“அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்பது நம் முன்னோர் வாக்கு. ஒரு மனிதனின் முதல் பள்ளிக்கூடம் தாயின் கருவறை, முதல் ஆசிரியர்கள் பெற்றோர். உயிரைக் கொடுத்து, உருவம் கொடுத்து, உலகை அறிமுகப்படுத்துபவர்கள் அவர்களே. பெற்றோராக இருப்பது என்பது வெறும் உயிரியல் நிகழ்வு அல்ல; அது ஒரு வாழ்நாள் அறம், தவம், பொறுப்பு. பெற்றோர் அறம் என்பது பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பதோடு முடிவதில்லை, அவர்களை நல்ல மனிதர்களாக, சமூகத்திற்கு பயனுள்ளவர்களாக உருவாக்குவதில்தான் அதன் முழுமை அடங்கியுள்ளது.
பெற்றோர் என்பதன் பொருள் – உயிர் கொடுப்பதிலிருந்து உயர்வு கொடுப்பது வரை
பெறுதல் என்ற சொல்லுக்கு பெற்றுக் கொள்ளுதல் என்று பொருள். பெற்றோர் தன் பிள்ளைகளை இந்த உலகத்திலிருந்து பெற்றுக் கொள்ளவில்லை, இந்த உலகத்திற்கு கொடுக்கிறார்கள். தாய் தன் ரத்தத்தை பாலாக்கி தருகிறாள், தந்தை தன் வியர்வையை உழைப்பாக்கி தருகிறார்.
திருக்குறள் கூறும்:
“மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு”
நல்ல மனைவி, நல்ல கணவன் என்பது மங்கலம் என்றால், நல்ல பிள்ளைகளைப் பெறுவதுதான் அதைவிடச் சிறந்த அணிகலன். ஆனால் அந்த நன்மக்கட்பேறு தானாக வருவதில்லை. அது பெற்றோரின் அறத்தால் வருவது.
பெற்றோர் அறத்தின் ஐந்து தூண்கள்:
அ) அன்பு அறம்:
குழந்தைகளிடம் நிபந்தனையற்ற அன்பு காட்டுவது. இன்றைய பல பெற்றோர்கள் அன்பை மதிப்பெண்களோடும், பரிசுப் பொருட்களோடும் குழப்பிக் கொள்கிறார்கள். உண்மையான அன்பு என்பது குழந்தை தோல்வியடையும் போது அருகில் நிற்பது. “நீ இருக்கிறாய், நான் இருக்கிறேன்” என்ற நம்பிக்கையை கொடுப்பது.
ஆ) ஊட்டி வளர்க்கும் அறம்:
உடலுக்கு மட்டும் உணவு ஊட்டுவதல்ல. மனதிற்கும் அறிவுக்கும் ஊட்டுவது. நல்ல உணவு, நல்ல உறக்கம், நல்ல சூழலை உருவாக்கிக் கொடுப்பது பெற்றோரின் முதல் கடமை. குழந்தை என்ன சாப்பிடுகிறது, யாருடன் பழகுகிறது, என்ன பார்க்கிறது என்பதை கவனிப்பதே இந்த அறம்.
இ) கல்வி அறம்:
வள்ளுவர் சொல்வார்,
“தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்”
தந்தை தன் மகனுக்கு செய்யும் மிகப்பெரிய நன்றி, அவனை அறிவுடையோர் சபையில் முதலாவதாக அமர வைப்பதே. பள்ளிக்கு அனுப்புவது மட்டும் கல்வி அல்ல. கேள்வி கேட்க கற்றுக் கொடுப்பது, புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்குவது, தோல்வியை ஏற்றுக் கொள்ள கற்றுக் கொடுப்பது.
ஈ) ஒழுக்க அறம்:
குழந்தைகள் சொல்வதை கேட்டு வளர்வதில்லை, பார்ப்பதை பார்த்து வளர்கிறார்கள். பெற்றோர் பொய் சொல்லிக் கொண்டு, பிள்ளையிடம் “பொய் சொல்லாதே” என்றால் அது பலிக்காது. பெற்றோரின் வாழ்க்கையே பிள்ளைக்கு முதல் பாடம். நேர்மை, பொறுமை, பிறருக்கு உதவுதல், பெரியவர்களை மதித்தல் போன்றவற்றை வாழ்ந்து காட்டுவதே ஒழுக்க அறம்.
உ) விடுவிக்கும் அறம்:
இதுதான் மிகக் கடினமான அறம். பறவை தன் குஞ்சுக்கு பறக்க கற்றுக் கொடுத்துவிட்டு, வானத்தை விட்டுக் கொடுக்க வேண்டும். பல பெற்றோர் பிள்ளைகளை தங்கள் கனவுகளின் நீட்சியாக பார்க்கிறார்கள். “நான் டாக்டர் ஆகலை, நீ ஆகணும்” என்பது அறம் அல்ல. பிள்ளையின் தனித்திறமையை கண்டுபிடித்து, அதன் வழியில் பறக்க விடுவதுதான் உண்மையான பெற்றோர் அறம்.
பிள்ளை உங்கள் சொத்து அல்ல, உங்கள் மூலம்
வந்த விருந்தினர்
கவிஞர் கலீல் ஜிப்ரான் சொல்வார்:
“உங்கள் பிள்ளைகள் உங்கள் பிள்ளைகள் அல்ல. அவர்கள் வாழ்க்கை எனும் தேவைக்கு பிறந்தவர்கள்.”
பெற்றோர் அறம் என்பது பிள்ளையை Ownership ஆக பார்க்காமல், Trusteeship ஆக பார்ப்பது. நம் வீட்டில் சில வருடங்கள் தங்கியிருக்கும் ஒரு உயிர், நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதை பத்திரமாக, நல்லபடியாக, அதன் பாதையில் வளர்த்து அனுப்ப வேண்டும். அதை வளைக்கக் கூடாது.
இன்றைய சூழலில் பெற்றோர்கள் தடுமாறும்
இடங்கள்:
இன்று கூட்டுக் குடும்பம் சிதைந்து தனிக் குடும்பமாகிவிட்டது. தாயும் தந்தையும் வேலைக்கு செல்லும் சூழல். இதனால் குழந்தைகளுக்கு நேரத்தை கொடுக்க முடியாமல், பொருட்களை கொடுத்து ஈடு செய்கிறார்கள். செல்போன் தான் பல வீடுகளில் தாத்தா, பாட்டி ஆகிவிட்டது.
1. ஒப்பீடு: “பக்கத்து வீட்டு பையன் 98% வாங்கியிருக்கான்” என்ற ஒப்பீடு குழந்தையின் தன்னம்பிக்கையை கொல்கிறது.
2. அதிக பாதுகாப்பு:குழந்தை கீழே விழக்கூடாது, அழக்கூடாது என்று அதிக பாதுகாப்பு கொடுத்து, அதன் எதிர்ப்பு சக்தியை, போராடும் குணத்தை இல்லாமல் செய்கிறோம்.
3. கேட்காமல் இருப்பது:நாம் பேசிக் கொண்டே இருக்கிறோம், குழந்தைகள் சொல்வதை கேட்பதே இல்லை. ஒரு நாளைக்கு 20 நிமிடம் குழந்தை என்ன சொல்கிறது என்று காது கொடுத்து கேட்டாலே பாதி பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.
4. பெற்றோர் அறம் – இருவழிப் பாதை:
பெற்றோர் அறம் என்பது பெற்றோருக்கு மட்டும் உரியது அல்ல. அது பிள்ளைகளுக்கும் உரியது. பெற்றோர் தங்கள் இளமையை பிள்ளைகளுக்காக தியாகம் செய்கிறார்கள். முதுமையில் அதே பிள்ளைகள் பெற்றோரை பார்த்துக் கொள்வதும் அறமே.
“ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்”
பிள்ளை சான்றோன் என்று பெயர் எடுக்கும் போது தாய் அடையும் மகிழ்ச்சி, பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியை விட பெரியது என்கிறார் வள்ளுவர். அதுதான் பெற்றோர் அறத்தின் வெற்றி.
பெற்றோர் அறத்தின் உச்சம் – மன்னிப்பு கேட்பது
நாம் எல்லாம் தவறு செய்வோம். பெற்றோரும் தவறு செய்வார்கள். அடித்துவிடுவோம், திட்டிவிடுவோம், புரிந்து கொள்ளாமல் இருந்துவிடுவோம்.
சிறந்த பெற்றோர் என்பவர் தவறே செய்யாதவர் அல்ல. தவறு செய்துவிட்டு, பிள்ளையிடம் “நேத்து அப்பா உன்னை திட்டினது தப்பு, Sorry” என்று மன்னிப்பு கேட்பவர்.
பிள்ளையிடம் மன்னிப்பு கேட்பது பெற்றோரை சிறுமைப்படுத்தாது. மாறாக, “தவறு செய்தால் மன்னிப்பு கேட்கலாம், அது தப்பில்லை” என்ற மிகப்பெரிய வாழ்க்கைப் பாடத்தை பிள்ளைக்கு கற்றுக் கொடுக்கிறது.
பெற்றோர் அறம் என்பது புத்தகத்தில் படித்து வருவதல்ல, வாழ்ந்து காட்டுவது. சிறந்த பெற்றோராக இருக்க சிறந்த பட்டம் தேவையில்லை, சிறந்த மனம் இருந்தால் போதும்.
ஒரு நல்ல பெற்றோர் தன் பிள்ளைக்கு இரண்டு விஷயங்களை கொடுக்க வேண்டும் என்பார்கள். ஒன்று வேர்கள், மற்றொன்று சிறகுகள். வேர்கள் என்பது எங்கிருந்து வந்தோம் என்பதை மறக்காத பண்பாடு, குடும்பத்தின் மீதான பற்று. சிறகுகள் என்பது எங்கு வேண்டுமானாலும் பறக்கலாம் என்ற தன்னம்பிக்கை, துணிச்சல்.