அதிசய வங்கா நரிகள்

குள்ள நரி எனப்படும் வங்கா நரி அரிதாக காணப்பட்டாலும், ஆரவல்லி பகுதியில் இது தீபகற்ப இந்தியாவில் காணப்படும் ஐந்து வகையான குள்ளநரிகளில் ஒன்று.

பரவல்:

ஐந்து வகையான குள்ளநரிகளில் இந்திய நரி மற்றும் சிகப்பு நரி மட்டுமே பொதுவாக, பரவலாக காணப்படுகிறது. நமது உள்ளூர் நரி அல்லது வங்கா நரி (Vulpes bengalensis) இந்திய துணைக்கண்டத்தில் மட்டுமே உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைகள் போன்ற, ஈரமான காடுகள் நிறைந்த பகுதிகள் மற்றும் மிகவும் வறண்ட பகுதிகளில் காணப்படுவதில்லை. இமயமலை அடிவாரம், நேபாளத்தின் தேராய் நிலப்பரப்பு முதல் இந்தியாவில் தெற்க்கே வரை இந்த வங்கா நரிகள் வசிக்கின்றன. தெற்கு மற்றும் கிழக்கு பாகிஸ்தான் முதல் கிழக்கு இந்தியா மற்றும் கிழக்கு வங்க தேசம் போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன. மேற்கு ஆப்கானிஸ்தான் அல்லது ஈரானில் இந்த இனங்கள் பதிவு செய்யப்படவில்லை. மற்ற நரியினங்கள் உலகம் முழுவதும் காணப்படுகின்றன. வடக்கிலிருந்து தென் அமெரிக்காவின் தெற்க்கே வரை ஆர்டிக் நரிகள் காணப்படுகின்றன. இவை குளிர்காலத்திற்கேற்ற உடல் தகவமைப்பை பெற்றுள்ளன. சிறிய இனம் – பெரிய காது பின்னெக் நரி -இது வட ஆப்பிரிக்காவின் பாலைவன பகுதிகள் முழுவதும் காணப்படுகிறது.

வாழிடம்

பொதுவாக வங்க நரிகள், மிதவெப்ப, தட்டையான முதல், மேடுபள்ளங்கள் உள்ள இடங்கள், திறந்த புதர் அல்லது முள் அடர்ந்த இலை உதிர் காடுகள் மற்றும் புல்வெளிகளில் காணப்படுகின்றன. பொதுவாக ஊருக்கு வெளியே உள்ள மேய்ச்சல் புறம்போக்கில் அதிகம் வசிக்கின்றன. ஏனேனில் இவ்விடங்களில் வேட்டையாடுவதற்கு, குழிகள் தோண்டுவதற்கும் எளிதாக உள்ளன. இந்த வகையான பகுதிகளில் இவை அதிகமாக காணப்படுகின்றன. இருப்பினும், சில விளை நிலைகளிலும், நீர்ப்பாசன கால்வாய்களின் எல்லைகளிலும் வாழ்கின்றன. இவை பொதுவாக அடர்ந்த காடுகள், செங்குத்தான மலைப்பிரதேசங்கள், உயர்ந்த புல்வெளிகள் மற்றும் பாலைவனங்களை தவிர்க்கின்றன.

இந்திய நரிகள் சிறிய தோற்றம் உடையது. மெல்லிய கால்களைக் கொண்ட நாய் போல நல்ல வட்டவடிவ தலை, நீளமான முகவாய், ஆழமான மார்புடைய உடல், நீளமான கூரான காதுகள். புதர்போன்ற (bushy) வால். வாலின் நீளம் தலையிலிருந்து உடல்வரை உள்ள நீளத்தில் 50 முதல் 60 சதவிகிதம் நீளமுடையது. இதன் முடியின் நிறம் கூட்டத்திற்கு கூட்டம் மாறுபடும், பருவக்காலத்தினாலும் கூட குழுக்களுக்குள் மாறுபடும். ஆனால் பொதுவாக சாம்பல் நிறம் முதல், வெளிறிய பழுப்பு நிறத்திலும், பழுப்பு அல்லது சிகப்பு கலந்து பழுப்பு நிறமுடைய கால்கள். அடர் பழுப்பு நிறம் கொண்ட நிமிர்ந்து நிற்கும் காதுகள், காது முனைகள் கழுத்தின் பின்புறத்தை போல, கருமையாக அல்லது மிகவும் கருமையாக காணப்படும். ஆனால், சிவப்பு நரியில் காணப்படுவது போல அடர் திட்டுகள் காணப்படுவதில்லை. புதர் போன்ற வால் மற்றும் வால் நுனி கருமையாக காணப்படும். சிவப்பு நரிகளுக்கு இப்படி இல்லை. வங்காநரியின் உடல் நீளம் தோராயமாக தலை முதல் வால் வரை 45 முதல் 60 சென்டிமீட்டர் உடையது. வாலின் நீளம் 25-35 சென்டிமீட்டர். எடை 2-4 கிலோகிராம் ஆகும்.

  • Wolf ஓநாய்
  • Jackal நரி
  • Dhole செந்நாய்
  • Fox குள்ள நரி.

ஓநாய், நரி, செந்நாய் மற்றும் இதர குள்ள நரி இனங்களுடன் ஒப்பிடும் போது, வங்க நரிகள் வேட்டையாடுவதற்கும், இரையை துரத்தி பிடிப்பதற்கும் ஏற்ற உடல் தகவமைப்பை பெற்றுள்ளன. Whether flat out or at a steady loping trot over long distances.  சக்தி அதிகம் மிகுந்த வெய்யிலிலும் கூட இரையை துரத்திச் செல்லும் பொதுவாக புத்திசாலியானது மற்றும் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும். கூரிய பார்வை திறன் உண்டு. இரையை பிடிப்பதில் தந்திரமாக செயல்படும்.

செயல்பாடு:

கூடி வாழும் வாழ்க்கையில் நாட்டமில்லாத, தனிமையை விரும்பும், தனித்தே வாழும். ஆனால் இனப்பெருக்க காலத்தில், தனது இணையுடன் பொந்தில் இணை சேரும். அவைகளின் பொந்தை அவைகளே தோண்டிக் கொள்ளும். நீர் அதிகமாக இடங்களுக்கு அருகில் உள்ள மேடான பகுதிகளில் பொதுவாக குழிகளைத் தோண்டும். ஒரு சில வேளைகளில் முள்ளம்பன்றிகளின் பொந்துகளை அல்லது சிறிய குகைகளைப் பயன்படுத்தும். பொதுவாக வங்க நரிகளின் பொந்துகள்/ வாயில்களை நிறைய திறப்புகளை (openings) கொண்டிருக்கும். ஒரு சில திறப்புகள் பொய்யானவை. மற்ற திறப்புகள் மைய அறைக்கு செல்லும். மைய அறை சுமார் 2 முதல் 3 அடி வரை ஆழத்தில் இருக்கும். இவைகள் பொதுவாக பகலில் இங்கு உறங்கும். அந்தி சாய்ந்த பின்பு, வேட்டையாட புறப்படும். மக்கள் வசிப்பிடங்களுக்கு அருகில் உள்ள வங்க நரிகள், வீடுகளின் தோட்டங்களிலும் நுழையும். சிலவேளைகளில், வளர்ப்புக் கோழிகளையும் பிடிக்கும். பொதுவாக இரவில் வேட்டையாடுபவை. காடுகளில், பகலிலும் இவை வேட்டையாடும். (இவைகளின் கண்கள் இரவில் பச்சை வண்ணத்தில் ஒளிரும், அவைகளின் கண்களில் வெளிச்சம் பட்டால்). ஆண் நரிகள் தங்கள் வாழிட எல்லையை பாறைகள் மேலோ அல்லது புதர்களிலோ, சிறுநீர் மூலம் அடையாளப்படுத்திக் கொள்கின்றன. பெண் நரிகள் குட்டிகளுடன் உறங்கும். அவைகள் தங்கள் இணையுடன் இருந்தாலும் கூட தனித்து வேட்டையாடும் இயல்புடையது. சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தை வெறும் ஒரு மணி நேரத்தில் கடக்கும் அளவிற்கு வேகமாக ஓடும் திறனுடையது. வேகமாக ஓடும் பொழுது, அவைகளின் வால் நேராக இருக்கும். சில அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் குளிர் காய்தலுக்காக நிலத்தில் படுத்திருக்கும்.

உணவு முறை:

இவைகள் அனைத்துண்ணிகள். சிறிய பாலூட்டிகள் (எலிகள், அணில்கள், மூஞ்சுறுகள், முயல்கள் போன்ற), இருவாழ்விகள், ஊர்வன, பறவை முட்டைகள், பூச்சிகள், கரையான்கள். சில வேளைகளில் முலாம்பழம், கிழங்குகள், கொண்டைக்கடலை போன்றவற்றையும் விரும்பி உண்ணும். பறவைகளை வேட்டையாடி உண்பதில்லை, மாறாக அடிபட்ட, பறக்க இயலாத பறவையை உண்ணும். உணவைமெல்லுவதில்லை, மாறாக சிறு சிறு துண்டுகளாக வெட்டி உண்ணும். விவசாயிகள் எப்போதுமே இந்த வங்கா நரிகளை நண்பரகளாகவே பார்க்கின்றனர், ஏனெனில் இவை வயல்வெளிகளில் எலிகள் மற்றும் பிற தொல்லை தரும் உயிர்களை பிடித்து உண்ணும்.

வேட்டையாடுபவர்கள்:

மனிதர்கள் வங்கா நரிகளை சில இடங்களில் வேட்டையாடுபவர்கள், பெரும்பாலும் ரோமங்களுக்காக அல்லது இறைச்சிக்காக வேட்டையாடப்படுகின்றன. பல இடங்களில் அவை தொல்லை தருபவையாக கருதப்படுவதால் கொல்லப்படுகின்றன. பெரிய பூனையும், உருவத்தில் பெரிய பறவைகள் கழுகுகள், பருந்துகள், ஆந்தைகள் இந்த வங்கா நரிகளை உணவாக உண்கின்றன.

நரி ஜல்லிக்கட்டுக்கு பயன்படுத்தப்படும் நரிகள் அல்லது “வங்கா நரி ஜல்லிக்கட்டு” பொறிகளைப் பயன்படுத்தி கிராமப்புற காடுகளில் பிடிக்கப்படுகின்றன. நரிகளின் பின்னங்கால்கள் கயிற்றால் கட்டப்பட்டு, கடிபடாமல் இருக்க வாய் கட்டப்பட்டு கிராமம் முழுவதும் துரத்தப்பட்டு, பிடிக்கப்படுகின்றன. சேலம் மாவட்டத்தில், வாழப்பாடி வட்டம், சின்னமநாயக்கன் பாளையம் ரங்கனூர். கொட்டவாடி, சின்னகிருஷ்ணாபுரம். பெரிய கிருஷ்ணாபுரம், தமையனூர் போன்ற கிராமங்களில், குறிப்பாக, பெத்தநாயக்கன்பாளையம் அருகே வாழப்பாடி எல்லையில், பல தசாப்தங்களாக, தடையை மீறி இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

ஒலி எழுப்புதல்:

அந்தி சாயும் மாலை வேளையில், மூன்று முதல் நான்கு முறை தொடர்ச்சியாக ஊளையிடும் தற்காலங்களில் வங்கா நரிகள் எண்ணிக்கை பெருமாளவு குறைந்துவிட்டதால், நரி ஊளையிடும் சப்தத்தை கேட்பதே அரிதிலும் அரிது. அவைகளும் நாய்களைப் போல உறுமுகின்றன, சிணுங்குகின்றன மற்றும் குரைக்கின்றன.

இனப்பெருக்கம்:

வங்கா நரி தன் இணையைத் தேடி பின்னர் குடும்பமாக்குகிறது. அவை வாழ்நாள் முழுவதும் ஒரே ஒரு துணையுடன் இனச்சேர்க்கை செய்து வாழ்கிறது. கோடைக்காலத்திற்கும் கடுங்குளிர்காலத்திற்கும் இடைப்பட்ட பருவம் அவைகளின் இனச்சேர்க்கை நடைபெறும். பொதுவாக அவற்றின் இனப்பெருக்க காலம் அக்டோபர் முதல் ஜனவரி வரை நிகழ்கிறது. கர்ப்ப காலம் 50-60 நாட்கள் ஆகும். குட்டிகள் பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் பிறக்கின்றன, குட்டிகள் ஒவ்வொரு முறையும் 2 முதல் 4 குட்டிகளை ஈனும் பிறக்கும் பொழுது குட்டிகள் கண் மூடிய நிலையிலே இருக்கும். அவை குகை/பொந்தின் பாதுகாப்பிற்குள் வளர்க்கப்படுகின்றன. தாய் மற்றும் தந்தையின் அரவணைப்பில் வளர்க்கப்படுகின்றன. பறவை தன் குஞ்சுகளுக்கு உணவளிப்பதுபோல, வங்கா நரிகள் குட்டிகளுக்கு உணவை கூழ் போல கொடுக்கிறது.

முதல் சில வாரங்களுக்கு, செரிமானம் செய்யப்பட்ட உணவை வாய் மூலமாக வரவழைத்து குட்டிகளுக்கு ஊட்டுகிறது. ஐந்து வாரங்களுக்கு பின்பு குட்டிகள் பொந்தை/குகை விட்டு வெளியே வர ஆரம்பிக்கின்றன. காலை மாலைகளில், வெளியே விளையாடும். வங்கா நரி குட்டிகள் 3-4 மாதங்கள் முழுமையாகப் பாலூட்டப்பட்டு, மாதங்களில் தனியே வேட்டையாடத் தொடங்குகின்றன. முதல் சில மாதங்களில் குட்டி இறப்பு அதிகமாக உள்ளது. வங்கா நரிகளின் சராசரி ஆயுட்காலம் சுமார் 6-10 ஆண்டுகள்.

மனிதர்களுடனான தொடர்பு:

மனிதர்களுடன் வங்கா நரிகள் இசைந்து வாழ்கின்றன. மனித குடியிருப்புகளுக்கு அருகில், விவசாய நிலங்களிலும்தோட்டங்களிலும், புல்வெளிகளிலும், புதர்க் காடுகளிலும் இவைகள் தங்கள் எல்லைகையை நிர்ணயிக்கின்றன. அவை எலிகள் மற்றும்முயல்கள் போன்ற சிறிய பாலூட்டிகளின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றன. இந்த சிறிய பாலூட்டிகளின் மக்கள்தொகை மிக அதிகமாக இருக்க அனுமதிக்கப்பட்டால் அது வாழ்விடச் சீரழிவை ஏற்படுத்தும். மனிதர்கள் நரிகளுடன் சில மகிழ்வு வெறுப்பு போன்ற உறவைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

பெரும்பாலான மக்கள் அவற்றை சுவாரஸ்யமாகவே கருதுகின்றனர் மற்றும் தங்கள் பகுதியில் அவற்றை இழந்ததற்கு வருந்துகிறார்கள். மனிதர்கள் அதன் ஒலியுடன் மிக நெருக்கமான தொடர்பைக் கொண்டுள்ளனர். பழைய நாட்களில், அவர்களில் பலர் நரியின் சத்தம் கேட்பது அரிதாகி வருகிறது எனவும் தெரிவிக்கின்றனர்.

அச்சுறுத்தல்கள்:

வங்கா நரி அதன் வாழ்விடத்தின் பெரும்பான்மையான பகுதிகளை இழந்துவிட்டது. வாழ்விடப் பாதுகாப்பின்மை அதன் மிகப்பெரிய ஒட்டுமொத்த அச்சுறுத்தலாக இருக்கலாம். தென்னிந்தியாவில் அதன் வாழ்விடங்களில் 2%க்கும் குறைவானது கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களின் தற்போதைய பாதுகாக்கப்பட்ட பகுதியின் கீழ் உள்ளது. வேட்டையாடுதல், பெரும்பாலும் பழங்குடியினரால் அதன் தோல், சதை மற்றும் உடல் பாகங்கள் (பின்னர் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டது), அத்துடன் சுருங்கிய புல்வெளி பகுதிகள் புதர் மற்றும் “மேய்ச்சல் புறம்போக்கு நிலம்” வாழ்விடங்களை தீவிர விவசாயம், உயிரி எரிபொருள் தோட்டங்கள், தொழில் மற்றும் பல்வேறு மேம்பாடுகளுக்கு பயன்படுத்துவது. மேலும் பெருகிவரும் மக்கள் தொகை வங்கா நரிகளின் வாழிடங்களை சிதைக்கிறது.

சேலம் வாழப்பாடி பகுதியில் பொதுவாக பொங்கல் பண்டிகையின் போது நடைபெறும் வங்கநரி ஜல்லிக்கட்டு போட்டியில் நரியை பொறி வைத்து பூக்கள் மற்றும் மாலைகளால் அலங்கரித்து குலதெய்வமாக வழிபடுவது வழக்கம். இந்த வழக்கம், அவர்களின் கலாச்சார நடைமுறைகளில் ஆழமாக வேரூன்றியது. நரி ஜல்லிக்கட்டுக்கு பயன்படுத்தப்படும் நரிகள் அல்லது “வங்கா நரி ஜல்லிக்கட்டு”, பொறிகளைப் பயன்படுத்தி கிராமப்புற காடுகளில் பிடிக்கப்படுகின்றன. அவர்களின் பின்னங்கால்கள் கயிற்றால் கட்டப்பட்டு. கடிபடாமல் இருக்க நரிகளின் வாய்கள் கட்டப்பட்டு, கிராமம் முழுவதும் துரத்தப்பட்டு, பிடிக்கப்படுகின்றன. தமிழக அரசு நரி ஜல்லிக்கட்டை மாநில கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் ஒரு அங்கமாக கருதவில்லை. இந்த சவால்கள் இருந்தபோதிலும், வங்காள நரி தற்போது IUCN சிவப்பு பட்டியலில் ஆபத்தான உயிரினங்களின் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ளது.

இன்று வளர்ந்து வரும் மற்றொரு அச்சுறுத்தல் சாலைகள், அதாவது காடுகள் மற்றும் பிற வாழிடங்களில் ஒவ்வொரு நாளும் அந்த பகுதிகளில் அதிகரித்து வரும் வாகனங்களால் கொல்லப்படுகின்றன. கிராமங்களில் காணப்படும் தடுப்பூசி போடப்படாத சுற்றித் திரியும் கிராமத்து நாய்களிடமிருந்து பரவும் நோய்கள், நாய்க்கடி மற்றும் வெறிநாய்க்கடி போன்றவற்றால் வங்காநரிகள் பாதிப்படைகிறது. இந்த இனம் அரிதானது மற்றும் இந்திய துணைக் கண்டத்தில் மட்டுமே காணப்படுகிறது என்றாலும், இது எண்ணிக்கையில் மிக குறைந்தே காணப்படுகிறது. குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற சில மாநிலங்களில் இவைகளுக்கு போதுமான வாழிடம் மற்றும் இரை கிடைப்பதால் அவைகளின் எண்ணிக்கையில் சிக்கல் இல்லாமல் இருக்கலாம். ஆனால் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா போன்ற பிற மாநிலங்களில் அதன் வாழ்விடங்கள் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. ஒட்டுமொத்தமாக அதன் எண்ணிக்கை அபாயமாக குறையும் கட்டத்தில் உள்ளது மற்றும் வாழ்விட இழப்பு, நோய்கள் மற்றும் இயற்கை இறப்புகள் தொடர்ந்தால் கடுமையான உள்ளூர் அழிவு (local extinction) கூட ஏற்படலாம். எவ்வாறாயினும், தற்போதைய வங்கா நரிகளின் எண்ணிக்கை சரிவை மீட்டெடுக்க அனைத்து துறையும் ஒன்றிணைந்து பாதுகாப்பு மீட்டுருவாக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

பாதுகாப்பு முயற்சிகள்:வாழ்விடப் பாதுகாப்பு: புல்வெளிகள், புதர்கள் மற்றும் விவசாயப் பகுதிகள் உட்பட வங்காள நரிகளின் இயற்கை வாழ்விடங்களைப் பாதுகாத்து மீட்டெடுக்கவும். நகரமயமாக்கல், விவசாய விரிவாக்கம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு காரணமாக வாழ்விட சீரழிவு மற்றும் துண்டாடப்படுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை செயல்படுத்துதல். சட்டப் பாதுகாப்பு: வங்கா நரிகள் மற்றும் அவற்றின் பாகங்களை வேட்டையாடுதல், பொறிவைத்தல் மற்றும் வர்த்தகம் செய்வதைத் தடைசெய்யும் தற்போதைய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளைச் செயல்படுத்துதல் குற்றவாளிகளைத் தடுக்க வனவிலங்கு வேட்டையாடுதல் மற்றும் சட்டவிரோத வர்த்தகம் ஆகியவற்றுக்கு கடுமையான தண்டனைகளை அமல்படுத்த வேண்டும். விழிப்புணர்வு மற்றும் கல்வி: வங்கா நரி பாதுகாப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி உள்ளூர் சமூகங்கள், நில உரிமையாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு தெரிவிக்க விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் கல்வி நிகழ்ச்சிகளை தொடர்ந்து, தொய்வின்றி நடத்த வேண்டும். நரிகளின் சுற்றுச்சூழல் பங்கு மற்றும் அவை எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் பற்றிய விழிப்புணர்வை தெளிவாக பகிர வேண்டும். ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு: வங்கா நரிகள் எண்ணிக்கை, நடத்தை மற்றும் வாழ்விடத் தேவைகளை நன்கு புரிந்துகொள்வதற்கான அறிவியல் ஆராய்ச்சி நவீன தொழில்நுட்பம்) மற்றும் கண்காணிப்பு முயற்சிகளுக்கு முன்னுரிமை தர வேண்டும். பாதுகாப்பு நடவடிக்கைகளின் செயல்திறனை சரியாக மதிப்பிடுதலும் அவசியம். வாழ்விட மேலாண்மை: வங்கா நரிகள் மற்றும் அவற்றின் இரை இனங்களுக்கு தகுந்த வாழ்விடங்களை பராமரிக்க, கட்டுப்படுத்தப்பட்ட, மேய்ச்சல் மேலாண்மை மற்றும் வந்தேறி இனங்களை கட்டுப்படுத்தி சரியான வாழ்விட மேலாண்மை நடைமுறைகளை செயல்படுத்தவும். தேவைப்படின் புல்வெளிகள் மறு உருவாக்கம்/மீட்டுருவாக்கம் மூலமாக வங்கா நரிகளுக்காக சிறப்பு வாழிடங்களை அமைத்து கொடுக்கலாம். கால்நடைப் பாதுகாப்பு: வங்காள நரிகளுக்கும் கால்நடை உரிமையாளர்களுக்கும் இடையிலான மோதல்களைக் குறைப்பதற்கான உத்திகளை உருவாக்கி மேம்படுத்துதல் மிக அவசியம். சமூக ஈடுபாடு: பாரம்பரிய அறிவு மற்றும் நடைமுறைகளை ஒருங்கிணைத்து, மாற்று வாழ்வாதார விருப்பங்களை வழங்குவதன் மூலம், மற்றும் இயற்கை வளங்களின் பாதுகாப்பை உள்ளூர் மக்களின் பெரும் பொறுப்பை அதிகரிக்க செயல்கள் செய்வதின் மூலம் வங்கா நரி பாதுகாப்பில் உள்ளூர் சமூகங்களை ஒன்றிணைவர். பாதுகாக்கப்பட்ட பகுதிகள்: வங்கா நரி வாழ்விடங்களைப் பாதுகாக்கவும் மக்களிடையே புரிதலை எளிதாக்கவும் வங்கா நரி- பாதுகாக்கப்பட்ட பகுதிகள் தமிழக அரசு உடனடியாக ஏற்படுத்தி அவற்றை திறம்பட நிர்வகிக்க வழிவகை செய்ய வேண்டும். ஒத்துழைப்பு: வங்கா நரி பாதுகாப்பு முயற்சிகளை ஒருங்கிணைக்கவும், உள்ளூர் வளங்களைப் பகிர்ந்து கொள்ளவும், நிபுணத்துவத்தைப் பெறவும், அரசு நிறுவனங்கள் (தமிழக வனத்துறை, சுற்றுசூழல் துறை, காலநிலை துறை, உள்ளாட்சிகள் துறை மற்றும் தமிழ்நாடு பல்லுயிர் வாரியம்), தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், உள்ளூர் சமூகங்கள் மற்றும் பிற அமைப்புகளோடு ஒத்துழைப்பை வளர்ப்பது வங்கா நரிகள் பாதுகாப்பதில் அவசியமாகிறது. நிலையான நிலப் பயன்பாட்டு நடைமுறைகளை ஊக்குவித்து, சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத சூழல் சுற்றுலா மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில், வங்கா நரி வாழ்விடங்களில் தாக்கங்களை படிப்படியாக குறையலாம். எதிர்மறையான தாக்கங்களை படிப்படியாக குறையலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *