இந்திய மாணவர் சங்கத்தின் துவக்க காலம் – (SFI)

இந்திய மாணவர் சங்கம் 1970 டிசம்பர் 30 ஆம்தேதி திருவனந்தபுரத்தில் தொடங்கப்பட்டது. அரைகோடி உறுப்பினர்களைக் கொண்டு சுதந்திரம் ஜனநாயகம் சோசலிசம் என்ற பதாகையை ஏந்தி மலர்ந்தது. 

இந்தியாவில் மாணவர் அமைப்பு அகில இந்திய அளவில் துவங்குவதற்கு முன்பே மாநில அளவில் உருவெடுத்து கேரளம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மாணவர் சங்கம் மாநில அளவில் வலுவான நிலையில் செயல்பட்டு வந்தது. தமிழக மாணவர் சங்கத்தின் முதல் மாநாடு மதுரை தமுக்கம் கலையரங்கில் 1968 ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் உயர்கல்வி படிக்க விரும்பும் அனைவருக்கும் கல்லூரிகளில் இடம் வேண்டும். விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப கல்வி வேண்டும். கல்லூரிகளில் தமிழ் மொழியை பாட மொழியாக்கிட வேண்டும். தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக மாணவர் சங்கம் வலியுறுத்தியது. 

தமிழக மாணவர் சங்கத்தின் 2ஆவது மாநாடு கோவை நகரில் 1970ஆம் ஆண்டு ஜனவரி 31, பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் நடை பெற்றது. 1968 முதல் அமைப்புரீதியாக செயல்பட்ட தமிழக மாணவர் சங்கம், திருவனந்தபுரத்தில் நடை பெற்ற இந்திய மாணவர் சங்கத்தின் அமைப்பு மாநாட்டில் சங்கமித்தது. அன்றையிலிருந்து இன்று வரை மாணவர்கள் நலனுக்காகவும் மாணவர்களின் உரிமைகளை மீட்டெடுக்க  தொடர்ச்சியாக போராடி வருகிறது.

1936 ஆகஸ்ட் 12இல் துவங்கப்பட்ட ஏஐஎஸ்எப் விடுதலைக்கு பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை தவறாக  கணித்தது. என்ற கருத்துக்கள் பல்வேறு மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டது அன்றைய காங்கிரஸ் அரசின் கொள்கைகள் இந்திய பெரும் முதலாளிகளுக்கும், நிலப்பிரபுக்களுக்கும் ஆதரவாக இருந்தன. எனவே புரட்சிகரத் தன்மை கொண்ட மாணவர்கள் மாநில அளவில் அமைப்புகளை உருவாக்கிச் செயல்படத் தொடங்கினர். 13 மாநிலங்களில் செயல்பட்ட இத்தகைய அமைப்புகளை ஒருங்கிணைத்தே 1970இல் ஒரே அமைப்பாக எஸ்எப்ஐ உருவானது. இன்று பல இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு தேசத்தின் தனிப் பெரும் மாணவர் அமைப்பாகத் திகழ்கிறது. வெளிநாடுகளில் கல்வி பயின்றுவரும் இந்திய குடியுரிமை கொண்ட மாணவர்கள் கணிசமான எண்ணிக்கையில் இணைந்துள்ளனர். பிரிட்டனில் மாணவர் சங்கக்கிளை உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை அறிவியல் பூர்வமாக அனைவருக்கும் இலவசமாகக் கிடைத்திட வேண்டும், என இன்று வரை தொடர் இயக்கங்கள் நடைபெறுகிறது, நகர்பகுதியிலிருந்து கடைகோடி கிராமங்கள் வரை கல்வியை கொண்டு செல்ல வேண்டும் என பிரச்சார இயக்கங்களை முன்னெடுத்து வருகிறது, ஆரம்பகாலகட்டத்தில் கல்வி முழுவதும் தனியார்மயமாவதை தடுத்திட நாடு முழுவதும் பெறும் போராட்டம் நடத்திட இந்திய மாணவர் சங்கம் அறைகூவல் விடுத்தது இதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் கடுமையான போராட்டங்கள் நடைபெற்றது. அரசு, பள்ளி, கல்லூரிகளை பாதுகாத்திட, கல்வி வியாபாரத்திற்கு எதிராக, மாணவர்களுக்கு விரோதமான கல்விக்கொள்கைக்கு எதிராகவும் மாணவர்களின் உரிமைகளை மீட்டெடுக்க  தொடர் போரட்டங்களை நடத்தி பல தியாகங்களால் உருவாக்கப்பட்ட அமைப்புதான் இந்திய மாணவர் சங்கம்.

எதிர்கால நோக்கம்

அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை என்ற லட்சியங்களோடு இன்று வரை மாணவர்களுக்கு அறிவியல் பூர்வமான, முற்போக்கு கல்வி முறையை நிலை நாட்டிடப் போராடும் அமைப்புதான் இந்திய மாணவர் சங்கம். நம் நாட்டின் மாணவர் சமூகத்திற்கு தலைமை தாங்கும் வரலாற்றுக் கடமையைத் தன் தோள்களில் ஏற்று நிறைவு செய்திடும் என்று இந்திய மாணவர் சங்கம் உறுதி கூறுகிறது. மாணவர் சமூகம் என்பது ஒட்டு மொத்த சமூகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். மாணவர் சமூகத்தின் வாழ்க்கை மற்றும் கல்வி முன்னேற்றம் என்பது, நமது சமூகத்தின் அனைத்து வகையான முன்னேற்றத்தையும் சார்ந்தே அமையும், எனவே, தேசத்தின் சமூக, அரசியல் பொருளாதார, மற்றும் கலாச்சார நிலைமைகளில் இருந்து விலகி நிற்காமல், அனைத்துத் துறைகளிலும் மிக வேகமான வளர்ச்சியும் முன்னேற்றமும் அடைய மாணவர்கள் பேரார்வத்துடன் செயல்படுவது இயல்பாகும்.

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு மேலாகியும் கூட, அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்பக்கல்வியை கொடுப்பதில் அரசாங்கங்கள் மிகவும் அப்பட்டமான தோல்வியை சந்தித்துள்ளது. இருந்த போதிலும்  அரசின் அலட்சியங்ளை தொடந்து எதிர்த்துப் போராடி வருகிறோம்.

இலட்சக்கணக்கான குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல ஆர்வமுடன் உள்ள போதிலும், அவர்களின் கடுமையான வறுமை காரணமாக குழந்தைத் தொழிலாளர்களாக வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். அவர்களின் சமூக, பொருளாதார நிலைமைகளில் முழுமையான மாற்றத்தை கொண்டு வராமல் குழந்தைத் தொழிலாளர் என்கிற மோசமான முறையை முடிவுக்கு கொண்டுவர முடியாது. அனைவருக்கும் ஆரம்பக் கல்வி என்ற இலக்கையும் எட்ட முடியாது, கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையில் என்ன தான் உயர்வு ஏற்பட்டாலும் அது குறிப்பிட்ட வசதிபடைத்த சிலருக்கு மட்டுமே பயனளிப்பதாக உள்ளது. 

மாணவர்களுக்கு எதிரான கல்விக்கொள்கையை மாணவர்கள் முற்றிலுமாக புறந்தள்ளுவார்கள் அதன் அடிப்படையில்தான் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள தேசிய கல்விக்கொள்கை 2020 இந்த கல்விக்கொள்கை குலக்கல்வி கொள்கையை ஊக்குவிக்கிறது 

தேசிய கல்விக் கொள்கை 2020

தேசிய கல்விக் கொள்கை மூன்று விஷயங்களை மையப்படுத்துகிறது கல்வி தனியார்மயம், காவிமயம், கல்வி முழுக்க முழுக்க மத்தியத்துவப்படுத்தும் நோக்கில் கொண்டு செல்கின்றனர், அந்நிய பல்கலைக்கழகத்திற்கு வழிவகுத்து கல்வியை லாபநோக்கில் செயல்படுத்த பன்னாட்டு முதலாளிகளுடன் கைகோர்த்து வணிகம் செய்யும் செயலை செய்து வருகிறது, சுயநிதிப் பாடங்களையும், பன்னாட்டு முதலாளிகளின் மூலதனத்தையும், இந்திய கல்வித்துறையில் நேரடியாக அனுமதிக்கிறது. இது இந்தியாவின் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களையும் மனிதவள வளர்ச்சி, சேவை சார்ந்த அரசின் பணியாகக் கருதாமல் நிதி, வியாபாரம், இலாபம் சார்ந்த செயல்பாடாக மாற்றி உள்ளது. இதன் அமலாக்கத்திற்கு பிறகு இந்தியா முழுவதும் 40 விழுக்காடு கல்விக் கட்டணம் உயர்ந்துள்ளது. மேலும் இணைய வழிக் கல்வியும், பயிற்சி வகுப்புகளும், போட்டித் தேர்வு பயிற்றுவிப்பு நிறுவனங்களின் எண்ணிக்கையும் புற்றீசல் போல அதிகரித்துள்ளன. தேசிய தேர்வு முகமையின் மூலம்  நீட், கியூட் போன்ற தேர்வுகளை வியாபாரமாக மாற்றியுள்ளது.  இலாபம் கொழிக்கும் தொழிலாக பயிற்சி வகுப்பு நடத்தும் நிறுவனங்கள் ஆக்கியுள்ளன. ஒன்றிய அரசின் இந்த முயற்சி அனைத்தும் புதிய புதிய நீட் பயிற்சி மையங்களை உருவாக்கி பெருமுதலாளிகள் இலாபமடைய வழிவகை செய்வதுதான்.

கல்வியில் காவிமயம் 

கல்வியில் காவியை புகுத்துவதற்கான நடவடிக்கையாக இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள மத்திய மற்றும் மாநில பல்கலைக்கழகங்களில் ஆர்எஸ்எஸ் பரிவாரத்தை சார்ந்த நபர்களை துணை வேந்தர்களாக நியமித்து வருகிறது. மேலும்  வேந்தராக இருக்கும் ஆளுநர்களும் சங்பரிவாரத்தைச் சார்ந்தவர்களாக இருப்பதால் இந்நிலை மேலும் மோசமடைந்துள்ளது. எனவேதான் தமிழகம், கேரளம் போன்ற மாநிலங்கள் மாநில ஆளுநர்களை வேந்தர் பொறுப்பில் இருந்து நீக்கும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளனர்.  இந்திய வரலாற்றை மனுவாத அடிப்படையில் திரித்து வருகிறது. சனாதன கோட்பாடுகளையும், வைதீக மரபுகளையும் இந்தியாவின் வரலாறாக மாற்றும் நடவடிக்கையை செய்து வருகிறது. சமீபத்தில் காசி தமிழ் சங்கமம் என்ற பெயரில் இத்தகைய வரலாற்று திரிபையே அரங்கேற்றியது. 
ஒன்றிய அரசின் தவறான கல்விக்கொள்கைக்கு எதிராக நாம் தொடர்ச்சியாக போராடி வருகிறோம் மக்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் கிளர்ச்சி பிரச்சாரங்கள் செய்யவேண்டியுள்ளது,  இந்திய மாணவர் சங்கத்தின் வரலாற்றில் மாணவர்கள் நலனில் முழு அக்கறைகொண்டு பொதுக் கல்வியை பாதுகாத்திட, அனைவருக்குமான கல்வியை உறுதி செய்திட, அறிவியல் பூர்வமான முற்போக்கான ஜனநாயகத் தன்மை கொண்ட பன்முகப்பட்ட கல்வியை உருவாக்க இந்திய மாணவர் சங்கம் கடந்த 54 ஆண்டுகளாக போராடி வருகிறது. இத்தகைய போராட்டத்தில் இந்துத்துவா பயங்கரவாதிகளையும், வலதுசாரி அடிப்படைவாத கும்பல்களையும் எதிர்த்தும் தொடர்ந்து போராடி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *