சிறப்பாசிரியர்கள்

கற்றல்

  ‘’ஏதேனும் கற்றுக்கொடு ஏதேனும் கற்றுக்கொடு
கல்விதனை காதலோடு செய்
ஏதேனும் கற்றுக்கொடு ஏதேனும் கற்றுக்கொடு
உயர் காதலையே கல்வியாக்கு ‘’

பதின்பருவத்தில் வாசித்த பாலகுமாரனின் ஏதோவொரு நாவலின் வரிகள் இவை. வாழ்வின் தேடலில் ஒரு பகுதியாக சிறுவயதிலிருந்தே சினிமாக்கள் கற்றுக் கொடுத்தவை ஏராளம். வாழ்வு சினிமாவை பிரதிபலித்ததா? இல்லை சினிமா வாழ்வை பிரதிபலித்ததா? , சினிமா வாழ்வில் இருந்ததா எனப் பிரித்தறியா முடியாதபடி பின்னிப்பிணைந்த பருவங்கள். தனிக்கவனம் கிட்டாத பால்யங்களில் நல்லதும் கெட்டதும் சினிமாவேச் சொல்லித்தந்தது. இன்று நிதானமாக சொல்லித் தர பெரும்பாலும் தாத்தா பாட்டிகள் இல்லை அம்மா அப்பாக்களுக்கோ நேரம் இல்லை. வாழ்வைப் பற்றி கற்றுக் கொள்ளாமல் வெறும் தகவல்களாலே மூளையை நிரப்பிக் கொள்ளும் காலம் . அதில் பாதி தேவையற்றவை பொய்யானவை. மனித வாழ்வின் சிறப்பம்சங்களான நுண்ணுணர்வும் நுட்பமும் அருகிப் போய்விடும் பொழுதுகள் தொலைவில் இல்லை.
போராட்டங்களினாலும் புரட்சிகளாலும் மாற்ற முடியாததைக் கூட சில வேளைகளில் தொழில்நுட்பம் சாத்தியப்படுத்திவிடும். சமத்துவமற்ற இந்திய சமூகத்தை ரெயில்வேயும் சினிமாவும் சாதிய வேறுபாட்டிலிருந்து வர்க்க வேறுபாட்டுக்கு மடை மாற்றிவிட்டது. அதாவது நிலவுடைமையிலிருந்து முதலாளித்துத்திற்கு. இன்னும் கிளாஸ் பிரிவையே அவை தொடர்கின்றன என்பதே சாட்சி. சினிமா அரங்கம் எல்லா பிரிவினரையும் தன்னுள்ளே அனுமதித்து வெளிச்சத்தின் பேதங்களை இருட்டில் சமப்படுத்தியது. அரங்கில் சமத்துவம் ஆனால் திரைகளில் அதே அடுக்குமுறை. கிராம் நகர யதார்த்தங்கள் எதுவானாலும் படிமுறை அதேதான். இன்று மாற்றங்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. அவ்வகையில் சமூகத்தைப் பற்றி அவதானிக்கவும் உண்மைகளை கற்று தந்ததும் சினிமாவே.
பெருகி வழியும் தகவல் குப்பைகளுக்கு மத்தியில் சமூகத்தைப் பற்றி, வாழ்வைப் பற்றிச் சொல்லித் தர ஏதேனும் ஊடகம் உண்டென்றால் அது எழுத்தும் சினிமாவும்தான். இளம் தலைமுறை எழுத்திலிருந்து விலகி இருக்கின்றது. மிஞ்சுவது சினிமா மட்டும் . சினிமாவையே கல்வியாக்க வேண்டியிருக்கிறது. புதிய மலையாள சினிமா வாழ்வின் துளிகளை, சமூக வாழ்வை நுட்பமாக தரிசிக்க வைக்கின்றது. அதனாலேயே அதைப் பேச வேண்டியிருக்கிறது.

புழுதி சமகால மலையாள சினிமா சிறப்பிதழ் இணையத்தின் வழியாக கொண்டுவர வேண்டும் என்று யோசித்து அது தொடர்பாக கட்டுரைகளை கேட்டமாத்திரத்தில் வழங்கிய படைப்பாளிகளாகிய அய்யனார் விஸ்வநாதன், ஜா. தீபா, கவிதைக்காரன் இளங்கோ, விஜயராணி மீனாட்சி, மணி ஜெயப்பிரகாஷ் வேல், கனி விஜய், சிவராஜ் பாரதி, கல்பனா ரத்தன்,சதிஷ் வெங்கடேஷ், ஹரிஷ் சுந்தர்ராஜன், உ.கிருஷ்ணமூர்த்தி ஆகியவர்களின் பங்களிப்புகள் புழுதி இணைய இதழாக வெளிவருவதற்கான உந்துதலும் ஊக்கமுமாக அமைந்தது அவர்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும்.  இவ்விதழை கொண்டுவருவதற்காக இரவும் பகலுமாக செயலாற்றிய கு.ஜெயப்பிரகாஷ் , சிறகன், தளபதி சல்மான் ஆகிய மூவருக்கும் எங்களின் அன்பு.

இப்படிக்கு ,

சிறப்பாசிரியர்கள்     

எழுத்தாளர் எஸ்.ஜே.சிவசங்கர் | கவிஞர். வேல் கண்ணன்