என்னை செதுக்கிய பறவை நோக்குதல்

எட்டி வைத்த முதல் அடி:

என் சிறு வயது முதலே நான்  பறவைகளைப் பார்த்து வியந்ததுண்டு. அதற்கு முக்கியமான காரணம் என்னுடைய அம்மா. எங்கு எப்போது பறவைகளைப் பார்த்தாலும் அந்தக் கணமே என்னை அழைத்து பறவைகளைக் காண்பிப்பார். இந்த செயல் தான் தற்போது வரை பறவைகளைக் கண்டாலே என் எல்லை இல்லா ஆனந்தத்திற்கு அடிப்படையாக உள்ளது. 

திருநெல்வேலி நினைவுகள் 

நான், அம்மா, அப்பா தங்கை  என்று குடும்பத்தோடு ஆண்டுக்கு மூன்று முறை எனது பாட்டியின் ஊராகிய திருநெல்வேலிக்கு செல்வது உண்டு. ஊருக்குச் செல்லும் போதெல்லாம் தாமிரபரணி ஆற்றில் விளையாடுவது வழக்கம். ஆற்றங்கரை ஓரத்தில் அமர்ந்து கொண்டு நீர்க்காகம் இரை தேடுவது, செம்போத்து பறவையின் ஒலி, மயில்கள் அங்குமிங்கும் ஓடுவது, மீன்கள் துள்ளி விளையாடுவது, நீரோட்டத்தின் அழகு,  ஊர் மக்களோடு அம்மா, பெரியம்மா, அக்காவும் ஆற்றில் துணி துவைப்பது என்று கிராமத்து வாழ்வியலின் பல்வேறு அம்சங்களில் திளைத்திருந்தேன்.  இதற்கிடையில் மரங்கொத்தி மரத்தை கொத்தும் சத்தமும் என் காதில் கேட்கும். அம்மா எனக்கு பறவைகளைக் காண்பிப்பதும், அதைக் கண்டு நான் மகிழ்வதும் என இருபது ஆண்டுகள் உருண்டோடியது. 

திருப்புமுனை ஆண்டு 

சிறு வயது முதலே பறவைகளை ரசித்து வந்தாலும் அச்செயலுக்கு பறவை நோக்குதல் என்றொரு பெயர் உண்டு என்பதை நான் அறிந்திருக்கவில்லை. 2018ம் ஆண்டு முறையாக பறவை நோக்குதல் என்றால் என்ன, அதைச் செய்வதால் என்ன பயன், பல வகையான பறவைகளை எவ்வாறு அடையாளம் காண்பது என்று பறவை ஆர்வலர்கள் தமிழ்ச்செல்வன் மற்றும் கணேஷ்வரிடம் கற்றுக்கொண்டேன். 

இருபது வருடமாக வீட்டில் இருந்தபடியே, இயற்கையை ரசித்து, சூரிய உதயத்தையும், மறைவையும், மழையின் அழகை உணர்வதும், பூக்கள் மலர்வதும், காற்றின் இசைக்கு இலைகள் நடனம் ஆடுவதும் , பறவைகள் சிறகடித்து பறப்பதும் ரசித்து இருந்தாலும், நான்கு சுவற்றில் உள்ளே உலகமே அறியாது இருந்த எனக்கு விடியல் தந்து என்னை செதுக்கியது  பறவை நோக்குதல். 

வாழ்க்கையில், நான் என்  பெற்றோரிடமும், ஆசிரியர்களிடமும் பல நல்ல காரியங்களை கற்றுவந்திருக்கிறேன். அவர்கள், எனக்கு தரும் அறிவுரைகளை ஏற்று தவறுகளை மாற்றிக்கொண்டு, என்னை நான் சரிசெய்துள்ளேன். இவை எல்லாவற்றிற்கும் மேலாக என்னை செதுக்கி, சரிசெய்துக்கொள்ள முக்கிய காரணியாக இருந்தது  பறவை  நோக்குதல் மட்டுமே.  

தயக்கம் நீக்கிய பறவை நோக்கல் 

அறிமுகமில்லாத நபர்களிடம் பேசுவதென்றால் எனக்கு எட்டிக்காய். தமிழகப் பறவை ஆர்வலர்கள் சந்திப்பின் போது, பறவை ஆர்வலர்களோடு  பயணிக்கும்போது, பறவை நோக்குதல் மற்றும்  பறவை கணக்கெடுப்புகளுக்கு செல்லும்போதும், என்னுள் இருந்த இந்த தயக்கம் விலகியது. நான் பறவை நோக்குதல்  செல்லும் ஆரம்ப நாட்களில், ஒரு பறவை ஆர்வலர் ஏஞ்சலின், இங்க பாரு பச்ச கலர் பறவை, அதோ பாரு அந்த கிளையில் இருக்குஅட உனக்கு தெரியலயா, இங்க வா நான் காட்டுறேன் என்று அழைப்பதும், பறவைகளை தீவிரமாக உற்றுநோக்கும் திறன் மற்றும் அதை காண ஆசை என்னுள் இருந்தபடியால் உடனே அவர்களிடம் சென்று அந்த பறவையை பார்த்து, அவர்களிடம் பேசிய  அந்த நொடி என்னிடம் இருந்த தயக்கம் பறந்தோடியது. சக மனிதர்களிடம், சக பறவை ஆர்வலர்களிடம் பேசி பழக இயலாது இருந்த என்னுடைய இந்த தயக்கத்தை உடைத்தெறிய உதவியது  பறவை நோக்குதல்.

அன்றாட வாழ்வின் அங்கம் 

பறவை நோக்குதல் என்றால் பறவைகளை கண்டு ஆனந்தம் கொள்வது, பறவைகளின்  பண்புகளை ஆராய்ச்சி செய்து அவற்றை பதிவு செய்வது, பறவை பட்டியல் சமர்பிப்பது, பறவைகளைப் பற்றி குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது  என்பதை தாண்டி என் வாழ்க்கையில் பறவை நோக்குதல் அநேக வகையில் என்னை செதுக்கியது. இருபது வருடமாக, ஆசைக்காகவும், அவ்வபோது பறவைகளை காண வேண்டும் என்ற நினைவு எழுந்ததாலும் பறவைகளை கண்டு வந்தேன். தற்போது ஆறு  ஆண்டுகளில், அன்றாட வாழ்வின் அங்கமாக ஆனது பறவை நோக்குதல். 

திறன் மேம்பாடு 

பறவை நோக்குதல் மூலம் பறவைகளை பற்றி புரிந்துணர்வு பெற்றாலும் , என் அறிவு வளர்ச்சிக்கு அப்பால் என்னை நானே செதுக்கி கொள்ள  பல வகையில் காரணியாக இருக்கிறது. பறவைகளைப் பார்ப்பது மற்றும் கவனிப்பது எளிதான காரியமல்ல. அதற்குப்  பொறுமை அவசியம். பறவைகளை அவதானிக்கும் ஒவ்வொரு பொழுதும், ஒரு செயலை மிக கூர்மையாய் உற்று கவனிக்கும் பழக்கத்தை என்னால் மேம்படுத்திக்கொள்ள முடிந்தது. பறவை நோக்குதல் செல்லும் போது பறவைகளின் ஒலியை உற்று கவனித்து கேட்பது  முக்கியமான செயல். பறவைகள் கண்களில் தென்படாவிட்டாலும் அவற்றின் ஒலிகள் வாயிலாக, அது என்ன பறவை என்று அறிந்துகொள்ள முடியும். இவ்வாறு பறவைகளின் ஒலிகளை உன்னிப்பாக கவனிக்கும் போது என் செவித்திறன் மேம்பட்டிருக்கிறது. என்னுள் பல மாற்றங்களை ஏற்படுத்தி என்னை பொறுமைசாலியாக செதுக்கியது பறவை நோக்குதல். 

எனக்கு சிறு வயது முதல் அவதானக் குறைவு, அளவுக்கு மீறிய இயக்கம் (மிகையியக்கம்), ஒரு குறிப்பிட்ட செயற்பாட்டில் முழுமையான கவனம் செலுத்த இயலாமை, அளவுக்கு மீறிய துறுதுறுப்பு இருந்தது. மிகை இயக்கத்தினால் அடுத்தவருடன் பழகுவது, உரையாடுவது, நண்பர்களை ஏற்படுத்திக் கொள்வது போன்ற சமூகத்திறன்களை கொண்டிருப்பதில் பின்தங்கி இருந்தேன். இவை எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைத்தது பறவை நோக்குதல். பறவைகளை உற்று நோக்கி கவனிக்க தொடங்கிய அந்த நொடிப் பொழுது பொறுமையாக செயல்களை செய்ய தொடங்கினேன். 

அடுத்த படிநிலை 

என் திறன் மேம்படுத்துவதற்காக பறவைகள் அவதானிப்பது என்பதை தாண்டி மக்கள் அறிவியல் திட்டங்களில் பறவைப் பட்டியல்களும், புகைப்படங்களும்,பறவை ஒலிகள் பதிவு செய்து பங்களிக்கலாம் என்று அறிந்து அவற்றை தொடர்ச்சியாக 2018ம் ஆண்டு முதல் எனது பங்களிப்பை அளித்து வருகிறேன். இவ்வாறு பறவை ஆராய்ச்சிக்காக தகவல் சமர்ப்பித்து உதவுவதன் வாயிலாக பறவைகள் சார்ந்த பல தகவல்களை என்னால் கற்றுக்கொள்ள முடிந்தது. 

யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் 

பறவை நோக்குதல்  மூலம் யான் பெற்ற இன்பம் இவ்வையகத்தில் உள்ளோரும் பெற வேண்டும் என்ற எண்ணம் என்னுள் எழுந்தது. சேலம் பறவையியல் கழகம் சார்பாக பள்ளிகளுக்கு சென்று பள்ளிக் குழந்தைகள் மத்தியில் கலந்துரையாடி, பறவைகளைக்  காண்பித்து, பாடல்கள் மூலமாகவும், காகித மடிப்புக் கலை மூலமாகவும், விளையாட்டு வழிக் கல்வி மூலமாகவும் பறவைகளை அறிமுகம் செய்ய வைத்தது பறவை நோக்குதல். என் குடும்பத்தாரிடம், நான் சந்திக்கும் நண்பர்களிடம், குழந்தைகளிடம்  பறவைகளைக்  காண்பிக்கும்போது மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். 

பறவை நோக்குதலே ஓர் சிறந்த மருந்து!

One thought on “என்னை செதுக்கிய பறவை நோக்குதல்

  1. மிகச்சிறந்த அனுபவப் பகிர்வு ஏஞ்சலின்.வாழ்த்துகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *