புனைவிலக்கியம் எனும் கலை வெறும் கதை சொல்வதற்கான தளம் மட்டும் தானா அல்ல அதனை கடந்து அந்த வடிவத்திற்கு எதேனும் தனிச்சிறப்பு உள்ளதா ? என்று ஒவ்வொரு இலக்கிய ஆர்வலர்களுக்கும் தோன்றுவதுண்டு . சிறுகதை குறுங்கதை குறுநாவல் நாவல் இதிகாசம் என கதை சொல்லும் இலக்கிய வடிவங்கள் வெவ்வேறாக இருப்பினும் ஒவ்வொன்றும் தன்னளவில் தனித்து விளங்குவது கதை சொல்லலை தாண்டி வேறு ஏதோ ஓர் இடத்தில் மாறுபட்டு நிற்கின்றன . சிறுகதைகள் காட்டும் கதையுலகம் அந்த ஒட்டு மொத்த கதை பின்னணியின் ஒரு சிறு மாதிரி வடிவம் மட்டுமே . குறுங்கதைகள் அதன் காட்சிகளை மட்டுமே பதிவு செய்கின்றன . நாவலோ அந்த கதையின் ஒட்டு மொத்த உலகத்தையும் தனக்குள் உள்வாங்கிக்கொண்டு தத்துவ விசாரணையையோ, கொள்கை மீதான விவாதத்தையோ நிகழ்த்தி பார்க்கிறது , இதிகாசங்களோ நூற்றாண்டுகளின் காலம் போல களத்திலும் பாத்திரங்களிலும் ஒரு பரந்து விரிந்த பிரம்மாண்டத்தை கதைக்குள் பொருத்தி ஒரு மிக பெரிய வாழ்வின் அனுபவத்தை கொடுக்க பார்க்கிறது . ஒரு நாவல் தன்னளவில் எந்த ஒரு வட்டத்திற்குள்ளோ ஒரு முடிவுக்கோ சென்றடைய விரும்பாத ஒன்று . சொல்லப்போனால் நாவலாசிரியரின் பிடியில் இருந்து விலகிச்செல்ல பார்ப்பதே நாவலின் தன்மை . அதன் வடிவமும் மொழியும் அவருடைய கட்டுப்பாட்டில் இருந்தாலும் கதையும் மாந்தர்களும் அவர்களுக்குள் நிகழும் விவாதங்களும் முரண்களும் சென்று முடியும் இடமும் அவருடைய கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது . இதன் அடிப்படையில் நாராயணி கண்ணகி அவர்கள் எழுதிய தப்பு நாவலை பார்ப்போம் .
வாணியம்பாடி யை கதைக்களமாக கொண்டு மகளிர் காவல் நிலையத்தை நோக்கி வந்த ஒரு புகாரை விசாரிக்க தொடங்கிய காவல் ஆய்வாளர் மனோன்மணியம் என்பவரின் பார்வையில் எழுதப்பட்ட ஒரு புனைவு . ஒரு படைப்பு அது சென்றடையும் வாசக உலகத்தின் புரிதலின் தரத்தை பொருத்து மாறுபடும் வாய்ப்புள்ளது . அந்த வகையில் சில முன்னோடி எழுத்தாளர்கள் வாசகர்களின் புரிதலை வெகு உயர்வாக எண்ணி தங்களுடைய படைப்பை கொடுத்துள்ளனர் அதனை ஈடு செய்யும் வண்ணம் வாசகர்கள் உலகமும் அதனை புரிந்துகொண்டு கொண்டாடியதும் உண்டு . தப்பு நாவலின் தொடக்கமே வெறும் சுவாரஸ்யத்திற்காக பாதிக்கப்பட்ட பெண் குழந்தையாக இருப்பது போல காண்பிக்கப்பட்டு பின் அவள் திருமணமான நடுத்தர வயது பெண் என்று பின்வரும் பக்கங்களில் கூறுவது ஒரு ஆழ்ந்த வாசிப்பாளனுக்கு எந்த ஒரு வியப்பையோ அதிர்ச்சியையோ கொடுக்கவில்லை . அஞ்சியும் முனியம்மாவும் ஏழைகள் என அவர்களுடைய உடையையும் உருவத்தையும் வைத்து இடை போடுவது பிற்போக்கு தனம் அது மட்டுமல்லாமல் அவர்களுடைய வீட்டை விவரிக்கும் போது அவர்கள் விவசாயிகள் ஆனால் பணம் படைத்தவர்கள் என்று காட்டுவதும் ஏற்புடையதாக இல்லை . இப்படி நாவலில் பல இடங்களை சுட்டி காட்டலாம் . நாவல் முழுக்க இப்படி பொது மனிதனின் சமூகம் கட்டமைத்த பொது புத்தியின் பார்வையில் பல விவரிப்புகளும் , அவதானிப்புகளும் , முன் தீர்மானங்களும் நாவலின் எழுத்தின் தரத்தை குறைத்து விடுகிறது , நாவலும் இலக்கியத்தன்மையில் இருந்து விலகி செல்ல தொடங்கிவிடுகிறது .
நாவலில் மகளிர் காவல் நிலையமும் அதற்குள்ளாகவும் வெளியேயும் சுழலும் உலகத்தை பதிவு செய்த விதமும் , அரசு மருத்துவமனைகள் குறிப்பாக ஒரு தாலுகா அளவிலான சிறிய மருத்துவமனைகளும் அங்கிருக்கும் பிரசவ வார்டுகள் இயங்கும் விதத்தையும் பதிவு செய்த விதத்திலும் ஆசிரியரின் களப்பணியும் உழைப்பும் தெரிகிறது . மகளிர் காவல் அதிகரிகளாகட்டும் , உயர் காவல் அதிகரிகளாகட்டும் அவர்களின் உடல்மொழியினை நாவலில் நுணுக்கமாக பதிவுசெய்தது சிறப்பு . குறிப்பாக காவலர்கள் SALUTE செய்யும் விதமும் எவ்வாறு நபருக்கு நபர் மாறுபடுகிறது என்றும் , உயர் அதிகரிகளிடையே நடக்கும் உரையாடல்களும் அதற்கு வெளிவட்டத்தில் அடுத்த நிலை அதிகாரிகள் அதனை விமர்சித்து பேசுவது என அந்த உலகம் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது .
இப்படி காவல் துறையும் மருத்துவத்துறையும் இந்த நாவலில் பெரும்பங்கு வகிப்பதனால் அதனை தெளிவான முறையில் உண்மைக்கு மிக நெருக்கமாக அதனை பதிவுசெய்த ஆசிரியர் கதையின் மையமான அந்த பெண்ணுடைய பார்வையையும் அவளுக்கு பின்னால் நிகழ்ந்த அந்த குற்றத்தின் பின்னனியையும் ஆழமாக பதிவு செய்யாமல் போனது நாவலுக்கு பாதகமாக அமைந்துள்ளது . அதற்கு நேரெதிராக அந்த பெண்ணை நாவலின் போக்கிற்காக உபயோகித்தது அதனினும் பாதகமான ஒன்று . அவளை MENTAL DISATER கொண்ட ஒரு நோயாளி என்று கூறுவதும் , அதற்காக அவள் பார்ப்பவர்கள் அனைவரையும் துன்புறுத்தி , வசை பாடி , வன்முறையின் வெளிப்பாடாக வர்ணித்தது ஆசிரியரின் மன நோய்களின் தன்மை பற்றிய அறியாமையையே காண்பிக்கிறது . MENTAL DISASTER என்ற வகைமையே மன நோய் பிரிவில் கிடையாது , மேலும் அவளுக்கு ஏற்பட்டது ஒரு PTSD ( POST TRAUMATIC STRESS DISORDER ) என்று வேண்டுமானால் சொல்லலாம் . அத்தகைய நோயாளிகள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள் அதீத மன அழுத்தம் கொண்டவர்களாகவும் , ஆழ்ந்த பேரமைதிக்குள்ளும் இருப்பார்கள் , தன்னை தானே துன்புறுத்திக்கொள்ளவோ அல்லது மாய்த்துக்கொள்ளவோ தான் முயற்சிப்பார்கள் . இதன் அடிப்படையில் நாவல் மையப்புள்ளியில் இருந்து விலகிச்செல்கிறது .
ஒவ்வொரு நாவலிலும் அது பேசும் கதையுலகத்தை தாண்டி நாவலாசிரியர் தன்னுடைய புனைவாற்றலை அந்த கதையின் ஆழத்தை ஆராய்வதற்கு எவ்வாறு பயன்படுத்தியுள்ளார் என்பதே முக்கியம் . நாவல் நடக்கும் நிலமாகட்டும் , அந்நிலத்தின் மக்களாகட்டும் அவர்களின் மொழி வாழ்க்கை முறை பண்பாடு பழக்க வழக்கங்கள் என இவையெல்லவற்றையும் நேரில் சென்று பார்த்து கேட்டு எழுதாவிடினும் தன்னுடைய புனைவாற்றலின் பலம் கொண்டு இவையெல்லவற்றையும் ஆழ்ந்து எழுத முடியும் . அப்படி இந்த நாவலிலும் அந்த பாதிக்கப்பட்ட பெண்ணுடைய உலகமும் அவளை பாதிப்புக்கு உள்ளாகிய குற்றவாளிகளின் உலகமும் அத்தகைய ஒரு ஆழ்ந்த எழுத்துக்கான இடம் தான் . ஆனால் , ஆசிரியரோ அந்த இடத்தை ஒரு பொது பார்வையில் நாவலுக்கு வெளியே இருந்து எழுதிப்பார்த்ததால் நாவல் அதன் மைய்ய புள்ளியை நோக்கி நகரவே இல்லை .
நாவலில் பல இடங்களில் ஒரே வாக்கியங்கள் பல முறை மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது . ஒரே விதமான காட்சிகளும் விவரணைகளும் இடம்பெறுகின்றன , ஒரு சில கதாபாத்திரங்கள் பேசியதே திரும்ப திரும்ப பேசுகின்றன . கதை ஒரு திசையில் சென்றுகொண்டிருக்க திடீரென அந்த ஊரின் வர்ணனையோ , செல்லும் பாதைகளை வர்ணிப்பதோ , அங்கு எதிர்ப்படும் மக்களை வர்ணிப்பதோ என வேறு திசையில் கதை திரும்பிவிடுகிறது . மேற்கூறிய காரணங்களால் நாவல் சற்று சலிப்பூட்ட தொடங்கிவிடுகிறது . கதையில் இடம்பெற்ற கதைமாந்தர்கள் யாவரும் தவறு செய்தவர்களாகவே சித்தரிக்கவேண்டும் என்பதற்காகவும் ,நாவலின் தலைப்பிற்கு ஏற்றவாறு அமைக்க வேண்டும் என்பதற்காகவும் திணித்தது போலவே தோன்றியது . சரி தவறு தான் நாவலின் மைய்யம் என்று எடுத்துக்கொண்டாலும் எந்த தவறையும் ஆழ்ந்து ஒரு விசாரணைக்கோ விவாதத்திற்கோ உட்படுத்தியதாக தெரியவில்லை மாறாக நாவல் முழுக்க கதாபாத்திரங்களின் சுய புலம்பல்களே எஞ்சியிருக்கிறது .
தப்பு என்ற தலைப்புடன் ஒரு புனைவு எழுதப்படும்போதே அதன் அடிநாதம் என்னவென்று அறிந்தே வாசகன் அக்கதையை வாசிக்க தொடங்குகிறான் . எனவே அதில் பல விதமான தவறுகளோ , பல விதமான தவறானவர்களோ இடம்பெற போகின்றனர் என்பதும் அறிந்ததே , ஆனால் அவர் யாருடைய பார்வையில் தவறானவர்கள் என்பதும் எது தவறு எந்த கணத்தில் எந்த காலத்தில் எது தவறு என்பதை அந்த கதையின் போக்கும் பாத்திரங்களிடையே நிகழும் உணர்வுபூர்வமான புனைவு சார்ந்த அனுபவங்களே உணர்த்த வேண்டும் , அதைத்தவிர்த்து நாவலில் ஒரு கதாபாத்திரம் காண்பவை அனைத்தையும் தவறு தவறு என்று சொல்வதாலோ , கதைமாந்தர்கள் வசை சொற்கள் பேசுவதாலோ , தன்னுடைய பதவியை கொண்டு அக்கணத்தில் தவறிழைப்பதை சுட்டிக்காட்டுவதாலோ தவறுகளாக வாசகனுக்கு சென்று சேர்ந்து விடும் என்று நினைப்பது தவறு . அதற்கு மாறாக எது தவறு என்பதை கதையும் கதை மாந்தர்களின் உணர்வுகளின் வழியாகவும் உரையாடல்களின் வழியாகவும் ஒரு விவாதமோ விசாரணைக்கோ இந்த நாவல் ஒரு வாசகனை உட்படுத்தி அதன் மூலம் அந்த கதையின் அடிநாதமான தப்பு என்பதை நிலைநிறுத்தியிருக்க வேண்டும் . இவையெதுவும் நாவலில் படைப்பின் வழி நிகழாததாலும் இலக்கிய வடிவத்திலிருந்து வெகு தூரம் விலகிச்சென்று வெறுமனே ஒரு pulp writing ஆக மட்டுமே எஞ்சி நிற்கிறது