ஆர்டிபிசியல் இண்டலிஜென்ஸ் ஆபத்தானதா? ஆக்கப்பூர்வமானதா?

முன்பு ஒரு காலத்தில் மக்கள் அனைவரும் தங்களின் வாழ்க்கையினை நிதானமாகவும், ரசித்தும் வாழ்ந்து கொண்டு இருந்தனர். ஆனால், இன்று தொலைபேசியும் கைப்பேசியும் இல்லாத வாழ்க்கை இயலாத வாழ்க்கை என்ற நிலை உருவாகியுள்ளது.   “உன் நண்பன் யார் என்று சொல், நீ யார் என்று சொல்கிறேன்” என்பது பழமொழி. ஆனால் இன்றோ, “உன் செல்ஃபோன் என்னிடம் கொடு , உன்னைப் பற்றி நான் சொல்கிறேன்” என்று சொல்லும் அளவிற்கு நம் வாழ்க்கையின் அனைத்து ரகசியங்களும் செல்ஃபோனிலேயே புதைந்து உள்ளது.

இன்றைய கால கட்டத்தில் கணினியும் , கைப்பேசியும் நம் நேரத்தை விழுங்கிவிட்டது என்றே சொல்லலாம். மனிதர்களிடம் ஒரு மணி நேரம் பேசுவது என்பதே அரிதாகி விட்ட நிலையில் கணினியிடமும் , கைப்பேசியிடமும் பல மணி நேரம் செலவிட நாம் தயங்கியதே இல்லை. 

Artificial Intelligence(AI) என்ற மிகப் பெரிய பரிணாம வளர்ச்சி, கணினித்துறையில் ஏற்பட்டுள்ளது. மனிதனின் வேலையே பறிபோய் விடுமோ, இனி இயந்தரங்களுக்கு மட்டுமே பணி புரிய வாய்போ என்ற பயத்தினை , AI இன்றைய மக்களுக்கு ஏற்படுத்தினாலும் அது மக்களுக்கு தேவையான ஒன்று.இது மனிதனின் பணியை மிகவும் எளிதாக மாற்றிவிட்டது.

முன்பெல்லாம் ஆடி மாதத்திற்கு ஒரு முறை அண்ணாச்சிக் கடையில் பொருட்கள் வாங்கும் காலம் போய், இப்போது பிக் பில்லியன் டே, இண்டிபெண்டன்ஸ் டே என்று அமேசான் , ஃபிலிப் கார்ட் போன்ற இ- காமர்ஸ் தளத்தில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருக்கிறோம்.

இ – காமர்ஸ் இணையதளத்தில் AI – யின் பயன்பாட்டை தவிர்க்க இயலாது. அதே நேரம் மிகவும் பயனுள்ளது. ஏனென்றால், நீங்கள் ஒரு பொருளை வாங்கும்பொழுது, அந்தப் பொருளுக்கு தொடர்புடைய மற்றப் பொருள்கள் cross-sell என்னும் முறையில் அதுவே உங்களுக்குப் பரிந்துரைக்கும். உதாரணத்துக்கு, ஒரு ஃபோன் – ஐ நாம் வாங்குகிறோம் என்றால், ஃபோன் கேஸ் , சார்ஜர் போன்ற அனைத்தையும் பரிந்துரைக்கும். அந்தப் பொருட்கள் நம் வீட்டை அடையும் முன் 360° கோணத்தில் இணையத்தளத்திலே சரி பார்த்துக் கொள்ள முடியும். அதே போல் AR என்னும் ஆக்குமென்டட் ரியாலிட்டி தொழில்நுட்பம் மூலம் ஒரு பொருளை வாங்குவதற்கு முன் அதை எங்கு வைக்க வேண்டும் என்று காட்சிப் படுத்திக் கொள்ளலாம். இது அமேசான் போன்ற இ – காமர்ஸ் தளங்களில் நடை முறையில் உள்ளது. 

உதாரணத்திற்கு ஒரு தொலைக்காட்சியையோ அல்லது ஒரு மேசையையோ நீங்கள் அமேசானில் வாங்கப் போகிறீர்கள் என்றால், அது நம் வீட்டில் எப்படிப் பொருந்தும், எந்த அமைப்பில் இருக்கக்கூடும் என்பதை இந்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உங்களுக்கு காட்சிப் படுத்தும்.

