தமிழ்நாடு அகாடமி ஆப் பிலிம் & ஆர்ட்ஸ்

எனக்கு தெரிந்த வரையில் கலைஞர்களுக்காக இயங்கிக்கொண்டிருக்கும் சங்கங்கள் (பொதுவாக சினிமா சார் சங்கங்கள்) அனைத்தும் திரைப்பட துறையை தொழிலாய் கொண்டவர்கள் நலன் பெறுவதற்கும், தீர்மானங்கள் போடுவதற்கும், திருட்டு வெளியீட்டை தடுப்பதற்கும் என்பதை போல பல பண சார் நோக்கங்களை மட்டும் கொண்டே இயங்குகிறது.  இங்கே பொதுவாக கலையில் ஜெயிக்க வேண்டுமெனில் சினிமாவில் காலடி வைத்துவிட வேண்டுமென ஒரு மாயை நிலவுகிறது. அரசியலும் அதிக பணமும் சுழலும் துறை என்பதாலும் அப்படி இருக்கலாம். மேல் குறிப்பிட்டுள்ள சங்ககளில் உறுப்பினர்கள் பொதுவாக ஏதோ ஒரு திரைப்படத்தில் வேலை செய்தவராகவே இருக்கிறார்கள். INDEPENDENT ARTIST என சொல்லக்கூடிய கலைஞர்களையும், சினிமாவில் தன் இடத்தை தேடிக்கொண்டிருக்கும் கலைஞர்களையும், கலையை பொழுபோக்காக கொண்ட கலைஞர்களையும், நானும் கலைஞன் தான் – எனக்கு என்ன செய்வதென்றே தெரியாத கலைஞர்களையும் ஒன்றிணைத்து, அனைத்து விதமான கலை வடிவங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஒரு வலைப்பின்னல் உருவாக்குவதே TAFA வின் முதல் நோக்கம். இந்த யோசனை எனக்கு வந்தவுடன் 2021 இல் குறிப்பிட்ட சில நண்பர்களை வைத்துக்கொண்டு இதை தொடங்கி விட்டேன். அப்போது TAFA  திருவண்ணாமலை அகாடமி ஆப் பிலிம் & ஆர்ட்ஸ். இந்த யோசனையை சக கலைஞர்களிடம் பகிர்ந்தால் அமைப்பாய் திரள்வார்கள் என நம்பினேன்.

வழக்கம் போல எந்த விதமான கவர்ச்சியும் பிரபலமும் இல்லாத காரணத்தினால் இது அப்படியே யோசனையாகவே நின்று விட்டது. இரண்டு வருடம் ஓடியது. 2023 இல் தங்கத் தமிழ்நாடு என்ற ஒரு பாடலை வெளியீடு செய்தேன். அந்த பாடலின் வெளியீட்டு நிகழ்வை நானே ஒருங்கிணைத்ததின் காரணமோ என்னவோ மீண்டும் என்னுள் ஒரு சிறு பொறி கிளம்பியது. TAFA வை மீண்டும் கையில் எடுத்தேன். இந்த முறை தமிழ் நாடு Academy of Film & Arts ஆனது.

TAFA-வின் இணை நிறுவனர் நண்பர் திரு. யுவராஜ் அம்பேத்கர் மோகன் அவர்களிடமும், TAFA வின் தலைவர் நண்பர் திரு. Siragan அவர்களிடமும் இதை பற்றி கலந்துரையாடினேன். இந்த வலைப்பின்னலால் இந்த அமைப்பில் உள்ள கலைஞர்கள் ஒருவருக்கு ஒருவர் தங்களை பயன்படுத்திக் கொள்ள முடியும். சென்னை தான் சென்றாக வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லாமல் எந்த ஊரிலும் இருந்துகொண்டு தங்களின் வேலைகளை பார்த்துக்கொண்டே கலையிலும் இயங்க முடியும் என்பதே எங்களின் கட்டமைப்பு. மக்களிடையே சென்றடையாமல் போனாலும் ஒரு நல்ல படைப்பை செய்த கலைஞனை கொண்டாடியே தீர வேண்டும் என்பதும் எங்களின் முக்கிய குறிக்கோள். அதன் வாயிலாக அவர்கள் மக்கள் கண்களில் தென்படுவார்கள் என்பது எங்களின் நம்பிக்கை. நாட்கள் நகர நகர ஆங்காங்கே இருந்து யோசனைகளை நெறிப்படுத்தி பிறகு ஆகஸ்ட் மாதம் இறுதியில் tafa வை செயல்பாட்டிற்குக் கொண்டு வந்தோம். இந்த முறை கலைஞர்களுக்கு என்ன விஷயம் என்று சொல்லி அவர்கள் அமைப்பாய் திரளும் வரை காத்திருக்க வில்லை. கலைஞர்கள் ஏன் இதில் இருக்க வேண்டும் என்பதை சொல்லி அமைப்பாய் கலைஞர்களை திரட்டதிட்டமிட்டோம். 

திரட்ட ஆரம்பித்தோம். TAFA வின் ஆரம்ப நாட்களில் ஒவ்வொரு கலைஞர்களிடமும் ஊர் ஊராக கிராமம் கிராமமாக சென்று இதைப் பற்றி பேசி புரிய வைத்து பெரும்பாலானவர்களை இணைத்ததில் திரு. ராஜ்மோகன் அவர்களுக்கு மிகப் பெரிய பங்குண்டு. ஒரு கலைஞனுக்கு பாராட்டு மிக அவசியம், கைத்தட்டல் மிக மிக அவசியம். உறுப்பினர்கள் அமைப்பில் சேர சேர அதில் சமீபமாக புதிதாக தங்களது துறையில் ஏதோ ஒன்று முயற்சித்த கலைஞர்களுக்கு பாராட்டு சான்றிதழ் அளிக்கத் தொடங்கினோம். முதல் பெரிய நிகழ்வாக திருவண்ணாமலையை சேர்ந்த திரு. மணி கார்த்தி அவர்கள் இயக்கிய “தடயம்” திரைப்படத்தின் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடந்தினோம். TAFA சார்பாக வருடத்திற்கு ஒரு முறை அளிக்கப்படும் B.P. பால தயாநிதி விருதை திருவண்ணாமலையை சேர்ந்த கர்நாடக இசை வாய்ப்பாட்டுக் கலைஞர் திரு. அருணை மா. ரவி அவர்களுக்கு வழங்கப்பட்டது.

TAFA Junior என்ற குழந்தைகளுக்கான TAFA வையும் தொடங்கி உள்ளோம். எங்களின் செயற்குழு கட்டமைப்பை இங்கே எடுத்துரைக்க வேண்டும் என விரும்புகிறேன். தலைவர், பொதுச்செயலாளர், துணைப் பொதுச்செயலாளர், பொருளாளர் என்பது ஒரு மட்டும் இல்லாமல் ஒவ்வொரு கிளைத்துறைக்கும் ஒவ்வொரு செயலாளரும் மற்றும் இணைச் செயலாளர்களும் உண்டு. தற்போது இருக்கும் இணையதள சூழலில் மக்கள் யார், கலைஞர்கள் இருட்டடிக்கப்பட்டு DM for paid promotion, உங்களுக்கு followers எத்துணை அதன் பின்னணியில் நீங்கள் வாசிப்பதற்கு பணம் தருகிறோம் என்பதைப்போல் பல வகையான புகைமூட்டம் நிலவுகிறது. Youtube என்னும் “வணக்கம் friends” ஒரு பக்கம்.  செல்போனின் வளர்ச்சியால் கலைஞர்கள் இருட்டடிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது உள்ள இணையதள கன்டென்ட் நெரிசலில் கலைஞர்களை தனித்துவமாக மக்களிடம் காட்ட வேண்டும் என்பதும் TAFA-வின் நோக்கம். ஒரு வகையில் கவர்ச்சி சினிமா செய்து கொண்டிருக்கும் அரசியலை தற்போது சமூக ஊடகங்கள் இணைந்து கலைஞர்கள் மீது செய்து கொண்டிருக்கின்றது, குறிப்பாக இன்டிபென்டன்ட் ஆர்டிஸ்ட் எனப்படும் கலைஞர்கள் மீது. 

நாங்கள் இதை முறியடிக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறோம். களப்பணி தளபதிகளாக பொதுச் செயலாளர்கள் திரு. விஷ்ணு தீனா மற்றும் திரு. கார்த்திக் மிகத் தீவிரமாக செயல்பட்டு கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் திருவண்ணாமலையை மையமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருந்தாலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் செயல்பட உள்ளோம். எங்கள் திட்டங்களில் ஒரு வாரம் ஒரு கலைஞர். இந்தத் தொடரில் வாரம் ஒரு முறை ஒரு கலைஞரை நேர்காணல் செய்து அது எங்களது இணையதளத்தில் வெளியீடு செய்கிறோம். TAFA 2021 ஆம் ஆண்டிலேயே அருணை IDOL என்ற  பாடகர்களுக்கான ஒரு போட்டியை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 2023 ஆம் ஆண்டு திருக்கார்த்திகை தீபத்தை மையமாக வைத்தும் ஒரு புகைப்படப் போட்டியையும் அறிவித்திருக்கிறோம். இது போன்ற விஷயங்கள் கலைஞர்களை ஊக்கப்படுத்தும் என நம்புகிறோம் இது மட்டுமல்லாது TAFA ஜூனியர் சார்பில் சிறார்களுக்கான போட்டிகளை நடத்த உள்ளோம். எந்தவித கலை கற்கும் சிறார்களும் அவர்களுக்கான போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெறலாம். 

TAFA ஜூனியரில் பெற்றோரின் ஒப்புதலோடு 16 வயது கீழ் உள்ளவர்கள் இணைந்து கொள்ளலாம். நாளைய கலைத்துறையின் தூண்களாக வரப்போகும் குழந்தைச் செல்வங்களுக்கு பெருமூக்கம் அளிக்கும் என நம்புகிறோம். இசை, கிராமிய கலை, இசை ஆசிரியர்கள், இசை வகுப்புகள், எழுத்தாளர்கள், பாடலாசிரியர்கள், கவிஞர்கள், இயக்குனர்கள், எடிட்டிங், ரிக்கார்டிங் ஸ்டுடியோகள், போட்டோகிராபி, மேக்கப், நடனம், ஓவியம், நடிகர்கள், சண்டை பயிற்சியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் போன்ற அனைத்து விதமான துணைத்துறைகளும் TAFA வில் உண்டு. மூன்று மாதத்திற்கு ஒரு முறை பெருநிகழவும் மாதத்திற்கு ஒருமுறை சிறு கூட்ட நிகழ்வும் என திட்டமிட்டு கலைஞர்களுக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். பல்வேறு கலைஞர்கள் இந்த அமைப்பில் தங்களை இணைத்துக் கொண்டு பயன் பெறலாம். ஆர்வம் இருந்தால் செயற்குழுவில் சேர்ந்து கலைச் சேவையும் செய்யலாம். சில கலைஞர்கள் அமைப்பில் இணைகையில் எங்களை கேட்ட கேள்விகள் எங்களை திடுக்கிடச் செய்தது. இந்த அமைப்பில் இருந்தால் நாங்கள் செய்யும் வேலைகளுக்கு அமைப்பு நிர்ணயிக்கும் சம்பளத்தை தான் வெளியில் பெற்றுக்கொள்ள வேண்டுமா ? உங்களுக்கு தெரியாமல் எந்த வேலைகளையும் செய்யக்கூடாதா என்றெல்லாம் சந்தேகங்கள் கேட்டார்கள். நீங்கள் சுதந்திரமாய் எதை வேண்டுமானாலும் செய்யலாம். TAFA வில் இது போன்ற விஷயங்கள் எதுவும் கிடையாது. இதில் இருந்து நாங்கள் புரிந்து கொண்டவை என்ன வென்றால், இது வரை இயங்கிக்கொண்டிருக்கும் அமைப்புகள் 

அமைப்பு பெரியதென்று உறுப்பினர்கள் மேல் திணித்திருக்கிறார்கள் என்பதே. எங்கள் அமைப்பில் உறுப்பினர்களே பிரதானம். முன்னரே சொன்னது போல மற்ற அமைப்புகள் மக்களிடம் சென்று சேர்ந்த கலைஞர்கள், கலைத்துறை சார் தொழிலாளிகளை சார்ந்து இயங்கிறது. TAFA வளரும் கலைஞர்களுக்காக, மக்களிடம் சென்று சேரா கலைஞர்களுக்காக இயங்குகிறது. எங்கள் அமைப்பில் வருடாந்திர சந்தா எதுவும் கிடையாது. TAFA முற்றிலும் உறுப்பினர்களுக்கு இலவசம். செயற்குழு தங்களால் முடிந்ததை வைத்து செயல்பட்டுக்குக் கொண்டிருக்கிறோம். பணமும் புகழும் முக்கியம் என்றாலும் பணமும் புகழும் இல்லாவெனிலும் ஒரு கலைஞன் கலைஞனே என்பதே TAFA வின் நிலைப்பாடு.

2 thoughts on “ தமிழ்நாடு அகாடமி ஆப் பிலிம் & ஆர்ட்ஸ்

  1. TAFA வின்
    உன்னதமான
    நோக்கங்கள்
    வெற்றிப்பெறும்
    என பேரன்போடு
    வாழ்த்துகிறேன்

    புழுதியின்
    இந்த மகத்தான
    முன்னெடுப்பு
    சிறப்புக்குரியது

    நன்றி தோழர்களே

  2. TAFA வின் உன்னதமான
    செயல்பாடுகள் மிகவும்
    பாராட்டுக்குரியது
    இதயம் நிறைந்த பேரன்போடு
    இணைந்து பயணிப்போம்
    வாழ்த்துகள் தோழர்களே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *