ஒரு தமிழாசிரியரின் குரலில்
ஏதேனும் நண்பர்கள் கூடுகையில் இல்லை நிகழ்வுகளில் அறிமுகப்படுத்தி கொள்ளும் போது நான் தமிழ் ஆசிரியர் என்றுச் சொன்னால் ,ஆச்சரியமாக இங்க பள்ளிகளில் தமிழ் இருக்கா ? என்று கேட்கும் தமிழர்கள் அதிகம் . இந்தப் பள்ளியில் தமிழ் இரண்டாம் மொழிப் பாடமாக இருக்கிறது என்பதால் தான் பிள்ளைகளை இந்தப் பள்ளியில் சேர்த்தோம் என்று சொல்லும் மிகச் சில தமிழர்களும் உண்டு.உண்மை என்னவென்றால் பதினைந்து வருடங்களுக்கும் மேலாகவே இங்குள்ள சில பள்ளிகளில் தமிழ் இரண்டாம் மொழிப் பாடங்களில் ஒன்றாக உள்ளது. தற்சமயம் அந்த எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது.ஷார்ஜா,துபாய்,அபுதாபி,அஜ்மான் ,ராசல் கைமா என அனைத்து எமிரேட்ஸ்களிலும் சேர்த்து சுமார் 25 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் தமிழ் இரண்டாம் மொழிப் பாடங்களில் ஒன்றாக உள்ளது.
சென்ற ஆண்டு கேரளா மாநில அரசாங்கம் “மலையாளம் “ மொழியை கட்டாயம் அனைத்து மாணவர்களும் படித்திருக்க வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டதின் காரணமாக இங்குள்ள மேல்மட்டப் பள்ளிகள் எனக் கூறிகொள்ளும் பெரும்பாலான பள்ளிகளில் மலையாள மொழி இரண்டாம் மொழி பாடமாக கொண்டுவரப்பட்டுள்ளது.முன்பே இருந்தாலும் இந்த அறிவிப்பின் பின் மலையாளம் ஏறக்குறைய அனைத்து இந்தியப் பள்ளிகளிலும் கொண்டு வரப்பட்டுள்ளது. மலையாளம் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக் கணிசமாக அதிகரித்துள்ளதுடன் மட்டுமல்லாமல் மலையாளப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது.தமிழ்நாடும் இப்படி ஒரு அறிவிப்பை வெளிட்டிருந்தாலும் அது பெயரளவில் மட்டுமே உள்ளதாக எண்ணுகிறேன்.சில பெற்றோரை இதைச் சொல்லிக் கூட (கிட்டத்தட்ட மிரட்டி என்றே சொல்லலாம் )அவர்கள் பிள்ளைகளை தமிழ்மொழியைத் தேர்ந்தெடுக்க வைக்க வேண்டிய சூழலில் தான் தமிழ்மொழியின் நிலைமை இங்குள்ளது.நம் மாநிலமும் “தமிழ் கட்டாயம்” என்ற அறிவிப்பை வெளியிட்டால் தமிழ் படித்தோர் பலருக்கும் அமீரகத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும்.
வெளிநாட்டிற்கு வந்தும் தமிழ் படிப்பதா ? என்ற மேட்டிமைத்தனமே தமிழர்களின் பிள்ளைகளில் தொண்ணூறு சதவீதம் இந்தி மொழியை இரண்டாம் மொழிப் பாடமாக படிக்க காரணமாக உள்ளது .பிரெஞ்சு மொழியைப் படிப்பவர்களும் உண்டு என்றாலும் இந்தியே பெரும்பாலானோர் தேர்வாக உள்ளது.ஏன் பிள்ளையை தமிழ் மொழியில் சேர்க்கவில்லை என்ற என் கேள்விக்கு ,நான் இந்தி தெரியாமல் கஷ்டப்பட்டதைப் போல என் பிள்ளை கஷ்டப்படக் கூடாது என்று சொன்னாள் தோழி ஒருவள் .சரி அப்படி நீ என்ன கஷ்டப்பட்ட ? என்று கேட்டால் இந்தி பேசுபவர்கள் கூட பதிலுக்கு இந்தி பேச முடியல என்கிறாள்.ஒன்றாம் வகுப்பில் இருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை இந்தி படிக்கும் பிற மொழி பேசும் மாணவர்களால் சரளமாக அம்மொழியை பேசக் கூட முடியவில்லை என்பதே உண்மை.அதோடு இந்தி மொழி பேசும் மாணவர்கள் அளவுக்கு அம்மொழியைப் புரிந்துக் கொள்ள முடியாமல் வீட்டில் சொல்லிக் கொடுக்கவும் ஆள் இல்லாமல் நம் மாணவர்கள் திணறுவதை கண்கூடாகக் கண்டிருக்கிறேன்.ஒன்று தனிவகுப்பு பயிற்சிக்கு செல்கிறார்கள் இல்லை என்றால் ஒன்பதாம் வகுப்பிற்கு மேல் பொதுத் தேர்விற்கு பயந்துக் கொண்டு ஸ்பெஷல் அரபிக் அல்லது பிரெஞ்ச்க்கு மாறி விடுகிறார்கள்.என் பிள்ளைக்குத் தமிழே பேச வராது என்று பெருமையாகப் பேசும் பலரை நான் இங்கு சந்தித்திருக்கிறேன்.வகுப்பில் உள்ள தமிழ் பேசும் பிள்ளைகளுடன் சேர்ந்து தமிழ் பேசுகிறாள் என்பதற்காக பள்ளியையே மாற்றிய பெருமைமிகு பெற்றோரையும் கண்டிருக்கிறேன்.பிள்ளைகளுடன் மட்டும் அல்ல கணவன் மனைவி இடையேயான உரையாடல் கூட ஆங்கிலத்தில் தான் இருக்கிறது.பிறந்தது முதலே இங்குள்ள பிள்ளைகள் ஆங்கிலத்தை மட்டுமே கேட்டுக் கொண்டிருப்பதால் தமிழ்மொழியைக் கற்பது அவர்களுக்கு பெரும் சவாலாக இருப்பதும் தமிழ்ப்பாடத்தை இரண்டாம் மொழியாகத் தேர்ந்தெடுப்பதில் உள்ள சிக்கலாக உள்ளது
தன் பிள்ளை என்ன படிக்க வேண்டும் என்று முடிவெடுக்கும் உரிமை பெற்றவர்களுக்கு உண்டு தான். ஆனால் தாய்மொழியை தன் பிள்ளை படித்திருக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி இல்லாமல் போகும்.நான் வீட்டிலேயே தமிழ் சொல்லிக் கொடுப்பேன் ,அதனால் தான் பள்ளியில் வேறு ஒரு மொழியைப் படிக்கட்டுமே என்று ஒரு சப்பைக்கட்டு சொல்லுவார்கள்.வீட்டில் மிஞ்சிப் போனால் எழுத்துக்களைக் கற்றுக் கொடுப்பார்களா? தமிழ் மொழி என்பது வெறும் எழுத்துகள் மட்டுமா ? உலகம் போற்றும் இலக்கியங்களை , இலக்கணங்களை யார் கற்றுக் கொடுப்பார் ? ஒரு மொழியைக் கற்பது என்றால் அதனைப் பேச ,எழுதக் கற்பது மட்டும் அல்ல .மாறாக அம்மொழியின் மூலம் அம்மொழி பேசும் மக்களின் வரலாறு ,பண்பாடு ,வளர்ச்சி ,மாற்றங்கள் அனைத்தையும் கற்பது தானே .இதனை எப்படி நீங்கள் வீட்டில் வைத்து கற்றுக் கொடுக்க முடியும்.
நிற்க ,
அப்படியே இதற்கு எதிராக நாடு விட்டு நாடு வந்தாலும் தமிழ்மொழி மேல் தீராக் காதல் கொண்டிருக்கும் பெற்றோரும் இங்கு உண்டு.மற்றப் பாடங்களை விட தமிழ்ப் பாடத்தை தன் பிள்ளை நன்றாகப் படிக்க வேண்டும் என என்னிடம் கூறும் பெற்றோர் இருக்கிறார்கள்.தமிழை ஆர்வமாகப் படித்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தொடர்ச்சியாக 99,98,97 என என் மாணவர்கள் மதிப்பெண் எடுத்துள்ளனர்.அப்படி தமிழில் முதல்,இரண்டாம் ,மூன்றாம் இடம் பெறும் பிள்ளைகளை இங்குள்ள சில அமைப்புகள் பாராட்டி விருதும் வழங்கி வருகின்றனர்.இது மாணவருக்கும் பெரும் ஊக்கமாக இருந்து வருகிறது. இங்கு அமீரகத்தில் தமிழ்மொழி பள்ளிகளில் இரண்டாம் மொழியாக மட்டுமல்லாமல் தனியார்பயிற்சி நிலையங்களிலும் பயிற்றுவிக்கப்படுகிறது. கட்டணத்துடனும் ,சில நிறுவனங்களில் கட்டணம் இல்லாமலும் ஆரம்ப நிலைத் தமிழ் பயிற்றுவிக்கப்படுகிறது.ஏதேனும் ஒரு வகையில் பிள்ளைகள் தன் தாய்மொழியில் எழுதப் ,படிக்க தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதே என் அவா.மேடைகளில் தமிழ் தமிழ் என முழங்கிக் கொண்டு ,தமிழை வைத்து பெயரும் ,புகழும் அடைந்து கொண்டிருக்கும் பலரின் பிள்ளைகளுக்கு தமிழ் மொழியை வாசிக்கக் கூட தெரியாத அளவு தான் தமிழ்ப்பற்று இருக்கிறது,
நான்கைந்து வருடங்களாக ஷரர்ஜாவில் ஆண்டுதோறும் நடைபெறும் மாபெரும் புத்தகக் கண்காட்சியில் தமிழ்நாட்டில் இருந்து பதிப்பகங்கள் நூல்களைக் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.கணிசமான அளவில் அமீரகத்தில் வாசகர்கள், எழுத்தாளர்கள் எண்ணிகையும் உயர்ந்துள்ளது.2023 ஆம் ஆண்டு புத்தகக் கண்காட்சியில் தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் பல வெளியிடப்பட்டன.தமிழக எழுத்தாளர்கள் பலரும் வரவழைக்கப்பட்டு இலக்கிய நிகழ்வுகளும் நடத்தப்பட்டுள்ளன.இவையெல்லாம் சமீபக் கால நிகழ்வுகள் என்றாலும் பல வருடங்களாக தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக இங்கு பலர் தனிநபராகவும், அமைப்புகளாகவும் தொடர்ந்து செயல்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள்.
நம் அடுத்த தலைமுறை தாய்மொழி தெரியாமல் வளரும் தலைமுறையாக இருப்பது உகந்தது அல்ல.தாயும் தாய்மொழியும் ஒன்று தான்.முதலில் அதைக் கற்றுக் கொள்வோம்.பிற மொழிகளை நம் தேவைக்கேற்ப ,நேரத்திற்கேற்ப கற்றுக் கொள்வோம்.
“சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே –அதைத் தொழுது படித்திடடி பாப்பா “.
– மகாகவி பாரதியார்