இத்தோடு இந்தத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நின்று விடவில்லை, அமேசான் நிறுவனம் Go Grocery என்னும் ஆளில்லா பல்பொருள் அங்காடிகளை நிறுவியுள்ளது. அது காஷியர் லெஸ் என்று அழைக்கப்படும் அங்காடிகள். அங்குக் காசாளருக்கு வேலை இல்லை. ஒரு கடைக்குச் சென்று ஒரு கூடையை எடுத்துக் கொண்டு ஒரு ஒரு பொருளாக நீங்கள் அந்தக் கூடையில் போட்டு வாங்கும் பொழுதே தானாய் அதற்கான ரசீதை தயார் செய்து அந்தக் கடையில் இருந்து நீங்கள் வெளி வரும்பொழுது உங்கள் அமேசான் கணக்கில் இருந்து அந்த ரசீதிற்கான தொகையை தானாய் எடுத்துக் கொள்ளும். இதே போன்று கூகுளில் கூட, முக அடையாளம் கண்டு இயங்கும் முறை இருந்தது, இப்பொழுது அதை நீக்கி விட்டார்கள். 

(Amazon Go Grocery )

அமேசான் நிறுவனம் டாஷ் பட்டன் ( Dash Button ) என்னும் செயல்பாட்டை வெளிநாடுகளில் இன்றளவும் நடைமுறையில் வைத்துள்ளது. இதன் செயல்பாடு என்னவெனில், இதன் மூலம் நீங்கள் ஏற்கனவே வாங்கியப் பொருளை மீண்டும் வாங்க நினைத்தால் அதற்காக திரும்பவும் தேடத் தேவையில்லை. வாங்கிய அந்தப் பொருள்களுடன் அமேசான் நிறுவனம் பொத்தான் போன்ற ஒன்றை கூடவே அனுப்பி வைப்பார்கள்.  அந்தப் பொத்தானை அழுத்தினால் போதுமானது.

(அமேசான் Dash Button )

இ – காமர்ஸ் இணையதளங்களோடு AI – யின் பங்கு நின்று விடவில்லை. உணவு சார்ந்த செயலிகளிமும் செயற்கை நுண்ணறிவின் பங்கு அளப்பரியது. சமீபமாக சுவிக்கி (swiggy) , ஜோமேடோ (Zomato) போன்ற செயலிகளில் நமது அலைபேசிக்கு , கால நிலைகளைப் பொறுத்து “மழை பெய்துக் கொண்டிருக்கிறது , சூடாக ஒரு காப்பி குடிக்கிறீர்களா? ” என்பது போன்ற குறுஞ் செய்திகள் வந்த வண்ணம் இருந்ததையும் அது மீம்ஸ்கள் போடும் அளவிற்கு வைரல் ஆனதை நாம் அனைவரும் அறிவோம். 

இவ்வாறு AI பல வகைகளில் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. நம்முடைய ஷாப்பிங் அனுபவத்தை மிகவும் இலகுவாக மாற்றி இருக்கிறது. AI இல்லாத ஒரு எதிர் காலத்தை நம்மால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. 

காலங்கள் மாற மாற நாமும் மாற வேண்டிய சூழல் இருந்து கொண்டே இருக்கும். AI யின் இந்த அபார வளர்ச்சி சற்றே அசுரத்தனமாக இருப்பினும் அது நம் வாழ்வியல் தரத்தினை மேம்படுத்தியுள்ளது என்பதை நம்மால் மறுக்கவே இயலாது. இதன் வளர்ச்சிக் கண்டு நாம் பயம் கொள்ளத் தேவை இல்லை. 

எந்தக் காலத்திலும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மனிதனை மிஞ்ச வாய்ப்பில்லை. ஒரு கண்டுபிடிப்பிற்கு எப்பொழுதும் ஒரு மாற்று வழி இருந்தே தீரும். நாமும் அதனோடு கூடவே வளர்ந்து அதனுடைய நன்மைகளை மட்டும் நமக்கு சாதகமாக எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்ற வழிமுறையை அறிந்துக் கொள்ளுதல் அவசியம். 
மனிதனின் வளர்ச்சியும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் எப்பொழுதும் ஒன்றை ஒன்று சார்ந்ததே. சங்க காலத்தில் இருந்து இன்று வரை புதிய கண்டுபிடிப்புகள் சற்றே அச்சத்தை ஏற்படுத்தினாலும், அவை நம் வேலைகளின் பளுவினை குறைத்துள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியை சரியான முறையில் பயன்படுத்தினால் என்றுமே நமக்கு நன்மை பயக்கும், சந்திரயான் – 3 நிலவில் இறங்கியதைப் போல… !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *