நாம் எல்லாம் 90’s kids தான். “சும்மா இரு!” “அத பண்ணாதே!” “மூஞ்சியை தூக்கி வைக்காதே!” “வாயை மூடு!”ன்னு கேட்டு வளர்ந்த தலைமுறை. நம்ம திட்டு வாங்கினோம். அடி வாங்கினோம். “டார்க் ரூம்ல போட்டு விடுவேன்”ன்னு பயமுறுத்தினாங்க. “பிரின்சிபால்ட்ட கம்ப்ளைண்ட் பண்ணிடுவேன்”ன்னு மிரட்டினாங்க. பயத்திலேயே வாழ்ந்தோம். மார்க் குறைஞ்சிடுமோன்னு பயம். எதிர்த்து பேசினா என்ன ஆகுமோன்னு பயம். தவறு பண்ணினா அடிச்சிடுவாங்களோன்னு பயம். அப்பா–அம்மா நம்ம மேல வைத்திருக்குற எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யணும்னு பயம். சொந்தக்காரங்க, டீச்சர், சமூகம் என்ன நினைப்பாங்களோன்னு பயம். “நாலு பேர் நாலு விதமா பேசிடுவாங்க”ன்னு ஒரு பயம் (அந்த நாலு பேர் யாருன்னு இன்னிக்கும் தெரியல!). பயம்… பயம்… தேனாலி மாதிரி எல்லாத்துக்குமே பயம். நம்ம வீட்டுல அன்பு இல்லாம இல்ல. ஆனா அந்த அன்பு, பல நேரம் – பயம், கண்டிப்பு, கட்டுப்பாடு இதோட கலந்தே வந்தது. அமைதியா இருந்தா தான் பாதுகாப்பு. கீழ்ப்படிதல் இருந்தா தான் பாராட்டு. இன்னிக்கு நாமே பெற்றோர்களா ஆகிட்டோம். இதுல கொடுமை என்னன்னா – “அப்போ நம்ம அப்பா அம்மாவுக்கு பயந்தோம்… இப்ப நம்ம பசங்களுக்கே பயப்படுறோம்.”
“குழந்தைகள் ரொம்ப பிடிவாதம் பிடிக்கறாங்க…” “யாரு சொன்னாலும் கேக்க மாட்டேங்கறாங்க…” “மொபைல், டிவி – இதுலயே மூழ்கி போயிடுறாங்க…” “ரெஸ்பெக்ட் இல்லாம பேசுறாங்க…” “அவங்க எதிர்காலம் என்ன ஆகுமோன்னு பயம்.”
நம்ம அப்பா–அம்மா மாதிரி கடுமையா, கண்டிப்பா இருக்க நமக்கு மனசு வரலை. ஏன்னா… அவங்க திட்டினப்போ நமக்கு எவ்வளோ வலிச்சுதுன்னு இன்னும் ஞாபகம் இருக்கு. வெளிய வராத கண்ணீர். சொல்ல முடியாத வார்த்தைகள். ஆழ் மனசுக்குள்ள இருந்த ஒரு வலி… அதெல்லாம் சேர்ந்து நம்மள கடுமையா, கண்டிப்பா நடந்து கொள்ள விடாம உள்ளுக்குள்ள இருந்து தடுக்குதே!
அதனால தான்… “சரி, நம்ம பசங்க கிட்ட மென்மையா நடந்து கொள்ளலாம். அவங்க மனசை புரிஞ்சுக்க முயற்சி பண்ணலாம். பக்குவமா, அன்போட புரிய வைக்கலாம்.”ன்னு யோசிக்கிறோம். அப்போ இன்னொரு பயம் வருது… “ரொம்ப அட்வாண்டேஜ் எடுத்துக்குவாங்களோ?” “கெட்டு குட்டிச்சுவரா போயிடுவாங்களோ?” “நம்ம செல்லம் கொடுத்து அவங்கள கெடுத்துட்டோம்னு எல்லாரும் சொல்லுவாங்களோ?” “அவங்க ஃப்யூச்சர் ஸ்பாயில் ஆயிடுமோ?” அப்படின்னு. இரண்டு விதமான பார்வைகளுக்கு நடுவுல சிக்கி தவிக்கிறோம். நாம் வளர்ந்த வீடு – இப்ப நாம உருவாக்க முயற்சி செய்ற வீடு – இந்த இரண்டுக்கு நடுவுல மாட்டிக்கிட்டு முழிக்கிறோம். கண்டிப்பா இருக்கணுமா… இல்ல மென்மையா இருக்கணுமா? ஆதிக்கமா நடத்தணுமா… இல்ல அன்போட இணைக்கணுமா? பயமுறுத்தணுமா… இல்ல அன்பு செலுத்தணுமா? ஒரே குழப்பம். இதனால வீட்டுக்குள்ள ஒரே சச்சை. மனசுக்குள்ள ஒரு சோர்வு. இந்த பிரச்சனை போதாதுன்னு, சோஷியல் மீடியா வேற எரியுற நெருப்புல எண்ணெய் ஊத்துற மாதிரி, ரெண்டு பக்கத்துலையும் நம்மள இழுக்குது.
ஒரு பக்கம், “நம்ம அப்பா அம்மா நம்மள அடிச்சு வளர்த்ததால தான் இன்னிக்கு நம்ம நல்லா இருக்கோம்.” “கொஞ்சம் அடிச்சு வளர்த்தா தான் பிள்ளை முன்னேறும்.” “டிஸிப்ளின் இல்லன்னா ஃப்யூச்சர்ல ரொம்ப கஷ்டப்படுவான்.”ன்னு சொல்றாங்க. இன்னொரு பக்கம் என்னடான்னா… “கத்தாதீங்க.” “திட்டாதீங்க.” “பயமுறுத்தாதீங்க.” “அதெல்லாம் குழந்தைகளோட மனசுக்குள்ள ஆழமான காயமா மாறிடும்.” ன்னும் சொல்றாங்க.
ஒரு பக்கம் அனுபவம் பேசுது. இன்னொரு பக்கம் சைக்காலஜி பேசுது. இரண்டுமே நியாயமா தான் படுது. நாம மட்டும்… எந்த பக்கம் முழுசா சாய்வதுனு தெரியாம, கோபத்துல குழந்தையை அடிச்சிட்டு, ஒரு பக்கம் குழந்தை அழுது, இன்னொரு பக்கம் நைட்டெல்லாம் கில்ட், செல்ஃப் டவுட்டுல மனசு பதறி, “நான் குழந்தையை சரியா வளர்க்குறேனா? இல்ல கஷ்டப்படுத்துறேனா?”ன்னு தெரியாம, தூக்கம் வராம முழிச்சுக்கிட்டு இருக்கோம். இதுதான்… நிதர்சனமான உண்மை. “இப்போ கண்டிப்பா இருக்கணுமா?” “இல்ல மென்மையா இருக்கணுமா?” “குரல் உயர்த்தி பேசலாமா?” “இல்ல எதுவானாலும் அமைதியா தான் பேசணுமா?” “படி னு சொல்லலாமா?” “இல்ல ஃபெயில் ஆனாலும் சூப்பர் னு சொல்லலாமா?” “ஆக மொத்தம் பேசலாமா… இல்ல பேசவே கூடாதா?”ன்னு யாராவது சொல்லுங்க…
இதுதான் நிறைய அம்மாக்களின் மனசுக்குள்ள ஓடுற மைண்ட் வாய்ஸ்.
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு அம்மாவோட மனசுக்குள்ளேயும் ஒரு பெரிய போரே நடந்துகிட்டே இருக்கு. “நல்ல, அன்பான, புரிஞ்சுக்கற அம்மா” ஆக இருக்கணுமா? இல்ல “உறுதியான, தைரியமான, கட்டுப்பாடு வைக்கும் அம்மா” ஆக இருக்கணுமா? இந்த இரண்டுக்கும் நடுவுல தான், கில்டும், செல்ஃப் டவுட்டும் நுழையுது.
கூலா ஹேண்டில் பண்ண முடியலனா… கோபப்பட்டா… அடிச்சா… “No”ன்னு சொன்னா கூட… உடனே கில்ட்டியா ஃபீல் பண்ணுறோம். அடுத்த நொடியே… “நான் சரியா தான் பேரண்டிங் பண்ணுறேனா?” “நான் உண்மையிலேயே ஒரு நல்ல அம்மாவா?” “முதல்ல என் பிள்ளை கிட்ட நான் ஒரு மனுஷியா கூட நடந்து கொள்ள மாட்டேங்கிறேனா?” “இல்ல ராட்சசி மாதிரி நடந்து கொள்ளுறேனா?”ன்னு ஒரு பெரிய டவுட் வந்து நிக்குது. இப்போலாம் நம்ம வீடு சும்மா சுவர், ரூம், சமையலறை இருக்குற இடம் மட்டும் இல்ல. நம்ம கில்ட், நம்ம சந்தேகம், நம்ம எதிர்பார்ப்புகள், நம்ம குழந்தை பருவ காயங்கள், கனவுகள், ஏக்கங்கள், எதிர்காலத்தைப் பற்றிய பயம்… இந்த எல்லாத்தையும் தாங்கி நிற்குற ஒரு உணர்ச்சி இடமா தான் நம்ம வீடே மாறிடுச்சு.
இப்போ நம்ம மெயின் கேள்விக்கே வருவோம் – “கண்டிப்பா வளர்க்கலாமா… இல்ல மென்மையா வளர்க்கலாமா?” இந்த கேள்வியை கொஞ்சம் ஆழமா மாற்றி கேட்டுப் பாருங்க. அப்போ அதுக்குள்ளே பதில் ஒளிந்திருக்குறது நமக்கே புரிஞ்சிடும். என்னோட பேரண்டிங்கோட அடிப்படை என்ன? பயமா? இல்ல பாதுகாப்பா? அதாவது… “நான் பயத்திலிருந்து குழந்தையை வளர்க்கிறேனா? இல்ல உள்ளுக்குள்ள பாதுகாப்போட, நம்பிக்கையோட வளர்க்கிறேனா?” ஏன்னா… உள்ளுக்குள்ள பயம் இருந்தா, அன்பு கூட கட்டுப்பாடா வெளில தெரியும். உள்ளுக்குள்ள ஆறாத காயம் இருந்தா, டிஸிப்ளின் கூட கடுமையா வெளிப்படும். ஆனா உள்ளுக்குள்ள பாதுகாப்பு இருந்தா, உறுதியும் கூட கருணையா வெளிப்படும். அங்க தான் ஒரு புதிய உணர்வு நம்ம வீட்டுக்குள்ள மெதுவா நுழையுது. ஒரு ரூல் மாதிரி இல்ல. ஒரு கண்டிஷன் மாதிரி இல்ல. ஒரு மென்மையான உணர்வு மாதிரி.
இதைத்தான் நாம **“Healed Parenting”**ன்னு சொல்றோம். அப்படின்னா, எப்போதும் கத்தாம, எப்போதும் அமைதியா, எப்போதும் பெர்ஃபெக்ட்-ஆ இருக்கணும்னு இல்ல. இதுதான் அர்த்தம்: தன்னோட கடந்த கால பயங்கள், இன்சிக்யூரிட்டி ஃபீலிங்க்ஸ் ஒரு அம்மாவை கீழ இழுக்காதப்போ, அவ தன் குழந்தையையும் பயத்தால கட்டிப்போட மாட்டா. ஒரு அம்மா தன்னோட பயம், கவலை, ஸ்ட்ரெஸ் இதையெல்லாம் மெதுவா ஹீல் பண்ணிக்கிட்டு, உள்ளுக்குள்ள நம்பிக்கையோடும் அமைதியோடும் வாழ கற்றுக்கிட்டா, அவ தன் குழந்தைகளையும் பயம் இல்லாம, நம்பிக்கையோட, பாதுகாப்போட, வாழ்க்கையில முன்னே வெற்றிகரமா கொண்டு போக முடியும். மெல்ல மெல்ல வீடு மாறும் – பதட்டத்திலிருந்து நம்பிக்கைக்கு.
“சொன்னதை செய்யலன்னா…”ன்னு இல்லாமல் “தவறு செய்தாலும் நான் உன்னோட தான் இருக்கேன்”ன்னு. “உன்னை கட்டுப்படுத்தினா தான் நீ பாதுகாப்பா இருப்ப”ன்னு இல்லாமல் “நான் பாதுகாப்பா இருக்கேன், அதனால உன்னை நிம்மதியா வழிநடத்த முடியும்”ன்னு.
ஒரு அம்மா உள்ளுக்குள்ள பாதுகாப்பா ஃபீல் பண்ணினா, குழந்தைகளும் தானாகவே பாதுகாப்பா ஃபீல் பண்ணுவாங்க. ஒரு அம்மா உள்ளுக்குள்ள அமைதியா, சந்தோஷமா இருந்தா, நம்ம பசங்களும் உள்ளிருந்தே அமைதியா, நிம்மதியா ஃபீல் பண்ணுவாங்க.
ஒவ்வொரு அம்மாவும் கேட்க வேண்டிய முக்கியமான உண்மை: உங்ககிட்ட எந்தக் குறையும் இல்லை. எப்பவும் குழப்பம் இல்லாம, எப்பவும் சோர்வு இல்லாம, எப்பவும் சிரிச்சுக்கிட்டே, உற்சாகமா இருக்க நீங்க எந்த ரோபோ இல்லை. நீங்க ரத்தமும் சதையும், உணர்ச்சியும் உயிரும் கொண்ட ஒரு ஜீவன். சில நேரம் உங்களுக்குள்ள “நான் தோற்ற மாதிரி தோணுதே…”ன்னு தோணலாம். அது தோல்வி கிடையாது. அது தலைமுறை தலைமுறையா வந்த பழக்கங்கள், வலி, சுமைகள் இன்னும் உங்க உடம்பு சுமக்குறதால வர்ற ஒரு சோர்வு.
“இந்த இரண்டு கரைகளுக்கிடையில நான் தனியா தத்தளிக்கிறேன்… பேரண்டிங் என்ற கடல்ல நான் முழுகிட்டு இருக்கேன்… என்னையே நான் தொலைச்சிட்டேன்…”ன்னு உங்களுக்கு தோணுதுனா, நீங்க தனியா இல்ல. இன்றைய காலத்து பெரும்பாலான அம்மாக்கள் இதே இடத்துல தான் நிக்கிறாங்க. ஒருவேளை… இன்றைய பெற்றோராக இருப்பது கண்டிப்பா இருக்கலாமா, மென்மையா இருக்கலாமா ன்னு தேர்வு பண்ணுறதுக்காக இல்லாம, நம்மையே மெதுவா குணப்படுத்திக்குற, நம்மையே கொஞ்சம் கொஞ்சமா மென்மையாக்கிக்குற ஒரு வாய்ப்பா இருந்தா எப்படி இருக்கும்? நாம் வளர்ந்த வீட்டைவிட லேசான, பாதுகாப்பான ஒரு வீட்டை நம்ம பிள்ளைகளுக்காக உருவாக்க இன்னிக்கு நமக்கு ஒரு வாய்ப்பு இருக்கு. நம்ம காயங்களை ஹீல் பண்ண, அந்த வலிகளை நம்ம பிள்ளைகளுக்கு பாஸ் பண்ணாம இருக்க இன்னிக்கு நமக்கு ஒரு வாய்ப்பு இருக்கு. இந்த பாதை சுலபம் இல்ல. ஆனா ரொம்ப மதிப்புமிக்கது.
நம்ம மனசு சந்தோஷமா, அமைதியா இருந்தா, மெல்ல மெல்ல வீடும் சந்தோஷமா மாறும். சந்தோஷமான வீட்டுல குழந்தைகள் டிஸிப்ளின் மட்டும் இல்ல, தன்னம்பிக்கையையும் கற்றுக்குவாங்க. கீழ்ப்படிதல் மட்டும் இல்ல, தங்களோட உணர்வுகளையும் புரிஞ்சுக்கக் கற்றுக்குவாங்க. இந்த Healed Parenting பாணியில, நாம் குழந்தைகளை மட்டும் வளர்க்கல. நாம் குடும்பங்களையே குணப்படுத்துறோம். தலைமுறை தலைமுறையா பயத்தை அடிப்படையா வைத்து பெற்றோராக நடந்து வந்த அந்த சைக்கிளை இப்போ நாம உடைக்கிறோம்.
நீங்க இன்னும் பயம் சார்ந்த பேரண்டிங்குக்கும், அமைதியான பேரண்டிங்குக்கும் நடுவுல நின்னுக்கிட்டு, நடு கடலில தத்தளிச்சுக்கிட்டு இருக்கீங்கனா… அதுவே ஒரு அழகான இடம் தான். இந்த கட்டுரை உங்களை 0.01% கூட பயத்திலிருந்து பாதுகாப்பு, அன்பு, உணர்வு பக்கம் நகர்த்தியிருந்தா… அது தான் தொடக்கம். வாழ்த்துகள். “நம்ம வீடுகள், நம்ம மனங்கள், நம்ம குழந்தைகள் – இவைகளை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்கும் பயணத்தின் இதுதான் ஆரம்பம்.”