தனி மனித சுதந்திரம்.

தனி மனித சுதந்திரம் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் எப்படி இருக்கிறது? தனி மனித சுதந்திரம் என்கின்ற தலைப்பு இன்று அல்ல,  நேற்று அல்ல நாளையும் மிகுந்த முக்கியமானது என்று நான் கருதுகிறேன். ஆதலால் இதைப் பற்றிய   என்னுடைய கருத்துக்களையும் உங்களிடம் பகிர்ந்துக் கொள்ள இந்தக் கட்டுரை உதவும் என்று நம்புகிறேன்.

 முதலில் தனி மனித சுதந்திரம் இந்தியாவில் எப்படி இருக்கிறது என்று குறிப்பிட்டு அதற்குப் பின் வெளிநாடுகளில் எப்படி அதை பார்க்கப்படுகிறது என்பதை பற்றிப் பார்ப்போம். என்னுடைய படிப்பில், வேலையில்  வாழ்க்கையில்  தனி மனித சுதந்திரம்  எல்லா இடங்களிலுமே கொடுக்கப்பட்டது என்று தான் சொல்ல வேண்டும். நான் சுயமாக சிந்தித்து என்னால் சுதந்திரமாக ஒரு முடிவை அதுவும் என்னுடைய கல்லூரிக் காலத்திலே எடுக்கமுடிந்தது என்றால் அதற்கு கண்டிப்பாக என்னுடைய தாயும் தந்தையும் தான் காரணம்.

 என்னுடைய கல்லூரி காலங்களில், எந்த ஒரு குறிப்பிட்ட துறையை விரும்பி தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நான் என் தாய் தந்தையிடம் விவாதித்தப் போது  அவர்கள் எனக்கு வழங்கிய தனி மனித சுதந்திரத்தால் தான்

 அந்த துறையை என்னால் தேர்ந்தெடுக்க முடிந்தது. எதிர்பார்த்த படிப்பிற்கும் ஒரு தேர்வெழுத முடிந்தது. அதற்குப் பிறகும் என்னுடைய முனைவர் பட்டத்திற்கும் விருப்பப்படி தேர்வு செய்ய முடிந்தது. ஆனால் இவை  அனைவருக்கும் சாந்தியமா  என்று கேள்வி கேட்டால் அது கண்டிப்பாக இல்லை.

 நிறைய இடங்களில் நிறைய மாணவர்களுக்கும் இன்றளவும் தனிமனித சுதந்திரம் என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. தனிமனித சுதந்திரம் இந்தியாவிலே முக்கியமாக நம் தமிழ்நாட்டில் ஒரு  வட்டத்திற்குள் சிக்கித் தவிக்கின்றது. முதலில் குடும்பம், பிறகு நண்பர்கள், பிறகு உறவினர்கள், பிறகு பள்ளி, கல்லூரி போன்ற இடங்கள். ஏன் வேலை செய்யும் இடங்கள் எல்லாவற்றிலும் ஒரு தனி மனிதனின் சுதந்திரம் மிகவும் கேள்விக்குறியாகவே உள்ளது.

 ஏதோ ஒரு வகையிலே நாம் நிறைய அர்த்தங்களுக்கு உட்பட்டு ஒரு காரணியை சார்ந்து நாம் முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலையிலே இருக்கின்றோம். நான் இந்த உணவு தான் உண்ண வேண்டும்,  இந்த உடை தான் உடுத்த வேண்டும், இப்படித்தான் இருக்க வேண்டும், எல்லாவற்றிற்கும் ஒரு கோட்பாடுகளை  புகுத்தி நம் முன்வைக்கப்படுகிறது.

வெளிநாடுகளில் நீங்கள் உங்களின் தனிமனித சுதந்திரம் என்பது உணவை பற்றி யாரும் கேள்வி கேட்க போவதில்லை  உடை பற்றி யாரும் கேள்வி கேட்க போவதில்லை.  மாணவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைவருமே அவர்களுக்கு விருப்பப்பட்டதை விரும்பிய வயதில் விரும்பியவாறு செய்து கொள்ள முடியும் அதுதான் முதன்மையான தனி மனித சுதந்திரம்.

 அவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ? என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்களோ? அதை செய்யலாம்! ஆனால் தனிமனித சுதந்திரம் தனி மனித கட்டுப்பாடும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தது.

 சுதந்திரம் முழுமையாக கிடைப்பதால் ஒருவர் என்ன வேண்டும் என்றாலும் இங்கு செய்யலாம்! என்ன வேண்டுமென்றாலும் சாப்பிடலாம்! என்று நான் கூறினேன்.  ஆனால் அதையும் தாண்டி தனி மனித சுதந்திரம் இங்கு நிறைய மக்களுக்கும் மாணவர்களுக்கும் ஒரு நம்பிக்கையை  கொடுக்கிறது சுதந்திரம் சிறுவயதிலேயே அவர்கள் பள்ளி கல்லூரி, பள்ளி படிப்பை முடிக்கும் முன்பே மாணவர்கள் வீட்டை விட்டு வெளியே சென்று விடுகிறார்கள்.

 தனியாக தங்களுடைய வாழ்க்கை ஆதாரத்தை தேடிக் கொள்கிறார்கள். சிறு வயதிலிருந்து பணத்தை எவ்வாறு ஈட்ட வேண்டும், பணத்தின் மதிப்பு என்ன? அதை எவ்வாறு செலவு செய்ய வேண்டும்! எவ்வாறு சேமிக்க வேண்டும் என்பதனை போன்ற அனைத்தையும் அவர்கள் கல்லூரிக்கு செல்லும் முன்பே கற்று விடுகிறார்கள், அதற்கு காரணம் அவர்களுக்கு கொடுக்கப்படும் தனிமனித சுதந்திரம்.

இங்கு மாணவர்கள் 18 வயதை அடையும் பொழுது தன்னுடைய தாய் தந்தையை விட்டு சுதந்திரமாக தனக்கு தேவையானதை தானே செய்து கொள்ள வேண்டும்  என்ற நிலைமைக்கு சென்று விடுகிறார்கள். அவர்களுக்கு நிறைய சுதந்திரம் கொடுக்க எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறார்கள்.

 இளம் வயதிலேயே கற்றுக் கொண்டு அதை எப்படி உபயோகிப்பது,  எப்படி தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதனை போன்ற நிறைய விடயங்களை சிறு வயதிலேயே கற்று தெரிந்து விடுகிறார்கள். அதுவே தனி மனித சுதந்திரம், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வித்தியாசமாகவும் வேறுபட்டும்  காணப்படுகின்றது.

 நாம் இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் நம் இளைய தலைமுறையினருக்கு அவர்களுக்கு தனி மனித சுதந்திரத்தை கொடுத்து அவர்கள் அடைய வேண்டிய இலக்கை அடைய நாம் அனைவரும் உதவ வேண்டும் என்பது என்னுடைய கருத்து.

வெளிநாடு செல்ல வேண்டும் என்ற எண்ணம் சிறு வயதில் இருந்தே ஒட்டிக் கொண்டது. காரணம்  எங்கள் உறவினர்கள் சிலர் வெளிநாட்டில் வாழ்ந்ததால் அவை என் மனதில் ஒட்டிக் கொண்டது.  மேலும் அதற்கான  சில காரணங்களும் உண்டு, வெளிநாட்டில் அனைத்தும் கிடைக்கும் அனைவருக்கும் கிடைக்கும் அனைவரும் எல்லாவற்றையும் பெற்று தன்னிறைவோடு வாழ்கிறார்கள்.  கல்வி சுகாதாரம் சிறப்பாக இருக்கின்றது என்பது போன்ற எண்ணங்கள் சிறுவயதில் இருந்தே ஆழ் மனதில் தொற்றிக் கொண்டதால் வெளிநாட்டிற்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் சற்று மேலோங்கி இருந்தது.

அதற்கு ஒரே வழி படிப்பு மட்டும் தான் என்று அறிந்து  அதில் முழு கவனம் செலுத்தி அதை என்னுடைய கடமை கனவாக்கிக்கொண்டு, அதிலும்  குறிப்பாக அமெரிக்காவிற்கு செல்ல வேண்டும் என்பது என் ஆழ்மனதின் கனவு. அந்த முனைப்பு மனதில்  ஓடிக்கொண்டிருந்தது. அந்தக் கனவை நனவாக்க படிப்பும் தன்னம்பிக்கையும் தன்னார்வமும் மேலும் என்னுடைய  தனிமனித சுதந்திரமும் மூலகாரணம்.

 சில சமயங்களை திரைப்படங்களும் ஒரு முக்கிய காரணியாக அமைந்தது என்று கூறலாம்.  அதில் கற்பனைக்கு எட்டாத காட்சிகள்  உண்மை படுத்தியக் காட்சிகளாக விரியும் பொழுது மேலும் என்னுடைய ஆர்வத்தை தூண்டியது என்றும் சொல்லலாம்.

இதுவரையில் நான் பல நாடுகளுக்கு சென்றுள்ளேன். குறிப்பாக ஆசியாவில் தாய்லாந்து, சிங்கப்பூர், ஹாங்காங், சைனா போற்ற நாடுகளுக்கும்  ஆஸ்திரேலிய மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கும் அமெரிக்காவிற்கும் சென்று சில காலம் தங்கி  படிப்பதற்கும் ஆய்வு செய்வதற்கும்  அல்லது  கருத்தரங்கிற்கும்  சென்றுள்ளேன். அங்கெல்லாம் நான்  மிகவும் வியந்ததில்   ஆசிய நாடுகளில் ஒருவிதமான ஒற்றுமையும் மற்ற நாடுகளில் ஒருவிதமான ஒற்றுமையும் அறியமுடிகின்றன. குறிப்பாக தாய்லாந்து, ஹாங்காங், சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் கலை மற்றும் கலாச்சாரம் போன்றவைகளும் கல்வி என  அனைத்துமே இந்தியாவில் உள்ளதை போன்று மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

 அதிலும் குடும்ப அமைப்புகள் மற்றும் ஒன்றுடன் ஒன்று இணைந்து காணப்படுகின்றன. குடும்ப ஒற்றுமை, கல்வி, சுகாதாரம் போன்றவைகள்  ஆசிய நாடுகளிலே சிறந்து விளங்குகின்றன. அமெரிக்கா போன்ற நாடுகளில் மாணவர்கள் தங்கள் தனி சுதந்திரத்தை பெற்று மிகவும் நேர்த்தியாக தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். சிறு வயதிலேயே அவர்களுக்கு தன்னிறைவையும் தன்னம்பிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கண்டு நான்  கண்டிப்பாக வியந்திருக்கின்றேன். மிகவும் ஆச்சரியப்பட்டும் கொண்டிருக்கிறேன்.

அதேசமயம் கல்விக்காக பல நாடுகளுக்கு சென்றிருந்தாலும், கல்வி இந்தியாவில் சிறப்பாக இருப்பதாகவே கருதுகிறேன்.  நான் எனது முனைவர் பட்டத்தை அண்ணா பல்கலைகழகத்தில் பெற்றபோது நிச்சியமாக எனக்கு  மனநிறைவும் தன்நம்பிக்கையும் இருந்தது, காரணம் நான் உலகளாவிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தேன்.  முக்கியமாக நான் முனைவர் பட்டம் பெற்றது,  45 பல்கலைக்கழகங்கள் இணைந்து கூட்டாக மேற்கொண்ட ஆராய்ச்சி நிலையத்தில் செய்து கொண்டிருந்த ஒரு முக்கியமான “Project”.  அதில் என்னுடைய பங்களிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது என்று பலரும் என்னை பாராட்டினார்கள். என்னுடைய  பல ஆராய்ச்சி கட்டுரைகளை  மிகவும் உயர்ந்த தரத்தில்  இருப்பதாகவும் அதனை மேற்கோள் காட்டி நிறைய பேர் என்னை தொடர்பு கொண்டார்கள்.

 அப்படித்தான் என்னுடைய ஆராய்ச்சி பல்வேறு தரப்பட்ட உயர்ந்த ஆராய்ச்சியாளர்களால் கவனிக்கப்பட்டதில்  எனக்கான வாய்ப்புகள் அமைந்தது.  முனைவர் பட்டத்திற்காக என்னை தயார் செய்து கொண்டு  அந்த நான்கு வருடங்கள் தான் அடித்தளம். அந்த அடித்தளத்தை அமைத்து கொடுத்தது கண்டிப்பாக இந்தியா  தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

 ஆராய்ச்சிகள் உலகளாவிய நிறுவனங்களில் சற்று சிறப்பாக இருந்தாலும் ஆராய்ச்சி என்பது  அவற்றை எப்படி நாம் அடுத்தவர்களுக்கு புரியும்படியாகவும், ஆழ்ந்த நம்முடைய சிந்தனைகளை  கோர்த்து அதனை விளக்கிக் கட்டுரைகளாகவும் அல்லது பன்னாட்டு கருத்தரங்கங்களிலும் வெளிப்படுத்துகிறோம் என்பதை பொறுத்துதான் அதனுடைய தனித்துவமும் அதன் சிறப்பும் இருக்கின்றதாக நான் கருதுகிறேன்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் நான் ஆராய்ச்சியில் ஈடுபட்ட போது ஒன்றும் பெரிதாக கற்றுக் கொண்டதாக  நினைக்கவில்லை. நான் இந்தியாவில் கற்ற அனைத்தையும் தான் இங்கு என்னால் செயல்படுத்த முடிந்தது.  அதனால் புதிதாக ஏதும் கற்றுக் கொண்டேனா? என்றால் பெரிதாக ஒன்றுமில்லை என்றே சொல்வேன். கல்வி மற்றும் ஆராய்ச்சி இந்தியாவில் சிறப்பாக உள்ளது. ஒரு சில விஷயங்களில்  இந்திய மாணவர்களும் மற்றும் ஆராய்ச்சியாளர்களும் சற்று கவனம் செலுத்தினால் இந்தியாவின் ஆராய்ச்சி கட்டுரைகளும் ஆராய்ச்சியும் உலகளாவிய முறையில் கவனம் பெற்று ஏற்றுக் கொள்ளப்படும். கலாச்சார பண்பாட்டுரீதியில் ஆசிய நாடுகளில் ஒரு விதமாகவும் ஆஸ்திரேலியா அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒரு விதமாகவும் இருக்கின்றது, இவற்றில்  சிறந்த கலாச்சாரம் என்று நான் கருதுவது ஆசியக்கலாச்சாரம்., காரணம் பிள்ளைகள் தங்களுடைய பெற்றோர்களுடன் குடும்பமாக  தங்களுடைய வாழ்க்கையை வாழ்கின்றனர்.

அப்படியான நிலை  அமெரிக்காவில் இருக்கவில்லை அவரவர்கள் அவரவர்களுடைய வாழ்க்கை அமைத்துக் கொண்டு அவரவர்களுக்கு தேவையானவற்றை அவர்களே பெற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலையுள்ளது.

 அமெரிக்காவிலும் சற்று கொஞ்சம் மாற்றம்  வருவதாகவே கருதுகிறேன். சில பிள்ளைகள் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார்கள். இந்தியா, ஆசிய நாடுகளைப் போல பெற்றோர்கள் தங்களுடைய சொத்துக்கள் மற்றும் வீடுகளை குழந்தைகளுக்கு தானமாக கொடுத்து விட்டு தனக்கு தேவையானதை மட்டுமே வைத்துக் கொள்கின்றனர், அல்லது பிள்ளைகள் பெற்றோர்களுடனே வசிக்கத் துவங்குகின்றனர்.  27, 28 வயதை கடந்த பின்னும் அல்லது முப்பது வயது கடந்த  பிள்ளைகள் தங்களின் பெற்றோர்களுடனே வாழ்கின்றனர். இவை  ஆசியாவில் பல நூறாண்டுகளாக பின்பற்றப்படுகிறது. இவை சிறப்பானதாக கருதப்படுவதால்  அனைவராலும்  ஏற்றுக் கொண்டுள்ளனர் என்று கருதுகிறேன்.

மிகவும் ரசனைக்குரிய கலாச்சாரம் என்று நான் கருதுவது  தாய்லாந்து. அந்நாடுகளில் இருக்கும் கலாச்சாரம் என்னை மிகவும் கவர்ந்தது. காரணம் அங்கு அனைவரும் அனைவரையும் மதிப்பார்கள், மதிக்கின்றார்கள் போற்றுகிறார்கள் அன்பானவர்கள் மிகவும் மென்மையானவர்கள். அது போன்ற ஒரு கலாச்சாரத்தை நான் எங்கும் கண்டதில்லை. அங்கிருக்கும் மக்கள் அனைவருமே அவ்வளவு அன்பானவர்கள். அங்கு நீங்கள் சென்றாலே உங்களுக்கு தெரியும் உங்கள் மனதில் ஏதோ ஒரு சந்தோஷம் ஒட்டிக்கொள்ளும்.

அங்குள்ள உணவும் சிறந்த உணவு, குறிப்பாக  ஆசிய கலாச்சாரங்களில் உள்ளன சீன உணவு வகைகள், தாய்லாந்து உணவு வகைகள் மிகவும் சிறந்த உணவாக நான் கருதுகின்றேன். இந்திய உணவுகளும் மிக சிறந்த உணவுதான். அவற்றை தவிர்த்து,  தாய்லாந்து உணவும் சிறந்தது மற்றும் கலாச்சாரங்களை உள்ளடக்கியவை. கலாச்சாரம்  என்பது உணவு உடையுடன் தொடர்புடையது என்பதை மறுக்க முடியாது.  உலகமயமாதல் 1990களில்  வந்திருந்தாலும் இந்த உணவுக் கலாச்சாரம் மற்றும் உடை கலாச்சாரங்கள் இன்னும் ஆசிய  நாடுகளில் பின்பற்றப்படுகிறது. அதிலும் குறிப்பாக சீனாவில் உணவு உடை கலாச்சாரம் சிறப்பாக பின்பற்றப்படுகின்றனர்.

சுற்றுச்சூழலில் இந்தியா மிகவும் கவலைக்குரிய நிலையில் இருக்கிறது என்று நான் கருதுகின்றேன். அனைத்து நாடுகளிலும் ஒப்பிடும் பொழுது இந்தியாவில் சற்று தரம் குறைவாகவே இருக்கின்றது. அது அனைவரும் அறிந்தது, மக்கள் தங்களுடைய எண்ணங்களை சிறிதேனும் மாற்றம் கொண்டு வராவிட்டால் மிகவும் கடினம். மிகவும் சிறந்த சுற்றுச்சூழல் என்று எங்கேயும் ஒரு அளவீடு / அளவுகொள் வைத்துக்கொண்டு நாம் பேச முடியாது. ஏனென்றால் ஒவ்வொரு நாடுகளிலும் நிறைகளும் குறைகளும் உள்ளன. ஒரு சில இடங்கள் மிகவும் சுத்தமாக இருக்கும், ஒரு சில இடங்கள் மிகவும் மோசமானதாகவும் நான் பார்த்திருக்கிறேன்,  ஒன்றை மட்டும் வைத்து நாம் கூற முடியாது.

 பல காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டும் அதில் குறிப்பாக அரசியல் தலையீடுகள் அல்லது முக்கியமான “கவர்மெண்ட் பாடிஸ்” சுற்றுசூழலை பேணி காக்கக்கூடிய  துறைகள் அவற்றினால் வகுக்கப்படும் முறைகள். அந்த வகையில் பார்க்கும்பொழுது இந்தியாவில் இருக்கும் சுற்றுச்சூழல்துறை சில காலமாக  இயங்கிக் கொண்டிருக்கின்றனவா என்று பல சந்தேகங்கள் எனக்கு உண்டு. சுற்றுச்சூழல் என்பது சுற்றுசூழலை பேணி காக்கக்கூடியது,  நம் வருங்கால சந்ததியினருக்கு ஒரு சிறந்த வாழ்விடத்தை உறைவிடத்தை ஏற்படுத்திக் கொடுப்பதுமாகும். நாம் இப்பொழுது பயன்படுத்திக் கொண்டிருக்கும் நிறைய  சுற்றுச்சூழலுக்கு ஒவ்வாத மருந்துகள் பூச்சிக்கொல்லிகள் அனைத்தையும் நாம் விட்டொழிய வேண்டும். உலகளாவிய அளவில் ஒரு சிறு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அனைவரும் “ஆர்கானிக் ஃபார்மிங்” என்ற முறையில் மிகவும் தற்சார்ப்பு சார்ந்த இயங்க ஆரம்பித்திருக்கின்றனர். உணவு மற்றும் தண்ணீர் இந்த இரண்டையும் நாம் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்றால் முழுவதுமாக இயற்கை சார்ந்த விவசாயங்களையும் உரங்களையும் பயன்படுத்த வேண்டும். அது போன்று அனைவருக்கும் தெரிந்த விஷயம் பிளாஸ்டிக் கழிவுகள் அதை ஒழித்து கட்ட வேண்டும். இது போன்ற நிறைய சுற்றுச்சூழலுக்கு ஒவ்வாத தற்போதைய பயன்பாட்டில் இருக்கின்ற பொருட்களை நாமாக முன்வந்து விட்டொழிக்கும் வரையில் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சனைகள் இந்தியாவில் மட்டும் அல்ல, உலக அளவில் இருந்து கொண்டுதான் இருக்கும்.

இவற்றை எல்லாம் இந்தியாவில் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று எந்த பரிந்துரையும் எனக்கு கிடையாது. காரணம் இந்தியாவை ஒப்பிடும் அளவிற்கு எந்த நாட்டிலும் மக்கள் தொகை கிடையாது. ஒருவேளை மக்கள் தொகை இந்தியாவில் இப்போது இருப்பது போல் அமெரிக்காவில் அல்லது ஆஸ்திரேலியாவில் இருந்தால் அவர்கள் இந்தியாவில் இப்பொழுது இருக்கும் நிலையைவிட மோசமான நிலையில் இருப்பார்கள் என்பது என் பார்வை. காரணம் இந்தியாவின் மக்கள்தொகை பெரிது. அத்தகைய மக்கள் தொகையை கொண்ட இந்தியா சிறப்பாகவே செயல்படுவதாக நான் கருதுகிறேன்.

 நான் பரிந்துரைக்க வேண்டும் என்று நினைத்தால் கண்டிப்பாக சீனாவுடன் ஒப்பிடும் பொழுது நாம் நிறைய துறைகளில் வளர்ச்சியைப் பெற வேண்டும். சீனர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் அவர்கள் அனைத்தையும் அவர்களுடைய தாய் மொழியிலேயே மொழிபெயர்த்து இருக்கின்றார்கள். அது அனைவரையும் மிகவும் சுலபமாக கற்றுக் கொள்ள உதவுகிறது. அதனால் அவர்கள் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றார்கள்.

 எனக்கு தெரிந்து அனைத்து குழந்தைகளும் முதலில் அவர்களுடைய எண்ணங்கள் அவர்களுடைய சிந்தனைகள் பேச்சுகளாக வெளிவரும் முன் தாய் மொழியிலேயே சிந்திக்கின்றன.  நாம் அனைத்தையும் தாய்மொழியில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கின்றோம். அப்படி மொழிபெயர்த்தால் மட்டுமே நாம் சீனாவை முந்தி முன்னேற முடியும். ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கின்றது.  காரணம் இந்தியாவிலே பல மொழிக் கொள்கை இருக்கின்றது. பலமொழிகளை நாம் ஒவ்வொரு மாநிலத்திலும் தாய் மொழி கொண்டிருக்கின்றோம். அனைத்தையும் மொழிபெயர்க்க வேண்டும் என்பது  மிகவும் கடினமானதாகவும் சவால் நிறைந்ததாகவும் இருக்கம். அதனால் ஆங்கிலத்தில் அனைவரும் பயில்வது சிறந்தது. ஆனால் ஆங்கிலத்தில் படிக்கும் பொழுது குழந்தைகளின் எண்ணங்களும் சிந்தனைகளும் தாய் மொழியிலே இருக்கும். ஆங்கிலம் என்பதில் ஒரு வேற்றுமை இருக்கும். ஆகையால் சற்று கடினமாக இருக்கும் முடிந்தால் அனைத்துவிதமான ஆராய்ச்சிகளையும் மற்றும் கண்டுபிடிப்புகளையும் அனைத்து முக்கியமான காரண காரணிகளையும் தமிழில் மொழிபெயர்க்கும் பட்சத்தில் நாம் சிறப்பாக செயல்படலாம்.

வெளிநாட்டு வாழ்வில்  நான் பெற்றதாக நினைப்பது, தன்னம்பிக்கை, தன்னிறைவு மற்றும் தனி மனித சுதந்திரம். இந்தியாவில் தனிமனித சுதந்திரம் இருந்தது. அது நான் பல நாடுகளுக்குச் சென்றதாகவும் இருக்கலாம் அல்லது என்னுடைய வயதின் காரணமாகவும் இருக்கலாம் ஒவ்வொருவரும் ஒரு வயதை ஈட்டும் பொழுது தன்நிறைவுடனும்  தன்னம்பிக்கையுடனும் இருப்பார்கள். அதற்கு நாம் வெளிநாட்டில் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை, வெளிநாடுகளில் நான் பெற்றதை விட இழந்தது தான் அதிகம். ஒவ்வொரு உறவினர்களையும் நண்பர்களையும் குறித்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசும் பொழுது, ஒவ்வொரு விழாக்களிலும் கலந்து கொள்ள முடியாமல் இருக்கும் பொழுதும், திருமணம் மற்றும் ஊர் பொது விழாக்கள், ஒரு சிறிய  திருவிழா, சிறிய நிகழ்வுகள் என்று ஒரு வருடத்தில் பல பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அவை அனைத்தையுமே விட்டு தனியாக ஒரு இடத்தில் நம்மளுடைய கனவிற்காக நாம் பாடுபடுகிறோம் என்ற ஒரே ஒரு மனநிம்மதியோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அதனால் நான் பெற்றதைவிட இழந்தது தான் அதிகம். ஆனால்  ஒன்றை இழந்தால் தான் மற்றொன்றை பெறமுடியும்.

நான் சென்று நாடுகளில் மிகவும் திறன் வாய்ந்ததாக நான் கருதுவது சீனா. நான் முதன் முதலில் சீனாவின் ஹாங்காங் மாகாணத்திற்கு 2011ல் சென்ற பொழுது அவர்களுடைய திறன், சிந்தனை ஆகியவற்றை நான் சற்று குறைவாக எடை போட்டு விட்டேன். பிறகு 5 ஆண்டுகள், சரியாக 2016 ஆம் ஆண்டு திரும்ப நான் ஹாங்காங்கிற்கு சென்ற போது என் எண்ணம் அனைத்துமே தவறு எனும் படியாக இருந்தது. ஐந்து வருடங்களில் நிறைய மாற்றங்கள்.

காலை முதல் இரவு வரை அவர்கள் ஓயாமல் உழைக்கிறார்கள். அவர்களுக்கு  கொடுத்த வேலையை சரியாக ஒருசில நொடிகள் கூட வீணாக்காமல் உழைக்கிறார்கள். அதனால் தான் கடந்த 20, 30 ஆண்டுகளில் அவர்கள் இவ்வளவு முன்னேற்றத்தையும் பலத்தையும் அடைந்திருக்கிறார்கள் என அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

அவர்களின் சிந்திக்கும் திறன் தொழில்நுட்பம் சார்ந்த அப்டேட்ஸ் அனைத்தும் ஐந்து வருடங்களில் மிகவும் சிறந்து விளங்கியது. அதனால் சற்றும் நம்ப முடியவில்லை அதற்கு காரணம் அவர்கள் அனைத்தையும் அவர்களுடைய தாய் மொழியிலேயே மொழி பெயர்த்து அதை குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் புகட்டுகின்றார்கள். அதனால் அவர்கள் அனைத்தையும் மிகவும் சுலபமாக கற்று கண்டுபிடிக்கிறார்கள்.  அவர்களுடைய கண்டுபிடிப்புகளை அவர்களுடைய மொழியிலேயே அவர்கள்  கற்றறிவதால் தான் செய்ய முடிகின்றது. ஆகையால் நான் மிகவும் கண்டு வியந்தது சீனர்களின் உழைப்பும் அவர்களுடைய தொழில்நுட்ப அறிவும். இந்தியாவிலும் பல சிறப்புகள் இருக்கின்றது. அவற்றை  வருங்காலங்களில் கண்டிப்பாக நாம் ஊக்கப்படுத்தி அதை வெளிக்கொணர வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *