மயக்க மருத்துவராக இருப்பதால் அவசர அறுவை சிகிச்சைகளுக்கு இரு சக்கர வாகனத்தில் பயணிப்பது வழக்கம் .அப்படி பயணிக்கும் போதெல்லாம் மாலை நேரங்களில் ஊரில் அரச மரங்களை நெருங்கும் போதெல்லாம் பறவைகள் ஓசை அதிகமாய் கேட்கும். மாலை வேளைகளில் அரசமரத்தில் தான் பெரும்பாலும் பறவைகள் அடையும். அந்த ஓசைகளை கேட்பதற்காகவே அங்கே ஒரு பத்து நிமிடமாவது அந்த இசை வெள்ளத்தை அனுபவித்து அதுக்கப்புறம் தான் கடப்பது வழக்கம் .அன்றிலிருந்து நம்ம வீட்டிலும் இதுபோல பறவைகள் வந்து அடைய வேண்டும் என்ற பெரும் ஆசை என் மனதை ஆக்ரமித்திருந்தது. அதனால் வீடு கட்டும் போது தோட்டத்திற்கு என பாதி பகுதியை ஒதுக்கி விட்டோம். மரங்களை வளர்க்க ஆரம்பித்தவுடன் ஓரளவு பறவைகள் வர ஆரம்பித்தது.
முதலில் ஊர்க் குருவி பறவைகள் தான் வந்தது. அவைகளுக்கு தீனி வைக்க ஆரம்பித்தேன். கம்பு ,தினை ,சோளம் போன்றவைகளை வைக்க ஆரம்பித்தோம் .ஆனால் அந்த தானிய வகைகளை பெரும்பாலும் தவிர்க்க ஆரம்பித்தது பறவைகள்.ஒரு நாள் தற்செயலாக நொறுக்கு தீனி வகையறாவை வெளியே வைத்திருந்த போது அதில் சிந்திய துகளை பறவைகள் சாப்பிட ஆரம்பித்தது.
அதிலிருந்து நொறுக்கு தீனி வகைகள் மட்டும் அவைகளுக்கு வைப்பது வழக்கம் ஆகிப் போய்விட்டது .(இங்கே ஒரு விஷயம் குறிப்பிட வேண்டும் குறிப்பாக பறவைகளுக்கு இதுபோல நொறுக்கு தீனி கொடுக்கக் கூடாது என்பது பறவை ஆர்வலர்களின் கருத்து, அதைத் தவிர்க்க வேண்டும்)) சாப்பாடு வைத்தவுடன் ஊர்க்குருவி வகைகள் முதலில் வந்தது, அதற்குப் பிறகு புல்புல் எனப்படும் செம்மீசை சின்னான், மைனா, சிட்டுக்குருவி ,கருஞ்சிட்டு ,வால் காக்கை தற்பொழுது புதிதாக மரங்கொத்தி ஆகிய பறவைகளும் சாப்பிடுவதற்காகவே வந்து போகும். மேலும் பறவைகளுக்காக பல இடங்களில் குவளைகளில் தண்ணீர் வைத்து விடுவோம்.
அந்த தண்ணியை குடிப்பதற்காகவே தேன் சிட்டு, கரிச்சான் குருவி, செம்போத்து, குயில், நீல முகப் பூங்குயில், சுடலை குயில், தையல் சிட்டு , மீன் கொத்தி, மணிப்புறா போன்றவையும் வரத் தொடங்கியது. தோட்டத்தில் பழங்களை சாப்பிடுவதற்காக பூங்குருவி போன்றவைகள் தினமும் வருவதுண்டு .மொத்தத்தில் தினந்தோறும் குறைந்தபட்சம் 20 பறவை இனங்கள் வருவது உண்டு. வீட்டுச் சுவரின் பின்னே ஒரு கீரிப் பிள்ளை குடும்பமும் வசிக்கிறது. அவையும் தண்ணீர் குடிக்க தோட்டத்திற்கு வருவதுதான் சிறப்பு.மேலும் உணவு ஃபீடரில் தினையை தொங்க விடுவோம், அந்த தினையை சாப்பிடுவதற்காக கிட்டத்தட்ட 50 வெள்ளி மூக்கன் குருவிகள் தினமும் வருகை தருவதுண்டு.
அதிகாலை நாலு மணிக்கு கரிச்சான் குருவி ஓசையோடு துவங்கும் காலைப் பொழுது பிறகு குயில் ஆறு மணி அளவில் சாப்பிட வரும் ஊர்க்குருவி மற்றும் மற்ற பறவைகள் இனம் என தோட்டத்தில் எப்பொழுதும் பறவைகள் கூட்டம் தான்.தங்களது தோட்டங்களில் பறவைகள் வரவேண்டும் என நினைப்பவர்களுக்கு எனது சிறிய யோசனை.
முதலில் தோட்டத்தில் நாலைந்து இடங்களில் தண்ணீர் வைக்க ஆரம்பியுங்கள், தண்ணீருக்கு அருகிலேயே உணவுகளையும் வையுங்கள் ,உணவை சாப்பிட்டு தண்ணீர் குடிக்க பறவைகள் சிறிது சிறிதாக வரும் .பிறகு சில காலங்களில் எல்லா பறவைகளும் வந்து அடைக்கலம் ஆகும். மனதில் சந்தோசங்களும் வந்து அடைக்கலமாகும்.
Super…