இந்தியாவில் கம்யூனிச இயக்கம் – ஒர் அறிமுகம்

தத்துவஞானிகள் பலரும் உலகில் நிலவும் வறுமை, ஏற்றத்தாழ்வு, சமநிலையற்ற தன்மை குறித்து விரிவாக, அதற்கான விளக்கத்தை எடுத்துக்கூறினர். ஆனால் காரல் மார்க்ஸ் மட்டுமே அத்தைகைய நிலைகளை போக்குவதற்காக தீர்வையும் விஞ்ஞான பூர்வமாக  கண்டுபிடித்தார். அவர் எழுதிய மூலதனம் நூல் மூன்று தொகுதியும், உபரி மதிப்பு பற்றிய மூன்று நூல்களும் உலக அளவில் அதிகம் படிக்கப்பட்ட நூல்கள் ஆகும். இன்றைய உலக நிலையில் மார்க்சின் மூலதனம் மிகவும் பயன்படக்கூடியது என்று போப் ஆண்டவராலேயே உயர்த்தி பிடிக்கப்பட்டுள்ளது. பொதுவாக சமத்துவத்தை வலியுறுத்தும் பொதுவுடைமை கருத்துகள் உலக அளவில் பலராலும் எடுத்து சொல்லப்பட்டுள்ளன. இந்தியாவில் புத்தர் மகாவீரர் தொடங்கி, தமிழகத்தில் வள்ளுவர் தொடங்கி சித்தர்கள், நாராயண குரு வள்ளலார், பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை, தமிழ்ஓளி என பலரும் சமத்துவ, சாதி பேதமற்ற ஒரு சமூகத்தை கனவு கண்டவர்களே. எனினும் அதனை நடைமுறை சாத்தியமாக்கியது கம்யூனிசம் மட்டுமே. ஏட்டிலே இருந்த தத்துவத்தை நடைமுறைக்கு கொண்டுவந்து எந்த தேசத்திலும் மார்க்சீயம் அமுல்படுத்தக்கூடிய தத்துவமே என்பதை மாமேதை லெனின் சோவியத் யூனியனில் நிரூபித்துக்காட்டினார். சோவியத் யூனியனில் நடந்த அக்டோபர் புரட்சி மன்னராட்சிக்கு முடிவு கட்டியது.  அதன் மூலம் சோவியத்யூனியனில் அமுலான சோஷலிசம் உலகம் முழுவதும் போராடும் மக்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக அமைந்தது. 

இந்திய கம்யூனிஸ்டு கட்சி உதயம்

காலனிநாடுகளில் விடுதலை வேண்டி போராடிய கோடிக்கணக்கான இளைஞர்களை ரஷ்ய புரட்சி ஈர்த்தது. இந்திய இளைஞர்களும் அதற்கு விதிவிலக்கல்ல. ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்த இளைஞர்கள் பலரும் காலனி ஆதிக்கத்தை இந்தியாவில் ஒழித்துக்கட்ட ஆயுதந்தாங்கிய இயக்கத்தை கட்டுவது முதல் பல்வேறு தீவிரவாத நடவடிக்கைளில் ஈடுபட்டுவந்தனர். ரஷ்ய புரட்சி இவர்களை ஈர்த்தது. அதை அறிந்து கொள்ள பலரும் சோவியத் யூனியனுக்கு பயணமானார்கள். இப்படி சென்றவர்கள் பலரும் கம்யூனிசத்தால் ஈர்க்கப்பட்டு கம்யூனிஸ்டுகளாயினர். மார்க்ஸ் தலைமையில்  முதலாவது கம்யூனிஸ்டு அகிலம் என்று சொல்லப்படும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டமைப்பில் இந்தியாவையும் அங்கத்தினராக்க வேண்டுமென்ற கோரிக்கை கல்கத்தாவில் இருந்த ஒருவரால், தொழிலாளி வர்க்கம் இந்தியாவில் வளர்ச்சி பெறுமுன்பே 1871லேயே முன்வைக்கப்பட்டது. மார்க்ஸ் இந்த கோரிக்கையை வரவேற்றதோடு, அது இந்திய தன்மையுடன் இருக்கவேண்டுமென்று கடிதம் எழுத பணித்ததாகவும் வரலாறு கூறுகிறது. 

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் இந்தியாவில் தொழிலாளி வர்க்கம் வளர்ச்சியடைந்த காலமாகும். பிரிட்டீஷார் தங்கள் வணிக நலனுக்காக இந்தியாவில் இருப்புப்பாதை அமைத்தனர். இதை பிரிட்டீஷார்  அறியாமலேயே இந்தியாவுக்கு செய்த உதவி என்று மார்க்ஸ் கூறினார். இந்த இருப்புபாதை இந்தியர்களை ஒன்றிணைப்பதோடு, எதிர்காலத்தில் அவர்களின் போராட்டத்திற்கும் பேருதவியாய் இருக்கும் என்று மார்க்ஸ் மதிப்பிட்டார். ரயில்வே, பஞ்சாலை, ரப்பர். தேயிலை என பல துறைகளில் வேலை செய்த ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் மூலம் இந்தியாவில் தொழிலாளி வர்க்கம் வளர்ச்சி கண்டு வந்தது. 1908 ஆம் ஆண்டு பம்பாயில் ஏகாதிபத்திய எதிர்ப்பு தலைவரான பாலகங்காதர திலகர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து பம்பாயில் உள்ள பஞ்சாலை தொழிலாளர்கள் பிரம்மாண்டமான பொது வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தினர். தொழிலாளி வர்க்கத்தின் பங்கேற்பை வரவேற்ற மாமேதை லெனின்” இது இந்திய தொழிலாளி வர்க்கமானது அரசியல் அரங்கத்துக்குள் பிரவேசிக்கும் குறிப்பட்டக்கூடியதோர் நிகழ்ச்சியாகும்” என்று வர்ணித்தார். இக்காலத்தில் வெறுக்கத்தக்க காலனி ஆதிக்கத்தை எதிர்க்க ஆயுதம் தாங்கிய குழுக்களை உருவாக்குவதில் பல இளைஞர் குழுக்கள் ஈடுபட்டன. அதில் குறிப்பிட வேண்டிய ஒரு குழு “கதார் இயக்கம்” ஆகும். 1913ம் வருடத்தில் அமெரிக்கா மற்றும் கனடாவில் குடியேறிய பஞ்சாபியர்கள் பலரும் கதார் கட்சி என்ற ஒரு கட்சியை தொடங்கினார்கள். அதன் மூலம் ஆயுதங்களை திரட்டி இந்தியாவுக்கு கொண்டுவந்து பிரிட்டீஷாருக்கு எதிராக போராட வேண்டும் என்பதே அவர்களின் லட்சியமாகும். அதன்படி காம கட்டமாரு என்ற ஒரு கப்பலை வாங்கி அதில் ஆயுதங்களை அனுப்பி வைத்தனர். ஆனால் பிரிட்டீஷாரால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டு புரட்சியாளர்கள் அனைவரையும் கைது செய்துவிட்டது. இவர்களில் பலரும் பின்னாளில் கம்யூனிஸ்டுகளாக மாறி கம்யூனிச இயக்கத்தை வளர்த்தனர். 1918ல் பிரிட்டீஷ் அரசு தனக்கெதிராக எழும் போராட்டங்களை ஒடுக்க ரௌலட் சட்டத்தை கொண்டுவந்தது. இதை எதிர்த்து பஞ்சாபில் ஜாலியன்வாலா என்ற பூங்காவில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தை மிருகத்தனமாக அடக்கி, குண்டு தீரும் வரை சுட்டேன் என்று ஜெனரல் டயரை கொக்கரிக்க வைத்தது. அடக்குமுறைக்கு அஞ்சாமல் காலனித்துவாதிகளுக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்தது.  இதே காலத்தில்  தங்கள் இசுலாமிய மத தலைமையான காலிப்புகளுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக முகாஜிர்கள் என்று அழைக்கப்படும் முஸ்லீம்கள் கிலாபத் இயக்கத்தை தொடங்கி பிரிட்டீஷாருக்கு எதிராக போராடினர்.

ஏற்கனவே தோழர் லெனின் தலைமையில் கூடிய இரண்டாவது கம்யூனிஸ்டு அகிலம் காலனி நாடுகளில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடும் அனைத்து இயக்கங்களுக்கும் ஆதரவளிக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. இதனால் ஈர்க்கப்பட்ட முகாஜிர்கள் உட்பட  புரட்சியாளர்கள் பலரும் சோவியத்யூனியன் நோக்கி அணிவகுத்தனர். அவர்கள் அங்கே வரவேற்கப்பட்டனர். அரசியல் கல்வியும், மார்க்சீயம் குறித்தும் கற்றுத்தரப்பட்டன. அதன் மூலம் தெளிவடைந்த பலரும் கம்யூனிஸ்டுகளாக மாறினர். இதே நேரத்தில் லெனின் தலைமையில் நடந்த இரண்டாவது அகிலத்தில் எம்.என்.ராய் என்ற இந்தியர் மெக்சிகோ கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பிரதிநிதியாய் பங்கேற்றார். இவரும் ஆயுதங்களை சேகரித்து பிரிட்டீஷாருக்கு எதிராக போராட மெக்சிகோ சென்றவர்தான். பின்னர் அங்குள்ள சோஷலிஸ்டு கட்சியில் சேர்ந்து அதன் பொதுச்செயலாளராக மாறினார். அதன்பின் கம்யூனிஸ்டு கட்சியிலும் இணைந்து அதன் முக்கிய தலைவரானார். காலனி நாடுகளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டம் நடத்துபவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டுமென்று லெனின் கொண்டுவந்த தீர்மானத்தில் இவரும் பங்கேற்றார், பின்னர் இந்தியாவுக்கான ஒரு கம்யூனிஸ்டு கட்சியை நிறுவ வேண்டுமென அங்குள்ள இந்தியர்கள் முடிவெடுத்தனர். 

அதன்படி தாஷ்கெண்டில் 1920ம் ஆண்டு அக்டோபர் 20ம் நாள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துவக்கப்பட்டது. இதன் கிளை செயலாளராக முகமது ஷாபிக் சித்திக் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்ற ஆறு உறுப்பினர்கள் வருமாறு 1) எம்,என்.ராய் 2) அவர் மனைவி ஈவ்லின் 3)ரோசா பிட்டிங்ஸ் 4)முகம்மது அலி. 5)எம்.என், முகர்ஜி 6) ஆச்சார்யா (பிரதிவாதி பயங்கரம், தமிழ்நாட்டைச்சேர்ந்தவர்). இவர்களில் இரு பெண்களைத்தவிர அனைவரும் இந்தியர்கள் ஆவர்.

இந்தியாவில் பரவிய கம்யூனிச இயக்கம்

தொடங்கப்பெற்ற முதல் கிளையில் மேலும் பலர் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர். இவர்கள் இந்தியாவுக்கு திரும்பி வந்து கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைகளை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அதற்காக அவர்கள் அரசின் பல்வேறு இடையூறுகளையும், அடக்குமுறைகளையும் சந்திக்கவேண்டி வந்தது. கம்யூனிஸ்டுகளின் கட்சிப்பணியை முளையிலேயே கிள்ளியெறிய உறுதி பூண்ட பிரிட்டீஷ் அரசு ஒரு பொய் வழக்கை 1922ல் கம்யூனிஸ்டுகள் மீது போட்டது. இதற்கு பெயர்” தாஷ்கெண்ட் சதி வழக்கு” ஆகும். ஆனாலும் சோர்ந்து போகாமல் கம்யூனிஸ்டுகள் இக்காலத்தில் பிரசுரங்களை வெளியிடுவது, பத்திரிகைகளை வெளியிடுவது என்ற பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர். பிரிட்டீஷ் கம்யூனிஸ்டு கட்சி இவர்களுக்கு பேருதவியாக இருந்தது. அப்படி உதவியர்களில் முக்கியமானவர் இந்தியாவை பூர்விகமாக கொண்ட ரஜினி பாமிதத் என்ற அறிஞர். இவர் இந்தியா பற்றி எழுதிய நூல்கள் இந்தியாவின் அரசியல் சமூக பொருளாதார நிலையை சரியான கோணத்தில் புரிந்துகொள்ள இந்திய இளம் கம்யூனிஸ்டுகளுக்கு உதவியாக இருந்தது. இவரோடு மற்ற பிரிட்டீஷ் கம்யூனிஸ்டுகளான பிலிப் ஸ்பிராட், பென் பிராட்லி, லெஸ்டர் ஹட்சின்சன் ஆகியோரும் இந்திய கம்யூனிஸ்டுகளுக்கு உதவினர்.

கம்யூனிஸ்ட்டுகளின் தளராத முயற்சியால் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் குழுக்கள் துவங்கப்பட்டன. 1922ம் வருடம் பம்பாயில் எஸ்ஏ டாங்கேவின் முயற்சியில் ஒரு குழு உருவானது. இவர் காந்தியும் லெனினும் என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதினார். சோஷலிஸ்ட் என்ற பெயரில் ஒரு பத்திரிகையும் தொடங்கப்பெற்றது. அதே போன்று கல்கத்தாவில் முசாபர் அகமது ஒரு குழுவைத்தொடங்கி கணவாணி என்ற பத்திரிகையை தொடங்கினார். தாஷ்கெண்டில் துவங்கப்பட்ட முதலாவது கட்சி கிளையில்  இருந்த சவுகத் உஸ்மானி என்பவர் இந்தியாவுக்கு வந்து காசியில் பல குழுக்களை உருவாக்கினார். லாகூரில் குலாம் உசேன் என்பவரால் கட்சிக்கிளை உருவாகியதுடன் இன்குலாப் என்ற பத்திரிகையும் தொடங்கப்பெற்றது. கதார் இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்த பல பஞ்சாப் தோழர்களும் பஞ்சாபில் கிளைகளை உருவாக்கினார்கள். தென்னிந்தியாவில் சென்னையில் சிங்காரவேலர் ஒரு குழுவை உருவாக்கியதுடன் தொழிலாளி விவசாயி கெஜட் என்ற பெயரில் பத்திரிகையும் வெளியிட்டார். வெளிநாட்டிலும் பத்திரிகைகள் தொடங்கப்பெற்று இந்தியாவுக்குள் வினியோகம் செய்யப்பட்டது. இப்படி ஏகாதிபத்திய எதிர்ப்பிலும், தேசீய விடுதலைக்கான பிரசாரங்களிலும் அன்றைய இளங்கம்யூனிஸ்டுகள் தீவிரமாக செயல்பட்டனர். அத்துடன் தொழிலாளர்களை அணிதிரட்டுவதில் ஈடுபட்டு 1920 ல் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் என்ற அமைப்பை உருவாக்கவும் காரணமாக இருந்தனர்.

1921ல் நடைபெற்ற ஆமதாபாத் காங்கிரசு மாநாட்டிலும், 1922 ல் நடைபெற்ற கயா காங்கிரசு மாநாட்டில் “ பூரண சுதந்திரம்” வேண்டும் என்ற கோரிக்கையை உள்ளடக்கிய வேண்டுகோள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரால் மாநாட்டில் வினியோகம் செய்யப்பட்டது. கம்யூனிஸ்டுகளின் நடவடிக்கைகளால் கலவரமடைந்த பிரிட்டீஷ் அரசு “ கான்பூர் சதி வழக்கு” என்ற பொய் வழக்கை புனைந்து நாடு முழுவதும் கம்யூனிஸ்டுகளை வேட்டையாடியது. வயது முதிர்ந்த தமிழ்நாட்டின் சிங்காரவேலரும் இந்த சதிவழக்கில் சேர்க்கப்பட்டிருந்தார். இதனால் கம்யூனிஸ்டு கட்சி என்ற பெயரால் பகிரங்கமாக செயல்பட முடியாத நிலைமையில், மக்கள் மத்தியில் அரசியல் பணியில் ஈடுபட  தொழிலாளி விவசாயிகள் கட்சி என்ற பெயரில் கட்சி தொடங்கி வங்காளம், பஞ்சாப், பம்பாய், உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் செயல்பட்டனர்.

நாடு முழுவதும் சிதறிகிடக்கும் குழுக்களை ஒன்றிணைத்து ஒரே கட்சியாக செயல்பட 1925ல் சத்திய பக்தா என்பவர் கான்பூரில் ஒரு மாநாட்டை கூட்டுவதாக அனைவருக்கும் அழைப்பு அனுப்பியிருந்தார். சிங்காரவேலர் தலைமையில் நடந்த அந்த மாநாடு எஸ்வி காட்டே, ஜேபி பாகா ஹட்டா ஆகிய இருவரை செயலாளராக தேர்ந்தெடுத்தது. பிரிட்டீஷ் அரசாங்கத்தின் தொடர் அடக்குமுறையினால் இந்த அமைப்பு தொடர்ந்து செயல்பட முடியவில்லை. ஆனால் வெகுஜன நடவடிக்கைகளில், தொழிற்சங்க பணிகளில் கம்யூனிஸ்டுகள் முனை முகத்தில் நின்று ஏகாதிபத்தியத்திற்கு எதிராக விடுதலை முழக்கங்களை தொடர்ந்து எழுப்பிக்கொண்டிருந்தனர்.1924 முதல் 1929 முடிய காலகட்டத்தில் இந்தியா பெரும் போராட்ட அலைகளை கண்டது. பம்பாயில் 1928ல் ஒன்னரை லட்சம் பஞ்சாலை  தொழிலாளர்கள் கலந்துகொண்ட வீரஞ்செறிந்த பொது வேலைநிறுத்தம் நடந்தது. ரெயில்வேயிலும் வேலைநிறுத்தங்கள் வெடித்தன. 1929ம் வருடத்தில் மட்டும் சுமார் 5லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்ற 200 க்கும் மேற்பட்ட வேலைநிறுத்தங்கள் நடந்தன. இவற்றில் கலந்துகொண்ட தொழிலாளர்கள் மத்தியில் “ இந்தியாவுக்கு பூரண சுதந்திரம்” வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்தியாவில் இந்த கோரிக்கையை முதலில் எழுப்பியவர்கள் கம்யூனிஸ்டுகளும், தொழிலாளி வர்க்கமுமே.

இரண்டு சதி வழக்கு போட்டும் அடக்க முடியாத கம்யூனிஸ்டுகளை ஒடுக்க ஒரு பெரிய சதி வழக்கை போட பிரிட்டீஷ் அரசு முடிவு செய்தது. அதே சமயம் அதற்கு பெரிய விளம்பரமும் கிடைக்காத அளவுக்கு அதை சின்ன நகரத்தில் நடத்திடவும் முடிவு செய்து மீரட் நகரை தேர்வு செய்தது. “ மீரட் சதி வழக்கு” என்ற பிரசித்த பெற்ற பொய் வழக்கை  முக்கிய 31 கம்யூனிஸ்ட் தலைவர்கள் மீது சுமத்தியது. இதில் கம்யூனிஸ்டுகளுடன் இடதுசாரி தீவிரவாத தலைவர்களும் சேர்க்கப்பட்டிருந்தனர். கிட்டத்தட்ட 1929 முதல் 1933 முடிய நான்கு வருடங்களுக்கு மேல் இந்த வழக்கு நடந்தது. பிரிட்டீஷ் அரசின் எதிர்பார்ப்பிற்கு மாறாக நாடு முழுவதும் இந்த வழக்கு பிரபலமடைந்தது. கம்யூனிஸ்டுகள் நீதிமன்றத்தில் வெளியிட்ட அறிக்கை நாடு முழுவதும் பரவலாக வினியோகம் செய்யப்பட்டு, கம்யூனிஸ்டு கட்சியின் கொள்கை பிரகடனமாக அது மாறியது. மீரட் சதி வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டது. இதில் நேரு மீரட் சதிவழக்கு கைதிகளுக்கு ஆதரவாக வாதிட்டார். பிரிட்டீஷாருக்கு எதிராக ஆயுதமேந்த வேண்டும் என்று செயல்பட்ட பல தீவிரவாத குழுக்களும் போர்க்குணத்துடன் செயல்பட்ட பல இளைஞர்களும் மீரட் சதி வழக்கின் பால் ஈர்க்கப்பட்டனர்.

  நவஜவான்சபா என்ற ஓர் அமைப்பை துவங்கி இளம்வீரர் பகத்சிங் போராடி வந்தார். ஜாலியன்வாலா படுகொலையை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் கடும் தாக்குதலுக்கு ஆளான லாலா லஜபதிராய் உடல்நிலை மோசமடைந்து மரணமடைந்தார். அதற்கு பழிவாங்க பகத்சிங்கும் அவரின் தோழர்களும் தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டனர். கிட்டத்தட்ட அந்த நேரத்தில் பகத்சிங் மார்க்சீயம் குறித்து பல விவரங்களை கற்றறிந்த காரணத்தால் வன்முறை போக்கை கைவிட்டுவிட்டார். தனது இயக்கத்திற்கு இந்துஸ்தான் சோஷலிஸ்ட் குடியரசு கட்சி என்று பெயர் மாற்றினார். சோவியத்யூனியனில் கடைப்பிடிக்கப்பட்ட சோஷலிசமும், அதற்கு காரணமான லெனினும் அவரை பெரிதும் கவர்ந்தனர். 1928ம் ஆண்டு பொதுமக்கள் பாதுகாப்பு மசோதா என்ற ஒன்றை பிரிட்டீஷ் அரசு கொண்டுவந்தது. இது இந்திய கம்யூனிஸ்டுகளுக்கு உதவி வந்த பிரிட்டீஷ் கம்யூனிஸ்டுகளை தண்டிக்க வழி செய்யும் மசோதா. மற்றொன்று தொழிற் தகராறுகள் மசோதா. தொழிற்சங்கங்களில் செயல்படும் கம்யூனிஸ்டுகளை வேரறுக்கவும், தொழிற்சங்க உரிமைகளை பறித்து, தொழிற்சங்கங்களை ஒடுக்கவும் இந்த மசோதாவை கொண்டுவந்தது.

  இந்த இரண்டு மசோதாக்களையும் பகத்சிங் எதிர்த்தார். மீரட் கைதிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். இந்த கோரிக்கைகள் கொண்ட பிரசுரங்களை மத்திய சட்டசபையில் வீசி எறிந்தார். பகத்சிங்கும் அவரது தோழர்களும் பிரதிநிதிகள் இல்லாத இடமாக பார்த்து  வீர்யம் குறைந்த வெடிகுண்டுகளை வீசியதோடு “ இன்குலாப் ஜிந்தாபாத்” என்று முழங்கினர். அந்த நேரத்தில் பகத்சிங் ஒரு கம்யூனிஸ்டாகவே மாறியிருந்தார்.  தூக்குமேடைக்கு செல்வதற்கு முன் அவரை அழைக்கவந்த சிறை அதிகாரிகளிடம், சற்று பொறுங்கள் ஒரு புரட்சியாளனோடு நான் பேசிக்கொண்டிருக்கிறேன் என்று கூறினாராம். ஆம் அவர் படித்து உரையாடிய புத்தகம் லெனின் எழுதிய அரசும் புரட்சியும் ஆகும். பின்னர் சிறையிலிருந்து மீண்ட அவருடைய தோழர்கள் பலரும் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். அவருடைய சகா சிவவர்மா கடைசி வரை மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்தார். இவர்தான் பகத்சிங்கின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்.  காந்தி நடத்திய இயக்கங்களின் மீது ஈர்ப்பு குறைந்த இளைஞர்களும், சிறையில் அடைக்கப்பட்ட காங்கிரஸ் இளைஞர்கள் பலரும், அங்கு சக கைதிகளாக இருந்த கம்யூனிஸ்டுகளிடம் பெற்ற தத்துவ தெளிவும், சோஷலிச கருத்துகள் பால் அவர்களை ஈர்க்க வைத்தது. பலர் கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்தனர். சிலர் காங்கிரசுக்குள்ளேய காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி என்ற ஒன்றையும் துவக்கி நடத்தினர். 

மீரட் சதி வழக்கில் விடுதலை பெற்று வெளியே வந்த கம்யூனிஸ்டுகள், கட்சி அமைப்பை ஒன்றுபடுத்த விரும்பினர். அதன் விளைவாக 1933 ம் வருடம் ஒரு மத்தியக்குழு ஒன்றை உருவாக்கினர்.ஒரு கட்சி மையம் உருவானது. அமைப்புரீதியாக செயல்படும் சூழ்நிலை உருவானதும் கட்சியின் பணிகள் திட்டமிடப்பட்டு வெகுஜன மக்களிடையே பரவலாக பல்வேறு அமைப்புகளின் மூலம் கொண்டுபோகும் வாய்ப்பு உருவானது. போடப்பட்ட மூன்று சதிவழக்குகளையும் மீறி கம்யூனிஸ்ட் கட்சி வளரத்தொடங்கியதை இனியும் அனுமதிக்க கூடாது என்று பிரிட்டீஷ் அரசு ஒரு முடிவுக்கு வந்தது. அதன் விளைவாக கம்யூனிஸ்ட் கட்சியை 1934 ம் ஆண்டு தடை செய்தது. வேறு வழியின்றி கம்யூனிஸ்டுகள் தலைமறைவாக செயல்படவேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. 

இக்காலத்தில் உலக அளவில் ஒரு முக்கிய நிகழ்வு நடந்தது. 1935ல் கூடிய கம்யூனிஸ்டு அகிலத்தின் ஏழாவது மாநாடு ஒரு முக்கிய தீர்மானத்தை நிறைவேற்றியது. பாசிச போக்கில் செயல்படும் அரசுகளுக்கு எதிராக இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் தீவிர போராட்டங்கள் நடந்த வண்ணம் இருந்தன. உலக சமாதானத்தை பாதுகாக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டதை உணர்ந்த கம்யூனிஸ்டு அகிலத்தின் மாநாடு, உலகம் முழுவதும் ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியை உருவாக்கவேண்டிய தேவையையும், அதை கட்டுவதற்கான ஐக்கிய முன்னணி தந்திரத்தையும் வகுத்தது. குறிப்பாக சகல குடியேற்ற நாடுகளில் இந்த முன்னணி அமைக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி அறைகூவல் விடப்பட்டது. இந்தியாவில் ஐக்கிய முன்னணி உருவாக்குவதற்கான ஒரு அறிக்கையை பிரிட்டீஷ் கம்யூனிஸ்டுகளான ரஜினி பாமிதத் மற்றும் பென் பிராட்லி தந்தனர். இந்த ஆவணம் பென்-பிராட்லி அறிக்கை என்று அறியப்படுகிறது. இந்திய சூழலில் ஐக்கிய முன்னணி உருவாக்குவது எப்படி என அதில் சுட்டிக்காட்டப்பெற்றிருந்தது. 

இதன்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு கூடி இந்தியாவின் நடப்பு சூழலுக்கேற்ப ஐக்கிய முன்னணி அமைக்க முயற்சி செய்வது என்றும், காங்கிரசில் இணைந்து வேலை செய்வதன் மூலம் காங்கிரஸ் இயக்கத்தை ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியாக உருவாக்கவும் முடிவு செய்து அதை அமுல்படுத்த தொடங்கியது. அதன்படி ஏராளமான கம்யூனிஸ்டுகள் காங்கிரசில் இணைந்து பணியாற்ற தொடங்கினர். அவர்களின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பால் பல கம்யூனிஸ்டுகள் காங்கிரசின் முக்கிய தலைவர்களாக மாறினர். காங்கிரசுக்குள் செயல்பட்டுக்கொண்டிருந்த காங்கிரஸ்சோஷலிஸ்ட் கட்சியுடனும் இணைந்து செயல்பட்டனர்.

கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்த போதிலும், 1936-39 காலகட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர்கள் மக்கள் மத்தியிலும், தொழிலாளர்கள் மத்தியிலும் தீவிரமாக செயல்பட்டு செல்வாக்கு மிக்க தலைவர்களாக ஆனார்கள். 1936 ஆம் ஆண்டில் காங்கிரசில் உள்ள இடதுசாரிகளையும் இணைத்துக்கொண்டு அகில இந்திய விவசாய சங்கத்தை உருவாக்கிய முக்கிய நிகழ்வும் நடந்தது. அதே வருடம் அகில இந்திய மாணவர் சம்மேளனமும் கம்யூனிஸ்டுகளின் முயற்சியால் உருவானது. யுத்த கால நடைமுறைகளை பிரிட்டீஷ் அரசு பின்பற்றி தன்னுடைய சுரண்டல் நடவடிக்கையை தீவிரப்படுத்த அனைத்து பிரிவினர் மீதும் அடக்குமுறையை பிரயோகம் செய்தது. இதற்கெதிராக கம்யூனிஸ்டுகள் தீரத்துடன் போராடினர். மக்களும் அவர்கள் பின்னே அணிதிரண்டனர். இதனால் அடுத்த இரண்டு ஆண்டுகளிலேய விவசாய சங்க எண்ணிக்கை ஐந்தரை லட்சத்தை எட்டியது. அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசின் உறுப்பினர்களும் இக்காலத்தில் ஏராளமான போராட்டங்களை நடத்தினர்.1937-38 ம் ஆண்டுகளில் மட்டும் 379 வேலைநிறுத்தங்கள் நடந்தன.1936ல் வங்கத்தில் நடைபெற்ற சணல் தொழிலாளர்கள் போராட்டமும், பம்பாயில் 1929, 1937களில் வீரஞ்செறிந்த பஞ்சாலை போராட்டங்களும் நடந்தன. இந்த போராட்டங்களில் யுத்த எதிர்ப்பு கோஷம் பெருமளவு எழுப்பப்பட்டது. இந்த போராட்டங்கள் அனைத்திலும்  கம்யூனிஸ்டுகளே முக்கிய பங்கு வகித்தனர். தேசீய முன்னணி என்ற பெயரில் ஒரு பத்திரிகையும் தொடங்கி நடத்தினர். 

சுதந்திரப்போர் தீவிரமடைகிறது

1939ல் இரண்டாம் உலக யுத்தம் தொடங்கியது. இந்த யுத்த சூழலை பயன்படுத்தி ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தை தீவிரப்படுத்த காங்கிரசிடம் கம்யூனிஸ்டுகள் கோரிக்கை வைத்தனர். அச்சு நாடுகளுக்கும் நேச நாடுகளுக்கும்  இடையே நடக்கும் யுத்தமிது என்று கணித்த காங்கிரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது. யுத்த சூழலை பயன்படுத்தி சுதந்திர போராட்டத்தை தீவிரப்படுத்த முன்வரவில்லை. யுத்த நிலையை காட்டி தொழிலாளர் விவசாயிகள் என அனைவரையும் கசக்கி பிழிந்து வேலை வாங்கி பிரிட்டீஷ் அரசு கொடுமைபடுத்தியது. இதற்கெதிராக பெரும் போராட்டங்களை நடத்திய கம்யூனிஸ்டுகள் அனைவரையும் காராகிருகத்தில் பிரிட்டீஷ் அரசு அடைத்தது. கட்சி தடை செய்யப்பட்டிருந்த நிலையிலும் கம்யூனிஸ்டுகள் பிரிட்டீஷாரின் அடக்குமுறையை எதிர்த்து சிறைவாசத்தை ஏற்றனர்.

1941 ம் வருடம் யுத்த நிலைமையில் ஒரு முக்கிய அடிப்படை மாற்றம் நிகழ்ந்தது. ஐரோப்பிய நாடுகளில் இங்கிலாந்தை தவிர அனைத்தையும் தன் வசமாக்கியது ஹிட்லரின் நாஜிப்படை. இந்த வெற்றி மயக்கம் தலைக்கேறிய ஹிட்லர், தன்னுடைய அடுத்த இலக்காக சோவியத் யூனியன் மீது போர் தொடுத்தான். அதை மனதளவில் அமெரிக்காவும், பிரிட்டனும் மகிழ்ச்சியுடன் பார்த்தன. முதலாளித்துவத்திற்கு கம்யூனிசத்தின் அழிவே முக்கியமாக இருந்தது. உலகில் முதன்முதலாக நிறுவப்பட்ட தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலான அரசு தோற்றால், அது உலகம் முழுவதும் சோவியத் யூனியன் இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் போராடும் கோடானு கோடி தொழிலாளர்களின் எதிர்காலம் இருண்டு போகும் என்பதை உலகம் முழுவதும் கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல, இதர இடதுசாரி ஜனநாயக வாதிகளும் உணர்ந்தனர். ஏன் நேருவும் கூட இந்த கவலையை பகிர்ந்து கொண்டார். எனவே யுத்தத்தின் தன்மை தற்போது மக்கள் யுத்தமாக மாறிவிட்டது என முடிவெடுத்த கம்யூனிஸ்டுகள் யுத்தத்தில் நேச நாடுகள் பக்கம் நிற்க முடிவெடுத்து இங்கிலாந்துக்கு ஆதரவாக நின்றனர். காங்கிரசையும் அவ்வாறே நிற்க கோரினர். ஆனால் காந்தி சோவியத் யூனியனுக்கு தன் அனுதாபத்தை தெரிவித்தாரே தவிர அதற்கு ஆதரவாக களமிறங்காமல், இந்தியாவுக்கு சுதந்திரத்தை கொடுத்துவிட்டு, பிரிட்டீஷாரை இந்தியாவை விட்டு வெளியேற கோரினார்.

பிரிட்டீஷ் அரசு அதை கண்டுகொள்ளாத நிலையில் எரிச்சலுற்ற காந்தி 1942ல் வெள்ளையேன வெளியேறு இயக்கத்தை அறிவித்தார், அன்றே அவர் கைது செய்யப்பட்டார். அந்த செய்தி வெளியானவுடன் நாடு பூராவும் காங்கிரசார் அராஜக நடவடிக்கைகளில் இறங்கினர். அப்படி இறங்கியவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். யுத்த காலத்தில் தங்கள் கட்சி முழுமையாக யுத்த ஆதரவு பணியில் ஈடுபட கட்சி மீதிருந்த தடையை நீக்க கம்யூனிஸ்டுகள் கோரினர். அதன் நியாயத்தை உணர்ந்த பிரிட்டீஷ் அரச கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடையை நீக்கியது. பெருமளவு விடுவிக்கப்பட்ட கம்யூனிஸ்டுகள் பாசிச அச்சுநாடுகளுக்கு எதிராக தங்கள் பணியை மேற்கொண்டனர்.

ஆனால் மக்கள் கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாட்டை முழுமையாக புரிந்து கொள்ள முடியாததால், காங்கிரசார் சிறைபடுவதையும், கம்யூனிஸ்டுகள் சிறையிலிருந்து வெளியே வருவதையும் தவறாக புரிந்துகொண்டனர். ஆனாலும் மக்களுக்கான நம் செயல்பாட்டை தொடர்ந்து பார்த்தவர்கள் தங்கள் ஆதரவை விலக்கவில்லை. 1943ம் வருடம் மேமாதம் கட்சியின் அனைத்திந்திய முதல் மாநாடு நடைபெற்ற போது உறுப்பினர் எண்ணிக்கை 15563 ஐ எட்டியிருந்தது. அதுவே 1946ம் வருடம் 53000 என்ற எண்ணிக்கையில் வளர்ந்திருக்கிறது  என்பதன் மூலம் கட்சியின் செல்வாக்கு கூடியே வந்துள்ளது என்பதை புரிந்துகொள்ளலாம்.

யுத்தம் முடிந்தபின் சுதந்திர போராட்டத்தின் வேகம் தீவிரப்படுத்தப்பட்டது. காங்கிரசினால் அல்ல, மக்கள் சுயேச்சையாக பல்வேறு தீவிர போராட்டங்களை காலனி ஆதிக்கவாதிகளுக்கு எதிராக தொடங்கினர். வங்காளத்தில் நடைபெற்ற தேபாகா போராட்டம், வரலாற்று புகழ் வாய்ந்த தெலிங்கானா போராட்டம், கேரளத்தில் புன்னப்புரா வயலார் போராட்டம் இவற்றுடன் எண்ணற்ற மாணவர் போராட்டங்களும் நடந்தன. இவை அத்தனையிலும் கம்யூனிஸ்டுகள் முன்னணியில் இருந்து செயல்பட்டனர். பிரிட்டீஸாரின் வெளியேற்றத்துக்கு உந்துவிசை கொடுத்த பம்பாயில் நடைபெற்ற “கப்பற்படை எழுச்சி” (இது கப்பற்படை கலகம் என்று பிரிட்டீஷாரால் வரலாற்றில் வர்ணிக்கப்பட்டது) போராட்டத்திற்கு கம்யூனிஸ்டுகளும் பொதுமக்களும் மட்டுமே ஆதரவாக இருந்து அனைத்து உதவிகளும் செய்தனர். காங்கிரசும் முஸ்லீம் லீகும் கப்பற் படையினரின் எழுச்சியை கண்டித்ததோடு கப்பற்படை வேலைநிறுத்தத்தை திரும்ப பெறவேண்டுமென கட்டளையிட்டனர்.

இந்தியா சுதந்திரம் பெற்றது

ராணுவமே தனக்கு எதிராக திரும்பி விட்ட பிறகு இனி தனக்கு பாதுகாப்பில்லை என்பதை உணர்ந்த பிரட்டீஷ் அரசு இந்தியாவுக்கான சுதந்திரத்தை காங்கிரசிடம் கொடுத்துவிட்டு வெளியேறினர். எனினும் இந்த சுதந்திரம் குறித்து கம்யூனிஸ்டு கட்சியில் இருவேறு நிலைகள் 1949ம் ஆண்டு நடந்த அகில இந்திய மாநாட்டில் வெளிப்பட்டது. ஒரு பகுதியினர் சுதந்திரம் வரவேற்க வேண்டியதே என்று கூறினர். மற்றொரு பிரிவினர் பெற்றது சுதந்திரம் அல்ல. பிரிட்டீஷ் மற்றும் அமெரிக்க ஏஜண்டுகளிடமே இன்னும் அதிகாரம் நீடிக்கிறது என்றும், நாடு முழுவதும் உள்ள போராட்டச் சூழலே பிரிட்டீஷாரை வெளியேற்றியது என்றாலும், ஆட்சி அதிகாரம் மீண்டும் காலனி ஏஜண்டுகளுக்களின் கைக்கே சென்றுள்ளது என்று மதிப்பீடு செய்தனர். எனவே போராட்டத்தை தீவிரப்படுத்தி ஒரு ஆயுதமேந்திய புரட்சியின் மூலம் மக்கள் ஜனநாயக புரட்சியை கொண்டுவர வேண்டுமென்று கூறினர். துரதிருஷ்டவசமாக இரண்டாவது போக்கை பெரும்பான்மையினர் ஏற்றுக்கொண்ட நிலையில் , கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தை தீவிரப்படுத்தியது. மக்கள் ஆதரவு கிட்டவில்லை என்பதை பின்னரே உணர்ந்தது. ஆனால் அதிகாரத்திற்கு வந்த காங்கிரசு கம்யூனிஸ்டுகளை வேட்டையாடி கட்சியை கடுமையாக நசுக்கியது. கட்சியையும் தடை செய்தது. 

1949 முதல் 1952 வரை நேரு அரசு கம்யூனிஸ்டுகள் மீது கட்டவிழ்த்து விட்ட காட்டுமிராண்டி அடக்குமுறையால் 50000 க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்டுகள் கைது செய்யப்பட்டனர். 13000 க்கும் மேற்பட்டவர்கள் சுட்டோ வேறு வகையிலோ கொல்லப்பட்டனர். தமிழகத்தில் சிறையிலிருந்த கம்யூனிஸ்டுகளை சுட்டே கொன்றது காவல்துறை. கடலூர் சிறையிலிருந்த தோழர்கள் ஏகே கோபாலன், எம்ஆர் வெங்கட்ராமன் ஆகியோரை குறிவைத்து காவல் துறை சுட அதை தடுத்து தங்கள் மார்பில் ஏந்தி பல கம்யூனிஸ்டுகள் உயிரை விட்டனர். சேலம் சிறையில் மட்டும் 22 கம்யூனிஸ்டுகள் அவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டனர். சிறையில் மட்டுமல்ல வெளியேயும் பல கம்யூனிஸ்டுகள் கொல்லப்பட்டனர். தஞ்சை தரணியில் இரணியன், சிவராமன், மதுரையில் மாரி, மணவாளன், தூக்குமேடையேறிய பாலு என கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னணி தோழர்கள் பலரை கட்சி இழந்தது.

மக்கள் உணர்வை புரிந்துகொள்ளாமல் தீவிரவாத செயல்களில் இறங்கிய கட்சியை தனது கொடுங்கரங்களைக்கொண்டு அடக்கிய நேரு அரசு ஒரு செயலற்ற நிலைக்கு கட்சியை கொண்டு சென்றது.  இதனால் கம்யூனிச இயக்க தலைவர்களுக்கு இந்தியாவில் பின்பற்றவேண்டிய புரட்சிப்பாதை எது என்பது பற்றி பெருங்குழப்பமேற்பட்டது. அப்போதைக்கு உலக கம்யூனிஸ்டுகளுக்கு ஆதர்ச வழிகாட்டியாக இருந்தவர் சோவியத் யூனியன் தலைவர் ஸ்டாலின்தான். எனவே அவரை சந்தித்து வழிகாட்டுதல் பெற சில முக்கிய தலைவர்கள் மாஸ்கோ சென்றனர். அங்கு தோழர் ஸ்டாலினை சந்தித்து ஒரு கட்சி திட்டத்தையும், கொள்கை பிரகடனத்தையும் உருவாக்கி அதை இந்தியாவுக்கு கொண்டுவந்து 1951ல் தலைமறைவாக நடைபெற்ற இரண்டாவது கட்சியின் அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றினர்.  

1952ல் பொதுதேர்தல் நடைபெற்றது. கட்சி வலுவாக இயங்கிய இடங்களில் வெற்றியை பெற்றது. வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் முதல் பெரும் எதிர்க்கட்சியாகவும் விளங்கியது. நிலப்பிரபுக்களுக்கு எதிரான போராட்டங்களிலும், மக்கள் இயக்கங்களிலும் முன்நின்று போராடியதாலே இந்த வெற்றி சாத்தியமானது. கம்யூனிஸ்ட் கட்சி செய்த தவறுகளை விட அக்கட்சி மக்களுக்காக செய்த தியாகங்களையே மக்கள் பார்த்து கட்சிக்கு ஆதரவாக நின்றனர். தேசத்தின் திசைவழி எது என்பதை தீர்மானிப்பதில் குழப்பம் தொடரந்து நீடித்தது.  சோவியத்யூனியனிலிருந்து கொண்டுவந்த  திட்டமும், கொள்கை பிரகடனமும் உதவியாக இல்லை.  1953 ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற மூன்றாவது மாநாட்டில் அரசியல் தத்துவார்த்த பிரச்னைகள் எழுந்து, அதை தீர்க்க முடியாமலேயே முடிவடைந்தது. 1955ல் இந்திய விடுதலை, பொருளாதார கொள்கை, அயல் உறவு கொள்கை, கட்சியின் தந்திரோபாயங்கள் குறித்தெல்லாம் விவாதம் தொடர்ந்தன. 1956 ம் ஆண்டு நடந்த நான்காவது கட்சி மாநாட்டின் போது மூன்றுவிதமான போக்குகள் கட்சி மாநாட்டில் வெளிப்பட்டன. 1) காங்கிரசு  முற்போக்கான கொள்கைய பின்பற்றி வருவதால் காங்கிரசுடன் கூட்டு சேர்ந்து செயல்படவேண்டும் 2) ஆட்சியின் தலைமையில் முதலாளித்துவ நிலபிரபுத்துவமே உள்ளது. எனவே அதை எதிர்த்தே செயல்படவேண்டும். இவையிரண்டுமே சரியில்லை என்று கூறும் போக்கும் இருந்தது. பாலக்காட்டில் நடைபெற்ற நான்காவது மாநாட்டில் முதலிரண்டில் கூறப்பட்ட போக்குகள் பகிரங்கமாக வெளிப்பட்டன. கட்சியின் பொதுவான அரசியல் நிலை இரண்டுக்கும் சாதகமாக இருந்தது. 30 சதம்பேரே காங்கிரசுடன் ஒத்துழைப்பை ஆதரித்தனர். அப்போது நடந்து முடிந்திருந்த சோவியத் கம்யூனிஸ்டு கட்சியின் 20 வது மாநாட்டின்  திருத்தல்வாத நிர்ணயிப்புகள் மாநாட்டில் செல்வாக்கு செலுத்துவதையும் காண முடிந்தது. ஒரு பக்கம் இந்திய புரட்சியின் திசைவழி குறித்து கட்சிக்குள் விவாதங்கள் நடந்தாலும், கட்சி மக்களிடையே அவர்களுடைய பிரச்னைகளுக்கான போராட்டங்களில் தீவிரமாக செயல்பட்டு வந்தது.

மொழிவழி மாநில பிரிவினையை நேரு ஏற்கவில்லை. அதனால் மொழிவழி மாநில பிரிவினையை கோரி நாடு முழுவதும் இயக்கங்கள் நடந்தன. ஆந்திராவில் விசாலாந்திரா என்ற இயக்கத்தின் தலைமையில் நடைபெற்ற போராட்டத்திலும், ஐக்கிய கேரளம் என்ற இயக்கத்தின் தலைமையில் கேரளத்தில் நடைபெற்ற போராட்டத்திலும், மராட்டியத்தில் நடைபெற்ற சம்யுக்த மகாராஷ்டிரம் என்ற இயக்கத்திலும், தமிழ்நாட்டில் ஐக்கிய தமிழகம் கோரி நடைபெற்ற போராட்டத்திலும் கம்யூனிஸ்டுகள் முன்வரிசையில் நின்று போராடினர். மேலும் விவசாயிகளின் பிரச்னையான நில மறுவினியோகம், நில உரிமை, நிலவரி குறைப்பு, உச்சவரம்பு நிர்ணயித்தல் போன்ற பிரச்னைகளில் விவசாயிகளுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி போராடினர். நாடாளுமன்றத்தில் கிடைத்த பிரதிநிதித்துவத்தை பயன்படுத்தி மக்கள் பிரச்னைகளை அங்கு பேசியதன் மூலம் கட்சி மேலும் பிரபலமடைந்தது. இத்தகைய செயல்பாடுகள் காரணமாக கேரளத்தில் 1957ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.  உலகிலயே முதன்முறையாக தேர்தல் மூலம் வென்று மாநில ஆட்சி அதிகாரத்தை கம்யூனிஸ்ட் கட்சி பெற்றது. எனினும் இரண்டாண்டுகளுக்குள் கம்யூனிச எதிரிகள், மதவாத பிற்போக்குவாதிகள் ஒன்றுபட்டு விமோசன சமரம் என்ற பெயரில் கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக போராடினர். காங்கிரசு தலைவராக இருந்த இந்திரா காந்தி போராட்டத்தைக் காட்டி இஎம்எஸ் முதலமைச்சராக இருந்த முதல் கம்யூனிஸ்ட் அரசை கவிழ்க்க நேரு அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுத்தார்.    அரசியல் சட்ட பிரிவு 356 ன் அடிப்படையில் ஜனநாயகவாதி நேருவும் அரசை கவிழ்த்தார். அரசியல் சட்ட பிரிவு 356க்கு முதல் பலியானது கேரள கம்யூனிஸ்ட் அரசாங்கம்.

1958ல் நடைபெற்ற அமிர்தசரஸ் ஐந்தாவது மாநாட்டில் இரண்டுவிதமான கருத்து நிலைகளும் முன்னுக்குவந்து தீவிர விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டது. பிரச்னை தீரவில்லையென்றாலும், அமைப்பு ரீதியான சில மாற்றங்கள் சமரசத்திற்காக ஏற்கப்பட்டது. முதலாளித்துவ நிலபிரபுத்துவ அரசை எதிர்த்து தீவிர இயக்கங்களை நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. இதே காலத்தில் உலக கம்யூனிச இயக்கத்திலும் சோவியத் யூனியனுக்கும், மக்கள் சீனத்திற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும் தாக்கத்தை செலுத்தியது. கேரளத்தில் முதலாவதாக அமைந்த கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக மத்திய அரசு வெறுப்பை கக்கும் பல நடவடிக்கைகளை எடுத்தது. மாநில அரசுக்கு எந்த ஒத்துழைப்பையும் தருவதில்லை. இதையெல்லாம் பார்த்தபின்பும் கூட காங்கிரசுடன் ஒத்துழைத்து செயலாற்ற வேண்டும் என்று கூறுவோர் தங்கள் நிலையை மாற்றிக்கொள்ளத்தயாராக இல்லை. இந்த கருத்து வேறுபாடு இந்திய சீன யுத்தம் மூண்டபின் மோசமான வடிவம் எடுத்தது.

1959ம் வருடம் இந்திய சீன எல்லை யுத்தம் மூண்டது. இது தொடர்பாக திருத்தல்வாதிகள் சர்வதேச உணர்வை கைவிட்டு, தேசீயவாத உணர்வு கொண்டவர்களாக தங்களை வெளிப்படுத்திக்கொண்டனர். கம்யூனிஸ்டுகளுக்கு இருக்கவேண்டிய சர்வதேச உணர்வை குறுகிய தேசீயவாதத்திற்கு அடகு வைத்துவிட்டது மட்டுமல்ல சர்வதேசீய உணர்வுடன், இந்த போரை இரு தரப்பும் உடனடியாக நிறுத்தி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டுமென்று கூறிய மற்ற கம்யூனிஸ்டுகளை சீன ஏஜண்டுகள் என்று முத்திரையும் குத்தினர். தங்களுக்கு எதிர் முகாமில் இருந்த அனைவரின் பட்டியலையும் காங்கிரஸ் அரசிடம் கொடுத்து கைது செய்யவும் காரணமாக இருந்தனர். சீன எதிர்ப்பு நிலை தாண்டவமாடிய நிலையில் திருத்தல்வாதிகளின் நிலையை நிராகரித்து சர்வதேசீய நிலை எடுத்து பேச்சுவார்த்தை மூலமே எல்லைப்பிரச்னையை தீர்க்க வேண்டுமென்ற கம்யூனிஸ்டுகளின் (பின்னர் மார்க்சிஸ்டுகள்) நிலையைத்தான் பின்னர் காங்கிரசு மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.  ஆனால் போர் நடந்த வேளையில் சீன ஏஜண்டுகள் என்று அவர்கள் சுமத்திய பழிச்சொல்லை கைவிட இன்றளவும் அவர்கள் முன்வரவில்லை. இந்த பின்னணியில் விஜயவாடாவில் கூடிய ஆறாவது மாநில மாநாடு ஒரு சமரச மாநாடாகவே நடந்து முடிந்தது. 

1963ல் சீன ஏஜண்டுகள் என்று முத்திரை குத்தி கைது செய்யப்பட்ட கம்யூனிஸ்டுகள் வெளியே வந்தபின் பிரச்னைகளை பேசி முடிக்க முயன்றனர். ஆனால் திருத்தல்வாத தலைவர்கள் அதை ஏற்கவில்ல என்பது மட்டுமல்ல, கட்சி  ஸ்தாபனத்தையும் கைப்பற்றிக்கொண்டனர். பல தோழர்கள் மீது ஓழுங்கு நடவடிக்கை எடுத்து கட்சியை விட்டு விலக்கினர். ஒரு உருப்படியான உட்கட்சி விவாதத்தை நடத்தி தீர்வு காண முயன்ற தலைவர்களின் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்தனர். இனியும் இவர்களோடு சேர்ந்து செயலாற்ற முடியாது என்ற நிலையில் 32 தோழர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். தமிழகத்தில் தற்போது மறைந்த தோழர் என்.சங்கரய்யாவும் அதில் ஒருவர். தற்போது உயிரோடு இருக்கும் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் மட்டுமே உயிருடன் இருக்கிறார்.

திருத்தல்வாதம் மற்றும் அதிதீவிரவாதம் குறித்து

இந்தியாவில் கம்யூனிச இயக்கத்தின் வளர்ச்சிக்கு கம்யூனிச இயக்கத்தில் நிலவிய திருத்தல்வாத போக்கும், அதிதீவிரவாத போக்கும் பெருத்த சேதாரத்தை ஏற்படுத்தியது. எந்த ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அது செயல்படும் தேசத்தில் நிலவும் அரசியல் நிலைமை குறித்த புரிதல் மார்க்சீய லெனினிய அடிப்படையில் இருப்பது அத்தியாவசியமானது. ஆட்சியில் இருக்கும் வர்க்கங்களின் சேர்க்கை, அதற்கு எதிராக கம்யூனிஸ்டுகள் நடத்த வேண்டிய புரட்சியின் கட்டம், அதற்கான அணி சேர்க்கை குறித்தெல்லாம் விவரிக்கிற ஒரு கட்சி திட்டத்தை உருவாக்கி அதை மக்களிடம் பகிரங்கமாக பிரச்சாரம் செய்வது முக்கிய பணியாகும். ஆனால் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி 1920 ல் தொடங்கப்பெற்றது என்றாலும், ஒரு திட்டமின்றி, அவ்வப்பொழுது நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் அடிப்படையிலேயே செயல்பட்டு வந்தது.  இந்தியாவில் புரட்சியின் வழி ரஷ்யப்பாதையா அல்லது சீனப்பாதையா என்பது குறித்து கடுமையான விவாதம் நடைபெற்று வந்தது. ரஷ்யப்பாதையே நம் வழி என்பவர்கள் 1949 ல் நடைபெற்ற இரண்டாவது கட்சி மாநாட்டில் பெரும்பாண்மையாக இருந்தனர். அதனடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவை அமுல்படுத்தியதால் கட்சி பெரும் சேதாரத்திற்கு ஆளானது. அப்போது தெலிங்கானாவில் நடைபெற்ற புரட்சி போராட்டம் வெற்றிகரமாக நடந்து வந்தது. அதனடிப்படையில் இந்தியாவில் பின்பற்றப்படவேண்டிய பாதை சீனப்பாதையே என்ற கருத்து முன்னுக்கு வந்தது. எனினும் இது குறித்து ஒரு குழப்பமான நிலையே இருந்த காரணத்தால் தெளிவு பெற அன்றிருந்த உலக கம்யூனிஸ்ட் தலைவர் ஸ்டாலினை அணுகி வழி காட்ட கோருவது என கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்தது. ஒரு குழுவாக சென்று சந்திக்கவும் செய்தனர். 

இரண்டு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.1)இந்தியாவின் ஆட்சி அதிகாரம் காங்கிரஸ் கைக்கு வந்தபின் வர்க்க மதிப்பீடு என்ன? இந்திய புரட்சியின் இன்றைய கட்டம் என்ன? புரட்சிகரமான போர்த்தந்திரம்,வர்க்க சேர்க்கை என்ன? என்பதாகும். இவையனைத்தும் கட்சியின் திட்டத்தில் வரும். 2) இந்திய புரட்சிக்கான பாதை எது? ரஷ்யப்பாதையா, சீனப்பாதையா? தெலிங்கானா புரட்சியின் தன்மை என்ன? இவையனைத்தும் நடைமுறை கொள்கையில் வரும்.ஸ்டாலினுடன் விவாதித்து ஒரு நகல் கட்சி திட்டமும், நகல் செயல்அறிக்கையும் உருவாக்கப்பட்டது. 

இந்த இரண்டு ஆவணங்கும் 1951 ஏப்ரலில் நடைபெற்ற  கட்சியின் மத்திய குழுவில் வைத்து விவாதிக்கப்பட்டது. மத்திய குழு இந்த இரண்டு அறிக்கைகளையும் ஏற்றுக்கொண்டு, அமுல்படுத்த தோழர் அஜாய்கோஷ் அவர்களை பொதுச்செயலாளராக கொண்டு ஒரு புதிய மத்திய குழுவை உருவாக்கியது. எனினும் கருத்தொற்றுமை ஏற்படாமல், மோதல் போக்கு  தொடர்ந்தது. இந்தியாவுக்கான புரட்சிப்பாதை ரஷ்ய பாதையோ, சீன பாதையோ அல்ல அது இந்திய பாதையாக இருக்கவேண்டும் என்று முடிவுக்கு கட்சி வந்தாலும், இந்திய புரட்சியின் தன்மை, அதன் கட்டம், அணிசேர்க்கை போன்றவற்றில் கருத்து வேறுபாடு நீடித்துவந்தது. ஒரு பக்கம் ஆளும் வர்க்கத்தின் தாக்குதல், மறுபுறம் கட்சி மக்கள் நலனுக்காக ஈடுபடவேண்டிய போராட்டங்களின் அழுத்தங்கள் ஆகியவற்றின் காரணமாக விவாதம் நடத்தி முடிவுக்கு வர இயலாத நிலை இருந்தது. இந்தியாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்கநிலையில் இருந்த தலைவர்களுக்கு, மார்க்சீய லெனினியத்தை இந்தியாவில் அமுல்படுத்துவது குறித்து போதிய அனுபவமோ ஞானமோ கிடைக்கவில்லை. அப்படிப்பட்ட நிலையில் உலக அளவில் கம்யூனிச முகாமுக்குள் நடைபெற்ற பல நிகழ்ச்சிப்போக்குகள், இந்தியாவில் இருந்த கம்யூனிச தலைவர்களுக்கு மார்க்சீயம், லெனினியம் குறித்த புரிதல் ஏற்பட உதவியது.

சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய 20 வது மாநாட்டின் முடிவுகள் மார்க்சீயத்தின் அடிப்படை நிர்ணயிப்புகளை திருத்தும் திருத்தல்வாதம் வெளிப்படுவதாக விமர்சனம் வந்தது. சமாதான சகவாழ்வு என்ற சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் உத்தி திருத்தல்வாதம் என்று வர்ணிக்கப்பட்டது. இந்த திருத்தல்வாத எதிர்ப்பு போக்கை, சீன கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்தது.  உலகம் பூராவும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த இருபெரும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே நடைபெறும் மாபெரும் விவாதத்தை உன்னிப்பாக கவனித்து வந்தன. 

ஸ்டாலின் காலத்தில் செயல்பட்டுவந்த கோமின்பார்ம் என்ற கம்யூனிஸ்ட் கட்சிகளின் தகவல் அமைப்பு கலைக்கப்பட்டு, ஒரு மையத்திலிருந்து உலக கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வழிகாட்டுதல் என்பது இனி தேவையில்லை, கலந்துரையாடலே போதும் என முடிவெடுக்கப்பட்டது. அந்த முறையில் மாஸ்கோவில் 1957 ல் வெளியிடப்பட்ட 12 கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரகடனம் இந்திய கம்யூனிஸ்டுகளுக்கு மார்க்சீய ஞானத்தை செழுமைப்படுத்த உதவியது. 1960 ல் மாஸ்கோவில் 81 கம்யூனிஸ்டுகளின் மாநாடு நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஒரு தூதுக்குழுவும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டது.  

1960 ஏப்ரலில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சித்தாந்த ஏட்டில் “ லெனினிசம் நீடூழி வாழ்க” எனும் கட்டுரை வந்தது.  இந்த கட்டுரையில் தான் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்தல்வாத போக்கை சீன கம்யூனிஸ்ட் கட்சி பகிரங்கமாக கண்டித்திருந்தது. இரு பெரும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கிடையே இருந்த கருத்து மோதல் வெளிவந்தது. பகிரங்கமாக கடித வடிவில் நடந்த இந்த சித்தாந்த மோதலை “ மாபெரும் விவாதம்” என்ற தலைப்பில் சீன கம்யூனிஸ்ட் கட்சி நூலாக கொண்டுவந்தது. தமிழ் மொழிபெயர்ப்பிலும் வெளியாகி உள்ளது. 1962 ம் ஆண்டுகளில் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் நடைபெற்ற கடித வடிவில் நடைபெற்ற கருத்து மோதல் உலக கம்யூனிஸ்டுகளுக்கு மார்க்சீய லெனினிய புரிதலை மேலும் கூட்ட உதவின.

இது போன்ற சித்தாந்த போராட்டங்கள் உலகளவிலும், இந்திய அளவிலும் நடந்துகொண்டிருந்த காலத்தில், இந்திய கம்யூனிச இயக்கத்தில் இரண்டு போக்குகள் வெளிப்பட்டன. ஒரு சாரார் காங்கிரஸ் ஆதரவு போக்கையும், இன்னொரு சாரார் காங்கிரசு எதிர்ப்பு போக்கையும் கடைபிடிக்க வேண்டும் என்று கோரினர். காங்கிரசை ஆதரிக்க வேண்டும் என்று கூறியவர்கள் அதற்கேற்றவாறு மார்க்சீய நிர்ணயிப்பை மாற்ற முயன்றனர். புரட்சியின் தலைமை தொழிலாளி வர்க்கம், தேசீய முதலாளிவர்க்கத்தின் போன்றவற்றின் கூட்டான தலைமையில் நடக்கும் என்றும், புரட்சியின் கட்டம் தேசீய முதலாளித்துவ புரட்சி கட்டமாக இருக்கும் என்றும் கூறினர். காங்கிரசை எதிர்ப்பவர்கள் இது மார்க்சீயத்தை திருத்தும் திருத்தல்வாத போக்கு என்றும், புரட்சியின் தலைமை தொழிலாளி வர்க்கத்தின் கையில்தான் இருக்கும் என்றும், புரட்சியின் கட்டம் மக்கள் ஜனநாயக புரட்சியாக இருக்கும் என்று கூறினர். 

திருத்தல்வாத போக்கை கையாண்டவர்கள் இந்திய சீன எல்லைப்போரில் தங்கள் நிலைப்பாட்டுக்கு எதிராக இருந்த அனைவரையும் நேரு அரசுக்கு காட்டிக்கொடுத்து சீன ஏஜண்டுகள் என்று முத்திரை குத்தி காராகிருகத்தில் அடைக்க உதவினர். அவர்கள் சிறையில் இருந்த நேரத்தில் கட்சியின் அமைப்புகளை கைப்பற்றினர். தங்களை ஏற்காத நபர்களை மட்டுமல்ல, மாநிலக்குழுக்களையே கலைத்தனர். சர்வாதிகார போக்கை கையாண்டது மட்டுமல்ல, சிறையிலிருந்து வெளியே வந்த தோழர்களை அங்கீகரிக்க மறுத்தனர். ஒரு சமரசத்திற்கு முயன்ற 32 உறுப்பினர்கள் அதில் தோல்வியுற்று வெளிநடப்பு செய்தனர். அவர்கள் தெனாலியில் கூடி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (சிபிஐஎம்) என்ற பெயரில் கட்சியை தொடங்கி, இந்தியாவில் மார்க்சீய லெனினிய நிலைக்கேற்ப திட்டத்தையும் கொள்கையும் உருவாக்கினர். 

ஏற்கனவே இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும்,(சிபிஐ) ஒரு திட்டத்தையும் கொள்கை நடைமுறையையும் அதே காலத்தில் உருவாக்கியது. அதன் முக்கிய அம்சங்களை கீழே பார்க்கலாம்.    

சிபிஎம்: இன்றைய இந்திய அரசு முதலாளித்துவ நிலப்பிரபுத்தவத்தின் கருவியாகும். இந்த அரசு பெருமுதலாளிகளால் தலைமை தாங்கப்படுகிறது. இந்த பெருமுதலாளிகள்  முதலாளித்துவ வளர்ச்சி பாதையை பின்பற்றுவதால், அன்னிய நாட்டு நிதி மூலதனத்துடன் அதிகமான அளவில் ஒத்துழைத்து கொண்டிருக்கிறார்கள். நம் தேச வாழ்வில் இன்றைய அரசின் பங்கையும், செயல்பாடுகளையும் இந்த வர்க்கத்தன்மைதான் பிரதானமாக தீர்மானிக்கிறது. இன்றைய புரட்சியின் கட்டம் மக்கள் ஜனநாயக கட்டம் என்றும் இந்த கட்டத்தில் எதிர்ப்பின் கூர்முனைகள் முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ, ஏகாதிபத்திய, ஏகபோக எதிர்ப்பாக இருக்கும் என்று வரையறுக்கப்பட்டது.  இந்த கட்டத்தில் புரட்சிக்குப்பின் அமையவுள்ள அரசு மக்கள் ஜனநாயக அரசாக இருக்கும் என்றும், அது தொழிலாளிவர்க்கத்தின் தலைமையில் அமையும் என்றும் கூறியது. அது  தொழிலாளிகள், விவசாய தொழிலாளர்கள், ஏழை விவசாயிகளின் கூட்டணியாக  இருக்கும், இந்த கூட்டணி தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் அமையும் மக்கள் ஜனநாயக முன்னணியாக  இருக்கும் என்றும் கூறியது.

சிபிஐ: இன்றைய அரசு தேசீய முதலாளித்துவ வர்க்கம் முழுவதினுடைய ஆட்சியாகும். இதில் பெருமுதலாளிகள் வர்க்கம் சக்தி வாய்ந்த செல்வாக்கை கொண்டுள்ளது. இந்த வர்க்க ஆட்சி நிலப்பிரபுக்களுடன் பலமான இணைப்பு கொண்டுள்ளது. இவை அரசை பிற்போக்கான திசைவழிகளில் இழுக்கப்படுவதற்கு ஏதுவாகிறது.  இன்றைய புரட்சியின் கட்டம் ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பை அடிப்படையாக கொண்ட ஜனநாயக புரட்சியாக இருக்கும். இந்த புரட்சியின் மூலம் அமைய உள்ள அரசு ஒரு தேசீய ஜனநாயக அரசாக இருக்கும். அது முதலாளித்துவமல்லாத பாதையை பின்பற்றும். இதற்கான அணிசேர்க்கையில் தொழிலாளி வர்க்கம், விவசாயிகள். நடுத்தர படிப்பாளி வர்க்கம், தேசீய முதலாளிகள் ஆகியோர் இருப்பர். ( இங்கு தொழிலாளிவர்க்கத்தின் தலைமையும் இல்லை, தேசீய முதலாளிகளின் தலைமையும் இல்லை, தலைமையே இல்லாமல் எப்படி) தேசீய ஜனநாயக அணியாக இது அமையும். 

இந்த திருத்தல்வாத போக்கு கம்யூனிச இயக்கத்திற்கு எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியது என்பதை வரலாறு கூறும் . ஒரு கட்டத்தில் இந்த திட்டத்தையே திருத்தியமைக்க வேண்டிய சூழலுக்கு சிபிஐ ஆளானது. ஆனால் சிபிஎம்முக்கு அந்த நிலை நேரவில்லை. அது வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருந்தது. எனவே பின்னடைவுகள் பாதிப்புகள் இருந்தாலும், அதன் அடித்தளம் சரியாமல் வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது. தேசத்தின் உண்மையான கம்யூனிச இயக்கத்தின் முகமாக சிபிஎம் மட்டுமே காட்சியளிக்கிறது. சிபிஐ யுடன் ஒருபுறம் முறிப்பு ஏற்பட்டாலும்,  மறுபுறம் கட்சிக்குள் சீன ஆதரவு போக்கில் செயல்பட்ட குழுக்களும் இருந்தன. தங்களின் தத்துவார்த்த நிலைப்பாட்டை சிபிஎம் நிராகரித்ததால், அவர்கள் கட்சியிலிருந்து 1967ல் வெளியேறினர். சிபிஐ(எம்எல்) அதாவது நக்சலைட்டுகள் என்று அறியப்பட்டனர். சீன வழியே எங்கள் வழி, சீன தலைவர் மாவோ வே எங்கள் தலைவர் என்றும், ஆயுதமேந்திய புரட்சியே எங்கள் வழி, துப்பாக்கியின் முனையில்தான் புரட்சி பூக்கும் என்றெல்லாம் கூறியவர்கள் இன்று  திரிந்து எத்தகைய அவல நிலைக்கு ஆளானார்கள் என்பதை பார்க்கிறோம். தேர்தல் பாதை திருடர் பாதை என்று கூறியவர்கள் பலரும் அந்த தேர்தல் பாதைக்கு மீண்டும் திரும்பியதை நாடு பார்த்தது. இடதுசாரி அதிதீவிரவாத சாகச செயல்களினால் கம்யூனிச இயக்கத்திற்கு அவப்பெயரும், பெரும் சேதாரத்தையும் உண்டு பண்ணினார்கள்.  சீன கம்யூனிஸ்ட் கட்சியும் இவர்களுக்கு ஆதரவாகவும், மார்க்சிஸ்ட் கட்சிக்கும் எதிராகவும் இருந்தது வரலாறு.

தொடரும் …….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *