குழந்தை(கள்) வளர்ப்பு

இது ஒரு அரிய வாய்ப்பு.  சிறந்த கலை.  நமக்கு நாமே தீட்டிக் கொண்டு மெருகேற்றிக் கொள்வது.

குழந்தைகள் என்றால் நம் குழந்தைகள் மட்டுமல்ல.  நமக்குத் தெரிந்த எல்லாக் குழந்தைகளையும் நம் குழந்தைகளாக பாவிப்பது, மதிப்பது, புகழ்வது, கொஞ்சுவது, உதவி செய்வது எல்லாமே தாய்மையின் மிகச்சிறந்த பரிமாணம்.

குழந்தைகள் பிறந்ததிலிருந்தே நல்ல பழக்கங்கள் சொல்லித்தரலாம்.  அதற்கு பேசத் தெரியாவிட்டாலும் புரிந்து கொள்ளும்.  பக்தப் பிரகலாதன் வயிற்றுக்குள் இருக்கும் போதே நாராயணனை அறிந்திருந்தான்.

குழந்தைகள் எல்லாமே அப்படித்தான்.  அதிகமாகக் கேட்டக் குரலாக இருந்தால் உடனடியாகத் திரும்பிப் பார்க்கும்.  இது இயல்பு. 

இதை தொடக்கூடாது, செய்யக்கூடாது என்று மட்டும் சொல்லாமல் அதனால் விளையும் கஷ்டங்களையும், தீமைகளையும் மெல்ல மெல்ல புரியவைக்க வேண்டும்.

கொஞ்சு மொழியிலும், கெஞ்சு மொழியிலும் மெல்ல நயமாக சொல்ல வேண்டும்.  தினம் கொஞ்சம்! கொஞ்சமே கொஞ்சம் சொல்லும் போது கேட்டுக் கொள்ளும்.  அறிவுரையாக இல்லாமல் அன்பாக, இதமாக, பதமாக சொல்ல வேண்டும்.

கோபப்படுங்கள்.  உங்கள் மேல் கோபப்படுங்கள்.  இன்னும் எளிமையாக, இதமாக பழகத்தெரியவில்லையே என்று வருத்தப்படுங்கள்.

குழந்தைகள் பூமிக்கு புதிதானவர்கள்.  நல்லவை கெட்டவை அறியாத பூந்தளிர்.  மென்மையானவர்கள்.   கரடு முரடான  வார்த்தைகள் முதலில் புரியாது.  முள்ளாய்க் குத்திப் புண்படுத்தும்.

கதிரவனும், சந்திரனும் கடமையைச் செய்வது போல்தான் பெற்றோர்களும்.

நீந்தும் போது, தவழும் போது, உட்காரும் போது, நிற்கும் போது, நடக்கும் போது, உங்களை “அம்மா, அப்பா” என்றழைக்கும் போதும் எவ்வளவு மகிழ்ச்சியின் எல்லைக்குச் செல்கிறோம்.  கைத்தட்டிப் பாராட்டுகிறோம்.  தூக்கியெடுத்து உச்சி முகர்ந்து முத்தமழை பெய்து குதூகலிக்கிறோம்!  

அதே குழந்தைகள்தான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றைக் கற்றுக் கொள்ளும் போதும் புத்தம்புது பூந்தளிர் என்பதை மறந்து விடுகின்றோம்.

குழந்தைகள் கேள்விக் கேட்டால் பிடிக்காது.  சொன்னப் பேச்சைக் கேட்காவிட்டால் பிடிக்காது.  பிடிவாதம் பிடித்தால் பிடிக்காது.  அழுதால் பிடிக்காது.  எதுதான் பிடிக்கும்?

போட்டதைச் சாப்பிட்டு, நன்கு படித்து, ஸ்போர்ட்ஸ், ட்ராயிங், டான்ஸ், பாட்டு என்று எல்லாவற்றிலும் முதலில் வரவேண்டும்.  இல்லையேல் தலைக்கு மேல் கோபப்படுவீர்கள்.

இதுவல்ல குழந்தை வளர்ப்பு.  அந்தக் குழந்தையோடு நீங்களும் வளருங்கள்.  நீங்களும் மனதளவில் குழந்தைகளாக மாறி அவர்கள் தவறுகளை செய்து காண்பித்து புரியவையுங்கள்.

உங்கள் வயதுக்கு உங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள் அந்தக் குழந்தைகளுக்கு இருக்காது.

ஒரு பொருள் வேண்டும் என்று கேட்கும் போதே முதலில் பார்க்கிறேன் என்று சொல்லுங்கள்.  உங்கள் மனதைக் கேளுங்கள்.  அது தேவையா? வாங்க முடியுமா? என்பதை.

பிறகு அதன் தேவை மிகச் சிறிதே என்பதனையும்,  உங்களால் இயலாது என்பதையும் மெல்லப் புரிய வையுங்கள்.

எடுத்த உடனேயே எதிர்ப்பைக் காண்பித்தால் கிடைக்கும் வரை பிடிவாதம் பிடிக்கும்.  வாதத்திற்கு மருந்து உண்டு.  பிடிவாதத்திற்கு மருந்து இல்லை.  கோபமும் மனஸ்தாபமும்தான் மிஞ்சும்.  அதுவே பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடைவெளியை உண்டுபண்ணும்.

எந்தப் பள்ளியில் சேர்க்கிறோம் என்பது முக்கியமில்லை. 

அலைச்சல் இல்லாமல் இருக்க வேண்டும்.  கூடுமானவரை அருகில் இருக்கும் பள்ளியில் படிக்க வைக்கலாம்.

கேஜி வகுப்பிலேயே சிறந்த மாணவனாக ஆகிவிட வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம். 

மற்றக் குழந்தைகளுடன் பழகும் விதம், மீதம் வைக்காமல் சாப்பிடும் குணம், இயற்கை உபாதைகளுக்கு சுத்தமான இடம் இருக்கிறதா?  குழந்தைகள் பயப்படாமல் பள்ளிக்குச் செல்ல விரும்புகிறார்களா?  இல்லையென்றால் காரணம் என்ன?  இதையெல்லாம் சரி செய்து கொள்ள வேண்டும்.

எப்படி நீந்துவது, 

தவழ்வது, நடப்பது எல்லாம் புதிதாக செய்தார்களோ, அப்படித்தான் பாடங்களும்.  எல்லாம் புதிதுதான்.  அரிச்சுவடியும், ஏபிசிடியும் அப்போதுதான் அறிமுகமாகிறது.

குழந்தைகள் எப்படிப் படிக்கிறார்கள் என்பது முக்கியம்.

“கற்கக் கசடற கற்பவைக் கற்றபின்

நிற்க அதற்குத் தக” வள்ளுவன் வாக்கு.

எப்படிப் படிப்பது, புரிந்து கொண்டு படிக்கிறார்களா?  இதெல்லாம் மிகவும் முக்கியம்.  பிறகு அதன்படி நடக்கச் செய்வது நம் முக்கியமான கடமை.  

கல்வியைவிட ஒரு படி மேலே முக்கியமானது சிறந்த ஒழுக்கம்.  மற்றவர்களுடன் பழகுதல், உண்மை பேசுதல், புத்தகங்களை பாதுகாத்தல், சீருடையின் முக்கியத்துவம் என சொல்லிக் கொடுங்கள்.  எளிதல்ல பிள்ளை வளர்ப்பு?  நாமும் புதியவர்கள்தான்.  புதுமையான அனுபவத்தை மகிழ்ச்சியாக அனுபவியுங்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக முயற்சிப்போம்.  பாடங்களைப் படிக்கும்போது எந்த சப்ஜெக்ட்டுக்கு அதிக முக்கியத்துவம், எதற்கு சலிப்புடன் படிக்கிறார்கள் என்பதை உற்று கவனியுங்கள்.   அவர்கள் விரும்புவதை நன்றாகப் படிக்கச் செய்து மேலும் மெருகேற்றுங்கள்.  அவர்களுக்கு வராததை கவ்டப்படுத்திப் படிக்கச் செய்யும்போது பிடித்ததும் பிடித்தப் பாடமும் பிடிக்காமல் போய்விடும்.

பிடித்த பாடங்களில் பெற்ற மதிப்பெண்களை சொல்லி, பிடிக்காத பாடங்களையும் மெல்ல முயற்சித்து கவனம் வைத்துப் படித்தால் கண்டிப்பாக அதிலும் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடியும் என்று சொல்லுங்கள்.  

எந்த ஒரு நிலையிலும் உங்கள் கோபம் பொய்க் கோபமாகவே இருக்கட்டும்.  உங்கள் மௌனம் கண்டிப்பாக அவர்களை மாற்றும்.  ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் பெரிதாகப் பாராட்டுங்கள்.  அடுத்தப் பாராட்டுக்கு தானாகவே தங்களைத் தயார் படுத்திக் கொள்வார்கள்.

உங்கள் பிள்ளைகளுடன் படிக்கும் மாணவர்களில் ஏழை, பணக்காரன், அம்மா இல்லாது, அப்பா இல்லாது, விவாகரத்துப் பெற்ற குழந்தைகள் இருக்கக் கூடும்.

இதையெல்லாம் உங்கள் குழந்தைகள் தெரிந்து கொள்ளலாம்.  ஆனால் எந்த ஒரு சூழ்நிலையிலும் ஏற்றத்தாழ்வு கூடாது என்பதை அவர்களுக்குப் புரிய வையுங்கள்.

மனதளவில் ஆரோக்கியமாக இருப்பார்கள்.

பொதுவாகச் சொல்வதுண்டு.  நம் ஆரோக்யம் நம் கையில் என்று.  இது நூற்றுக்கு நூறு உண்மை.  தற்போதைய குழந்தைகள் நிலைப்படித் தாண்டி வெளியில் சென்று விளையாடுவதில்லை.  

ஓடியும் கூடியும்  விளையாடச் சொன்னான் பாரதி.  அதிகாலைப் படிப்பது, பக்தியுடன் பாட்டு, மாலையில் விளையாட்டு என்று எழுதியிருக்கிறார் குழந்தைகளுக்கென.  தற்போது இது எதுவும் நடைமுறையில் இல்லை.

காலையில் எழுந்தால் குளித்துச் சாப்பிட்டு (எளிதல்ல.  போராட்டம் தான்) சீருடை, புத்தகப்பை, சாப்பாட்டுப் பை அந்தந்த பள்ளியின் வழக்கப்படி எல்லாம் அள்ளி எடுத்துத் திணித்து வாசலில் பள்ளி வேனிலோ, ஆட்டோவிலோ, தங்கள் இருசக்கர வாகனத்திலோ ஏழிலிருந்து எட்டுக்குள் ஏற்றிவிட்டு வந்து அம்மாடீ என்று உட்கார வேண்டியுள்ளது.

மாலை பள்ளிக்கூடம் முடிந்ததும் பள்ளிகள் தரும் ‘ப்ராஜக்ட்’க்காக பொருட்களை தேடி அலைந்து வாங்கி வந்து பிள்ளைகள் வந்ததும் ‘இந்த’ கிளாஸ், ‘அந்த’ கிளாஸ் என அழைத்துக்கொண்டு போய் விட்டு, கூட்டி வரவேண்டும்.  அவ்வளவு சாதாரணமா என்ன?  அதற்கெல்லாமும் பணம் கட்ட சம்பாதிக்க வேண்டும்.  பிறகு இரவாகிவிடும்.

ப்ராஜக்ட் செய்ய வைத்து, அல்லது செய்து, வீட்டுப் பாடம் எழுத வைத்து, இரவு உணவை வைத்துத் திணித்து, அழவைத்துப் படுக்கவைத்து, தாய்மார்களுக்கு போராட்டம் தான்.  தினம் தினம் பரீட்சைதான்.

இதைக் கொஞ்சமாவது சமாளிக்க பெண்கள் பிள்ளைகளை மற்றவர்களோடு ஒப்பிட்டு முடிந்தாலும் முடியாவிட்டாலும் கட்டாயப்படுத்துவதைத்  தவிர்க்கலாம்.

வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருந்தபடி சம்பாதிக்க வழி தேடலாம்.  செலவுகளைக் கட்டுக்குள் வைக்கலாம்.  தற்போது அமைந்திருப்பது போல் வீட்டிலிருந்தபடி வேலை பார்க்க முயற்சிக்கலாம்.

வீட்டில் பெரியவர்களை அனுசரித்து குழந்தைகளை அவர்கள் கவனிப்பில் விடலாம்.

எல்லாவற்றையும் விட ஆண்களும் குழந்தை வளர்ப்பில் மனைவியுடன் சேர்ந்து பயணிக்கலாம்.  இல்லை என்று சொல்லிவிட முடியாது.  முழுமையாக இல்லை என்று சொல்ல வேண்டும்.

பொதுவாக ஒரு பழமொழி சொல்வார்கள்.  ‘அஞ்சு வெரலும் ஒன்னு போலயா இருக்கு’ என்பார்கள்.  உங்கள் குழந்தைக்கு படிப்பைத் தவிர எதில் நாட்டம் இருக்கிறது என்று கண்டுபிடியுங்கள்.  ஓவியம், நடனம், பாட்டு, விளையாட்டுக்களில் ஏதேனும் மிகவும் விருப்பமாக இருக்கலாம்.  அதை ஊக்குவிக்க முயன்றிடுங்கள்.  மெனக்கெடுவதில் தவறில்லை.  நம் குழந்தைகள் அல்லவா!

ஒன்று மட்டும் செய்யாதீர்கள்.  மற்றக் குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பேசுவது, மட்டப்படுத்துவது, தூக்கிவைப்பது எல்லாமே குழந்தைகள் மனதை மிகவும் பாதிக்கும்.  பள்ளிப் பருவம் வரை உடல் ஆரோக்காயத்தை விட மன ஆரோக்கியம் மிகவும் முக்கியம்.

அதைவிட மிக முக்கியமானது என்னவென்றால் உங்கள் குழந்தைகளை விட அதிகம் பிரகாசிக்கும் குழந்தைகளை பாராட்டத் தயங்காதீர்கள்.

அது உங்கள் குழந்தைகளுக்கு பொறாமையாகப் படலாம்.  உங்களிடம் கண்டிப்பாக விவாதிக்கும்.  சிறந்தவற்றை பாராட்ட வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுங்கள்.  புரிந்து கொள்ளச் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு குழந்தையும் எல்லா விதத்திலும் பெற்றோரால் கண்காணிக்கப் படும்போது குழந்தைகள் நடுவே மிக நல்ல நன்மை தரக்கூடிய அன்னியோன்னியம் பிரதிபலிக்கும்.  

முக்கியமான விசயம் உறவுகள்.  வீட்டிற்கு ஒரு குழந்தை என்றானபின் அத்தை, மாமன் உறவு முதலில் அற்றுப் போய்விட்டது.  இருக்கும் உறவுகளை, இருந்த உறவுகளைப் பற்றி மாதம் இரு முறையாவது எடுத்துக் கூறுங்கள்.  பழகச் செய்யுங்கள்.  மரியாதைக் கற்றுக்கொடுங்கள்.  அங்கே அன்பும், பண்பும், பாசமும் தானாக ஊற்றெடுக்கும்.

திருமணம், இறப்பு விஷயங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்.  பலருடன் சேர்ந்து உட்கார்ந்து பலவகையான உணவை உண்ணக் கற்றுக் கொடுங்கள்.  உலகம் எது என்பது புரியும்.

துக்கத்தின் தாக்கம் புரியும். நிதர்சனம் எது என்று தெரிந்து தெளியட்டும்.  பொத்திப் பொத்தி வைத்தால் தனக்குள் தான் நினைப்பதுதான் சரி என்று தோன்றும்.  வெளி உலகம் தெரியப்படுத்துங்கள்.  மளிகைக்கடைக்கு, துணிக்கடைக்குக் கூட்டிச் செல்லுங்கள்.  உண்ணும் உணவின் விலை தெரியட்டும்.   உங்கள் பட்ஜெட்டை சொல்லி துணிமணிகள் தேர்ந்தெடுக்கச் செய்யுங்கள்.  உங்கள் விருப்பத்தைத் திணிக்காமல் வாங்கிக் கொடுங்கள்.  அவர்கள் முகத்தில் வெற்றிக் களிப்பும், மனதில் ஒரு புத்துணர்ச்சியும் பிறக்கும்.

விடுமுறை நாட்களில் விடுதலைப் போராட்டங்கள் பற்றி, விடுதலைக்கு வித்திட்டவர்கள் பற்றி, உங்கள் குடும்பத்து பெரியவர்கள் பற்றி, ஆன்மீக சான்றோர்கள் பற்றி, விவசாயம் பற்றி, விவசாயிகள் பற்றி என்று நிறைய விஷயங்களை பகிருங்கள்.  ஆர்வமாக கேட்பார்கள்.  அவர்களின் கேள்விகளுக்கும் பதலளியுங்கள்.

இதன் பிறகு வயதுக்கு வந்த பெண்பிள்ளைகள்,  அரும்பு மீசை முளைத்த ஆண் பிள்ளைகள் இவர்களை பாதுகாப்பது உங்களுக்கு ஒவ்வொரு நாளும் செமஸ்டர் தான்.  

தொழில் நுட்பம் வளர்ந்து விட்டது.  குழந்தைகளுக்கும் உடலளவில், மனதளவில் மாற்றங்கள் உண்டாகும் பருவம்.  இதைச் சவாலாக சந்திக்க வேண்டியிருக்கும்.

உங்களுக்கு பொறுமை மிகவும் அவசியமாகும்.   “நான் எங்கம்மா கிழிச்ச கோட்டைத் தாண்ட மாட்டேன்” என்ற வசனம் எல்லாம் செல்லுபடியாகாது.

பருவமடைந்தபின் பலவாறும் யோசிப்பார்கள்.  சில குழந்தைகள் எல்லாவற்றிலும் தெள்ளத் தெளிவாக முடிவெடுப்பார்கள.

சிலர் தானும் சரியாக இல்லாமல் யார் யாரிடமோ அறிவுரைகள் கேட்டு, சொல் புத்தி, சுயபுத்தி இல்லாது அல்லாடுவார்கள்.

சிலர் எதிலும் ஈடுபாடு இல்லாமல் ஏதோ நடப்பது நடக்கட்டும் என்றிருப்பர்.

தோற்றத்தில் அதிக அக்கறை காட்டுவது, இனம் மாறிப் பேசும்போது ஒருவித உணர்ச்சி பெருக்கெடுத்தல் என்று நிறைய மாற்றங்களை காண முடியும்.

இது எல்லாமே நமக்கும் அதே வயதில் ஏற்பட்டுள்ள அனுபவமே ஆகும்.  அப்போது தெரியாவிட்டாலும் தற்போது நமக்கு நன்கு புரியும்.  முள்ளு மேல் போட்ட சேலையை எடுப்பது போல்தான்.  

மெல்ல மெல்ல புரியவைக்க வேண்டும்.  நல்லது கெட்டது சொல்லும் போது தாங்கள் இன்னும் சிறுகுழந்தை அல்ல என்பார்கள்.

புரிய வைப்பது கஷ்டத்தின் உச்சம் தான்.  அந்த ஓரிரு வருடங்கள் மதில்மேல் பூனையாக இருப்பவர்கள் மெல்ல மெல்ல மாறுவார்கள்.  ஒரு சிலரை மாற்ற முடியாது.  பட்டுத் தெரிந்து கொண்டு திருந்த வேண்டும்.

அடுத்தது பிள்ளைகளின் திருமணம்!

நான் என் குழந்தைகளை வளர்க்கும் போது ஒவ்வொரு பருவத்திலும் ஏற்படும் மாற்றங்களை எடுத்துச் சொல்லி வளர்த்தேன்.  நான் வேலைக்குச் சென்ற பெண்தான்.  என் குழந்தையைப் பார்த்துக் கொள்ள யாரும் இல்லாத போதும் நானும் என் கணவருமே உறுதுணையாய் இருந்து, படிக்க வைத்தோம்.  எல்லாவற்றையும் விட நாங்கள் தரும் சொத்து என்றால் அது ‘படிப்பு’ மட்டும் தான்.  இருவர் வழியிலும் பெயர் சொல்லும் வகையில் மூதாதையர் வாழ்ந்துள்ளதை எடுத்துச் சொல்லி வளர்த்தோம்.

குடும்பப் பெயரையும் காப்பாற்றி, எங்கள் பெயரையும் காப்பாற்றி பேரும் புகழும் சேர்த்து எங்களை மகிழ்வித்தது நாங்கள் பெற்ற பாக்கியம்.

வம்சத்தின் அடுத்த வாரிசையும் முடிந்தவரை நல்லவற்றை சொல்லிக் கொடுத்து வளர்க்கிறோம்.

தாய் அறியாத சூல் இல்லை என்பார்கள்.  குழந்தைகள் பெண் என்றால் மட்டும் பாதுகாக்க வேண்டும்.  ஆண் பிள்ளைகள் என்றால் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற நிலை உருவாக்கவே கூடாது.  முற்றிலும் தவறு. 

ஒரு தாய் தன் பிள்ளைகள் எங்கு செல்கிறார்கள், எப்போது வருகிறார்கள், என்ன செய்கிறார்கள், பொய் சொல்கிறார்களா என்பதில் முழுக்கவனம் செலுத்த வேண்டும்.

கேட்டாலும், கேட்காவிட்டாலும் புத்திமதி சொல்லி கண்டிக்க வேண்டும்.  கைவிட்டுப் போனபின் வருத்தப்படக் கூடாது.

பெற்றவர்கள் கண்ணும் கருத்துமாக பிள்ளைகளை கவனித்தால் ‘போக்சோ’ தேவையில்லை.

காந்தி கனவு சாத்தியமாகும்.

பெண் குழந்தைகள் விண்வெளிவரை சாதிப்பது ஒருபுறமும், தாயிடம் சொல்லியதால் தலை துண்டிக்கப்பட்ட சம்பவமும் நிகழ்கிறதென்றால் எங்கு போய்க் கொண்டிருக்கிறோம். 

கவனக்குறைவா? கண்டிப்பு இல்லையா? பெற்றோர்களே நாட்டில் இளம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கு நீங்களும் காரணமாவீர்கள்!

தயவுசெய்து உங்கள் குழந்தைகள் நடத்தையில் கவனம் வையுங்கள்.  தவறு செய்தால் துணை போகாதீர்கள்.  உங்கள் பிள்ளைகள் நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லவர்களாக இருக்கட்டும்.  

திருமணமானபின் மருமகளை மகளாகவும், மருமகனை மகனாகவும் நினைத்து மதிக்க வேண்டும்.  உறவுகள் உணர்வுப் பூர்வமாக அமைந்தால் உன்னதமாகும்.

வரப்புயர கோன் உயர்வது போல்,

வீடு சிறக்க நாடு சிறக்கும்.  நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!