செயல்பாட்டை அறிமுகப்படுத்தலாம். பெற்றோர் இதைக் கொடுக்கக் கூடாது என்பதைக் காட்டிலும், இதற்குப் பதிலாக என்ன கொடுக்கலாம்? என்பதையும் யோசிக்க வேண்டியிருக்கிறது.
இங்கேதான் நண்பர்கள் குழுவின் அழுத்தம் இன்னும் முக்கியமாகிறது. ஒரு குழந்தையின் வகுப்பில் நண்பர்கள் ஒரு குறிப்பிட்ட விளையாட்டைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். பள்ளியில் இடைவேளையில் அவர்கள் அதைப் பற்றி விவாதிக்கிறார்கள். வீட்டிலும் அதைப் பற்றிப் பேசுகிறார்கள். நீ அந்த கேம் விளையாடலையா?, நேற்று நாங்கள் இதை விளையாடினோம், இதுல இப்படியெல்லாம் பண்ணலாம் என்று நண்பர்கள் பேசும்போது, அந்தக் குழந்தை மட்டும் அந்த உரையாடலுக்கு வெளியே நிற்பது போல உணரலாம். அப்போது பிரச்சினை வெறும் ஒரு கேம் விளையாட வேண்டும் என்ற ஆசையாக இருக்காது. நான் மட்டும் ஏன் இதிலிருந்து விலகி இருக்கிறேன்? என்ற மனநிலையும் உருவாகலாம்.
குழந்தைகள் தங்கள் வயதுக்கேற்ற குழுவில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று விரும்புவது இயல்பானது. நண்பர்கள் என்ன செய்கிறார்கள், எதைப் பற்றி பேசுகிறார்கள், எதில் தன்னைச் சேர்த்துக் கொள்கிறார்கள் என்பதெல்லாம் ஒரு குழந்தையின் மனதில் முக்கியத்துவம் பெறும். அதனால் பெற்றோர் எல்லாவற்றையும் மறுத்துவிட்டால், குழந்தைக்குக வீட்டில் ஒரு உலகமும், நண்பர்களிடம் இன்னொரு உலகமும் உருவாகிவிடும். இந்த இடைவெளி அதிகமானால், சில குழந்தைகள் பெற்றோரிடம் தங்கள் அனுபவங்களைச் சொல்லாமல் மறைக்கத் தொடங்கலாம்.
அதற்காக நண்பர்கள் செய்வதையெல்லாம் நம்முடைய குழந்தையும் செய்ய வேண்டும் என்று அர்த்தமில்லை. குழந்தைக்கு ஏற்றதல்ல என்று நமக்குத் தெளிவாகத் தெரியும் சில விளையாட்டுகள், சில உள்ளடக்கங்கள் அல்லது சில பழக்கங்களுக்கு பெற்றோர் உறுதியாக வேண்டாம் என்று சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லித்தான் ஆக வேண்டும். உதாரணமாக, ஒரு குழந்தை என் நண்பர்கள் எல்லாரும் விளையாடுகிறார்கள். நானும் விளையாட வேண்டும் என்று அழுதாலும், அது குழந்தைக்கு ஏற்றதல்ல என்று பெற்றோருக்குத் தெரிந்தால் அந்த முடிவில் பெற்றோர் நிலையாக இருக்க வேண்டியிருக்கலாம்.
ஆனால் அந்த வேண்டாம் என்பதோடு பெற்றோரின் பொறுப்பு முடிந்துவிடக் கூடாது.
அதை வேண்டாம் என்றால், அதற்குப் பதிலாக என்ன? என்பதுதான் அடுத்த முக்கியமான கேள்வி.
குழந்தை நண்பர்களுடன் சேர்ந்து விளையாட வேண்டும் என்றால், அதற்குப் பொருத்தமான வேறு விளையாட்டுகளை அறிமுகப்படுத்தலாம். திரையில் ஒரு விளையாட்டைத் தேடிக்கொண்டிருந்தால், அவனுடைய ஆர்வத்தை வேறு ஒரு விளையாட்டுக்குள் கொண்டு செல்லலாம். நண்பர்களுடன் பேச வேண்டும் என்றால், அவர்களை வீட்டுக்கு அழைத்து வேறு செயல்பாடுகளில் ஈடுபடச் செய்யலாம். கதை, புத்தகம், ஓவியம், கட்டுமான விளையாட்டு, வெளியில் விளையாடுதல், இசை, உடல் இயக்கம் என்று குழந்தையின் வயதுக்கும் ஆர்வத்துக்கும் ஏற்ற மாற்றுகள் நிறைய இருக்கின்றன.
ஒரு குழந்தையிடமிருந்து ஒரு விஷயத்தை ஒட்டுமொத்தமாகப் பறிப்பது மட்டும் மாற்றத்தை உருவாக்காது. அந்த இடத்தை வேறு ஒரு நல்ல அனுபவத்தால் நிரப்பும்போதுதான் மாற்றம் நிலையாக உருவாகும். இல்லையென்றால், நாம் ஒரு விஷயத்தை எடுத்துவிட்ட இடத்தில் குழந்தையின் மனம் வேறு ஏதாவது ஒன்றைத் தேடத் தொடங்கிவிடும்.
இதனால்தான் பெற்றோராக நாம் குழந்தையின் வாழ்க்கையை எதைச் செய்யக் கூடாது? என்ற பட்டியலாக மட்டும் மாற்றிவிடக்கூடாது. படிப்பில் கவனம் வேண்டும் என்பதும் உண்மை. கைபேசி பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என்பதும் உண்மை. சில விளையாட்டுகளையும் சில உள்ளடக்கங்களையும் மறுக்க வேண்டிய அவசியமும் இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில், குழந்தை வாழ்வதற்கான இடத்தையும் நாம் உருவாக்க வேண்டும்.
படிப்பில் அவன் எப்படி இருக்கிறான் என்பதோடு மட்டும் நின்றுவிடாமல், நண்பர்களோடு அவனுடைய உறவு எப்படி இருக்கிறது, பள்ளியில் அவன் தனிமையாக உணர்கிறானா, எதையாவது சொல்லத் தயங்குகிறானா, அவனுக்குள் ஏதாவது அழுத்தம் இருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.
சில நேரங்களில் குழந்தையின் நடத்தைதான் நமக்கு அவனுடைய மனநிலையைச் சொல்லும். முன்புபோல் பேசாமல் இருப்பது, எதற்கெடுத்தாலும் கோபப்படுவது, தூக்கம் அல்லது உணவில் மாற்றம், படிப்பில் திடீர் வீழ்ச்சி, நண்பர்களிடமிருந்து விலகுவது போன்ற மாற்றங்களை வெறும் அவன் சோம்பேற அல்லது அவன் கேட்கவே மாட்டான் என்று முடிவு செய்துவிடாமல், அதன் பின்னால் ஏதாவது மன அழுத்தம் இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும்.
ஒரு கட்டத்தில் பெற்றோரால் தனியாகச் சமாளிக்க முடியாத அளவுக்கு குழந்தையின் மனநிலையில் மாற்றம் தெரிந்தால், உளவியலாளர் அல்லது ஆலோசகரின் உதவியை நாடுவதில் எந்தத் தவறும் இல்லை. அது பெற்றோர் தோல்வியடைந்துவிட்டார்கள் என்பதற்கான அடையாளம் அல்ல. குழந்தையின் மனநலத்தையும் உடல் நலத்தைப் போலவே கவனிக்க வேண்டிய ஒன்று என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது. பள்ளிகளிலும் குழந்தைகள் எளிதாக அணுகக்கூடிய உளவியல் ஆலோசனை வசதிகள் இருப்பது மிகவும் முக்கியமானது.
குழந்தையிடம் ஒரு விஷயத்தை எடுத்துவிடுவது எளிது. அதற்குப் பதிலாக ஒரு நல்ல உலகத்தை உருவாக்கிக் கொடுப்பதுதான் உண்மையான பெற்றோரின் வேலை.
அப்படியானால், குழந்தையிடம் இதைச் செய்யாதே என்று சொல்லும்போது, இதற்குப் பதிலாக என்ன செய்யலாம்? என்ற கேள்விக்கு நாம் என்ன பதில் வைத்திருக்கிறோம்?
அதைத்தான் அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
குழந்தைக்கு நாம் கொடுக்க வேண்டியது நேரம் மட்டும் அல்ல; ஒரு உலகம்
குழந்தைகளிடம் இன்று இருக்கும் பல பிரச்சினைகளுக்கு ஒரே நாளில் ஒரு தீர்வு கிடைத்துவிடாது. மொபைலைப் பிடுங்கிவிட்டால் மொபைல் பழக்கம் போய்விடும், டிவியை நிறுத்திவிட்டால் கவனம் படிப்பில் வந்துவிடும், படிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டால் படிப்பில் ஆர்வம் வந்துவிடும் என்று நினைக்க முடியாது. குழந்தையின் உலகத்தை மெதுவாக வேறு அனுபவங்களால் நிரப்ப வேண்டும். அதற்கான மிக அழகான தொடக்கம் கதை சொல்லல்.
குழந்தைகள் மிகச் சிறிய வயதில் இருக்கும்போதே அவர்களிடம் கதை சொல்லத் தொடங்கலாம். குறிப்பாக இரவு தூங்குவதற்கு முன் சொல்லப்படும் ஒரு கதை என்பது வெறுமனே குழந்தையைத் தூங்க வைப்பதற்கான வழி அல்ல. அது பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையே உருவாகும் ஒரு நெருக்கமான நேரம். அந்த நேரத்தில் குழந்தை அமைதியாகக் கேட்பது மட்டும் போதாது. கதைக்குள் குழந்தையையும் பேச அனுமதிக்க வேண்டும்.
அடுத்து என்ன நடக்கும்? அந்தப் பையன் ஏன் அப்படிச் செய்தான்? அவன் பயப்படவில்லையா? அம்மா அங்கே என்ன செய்திருக்க வேண்டும்? நான் அந்த இடத்தில் இருந்தால் இப்படித்தான் செய்வேன் என்று குழந்தை கேட்கட்டும். சில நேரங்களில் கதை சொல்லும் பெற்றோரையே குழந்தை திருத்தலாம். சில நேரங்களில் கதையின் முடிவையே மாற்றி சொல்லலாம். அந்த உரையாடலை நாம் அவசரப்படுத்தாமல் அனுமதிக்க வேண்டும். அப்போது கதை என்பது ஒருதலைப்பட்சமான சொல்லலாக இல்லாமல், பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையிலான உரையாடலாக மாறுகிறது.
அந்த உரையாடல்தான் மிகப் பெரிய பாலமாகிறது. குழந்தை தன்னுடைய மனதில் இருப்பதை நேரடியாக, அம்மா, எனக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது என்று வந்து சொல்லாமல் இருக்கலாம். ஆனால் கதையில் வரும் ஒரு கதாபாத்திரத்திற்கு அதே மாதிரியான பிரச்சினை வந்தால், அவன் அப்படி செய்திருக்கக் கூடாது இல்லையா? என்று கேட்கலாம். அவனுக்கு ஏன் இப்படி நடந்தது? என்று பேசலாம். அந்தக் கதாபாத்திரத்தின் பிரச்சினையைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போதே, உண்மையில் தன்னுடைய பிரச்சினையைப் பற்றி குழந்தை பேசத் தொடங்கியிருக்கலாம்.
ஒரு கதாபாத்திரம் தன்னுடைய பிரச்சினையை யாரிடமாவது சொல்லி, அதனால் ஒரு சிக்கலில் இருந்து வெளியே வந்த கதையை குழந்தை கேட்கும்போது, பிரச்சினையைச் சொல்லுவது தவறு இல்லை. உதவி கேட்பது தவறு இல்லை. எல்லாவற்றுக்கும் நான் தான் காரணம் அல்ல என்ற எண்ணம் குழந்தைக்குள் மெதுவாக உருவாகும். அப்போது நாளை அதே மாதிரியான ஒரு சூழ்நிலை தன்னுடைய வாழ்க்கையில் வந்தால் இதை அம்மாவிடம் சொல்லலாம் அப்பாவிடம் சொல்லலாம் என்ற நம்பிக்கை அதற்குள் இருக்கும்.
இன்றைய குழந்தைகளிடமும், குறிப்பாக வளரிளம் பருவத்தில் இருக்கும் குழந்தைகளிடமும் நாம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சிக்கல்களில் ஒன்று அவர்களுடைய மனதில் நடப்பதை பெற்றோர்களால் புரிந்துகொள்ள முடியாமல் போவது. அதைவிடப் பெரிய சிக்கல், குழந்தைகள் தங்களுடைய பிரச்சினைகளைப் பெற்றோரிடம் சொல்லத் தயங்குவது. அந்தத் தயக்கத்தை பதினைந்து, பதினாறு வயதில் உடைக்க முயற்சி செய்வதைவிட, சிறு வயதிலிருந்தே குழந்தையோடு பேசும் பழக்கத்தை உருவாக்குவது எவ்வளவோ எளிது. அதற்கான ஒரு இயல்பான வழிதான் கதை.
கதை சொல்ல ஆரம்பித்துவிட்டோம் என்பதற்காக குழந்தை பத்து வயதான பிறகும் நாம் தினமும் அதற்கு எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியதில்லை. ஒரு கட்டத்தில் கதை சொல்லலில் இருந்து வாசிப்புக்கு குழந்தையை மெதுவாக நகர்த்த வேண்டும். ஆரம்பத்தில் ஒரு கதையை நாம் சொல்லலாம். பிறகு கதையின் நடுவில், இங்கே என்ன நடந்தது தெரியுமா? இந்தப் புத்தகத்தில் அடுத்த பக்கத்தில் இருக்கிறது. நீயே படித்துப் பாரு என்று சொல்லலாம். அடுத்தடுத்து குழந்தை தானாகப் புத்தகத்தைத் திறந்து படிக்கத் தொடங்கும் அளவுக்கு அந்தப் பயணத்தை உருவாக்க வேண்டும்.
கதை சொல்லல் எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் வாசிப்பு. நம்மால் குழந்தைக்கு எல்லாவற்றையும் சொல்லிக் கொடுக்க முடியாது. நம்முடைய அனுபவம் ஒரு எல்லைக்குள் மட்டுமே இருக்கிறது. ஆனால் ஒரு புத்தகத்தின் வழியாக குழந்தை நமக்குத் தெரியாத ஒரு காலத்துக்குச் செல்லலாம். நமக்குத் தெரியாத ஒரு நாட்டின் மனிதர்களைச் சந்திக்கலாம். நம்மால் நேரில் காண முடியாத வாழ்க்கைகளைப் பார்க்கலாம். அதனால் குழந்தையை வாசிப்புக்குள் கொண்டு வருவது என்பது, அதன் கையில் ஒரு புத்தகத்தைக் கொடுப்பது மட்டுமல்ல. அதன் முன் ஒரு பரந்த உலகத்தைத் திறந்து வைப்பது.
அதற்குப் பிறகு வரும் முக்கியமான விஷயம் விளையாட்டு. குழந்தைகள் நிறைய விளையாட வேண்டும். வீட்டுக்குள் பெற்றோர்களோடு விளையாடுவது நல்லது. ஆனால் அதோடு முடிந்துவிடக் கூடாது. ஒரு கட்டத்தில் குழந்தைகள் தங்கள் வயதுக்குழந்தைகளோடு சேர்ந்து விளையாட வேண்டும். ஏனென்றால் பெற்றோர் குழந்தையிடம் எவ்வளவு அன்பாக இருந்தாலும், குழந்தையின் வயதுக்கேற்ற நண்பர்களுடன் விளையாடும்போது கிடைக்கும் அனுபவத்தை முழுமையாக நம்மால் கொடுக்க முடியாது.
விளையாட்டில் குழந்தை எப்போதும் ஜெயிக்காது. சில நேரங்களில் தோற்கும். சில நேரங்களில் தன்னுடைய முறை வருவதற்காகக் காத்திருக்க வேண்டியிருக்கும். சில நேரங்களில் நண்பனுக்காக விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும். சில நேரங்களில் தன்னுடைய விருப்பம் நடக்காமல் போகும். சின்னச் சின்ன சண்டைகள் வரும். சமாதானம் ஆகும். மீண்டும் சேர்ந்து விளையாடும். விட்டுக் கொடுத்தல், தோல்வியை ஏற்றுக்கொள்ளுதல், மற்றவருடைய முறை வருவதற்குக் காத்திருத்தல், குழுவாகச் செயல்படுதல் போன்ற பல வாழ்க்கைப் பாடங்களை குழந்தைகள் இயல்பாக விளையாட்டின் வழியாகக் கற்றுக்கொள்கிறார்கள்.
அதனால் விளையாடாதே, படி என்று குழந்தையின் விளையாட்டு நேரத்தை முழுவதுமாக எடுத்துவிடுவது, நாம் நினைப்பதைவிடப் பெரிய இழப்பாக இருக்கலாம். குறிப்பாக அதே வயதுக் குழந்தைகளோடு விளையாடுவதற்கு குழந்தைகளுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். பெற்றோர் அவர்களோடு விளையாடுவது ஒரு பக்கம். ஆனால் அவர்களுடைய உலகத்துக்குள் குழந்தைகள் சென்று, தங்களுடைய வயதினருடன் சமமாக விளையாடுவது இன்னொரு முக்கியமான அனுபவம்.
அடுத்ததாக, பயணம். குழந்தைகளை நாம் எங்கு சென்றாலும் முடிந்தவரை அழைத்துச் செல்ல வேண்டும். அது பெரிய சுற்றுலாவாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சொந்தக்காரர்கள் வீட்டுக்குச் செல்லும்போதுகூட குழந்தையை அழைத்துச் செல்லலாம். வேறு ஒரு ஊருக்குச் செல்லலாம். வேறு மாவட்டம், வேறு மாநிலம், முடிந்தால் வேறு நாடு என்று குழந்தையின் உலகத்தை விரிவுபடுத்தலாம்.
ஒரு இடத்துக்குச் செல்வது என்பது அந்த இடத்தைப் பார்த்துவிட்டு திரும்பி வருவது மட்டும் அல்ல. அங்கே வாழும் மனிதர்களை குழந்தை பார்க்க வேண்டும். அவர்கள் எப்படி பேசுகிறார்கள், எப்படி வாழ்கிறார்கள், என்ன சாப்பிடுகிறார்கள், அவர்களுடைய வீடுகள் எப்படி இருக்கின்றன, அந்த நிலப்பரப்பு எப்படி இருக்கிறது என்று கவனிக்க வேண்டும். நம்முடைய ஊரிலேயே ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்லும்போது பேச்சுவழக்கும் வாழ்க்கை முறையும் மாறிவிடும். நகரத்தில் வளரும் குழந்தையை கிராமத்துக்கு அழைத்துச் சென்றால், அது இன்னொரு உலகத்தைப் பார்ப்பது போல இருக்கும். அந்த அனுபவங்கள் குழந்தையின் பார்வையைப் பெரிதாக்குகின்றன.
ஒரு குழந்தை முதலில் ஒரு புத்தகத்தில் ஒரு கிராமத்தைப் படித்திருக்கலாம். ஒரு கதையில் ஒரு மலை மனிதனைப் பார்த்திருக்கலாம். ஒரு நாவலில் ஒரு வேறு நிலப்பரப்பை கற்பனை செய்திருக்கலாம். அந்தக் கதைகளில் படித்த மனிதர்களைப் போன்ற ஒருவரை நிஜ வாழ்க்கையில் சந்திக்கும் போது, புத்தகத்துக்கும் வாழ்க்கைக்கும் இடையிலான தொடர்பை அது உணரத் தொடங்கும். வாசிப்பு குழந்தைக்கு உலகத்தை கற்பனை செய்து காட்டுகிறது. பயணம் அந்த உலகத்தை நேரில் காட்டுகிறது.
ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் குழந்தைகளுக்கு ஆளுமைகள் பற்றிய புத்தகங்களையும் அறிமுகப்படுத்த வேண்டும். சமூகத்துக்காகச் செயல்பட்டவர்கள், மாற்றத்தை உருவாக்கியவர்கள், தங்களுடைய வாழ்க்கையில் சவால்களை எதிர்கொண்டு முன்னேறியவர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என்று பல்வேறு மனிதர்களின் வாழ்க்கையை குழந்தைகள் படிக்க வேண்டும். ஒரு மனிதன் எப்படி வாழ்ந்தான் என்பதைத் தெரிந்துகொள்வதைவிட, அவன் எதற்காக வாழ்ந்தான், என்ன பிரச்சினையைப் பார்த்தான், அதற்காக என்ன செய்தான் என்பதைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பை இந்த வாசிப்பு குழந்தைக்கு கொடுக்கும்.
அதேபோல குழந்தைகளுக்கான நல்ல திரைப்படங்களையும் உலக சினிமாவையும் அவர்களின் வயதுக்கு ஏற்றவாறு அறிமுகப்படுத்தலாம். ஒரு படம் பார்த்துவிட்டு முடித்துவிடாமல், அந்தக் கதாபாத்திரம் ஏன் அப்படிச் செய்தது? அந்த முடிவு சரியா? நீ இருந்தால் என்ன செய்வாய்? என்று குழந்தையோடு பேசலாம். ஒரு நல்ல படம், ஒரு நல்ல புத்தகம், ஒரு நல்ல கதை இவை அனைத்தும் குழந்தையோடு உரையாடுவதற்கான கதவுகளாக மாறலாம்.
இவை அனைத்தும் குழந்தையை ஒரே நாளில் மொபைலிலிருந்து பிரித்துவிடுவதற்கான உத்திகள் அல்ல. மாற்றம் என்பது மெதுவாக உருவாக வேண்டியது. குழந்தையின் கையில் இருக்கும் ஒரு விஷயத்தை எடுத்துவிட்டு, அந்தக் கையை வெறுமையாக விட்டுவிடக் கூடாது. அந்தக் கையில் ஒரு புத்தகத்தைக் கொடுக்க வேண்டும். ஒரு விளையாட்டைக் கொடுக்க வேண்டும். ஒரு கதையைக் கொடுக்க வேண்டும். ஒரு பயணத்தைக் கொடுக்க வேண்டும். ஒரு உரையாடலைக் கொடுக்க வேண்டும். ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்க வேண்டும். குழந்தையின் உலகம் இப்படி பல அனுபவங்களால் நிறையத் தொடங்கும்போது, திரைதான் அதன் ஒரே மகிழ்ச்சி என்ற நிலையும் மெதுவாக மாறத் தொடங்கும்.
மேலும், குழந்தைகள் தாங்கள் கற்றுக் கொண்டதை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளத் தொடங்குவார்கள். நான் இந்தப் புத்தகம் படித்தேன். இந்தக் கதையில் இப்படியொரு விஷயம் இருந்தது நாங்கள் அங்கே போயிருந்தோம் இந்த விளையாட்டு விளையாடினோம் என்று சொல்லும்போது, தன்னிடமும் பகிர்ந்து கொள்ள ஏதோ இருக்கிறது என்ற மகிழ்ச்சி அவர்களுக்கு வரும். என்னிடமும் ஒரு உலகம் இருக்கிறது என்ற உணர்வு குழந்தைக்கு மிகப் பெரிய தன்னம்பிக்கையைத் தரும்.
ஆனால் இவை எல்லாவற்றுக்கும் முன்பாக ஒன்று இருக்கிறது. பெற்றோராக நாம் தயாராக வேண்டும்.
பெற்றோர் என்பது குழந்தை பிறந்த பிறகு கிடைக்கும் ஒரு பெயர் மட்டுமல்ல. ஒரு குழந்தை பிறந்துவிட்டால் தானாகவே நாம் நல்ல பெற்றோராகிவிடுவதில்லை. பெற்றோராக இருப்பதற்கும் ஒரு தயாரிப்பு தேவை. அந்தக் குழந்தைக்கு என்ன தேவை என்பதை அறிந்துகொள்ள நாம் வாசிக்க வேண்டும். குழந்தையின் வயது, வளர்ச்சி, மனநிலை, உலகம், அதன் காலத்தின் சவால்கள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள நாம் நம்மையே மாற்றிக்கொள்ள வேண்டும்.
என் குழந்தைக்காகத்தான் நான் எல்லாவற்றையும் செய்கிறேன் என்று சொல்வது மட்டும் போதாது. என் குழந்தைக்கு உண்மையில் என்ன தேவை? என்று கேட்டு, அதற்காக நாமும் மெனக்கெட வேண்டும். குழந்தைக்கு நல்ல புத்தகம் தேவை என்றால் நாம் தேடிப் படிக்க வேண்டும். நல்ல கதை தேவை என்றால் நாம் கதை சொல்லத் தயாராக வேண்டும். விளையாட வேண்டும் என்றால் நேரம் ஒதுக்க வேண்டும். பயணம் செய்ய வேண்டும் என்றால் அதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும். குழந்தையோடு பேச வேண்டும் என்றால், நம்முடைய கைபேசியை கீழே வைத்துவிட்டு அதற்காக நேரம் ஒதுக்க வேண்டும்.
ஒரு குழந்தையை சமூகத்திடம் ஒப்படைக்கும் போது, அவனுக்காக எல்லாவற்றையும் செய்துவிட்டேன் என்று சொல்வதைவிட, அவனை ஒரு நல்ல மனிதனாக வளர்ப்பதற்காக நான் என்னை எவ்வளவு தயார்படுத்திக் கொண்டேன்? என்று நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும்.
இதற்கெல்லாம் மேலாக, குழந்தைக்கு நாம் கொடுக்க வேண்டிய மிகப் பெரிய விஷயம் நேரம் மட்டுமல்ல காது.
குழந்தை பேசும்போது நாம் உண்மையாகக் கேட்க வேண்டும். அது ஒரு சிறிய விஷயத்தைச் சொன்னாலும் கேட்க வேண்டும். பள்ளியில் நடந்த ஒரு சின்ன சம்பவத்தைச் சொன்னாலும் கேட்க வேண்டும். நண்பனைப் பற்றிப் பேசினாலும் கேட்க வேண்டும். நமக்குப் பொருட்டாகத் தெரியாத ஒரு விஷயம், அந்தக் குழந்தையின் உலகத்தில் மிகப் பெரியதாக இருக்கலாம்.
இன்று குழந்தை நம்மிடம் ஒரு சின்ன விஷயத்தைச் சொல்ல வரும்போது அதெல்லாம் ஒன்றுமில்லை. போய் படி என்று நாம் அனுப்பிவிட்டால், நாளை அது ஒரு பெரிய பிரச்சினையோடு வரும்போது நம்மிடம் வராமல் போகலாம். நாம் கேட்க மறுக்கும் ஒவ்வொரு சிறிய உரையாடலும், நாளைய ஒரு பெரிய உரையாடலுக்கான கதவை மூடக்கூடும்.
பதின்பருவத்தில் ஒரு குழந்தைக்கு மனதில் குழப்பம் வரும்போது, அது யாரிடமாவது பேச வேண்டும். பெற்றோர் அந்தக் காதாக இல்லாவிட்டால், வேறு யாராவது அந்தக் குழந்தைக்குக் காது கொடுக்கத் தயாராக இருப்பார்கள். அந்த நபர் நல்லவராக இருக்கலாம். தவறானவராகவும் இருக்கலாம். ஆனால் குழந்தை தன்னைக் கேட்கும் ஒருவரைத் தேடும். அந்த நேரத்தில் பெற்றோர், என் குழந்தை ஏன் என்னிடம் சொல்லவில்லை? என்று பதறுவதற்கு முன்னால் அது சொல்ல வந்தபோது நான் கேட்டேனா? என்று நம்மையே கேட்க வேண்டியிருக்கிறது.
அதனால் குழந்தைப் பருவத்திலிருந்தே கதை சொல்லுங்கள். கதைக்குள் குழந்தையையும் பேச விடுங்கள். அந்தக் கதையிலிருந்து வாசிப்புக்குள் அழைத்துச் செல்லுங்கள். புத்தகங்களின் வழியாக உலகத்தை அறிமுகப்படுத்துங்கள். குழந்தைகளை விளையாட விடுங்கள். அவர்களுடைய வயதுக் குழந்தைகளோடு விளையாட அனுமதியுங்கள். பயணம் அழைத்துச் செல்லுங்கள். மனிதர்களைச் சந்திக்க வையுங்கள். நல்ல திரைப்படங்களைப் பார்க்க வையுங்கள். பல்வேறு வாழ்க்கைகளை அறிமுகப்படுத்துங்கள். அவர்களோடு பேசுங்கள். அவர்கள் பேசும்போது கேளுங்கள்.
இவை எதுவுமே ஒரே நாளில் குழந்தையை மாற்றிவிடும் மந்திரங்கள் அல்ல. ஆனால் தினமும் கொஞ்சம் கொஞ்சமாகச் செய்யப்படும் இந்தச் சிறிய முயற்சிகள்தான் ஒரு குழந்தையின் உலகத்தை மாற்றும்.
குழந்தையை மொபைலில் இருந்து விலக்க வேண்டியதில்லை. அவர்களே விலகி வரும் சூழலை உருவாக்கித் தர வேண்டும். அதைவிடப் பெரிய, அழகான உலகத்தை அதற்கு அறிமுகப்படுத்த வேண்டும்.
அந்த உலகத்திற்குள் கதை இருக்கட்டும்.
புத்தகம் இருக்கட்டும்.
விளையாட்டு இருக்கட்டும்.
பயணம் இருக்கட்டும்.
கலை இருக்கட்டும்.
மனிதர்கள் இருக்கட்டும்.
முக்கியமாக, அந்த உலகத்தில் பெற்றோரும் குழந்தையும் சேர்ந்து பயணம் செய்யட்டும்.
அப்போதுதான் குழந்தையை நாம் ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி வளர்க்காமல், தன்னுடைய உலகத்தைத் தானே புரிந்துகொண்டு, தன்னுடைய முடிவுகளைத் தானே எடுக்கக்கூடிய ஒரு நல்ல மனிதனாக வளர அனுமதிக்க முடியும்.