ஆஸ்திரேலிய வாழ்க்கை: வாய்ப்புகளின் கடவுச்சீட்டு.

உனக்கென்னப்பா, “நீ பணக்கார வீட்டுப் பையன். உனக்கு எல்லா வசதி வாய்ப்புகளும் இருக்கிறது. நீ எங்கு வேண்டுமானாலும் போகலாம். என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எங்கு வேண்டுமானாலும் வாழலாம்” என்று கேட்டு .. கேட்டு அலுத்து போனவனின் பதிவு இது. 

வயதான பெற்றோர்களை விட்டுவிட்டு, நல்ல சம்பாத்தியத்துடன் இருந்த வேலையை துறந்து விட்டு, பல வருடங்கள் பழகிய நண்பர்களை பிரிந்து விட்டு, பிறந்து வளர்ந்த சென்னையையும் சுற்றித் திரிந்த தமிழ் நாட்டையும், அவ்வப்பொழுது எட்டி பார்த்த வடஇந்தியாவையும் துறந்து 

விட்டு, சாதகமான சூழ்நிலைகளையும் வேண்டாம் என்று உதறி விட்டு அபாயகரமான மற்றும் சவாலான சூழ்நிலைகளையும் தேர்ந்தெடுத்த-வனுக்கு எந்த பாராட்டும் நன்மதிப்பும் கிடைப்பதில்லை.

ஒருவன் வெளிநாட்டில் வாழ முடிவெடுப்பதும் திட்டம் தீட்டுவதும் எளிது. ஆனால் அதை செயல்படுத்துவது மிகவும் கடினம். அதற்காக ஆயத்தமாக பல ஆண்டுகள் தேவைப்படுகின்றது. முதல் கட்டமாக ஒருவன் மனதளவில் தன்னை தயார்படுத்திக் கொள்வது இன்றியமைதாததாகும். ஏனெனில் வெளிநாட்டில் வாழும் ஒருவனுக்கு மன அழுத்தம், மன சோர்வு, மனக்கவலை, ஏக்கம், தனிமை என எல்லா மனநலம் சார்ந்த பிரச்சனைகளும் எளிதாக வரக்கூடும். இவை அனைத்தையும் தாண்டி நல்லொழுக்கத்துடனும், மன உறுதியுடனும் வாழ்பவனை பார்த்து “நீ என்ன பணக்கார வீட்டுப் பையன். உனக்கு என்ன பிரச்சனை இருக்க போகிறது” என்று நம்மை பார்ப்பவர்கள் நமக்கு நேராக சொல்லும் வார்த்தைகளை  கேட்கும்பொழுது  சற்று எரிச்சலும் ஏற்படும்.ஏனெனில் நமக்குத் தான் தெரியும் நாம் வாழ்ந்த நடுத்தர வாழ்க்கை என்னவென்று.

சொந்த நாட்டில் நல்ல வேலையிலும் நல்ல வருமானத்திலும் இருந்தவன், ஏன் சொந்த ஊரை விட்டுவிட்டு மேலும் படிப்பதற்கு வெளிநாடு செல்ல வேண்டும் என்று பலர் எண்ணலாம். அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. நச்சுத் தன்மையுடைய வேலை கலாச்சாரம், கடினமாக உழைப்பவர்களுக்கு கொடுக்க வேண்டிய அங்கீகாரத்தை தர மறுப்பது, அதே சமயத்தில் தகுதியற்றவர்களை அங்கீகரிப்பது போன்ற பல மோசமான சூழ்நிலைகளே காரணங்களாகும்.

ஒன்றை பெறவேண்டுமானால் நாம் ஒன்றை இழந்து தான் ஆக வேண்டும். ஒரு சராசரி மனிதனின் அடிப்படை உணர்வுகளான நட்பு, காதல், உறவுகள் ஆகியவற்றை இழந்து அல்லது ஒதுக்கி வைத்து தான் வெளி நாட்டில் படித்து வெளி நாட்டில் வேலை செய்தல் என்ற இலட்சியத்தை அடைய வேண்டியுள்ளது. இதை அறியாமல் இந்த சமூகம் பணக்கார வீட்டு பையனுக்கு என்ன கஷ்டம் இருக்கப் போகின்றது என்று முடிவு செய்கிறது. இது எப்படிபட்ட ஒரு தவறான முடிவு.

வெளிநாட்டிற்கு சென்று படித்து வேலை பார்ப்பது என்பது, சமூக இணையதளங்களில் பார்ப்பது போல ஓர், இரு நாட்களில் நிகழக் கூடியது அன்று. ஒவ்வொரு நாளும் பத்து மணி நேரம் வேலை பார்த்து, இரண்டு மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் பயணம் செய்து, வீட்டிற்கு வந்த பின் தகுதித் தேர்வுக்கு தயார் படுத்திக்கொண்டு எந்த பல்கலைகழகத்தில் எந்த பட்டம் பெற்றால் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று அலசி ஆராய்ந்துகொண்டு, தினம் மூன்று மணி நேரம் மட்டுமே உறங்கி, உடல்நிலை சற்று தளர்ந்த நிலையில் தகுதித்தேர்வில் தேர்ச்சிப் பெற்று சர்வதேச தகுதி படிப்பு உதவித் தொகையுடன் வெளிநாட்டில் ஒரு பொது பல்கலைகழகத்தில் இடம் பெற்று படிப்பவனை இந்த சமூகம் பணக்கார வீட்டுப் பையனாக பாவிக்கிறது. இது எப்படி நியாயமாகும். அவ்வாறு சொல்வது அவன் பட்ட கஷ்டங்களை கொச்சைப் படுத்துவதாகும்.

படித்து பட்டம் வாங்கியபின், வேலை தேடும் படலத்தை விவரித்தால், அந்த கடவுள் கூட அதை கேட்டு கண்ணீர் விடுவார். ஆனாலும் எதையும் பொருட்படுத்தாமல் பொறுமையுடன் சில மாதங்கள் பல தோல்விகளை சந்தித்து, பகுதி நேர வேலையையும் பார்த்துக் கொண்டு ஒரு வேலையில் அமர்வது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது. எந்த ஒரு சூழ்நிலையிலும் தன் பெற்றோரிடம் இருந்து ஒரு ரூபாய் கூட வாங்கி விடக்கூடாது என்று எண்ணுபவன் ஒவ்வொருவனும் வைராக்கியசாலி. பாராட்டுக்குரியவனே. ஆதலால் வெளிநாட்டில் பயிலும் அல்லது, வேலை செய்யும் ஒருவனைப் பார்த்து அவனை பணக்கார வீட்டுப் பையன் என்று சற்றும் யோசிக்காமல் அழைக்காதீர்கள். அப்படி நீங்கள் அழைத்தால் அவனிடம் ஒரு புன்னகை  மட்டுமே பதிலாக இருக்கும். அந்த புன்னகைக்கு பின்னால், அவன் சந்தித்த அவமானங்கள், துரோகங்கள், பட்ட கஷ்டங்கள் என ஒரு சரித்திரமே இருக்கும். 

இது ஒரு புறம் இருக்க, நான் இந்தியாவில் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு 2019 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து மாகாணத்தில் வந்து இறங்கினேன் ஒரு பிரான்ஸ் மற்றும் டென்மார்க் நாட்டுக்காரர்களுடன் வீட்டை பகிர்ந்து கொண்டு முதல் நாள் பல்கலைக்கழகத்திற்கு புறப்பட்டேன். ஏற்கனவே ஆஸ்திரேலியா நுழைவுச் சான்று தாமதமாக  வந்ததால் கிட்டத்தட்ட ஒரு வாரம்    தாமதமாகிவிட்டது. இரண்டாம் நாள் வழி தவறி வேறு  இடத்திற்கு சென்று விட அரை மணி நேரம் தாமதமாக தான் மூன்று நாள் பயிற்சி பட்டறைக்கு சென்றேன். என்னை விட பல வயதும் அனுபவமும் உள்ளவர்களே கண்ணில் பட்டார்கள்  ஒருவேளை மீண்டும் தவறான வகுப்பறைக்குள் சென்று விட்டோமோ என்று தோன்றுவதற்குள் எனது தலைமை பேராசிரியர் கிளர்  அவர்கள்  எனது  பெயரை அழைத்து உள்ளே வர சொன்னார். அப்போதுதான் புரிந்தது அவர்கள் என்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று.  ஒரு 50 வயது மதிக்கத்தக்க ஒருவர்  அவர் அருகில் இருந்த நாற்காலியை காலி செய்து தன் அருகில் அமருமாறு என்னை அழைத்தார்  அவர் அருகில் அமர்ந்தவுடன் என் பெயர் ஆண்ட்ரூ   “நான் இங்குள்ள மருத்துவமனையில் பணிபுரிகிறேன்”. “உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறினார். வகுப்பறையில் ஒரு சிறிய அறிமுகத்திற்கு பின் பயிற்சி பட்டறை மீண்டும் தொடங்கியது  பழக்கிய மூன்று நாட்களுமே அவர் என்னிடம் பல விஷயங்களை கேட்டு அறிந்தார் மற்றும் நான் பொறியியல் படித்துக் கொண்டே உளவியலும் தேர்ச்சி  பெற்றதையும்   மற்றும் எனது தொழில்நுட்ப மேலாண்மை பணிகளையும் வெகுவாக பாராட்டினார்.  அவரோடு நான் செய்த உரையாடல்கள் மிகவும் பிரமிக்க வைக்க தக்க வகையில் இருந்தது.  இதில் அவர் ஒரு முறை சென்னை வந்த அனுபவமும் அடக்கம். இப்படியே மூன்று நாட்கள் சென்றது பட்டறையின் கடைசி நாளான அன்று, தலைமை ஆசிரியருடன் சேர்ந்து கொண்டு வகுப்பறையை சுத்தம் செய்து கொண்டிருந்தார். நான் சென்று வருகிறேன் என்று அவரிடம் கைகுலுக்கும் போது,  தனது சந்திப்பு அட்டையை என்னிடம் வழங்கினார் அதை பார்த்து ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தேன் அவர்தான் அந்த  நகரத்தில் இருக்கும் மிகப்பெரிய அரசு மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர். ஆண்ட்ரூ ஜான்சன்.  மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் அவர் என்னை ஒரு சக மாணவனாக கருதியதும், என்னிடம் காட்டிய அக்கறையும், அன்பும், அடக்கமும், பணிவும், எளிமையும் என்னை மிகப் பெரிய ஆச்சரியத்துக்குள் ஆழ்த்தியது. அப்படியே சற்று  கண்ணை மூடி நம் நாட்டில் சில மருத்துவர்கள் காட்டும் அலப்பறையை நினைத்துக் கொண்டேன். மேலும் அவரிடம் பயிற்சி பெறும்  மருத்துவர்கள் எவ்வளவு பெரிய பாக்கியசாலிகள் என்றும் உணர்ந்தேன்.

ஆஸ்திரேலியா வந்தடைந்த ஒரு சில நாட்களிலேயே இங்குள்ள மக்கள் மற்றும் அவர்களின் பணிவான பேச்சும் என்னை மிகவும்  ஈர்த்தது. எனது இரண்டு வருட ஆய்வு படிப்பான முரண்பாடு மேலாண்மை மற்றும் தீர்வு( Master of Conflict Management and Resolution) மற்றும் எனது மற்றொரு முதுகலை பட்டமான வணிக நிர்வாகமும் (M.B.A) முடிவு பெற்றது  இவ் ரெண்டு முதுகலை பட்டங்களும் எனக்கு எண்ணிலடங்கா அனுபவத்தை கொடுத்தது பல்வேறு நாட்டினுடைய பொருளாதாரம் கலாச்சாரம் போன்றவற்றை கற்றுக் கொண்டேன். பல்வேறு நாட்டு மாணவர்களுடன் உரையாடவும் சேர்ந்து படிக்கவும்  ஒரு வாய்ப்பாக அமைந்தது.  இவ்வனைத்து அனுபவங்களும் ஒன்று சேராக எனக்கு ஒரு மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் பணி கிடைக்க  மற்றும் பணியாற்ற உறுதுணையாக இருந்தது. அதேபோல் சில சமயங்களில்  நிறவெறி தாக்குதல்களும் அரங்கேறியுள்ளது. எங்கிருந்தோ வந்த  பழுப்பு நிறத்தவன் நம்மை வழிநடத்துவதா? என்ற எண்ணம் பலருக்கு வந்து செல்லும் ஆனால் இவை அனைத்தையும் நம்  பொறுமையுடனும் அனுபவத்துடனும் அறிவுக்கூர்மையுடனும் கையாள்வதே மிகப்பெரிய சவாலாகும்  ஆனால், நம்மிடம் ஒரு செயலை செய்யும் திறனும் தலைமை பண்பும் இருந்தால் அந்த நிறவெறி சுக்குநூறாக நொறுங்கி விடும். இதுபோன்ற அனுபவங்களும்  திறன்களும் தலைமைப் பண்பும் பணமிருந்தால் மட்டும் வந்து விடாது பல வருட கடின உழைப்பும் ஈடுபாடும் இருந்தால் மட்டுமே வரக்கூடியது. அதே போன்று எவ்வளவு பணம் கொடுத்தாலும் நமக்கு கிடைக்காத ஒன்று பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களோடு வசிப்பது  அவர்கள் அன்பை பெறுவது இவை அனைத்தும் எட்டாக்கனியாகத்தான் இருக்கும் வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு. 2021 ஆம் ஆண்டு     எனது பெற்றோர்களை   கோவிட் வைரஸ் தாக்கியது   அவர்கள் இருவருமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள், அதேசமயம் ஆஸ்திரேலியா எல்லைகள் மூடப்பட்டிருந்தன   அப்போது ஆஸ்திரேலியாலிருந்து கொண்டு நானும் இந்தியாவிலிருந்து கொண்டு எனது பெற்றோர்களும்  அடைந்த துன்பத்திற்கு அளவே இல்லை அப்போது நான் எனது கடைசி கட்ட ஆய்வுகளை மேற்கொண்டிருந்தேன்  இந்தியா திரும்பச் சென்றால் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்குள் வர முடியாத    சூழ்நிலையும், முதுகலை பட்டங்களை நிறைவு செய்ய முடியாத சூழ்நிலையும், பெற்றோர்களை அருகில் இருந்து கவனிக்க முடியாத சூழ்நிலையும் ஒன்று சேர வந்தது.   ஒரு கட்டத்திற்கு பிறகு எல்லாவற்றையும் துறந்து விட்டு இந்தியா சென்று விடலாம் என்ற  முடிவெடுத்த தருவாயில் எங்கள் குடும்பத்தோடு சில காலம் மட்டுமே பழகிய   சென்னையில் இருக்கும் எனது கணித ஆசிரியர்  கை கொடுத்தார் அவர் அருகில் இருந்து எனது பெற்றோர்களுக்கு பார்த்துக் கொண்டார். மீண்டும் எனது இறுதி கட்ட ஆய்வை  தொடங்கினேன். ஆனால்  அந்த இக்கட்டான சூழ்நிலையில் எனது பெற்றோர்களை அருகில் இருந்து பார்த்துக் கொள்ள முடியாமல் போயிற்றே என்ற குற்ற உணர்ச்சி இன்றும் என்னுள் இருக்கின்றது. அதேபோல் 2022 ஆம் ஆண்டு  என்னை கோவிட் வைரஸ் தாக்கியது. மிகவும் உடல் நலிவுற்று   படுக்கையை விட்டு எந்திரிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதேசமயம் நான் முக்கியமான ஒரு ப்ராஜெக்ட் செய்து கொண்டிருந்தேன்,   அதை சரியாக செய்து முடித்தால்தான்  எனது  தகுதி  காண்  காலம்  சரியாக முற்றுப்பெறும்.  ஆதலால், உடல்நலம் குன்றியதை மறந்து  வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன். அதனால் நானே எனது வாகனத்தை இயக்கி மருத்துவமனையில்  அனுமதி பெற்று  அங்கேயே சிறிது காலம்  தங்கி சிகிச்சை பெற்று  மருத்துவமனையிலேயே வேலையும் பார்த்துக் கொண்டு  அந்த ப்ராஜெக்டை  நிறைவு செய்தேன். அதைப் பார்த்து மருத்துவமனை ஊழியர்கள் சற்று அதிர்ச்சியும் அடைந்தார்கள்.  ஆதலால் நம் உடல் நிலை  மிக மோசமாக குன்றினாலும் நம் வேலைகளை நாமே செய்து கொள்ள வேண்டிய  நிலைமை தான். அதேபோல் மருத்துவரை அணுகுவது அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பது விலைவாசி உயர்வு போன்ற அன்றாட பிரச்சனைகளும் இங்கு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இவை அனைத்தும் இந்தியாவில் ஓரளவு சமாளிக்க கூடிய  பிரச்சனைகளே. ஆகையால் வெளிநாட்டில் வாழ்பவர்கள் பல சமரசங்களை செய்து தான் வாழ வேண்டி உள்ளது.

4 thoughts on “ஆஸ்திரேலிய வாழ்க்கை: வாய்ப்புகளின் கடவுச்சீட்டு.

  1. Very nice article. People should understand the difficulties of the students , leave his/her own country,parents, relatives And friends. Best of luck.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *